Skip to main content

விவசாயிகளை மதிக்காதது தேசிய அவமானம்! - வி.சி.க செல்லதுரை காட்டம்!

Published on 10/12/2020 | Edited on 11/12/2020

 

disrespecting -farmers is- a -national shame - VCK- selladurai

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, விவசாயிகள் 16 ஆவது நாளாக, டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசோடு நடைபெற்ற ஐந்து கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததால், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளர்கள் தலைமையில், வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் உஞ்சை அரசன், தலைமை நிலையச் செயலாளர் இளஞ்சேகுவேரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.

 

ஆர்ப்பாட்டம் தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின், மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் செல்லதுரை நக்கீரன் இணையதளத்திடம்  பேசியாதவது,

 

மத்திய பா.ஜ.க அரசின் விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும், அதற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து, 15 நாட்களாகக் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாட்டின் தலைநகரத்தின் அனைத்து எல்லைகளையும் அடைத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயப் பெருமக்களுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

இந்தச் சட்டத்தில், விவசாயப் பொருட்களின் விலையை கார்ப்பரேட் நிறுவனங்களே தர நிர்ணயம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, குறிப்பிட்ட தொகையை, 30% மட்டுமே உடனடியாக வழங்கலாம். அதற்கு மேலும் வழங்க, கால அவகாசம் அவர்களுக்கு உண்டு என்று சொல்கிறது இந்தச் சட்டம். இது எப்படிச் சாத்தியப்படும்? ஒரு விவசாயி விளைவிக்கும் பொருளின் தரத்தை, எப்படி கார்ப்பரேட் நிர்ணயிக்க முடியும்?

 

மழையோ அல்லது தண்ணீர் பற்றாக்குறையோ விளையும் பயிரின் தரத்தைக் குறைக்கலாம். இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஒருவேளை, தரமாக விளைந்த பொருட்கள் கூட, கடைசி நேரத்தில் கடும் புயல், மழை, காற்றால் நாசமாகக் கூடும். இதை, நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட நிலையில், பொருளின் தரத்தை நாம் எப்படி முன்கூட்டியே ஒப்பந்தம் செய்யமுடியும். இந்தச் சட்டத்தின்படி கார்ப்பரேட்டுகளே விலை நிர்ணயம் செய்வார்கள். எனில், பணம் வழங்குவதற்குத் தாமதமாகும் காலகட்டத்தில், விவசாயி எப்படித் தனது அன்றாட வேலைகளைச் செய்ய முடியும்? 

 

இப்படி, கார்ப்பரேட் விவசாயி ஆகிய இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டால், ஒரு குழுவை அமைத்து, அவர்களுக்குள் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்தச் சட்டத்தில் ஒரு சரத்து உள்ளது. இந்தநிலையில், கார்ப்பரேட் நிறுவனம் மிகப்பெரிய திறமை வாய்ந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட முடியும். ஆனால், விவசாயிகளால் அப்படிச் செய்ய முடியுமா? அப்படி வாதாடினாலும், யாருடைய கருத்து ஜெயிக்கும்? இப்படி ஒரு வேளை, யார் பக்கமும் சரியான முடிவு எட்டப்படவில்லை என்றால், டிவிஷன் கோர்ட்டுக்குச் செல்ல வேண்டும் என்கிறது புதிய வேளாண் சட்டம். அப்படி எனில், இதில் அரசு தலையிடாது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மட்டுமே இது சாதகமாக இருக்கும். இதில், தலையிடாத அரசு, இருந்தால் என்ன, இல்லாமல் இருந்தால் என்ன? எனும் கேள்வி எழுகிறது. 

