Skip to main content

கெட்டப்பையன் சார் இந்த மரடோனா... கம்யூனிசம் முதல் கால்பந்து வரை...

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

maradona

 

கால்பந்தாட்டத்தின் கடவுள் ‘டீகோ மரடோனா’ உலகை விட்டுப் பிரிந்துவிட்டார் என உலகமே இன்று அழுதுகொண்டிருக்கிறது. என்னதான் சர்ச்சைகள் அவரை சூழ்ந்தே இருந்தாலும், ஆடுகளத்தில் எதிரணியையும் கால்பந்தையும் அவர் பந்தாடும் விதம் பலரையுமே ரசிக்க வைத்தது. பிளாக் பியர்ல் என்று அழைக்கப்பட்ட பீலே-வுக்கு அடுத்து லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து சாதாரண பின்னணியைக் கொண்ட ஒரு இளைஞர், உலகையே தனது ஆட்டத்தால் கட்டிப்போட்டார் என்றால் அது டீகோ மரோடோனா தான். இவரை விளையாட்டு வீரர் என்று சொல்வதைவிட புரட்சிக்காரர் என்று சொல்வது சிறந்தது. அந்தளவிற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், உலக அரங்கில் அதிகாரமிக்கவர்களால் ஒடுக்கப்படும் இனக் குழுக்களுக்குத் தனது ஆதரவையும் எப்போது தைரியமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த மாடர்ன் உலகில் இவருடைய அரசியல் பார்வை மீது பலரும் பலவிதமாக விமர்சனங்களை வைக்கின்றனர். ஆனால், அவர் நம்பிய ஒரு கொள்கையிலிருந்து பின் வாங்காமல் முடிந்தவரைக் குரல் எழுப்பினார்.

 

மரடோனா என்கிற கால்பந்தாட்ட சூப்பர் ஸ்டார், தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டைப் பலமுறை இந்த உலகிற்குத் தெரிவித்திருக்கிறார். கடவுள் பக்திமிக்கவரும் கத்தோலிக்க கிறிஸ்துவருமான டீகோ, ஜான் பால் இரண்டாம் போப்பை ஒருமுறை சந்தித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “நான் வாட்டிகனில் இருந்தேன். தங்கத்தினாலான மேற்கூரையைப் பார்த்தேன். இதன்பின், ஏழை குழந்தைகளின் வாழ்வாதாரம் குறித்து தேவாலயம் வருந்துவதாக போப் என்னிடம் தெரிவித்தார். அப்படியென்றால், மேற்கூரையில் இருக்கும் தங்கத்தை விற்று எதையாவது செய்யுங்கள் நண்பரே என்றேன்” என்று கூறினார். இது சர்ச்சையானது, பெரியதாக விவாதத்தையும் கிளப்பியது.

 

ஃபிஃபா என்றழைக்கப்படும் கால்பந்தாட்ட அமைப்பில் நடைபெற்ற ஊழலை எதிர்த்து கேள்வி எழுப்பினார். கால்பந்து வீரர்களின் உரிமைக்காக, அப்போதைய பிரபல வீரர்களைக் கொண்டு அமைப்பு ஒன்றை உருவாக்கப் பல வருடங்களாகப் போராடினார். இதுகுறித்து அவர் 1995ஆம் ஆண்டு தெரிவிக்கையில், “ இந்த அமைப்புக்கான யோசனை வருவதற்குக் காரணம், மற்ற வீரர்களுக்கு என்னுடைய ஒற்றுமையை வெளிப்படுத்தத்தான். எங்களுடன் சண்டையிடும் வரை நாங்கள் யாரிடமும் சண்டையிடப்போவதில்லை” என்றார்.

 

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் துணை நின்றவர் மரடோனா, அந்த வகையில் பாலஸ்தீனிய மக்களுக்காகவும் 2018ஆம் ஆண்டில் குரல் கொடுத்தார். “ என்னுடைய இதயத்தில், நான் ஒரு பாலஸ்தீனியரே”என்றார். இஸ்ரேல் அரசாங்கம் காஸா எல்லையில் நடத்திய வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். 2015ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் கலந்துகொள்ள இருந்த பாலஸ்தீனிய அணிக்காக மரோடானா பயிற்சியளிக்க இருந்தார் என்று கூட புரளி கிளம்பியது.

