Skip to main content

தினகரனுடனேயே சேர்ந்து அ.தி.மு.க.வை ஒற்றுமைப்படுத்தலாம் எனக் கூறிய ஓபிஎஸ்!

Published on 01/07/2019 | Edited on 01/07/2019

ஒருவழியாக,  அ.ம.மு.க.வை விட்டு தங்க.தமிழ்ச் செல்வனை நீக்கிவிட்டேன். இனி அவர் பற்றி பேச ஒன்றுமில்லை'' என அறிவித்துள்ளார் டி.டி.வி. தினகரன். கடந்த ஒரு வாரமாக மீடியாக்களில் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பிய விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்துள்ளது. ஆனால் "டி.டி.வி. தினகரனின் இந்த அறிவிப்போடு தங்க.தமிழ்ச்செல்வன் விவகாரம் முடிந்துவிடாது' என்கிறார்கள் அ.ம.மு.க. மற்றும் அ.தி. மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

 

ops



தங்க.தமிழ்ச்செல்வன் டி.டி.வி.தினகரனை அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளில் திட்டும் ஆடியோ ஒன்று மீடியாக்களில் வெளியானது. தினகரனின் செயலாளர்களில் ஒருவரான தொழிற்சங்கத்தை சேர்ந்த செல்ல பாண்டியன் என்பவரிடம் பேசிய பேச்சு என சொல்லப்பட்ட அந்த ஆடியோவை வெளியிட்டது அ.ம.மு.க.வினர்தான். "ஏன் இந்த கோபம்' என அ.ம.மு.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரான வெற்றி வேலை கேட்டோம். "தங்க .தமிழ்ச்செல்வன் எனக்கும் நண்பராக இருந்தவர்தான். அவர் ஜெ. காலத்திலேயே தேனி மா.செ. வானவர். ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் என்பதால் டி.டி.வி. உள்பட நாங்கள் அவருக்கு மதிப்பு கொடுத்தோம். யாரையும் எகத்தாளமாக பேசும் இயல்பு உடையவர் தங்க. தமிழ்ச்செல்வன். தி.மு.க.வுடன் சேர்ந்து எடப்பாடி ஆட்சியை கவிழ்ப்பேன் என்றார். 18 எம்.எல். ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியை பற்றி அவதூறாக பேசினார். "இப்படி வாய்க்கு வந்ததை மீடியாக்களில் பேசாதீர்கள்' என எங்கள் பொதுச்செயலாளர் எச்சரித்தார். உடனே அவரை அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளில் பேசுகிறார். அதனால்தான் அவரது தரத்தை எடுத்துச் சொல்ல அவர் பேசிய ஆடியோவை வெளியிட்டோம்'' என்றார்.

 

admk



இதுபற்றி நம்மிடம் பேசிய தங்க.தமிழ்ச்செல்வன், "எனக்கு நேர்ந்த அவமானம் பற்றி உணர்ச்சிவசப்பட்டு நான் பேசு வதை வெளியிடுவது என்ன வகையிலான தலைமைப் பண்பு என தெரியவில்லை. ஓ.பி.எஸ்., விஜயபாஸ்கர், பொன்னார் என யார் இவர்களிடம் பேசினாலும் அதை பதிவு செய்து வெளியிடு கிறார்கள்'' என வெடித்தார்.


உண்மையான பிரச்சினை என்ன என்று அ.ம.மு.க. வட்டாரங்களில் கேட்டோம். "தங்க.தமிழ்ச்செல்வனை அனுமானிக்க முடியாது. திடீரென தினகரனின் தீவிர விசுவாசியாக மாறுவார். திடீரென தினகரனை திட்டுவார். கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் தேனி எம்.பி. தொகுதியில் ஓ.பி.எஸ். மகனை தோற்கடிப்பேன் என களமிறங்கினார். அதற்கு 25 கோடி ரூபாய் வேண்டுமென கோரிக்கை வைத் தார். ஆனால், இளவரசி மகன் விவேக் அவரிடம் தேர்தல் செலவுக்காக கொடுத்த 25 கோடி ரூபாயை செலவு செய்யவில்லை. தேர்தல் முடிந்ததும் செந்தில் பாலாஜி மூலம் தி.மு.க.வுக்கு வலைவிரித்தார். அவர்கள் ஏற்கவில்லை. உடனே அ.தி.மு.க.விடம் பேரம் பேசினார். ராஜ்யசபா எம்.பி. சீட்டுடன் வெயிட்டான விஷயங்களையும் தங்கமணி, வேலுமணி மூலம் எடப்பாடியிடம் பேசினார். அது செட் ஆகவில்லை. அதற்குப் பிறகு வாரிய தலைவர் பதவி என அவர் நடத்திய பேரம் எடப்பாடியிடம் படிந்தது. ஓ.பி.எஸ்.சிடம் செல்ல வில்லை. "தங்க.தமிழ்ச்செல்வனை சேர்ப்பதைவிட, தினகரனுடனேயே சேர்ந்து அ.தி.மு.க.வை ஒற்றுமைப்படுத்தலாம்' என தன்னை சந்தித்த ஜெயக்குமாரிடம் ஓ.பி.எஸ். கூறிவிட்டார். அதனால் திரிசங்கு சொர்க்கத்தில் தங்க.தமிழ்ச்செல்வன் தொங்கிக் கொண்டு இருக்கிறார். அந்த கோபத்தில்தான் தினகரனை திட்டுகிறார்'' என்கிறார்கள் கூலாக.