 

அத்தியாவசியப் பொருட்களான, பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம் இவையெல்லாம், அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இல்லை என்று சொல்லிவிட்டது அரசு. அப்படிச் சொல்வதற்குக் காரணம், எவ்வளவு வேண்டுமானாலும் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி வைத்துக் கொள்ளலாம். இதுவரை உள்ள சட்டப்படி, எந்த அத்தியாவசியப் பொருளையும் பதுக்கி வைக்கக் கூடாது. ஆனால், இந்தப் புதிய வேளாண்  சட்டம், அவர்கள் பதுக்கி வைக்க வழிவகை செய்கிறது. இதனால், கார்ப்பரேட், அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைத்துக்கொண்டு விலை உயர்த்தி விற்கும் நிலை ஏற்படும். அப்போது விவசாயியைச் சுரண்டி கார்ப்பரேட் கம்பெனிகளே நலம்பெறும். எனவே, இதில் எந்தக் காலக் கட்டங்களிலும் அரசு தலையிடாது அதை மிகத் தெளிவாகச் சொல்கிறது இந்தச் சட்டம்

 

‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய இந்தியப் பிரதமர், சில விவசாயிகளின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் பயன் அடைந்ததாகக் கூறியுள்ளார். மேலும், சிக்கல் ஏற்படும்போது, அரசு அதிகாரியைச் சந்தித்து முறையிட்டால், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். அப்படி ஒரு விவசாயி, ஆர்.டி.ஓவை சந்தித்து, தனக்குரிய பிரச்சினையைக் கூறி உரிய லாபத்தை அடைந்ததாகக் கூறியுள்ளாரே பிரதமர்?

 

இது மிகப்பெரிய பொய். கடந்த மன்மோகன் சிங் ஆட்சியில், ஆதார விலையை (5 ஆண்டுகள்) 235 சதவீதம் வரை உயர்த்தியது காங்கிரஸ் அரசு. ஆனால், இந்த மோடி அரசு, அதிகபட்சம் ஆதார விலையை 45 சதவீதம்தான் உயர்த்தி உள்ளார்கள். மோடி சொல்வது, முழுக்க முழுக்கப் பொய். இவர் சொல்வது, எடப்பாடி பழனிசாமி போன்ற விவசாயிகளுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஏனென்றால், பண்ணை விவசாயத்தை, கார்ப்பரேட் கம்பெனியிடம் ஒப்படைத்துவிட்டு, ஏ.சி. அறையில் அமர்ந்துகொண்டு, கணக்குப் பார்ப்பவர்கள் இவர்கள். அதனால், இவர்கள் எவ்வளவு லாபத்தை வேண்டுமானாலும் காட்டலாம், எவ்வளவு நட்டத்தை வேண்டுமானாலும் காட்டலாம். இவர்கள் விவசாயிகள் இல்லை.

 

disrespecting -farmers is- a -national shame - VCK- selladurai

 

ஆனால், களத்தில் நின்று போராடுகிற விவசாயிகளுக்கு நேரடியான பலனில்லை. இவர் சொல்கிற விவசாயிகள், விவசாயி என்கிற போர்வையில் இருக்கின்ற போலிகள். ஆனால், தற்போது அமித்ஷா போன்றவர்கள் எல்லாம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் விவசாயிகளே அல்ல என்கிறார்கள். இவர்களைத் தூண்டி விடுவதாக கூறுகிறார்கள். இவர்களுக்கு யாரோ நிதி உதவி செய்வதாகக் கூறுகிறார்கள். இது ஆட்சியாளர் செய்யக் கூடாத ஒரு காரியம். அவமானகரமான காரியம். அயோக்கியத்தனமான காரியம். அவர்களின் போராட்டத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தக் கூடாது.

 

அரசாங்கம், விவசாயிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது. விவசாயச் சட்டத்தில் திருத்தம் செய்வதாகக் கூறுகிறது. குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதாகக் கூறுகிறதே?

 

cnc


ஆதார விலையை அரசு நிர்ணயம் செய்தால், நாம் அரசிடம் போராடி பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இச்சட்டத்தின்படி கார்ப்பரேட்தானே விலை நிர்ணயம் செய்கிறது. உதாரணமாக, கல்வி, உணவு, மருத்துவம், நீர் போன்றவை அத்தியாவசியத் தேவை. இதை அரசு மக்களுக்குத் தரவேண்டும். இதில், அரசுக்கு நஷ்டம் கூட ஏற்படலாம். ஏனெனில், இவையெல்லாம் சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டிய வேலை. லாபம் பார்க்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. ஆனால், இந்த அரசு ஆதார விலையை நிர்ணயித்து, அதில் லாபம் பார்ப்பதற்காக நாடகமாடுகிறது.

