Skip to main content

அழகிரியால் திமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை - மாவட்டச் செயலாளர்கள் பேட்டி! 

Published on 22/08/2018 | Edited on 22/08/2018

 

M. K. Alagiri


அழகிரி பேரணி நடத்தும் அறிவிப்பால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மாவட்டச் செயலாளர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் திமுகவில்தான் இருக்கிறார்கள் என்று மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.மூர்த்தி, திண்டுக்கல் கிழக்கு மாவட்டச்செயலாளர் ஐ.பி.செந்தில்குமார், தேனி மாவட்டப் பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

 

 

 

வரும் 28 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூடி தலைவரை தேர்வு செய்ய உள்ள நிலையில், செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னையில் லட்சம் பேருடன் அமைதிப் பேரணி நடத்தப் போவதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். அவருடைய அறிவிப்பு திமுகவில் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்று மூவரிடமும் நக்கீரன் இணையதளத்திற்காக வினா எழுப்பினோம்.

 

பி.மூர்த்தி கூறியது…

 

மதுரை வடக்கு, தெற்கு மாவட்டங்களை பொறுத்தவரை நூறு சதவீதம் திமுக தலைவர் கலைஞர், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்றுக்கொண்டுதான் திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து செயல்படுகின்றனர். இந்த மாவட்டங்களில் யாராலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும், மாவட்டச் செயலாளர்களும் மு.க.ஸ்டாலின் பக்கம்தான் உள்ளனர்.
 

District Secretaries interviewed


ஐ.பி.செந்தில்குமார் கூறியது…

 

 

அழகிரியை 2014ல் கட்சியை விட்டு நீக்கியதே தலைவர் கலைஞர்தான். நீக்கியது மட்டுமல்ல நீக்கியதற்கான காரணத்தையும் தொண்டர்களுக்கு எடுத்து சொல்லியிருக்கிறார். கலைஞர் எடுத்த முடிவுக்குத்தான் கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் கட்டுப்படுவார்கள். உண்மையான தொண்டர்கள் இவருக்குப்பின்னால் எப்படி இருப்பார்கள்.

 

தலைவர் இல்லாதநிலையில் தலைவர் சொன்னதாக இவர் சொல்வதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.  தன்னுடைய சுயலாபத்திற்காக திமுகவை தவறான பாதைக்கு கொண்டுபோகலாம் என்று நினைக்கிறார். ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள இயக்கம் திமுக. கலைஞருக்கு பிறகு தொண்டர்கள் மு.க.ஸ்டாலினை தலைவராக  ஏற்றுக்கொண்டார்கள். கலைஞரின் உண்மையான தொண்டர்கள் அனைவரும், மு.க.ஸ்டாலின் தலைமையைத்தான் ஏற்பார்கள்.

 

 

 

இவருக்கு பின்னால் ஆளும் அதிமுக இருக்கலாம், மத்திய பாஜக அரசு இருக்கலாம் அல்லது ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக இப்படி  பேசலாம். திமுகவுக்கு எந்த மாதிரியான அழுத்தங்கள் இருந்தாலும், அவற்றை முறியடித்து வெற்றிப் பெறக் கூடிய ஆற்றல் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது. எம்ஜிஆர், வைகோ ஏற்படுத்திய பிளவுகளையே சமாளித்தது திமுக. இவருடைய எதிர்ப்பு எங்களுக்கு கையில் உள்ள தூசி மாதிரி என்றார்.

 

கம்பம் ராமகிருஷ்ணன் கூறியது…

 

நேற்று மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தை நடத்தினோம். கலைஞர் காலத்தில் இருந்து இருக்கக்கூடிய மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு, ஒன்றிய கழக, நகர கழக செயலாளர்கள் என எல்லோரும் கலந்து கொண்டனர். வலிமையான இயக்கமான திமுகவை மு.க.ஸ்டாலின்தான் தலைமையேற்று நடத்த வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம்.

 

 

 

மதவாதத்திற்கு எதிராக, மாநில சுயாட்சியை மீட்பதற்காக, இந்தி திணிப்புக்கு எதிராக, சமூக நீதியை வலியுறுத்தி கலைஞரைப்போல் ஸ்டாலினும் கொள்கை அளவில் உறுதியாக இருக்கிறார். ஆகையால் தேசிய அளவிலும் மிகப்பெரிய தலைவராக ஸ்டாலின் ஈர்க்கப்பட்டிருக்கிறார்.

 

திடீரென தேனியில் ஒரு கூட்டத்தை சிலர் கூட்டியுள்ளனர். தலைவர் கலைஞர் இருந்தபோதே ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள்தான் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் தேனி மாவட்டத்தில்  துரும்பளவுகூட திமுகவுக்கு பாதிப்பு இல்லை என்றார்.

 

 

Next Story

ரஜினிகாந்திடம் தொலைபேசியில் உடல்நலம் விசாரித்தார் மு.க.அழகிரி

Published on 26/12/2020 | Edited on 26/12/2020
Rajinikanth

 

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாகவும் இன்று அல்லது இரண்டு மூன்று நாட்களில் மருத்துவமனையிலிருந்து சென்னை திரும்ப உள்ளதாகவும் மு.க.அழகிரியிடம் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

ரஜினிக்கு வாழ்த்து சொல்லிய அழகிரி...

Published on 03/12/2020 | Edited on 03/12/2020
M. K. Alagiri

 

 

'ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு' என இன்று ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். 

 

"மாற்றுவோம் எல்லாத்தையும் மாற்றுவோம், இப்ப இல்லைனா எப்ப" தமிழகத்தில் நேர்மையான நாணயமான வெளிப்படையான ஊழலற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம் அதிசயம் நிகழும் என தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்ததார்.

 

ரஜினி இந்த அறிவிப்பை வெளியிட்டப் பின்னர், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தொலைபேசியில் ரஜினியைத் தொடர்பு கொண்டு புதிய கட்சிக்கு புதிய மாற்றத்திற்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். அதற்கு ரஜினி, உங்களின் வாழ்த்துக்கு மிகவும் நன்றி என்று பதில் நன்றி கூறியிருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாகியுள்ளது.

 

மு.க.அழகிரி பாஜகவில் சேரப் போகிறார், புதிய கட்சி ஆரம்பிக்கப் போகிறார், கலைஞர் திமுகவும் உருவாகப் போகிறது என்று தொடர்ச்சியாக சொல்லி வந்த நிலையில், ''நான் கட்டாயம் பாஜகவில் சேர மாட்டேன், நான் கலைஞர் மகன்'' என சொல்லியிருந்தார். திமுகவின் துணை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். கோபியின் தம்பி மருது இறந்ததை துக்கம் விசாரிக்க சென்ற அழகிரி செய்தியாளர்களிடம், ''என்னை தொந்தரவு   செய்யாதீர்கள். நான் எந்தக் கட்சிக்கும் போகவில்லை. என்னோட தொண்டர்களிடம் ஆலோசனை செய்த பிறகே எதையும் சொல்வேன்'' என்று கூறிச்சென்ற நிலையில் தற்போது ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.