தங்க.தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்களை கேட்டோம். "டி.டி.வி. அ.ம.மு.க.வை உருவாக்கும் போதே அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அவர் அ.ம.மு.க.வை தொடங்கியதோடு அதை தனி அரசியல் கட்சியாக பதிவு செய்த டி.டி.வி. மனைவி மற்றும் அவரது நண்பர்கள் அடங்கிய குழுவாக மாற்றிவிட்டார். மாணிக்கராஜா என்பவரை நெல்லை மண்டல பொறுப்பாளராக நியமித்தார். "சேலஞ்சர்' துரை என்பவரை கோவை மண்டல பொறுப் பாளராக நியமித்தார். யார் இந்த மாணிக்கராஜா என்றால் அவர் ஒரு ஜமீன்தார் பரம்பரையை சேர்ந்தவர். தினகரனின் நெருங்கிய நண்பர் என்கிறார்கள். அவர் ஒருமுறை விருதுநகர் நகரசபை சேர்மனாக இருந்தார். அதுதான் அவரது அரசியல் அனுபவம். சென்னையில் வெற்றிவேல் பொறுப்பாளராக வந்ததும் கலைராஜன் தி.மு.க.வுக்கு சென்றார். சேலஞ்சர் துரை வந்ததும் செந்தில் பாலாஜி தி.மு.க.வுக்கு போனார். அதே போல் மாணிக்கராஜா நெல்லை மாவட்ட அ.ம.மு.க.வை அப்படியே அ.தி.மு.க.விற்கு அனுப்பி வைத்தார்.

சசிகலா, டி.டி.வி. தினகரனுக்கு நாடாளுமன்றத் தேர்தல் செலவுகளுக்காக 1,500 கோடி ரூபாய் கொடுத் தார். அதை யாருக்கும் தர வில்லை. அதைப் பற்றி கேள்வி கேட்டால் மாணிக்கராஜா போன்றவர்களை வைத்து எங்களது மாவட்டத்திலேயே எங்களுக்கு எதிராக கூட்டம் நடத்துகிறார். அதைத்தான் தங்க.தமிழ்ச் செல்வன் தட்டிக் கேட்டார். உடனே அவரது பேச்சை ஆடி யோவாக வெளியிடுகிறார்கள். தங்க.தமிழ்ச்செல்வன் பதினோரு கோடி ரூபாய் கடனில் இருக்கிறார். காசு வைத்திருப்பவர் களைத் தான் தினகரன் மதிப்பார். செந்தில்பாலாஜி தினகரனுக்காக செலவு செய்து கடனாளியாக போனதால்தான் அவரை மதிக் காமல் சேலஞ்சர் துரையை வைத்து அவரை அவமானப் படுத்தி தி.மு.க.வுக்கு அனுப்பி வைத்தார்கள்'' என்கிறார்கள் விரிவாக.

இந்த விவகாரம் பற்றி நம்மிடம் பேசிய சசிகலாவின் உறவினர்கள்,  தினகரனின் செயல்பாடுகள் பற்றி சசியிடம் தினமும் புகார் கடிதம் சென்று கொண்டி ருக்கிறது. 1500 கோடியை செல வழித்தும் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்கிற கோபம் சசிகலாவிற்கு இருக்கிறது'' என்கிறார்கள். அதே நேரத்தில், ஓ.பி.எஸ்.சை எதிர்த்த தங்க.தமிழ்ச்செல்வனை கட்சியில் சேர்த்தால் தனக்கு வலுச்சேர்க்கும் என நினைக் கிறார் இ.பி.எஸ். அதை தனது பழைய தொடர்புகள் மூலம் ஓ.பி. எஸ்.சை தூண்டி தடுக்க பார்த் தார் தினகரன். இந்த முக்கோண ஆடு-புலி ஆட்டம் நீடித்த நிலையில், அ.தி.மு.க.வில் கிளம்பிய எதிர்ப்பையும், சசியை ஜெயிலில் சந்திக்க நேரம் கிடைக்காத சூழலை யும் உணர்ந்து ஐ.பெரியசாமி மூலம், சபரீசனுக்கு தகவல் அனுப்பி, தி.மு.க.வில் ஐக்கியமாகும் முடிவை தங்க.தமிழ்ச்செல்வன் எடுத்தார் என்கிறார்கள் அவரது தரப்பினர்.