 

சமீபத்தில் கிடைத்த தகவல்படி, அதானி அம்பானி குழுமம் ‘கொள்முதல் நிறுவனத்தை’ நிறுவி உள்ளனர். அவர்கள் எவ்வளவு உணவுப் பொருட்களை வேண்டுமானாலும் வாங்கி, பதப்படுத்திக் கொள்வதற்கு, ஏற்ற வகையில் தயாராக உள்ளனர். இந்தக் குழுமத்தினர்தான் கரோனா காலங்களில், மக்களுக்கு உதவியதாகச் சொல்கிறார்கள். ஒரு அரசால் செய்ய முடியாத உதவியை, இவர்கள் செய்தார்கள் என்று சொன்னால் இந்த அரசே தேவையில்லையே? 

 

கல்வியை விற்றார்கள், எல்.ஐ.சியை விற்றார்கள், ரயிலை விற்றார்கள் இப்போது விவசாயத்தையும் விற்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, இந்தச் சட்டத்தில், குறையே இல்லை என்று சொல்கிறார். அப்படி அவர் சொல்வதற்கு என்ன காரணமாக இருக்கும் என்றால், அவர் பல ஏக்கர் நிலம் வைத்திருப்பார். அங்கு சரியாக விளைச்சல் இல்லை என்பதால், கமிஷன் பணத்தை, நஷ்டம் அடைந்ததாகக் கணக்கில் காட்டி, வெள்ளைப் பணமாக மாற்றி விடுவார். அதுபோல விவசாயிகள் என்ற போர்வையில் உள்ள அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால், இந்தச் சட்டத்தில் குறைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அன்றாடம் உழைத்து, அதை விற்று அதில் கிடைத்த வருமானத்தை வைத்து, அடகு வைத்த தாலியையும் அடகு வைத்த பத்திரத்தையும் மீட்க வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ள விவசாயிகளுக்கு, இது பொருந்தாது. 

 

disrespecting -farmers is- a -national shame - VCK- selladurai

 

பண்ணை விவசாயிகளுக்கு இது பொருந்தும். ஏனெனில் பண்ணை விவசாயிகள் உண்மையான வரவு செலவைக் கணக்கில் காட்ட மாட்டார்கள். அதில், மோடி சொன்னது போல் 50 லட்சம் லாபம் வந்தது போலவும் காட்டுவார்கள், 5 கோடி நஷ்டம் ஏற்பட்டது போலவும் காட்டுவார்கள். அவர்கள் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டுவதற்காக வெள்ளைப் பணத்தைக் கருப்புப் பணமாக மாற்றுவதற்கும், கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கும் அப்படிச் செய்வார்கள். எனவே, இந்தச் சட்டம் இதுபோன்ற பண்ணை விவசாயிகளுக்குப் பயன்படுமே ஒழிய, உழைக்கும் விவசாயிகளுக்கு ஒரு காலமும் பொருந்தாது. 

 

அரசு திருத்தம் செய்ய வேண்டும் எனச் சொல்கிற அந்த விஷயங்களை நாம் தடை செய்யச் சொல்கிறோம். தடை செய்ய வேண்டும் எனக் கோரி போராடுபவர்களை, ‘திருத்தம் செய்கிறேன் வா!’ என்று அழைத்தால் அவர்கள் எவ்வாறு செல்வார்கள். அப்போது, அவர்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்பது, வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக நயவஞ்சகமாக அமித்ஷா ஆடும் நாடகமே இந்தப் பேச்சுவார்த்தை. 

 

அனைத்து அரசியல் கட்சிகளும் வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்கிறது. ஆனால், இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் கட்சிகள் இருப்பதாக அமித்ஷா கூறுகிறார். 

 

விவசாயிகளின் போராட்டம் 15 நாட்களைத் தாண்டினாலும், இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவு பெருகினாலும், உங்களைப் போன்ற அமைப்புகள் தினந்தோறும் விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்தாலும், மத்திய அரசின் விவசாயத்துறை வேளாண் அமைச்சர் இந்தச் சட்டத்தை ரத்து செய்யமுடியாது என்று சொல்கிறார். ஆனால், திருத்தங்கள் வேண்டுமானால் செய்யலாம் என்கிறாரே?

 

அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். ஏனெனில், அவர்கள் முன்கூட்டியே முடிவெடுத்து விட்டார்கள். இவ்வளவு பெரிய சிக்கல் இருக்கக்கூடிய, ஒரு சட்டத்தை, நாடாளுமன்றத்தின் மக்களவையில் விவாதம் செய்து, வெற்றி பெற்று, அதன் பிறகு மாநிலங்களவைக்குச் சென்று, அங்கும் நிறைவேற்ற வேண்டும். அதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், அது சட்டம் ஆக்கப்படும். ஆனால், மக்களவையைக் கூட்டவில்லை. மாநிலங்களவையிலும் முறையாக கூட்டவில்லை. அவசரக் காலத்தில் சட்டமாக்கப்பட்டது. அதற்கு என்ன தேவை உள்ளது? இது என்ன போர்க் காலமா? 

 

அப்படி என்ன தேவை உள்ளதெனில், அப்படி நிறைவேற்றினால் மட்டுமே இந்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியும். ஏனெனில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பா.ஜ.க அரசுக்குக் கிடையாது. அப்படிச் சட்டத்தைக் கொண்டு வர, வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டால், அவர்கள் தோற்று விடுவார்கள். அதனால்தான், விவாதம் செய்யாமல், தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள். அதனால், அவர்கள் என்னவேண்டுமானாலும் சொல்வார்கள். வேளாண் அமைச்சர் சொல்வதும் பொய், அமித்ஷா சொல்வதும் பொய், மோடி செய்வது மிகப்பெரிய அயோக்கியத்தனம். 

 

nkn

 

வாரணாசியில் பேட்டி கொடுக்கும் பிரதமர், டெல்லியில் ஏன் விவசாயிகளைச் சந்திப்பதில்லை. ஒருமுறைகூட பத்திரிகையாளரைச் சந்திக்க, திறமை இல்லாத ஒரு பிரதமரை, நாம் வைத்துள்ளோம். இது தேசிய அவமானம். இதுவரை, இதுபோன்ற ஒரு பிரதமரை இந்தியா கண்டதில்லை. மிக மோசமான செயல்பாட்டுக்கு இதுதான் உதாரணம். அவர்கள் தங்களது பெரும்பான்மையைப் பயன்படுத்தி, இதையெல்லாம் செய்து வருகிறார்கள். ‘ஒரே நாடு’, ‘ஒரே பண்பாடு’ என்பதன் நோக்கமே இந்தியாவை, இந்து நாடாக்க வேண்டும் என்பதுதான். கிட்டத்தட்ட சர்வாதிகார நாடாக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் வருங்காலங்களில் தேர்தல் முறையையே ரத்து செய்தாலும் செய்யலாம் அதிபர் ஆட்சியைக் கொண்டு வந்தாலும் கொண்டு வரலாம். இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய இழுக்கு. சர்வாதிகாரம் எப்போதும் வென்றது இல்லை. ஜனநாயகமே வெல்லும்!

 

 

 

Next Story

“என்னை அழிக்க நடவடிக்கை” - உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்த போது, ‘தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவை செய்து கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த அமலாக்கத்துறை, ‘அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தது. 

 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

இந்த நிலையில், அமலாகக்த்துறை அளித்த அந்த பதிலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் , ‘அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு சமமான அரசியல் எதிரியான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தல் சமநிலையை குலைக்க மத்திய அரசு முயல்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கைது மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த கைது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அதுமட்டுமல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனையும், ஆம் ஆத்மி கட்சியையும் அழிப்பதற்கான யுக்தியாகத் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், கெஜ்ரிவாலை உடனடியாக சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.