 

maradona

 

 

சோஷியலிஸ்ட் மற்றும் இடதுசாரி அரசியல் கொள்கையைக் கொண்டவரான மரோடானா, கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் ஃபிடல் கேஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பர். ஃபிடலை தன்னுடைய இரண்டாவது தந்தை என்ற அளவில் மனதில் வைத்திருந்தார் மரோடானா. (அதனால்தான் என்னவோ நான்கு வருடங்களுக்கு முன்பு ஃபிடல் மறைந்த அதே நாளில் மரடோனா நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார்) அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த மரடோனா, தன்னுடைய நாட்டின் புரட்சியாளர், சே குவேராவின் பரம விசிறி. தன்னை தானே குவேரா எனவும் அழைத்துக்கொள்வாராம். அவரை ஏற்றுக்கொண்டதால்தான் டீகோ மரோடானாவுக்கு சோஷியலிஸ்ட் மற்றும் இடதுசாரி கொள்கையின் மீது நாட்டம் அதிகரித்து, அதை நம்பினார். உலகம் முழுக்க இருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரலானார். தன்னுடைய கையில் சேவின் டாட்டூவையும், இடது காலில் ஃபிடலின் டாட்டூவையும் போட்டிருந்தார் டீகோ. அமெரிக்காவை எதிர்த்த வெனின்சுலா அதிபர் ஹியுகோ சாவஸிடம் நட்பு பாராட்டினார். ஒருமுறை அவர் தொகுத்து வழங்கிய பேட்டியில் அமெரிக்கா குறித்து பேசிய மரடோனா, “ அமெரிக்காவிலிருந்து வருவதை எவற்றையும் வெறுக்கிறேன். என்னுடைய முழு பலத்துடன் அதை வெறுப்பேன்” என்றார். ஈராக் போர் சமயத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஒரு கிரிமினல் என்று அச்சிடப்பட்ட டீ-ஷர்ட்டை அணிந்துகொண்டு கால்பந்தாட்டத்தைப் பார்க்க வந்தார். 

 

ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து போராட்ட குணம் கொண்ட ரெபலை போன்ற கால்பந்தாட்ட வீரரான டீகோ மரடோனா குறித்து விமர்சனம் செய்வதற்குப் பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், அவர் நம்பிய விஷயங்களுக்காகக் குரல் கொடுத்தார், போராடவும் செய்தார். இந்த போராட்ட குணம்தான் வறுமையிலிருந்து மீள அவருக்கு உத்வேகம் கொடுத்தது, கால்பந்தாட்டத்தில் எதிரணியை அச்சப்படச் செய்தது. தீர்க்கமான பேச்சு, துணிந்த செயல்பாடு, உறுதியான கொள்கைப்பிடிப்பு எனத் தன்னை வெறுப்பவர்களுக்கு எதிரில் 'கெட்ட பையன் சார் இந்த மரடோனா' என்பதைப் போலவே இறுதிவரை வாழ்ந்து மறைந்துள்ளார் மரடோனா.

 


 

Next Story

மெஸ்ஸி பெயருக்கு இவ்வளவு பவரா?; சாதுரியமாக தப்பித்த மூதாட்டி

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
 An old lady who cleverly escaped from Hamas soldiers because Is Messi name?;

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். 

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. 

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் ஒரு பத்திரிகையாளரின் குடும்பமே உயிரிழந்தது. இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை கொல்லும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். அதன் காரணமாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்த நிலையில், அர்ஜெண்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொல்லி, ஹமாஸ் படையினரிடம் இருந்து சாதுரியமாக தப்பித்த 90 வயது மூதாட்டியின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது குறித்து ஹமாஸ் படையினரிடம் இருந்து தப்பித்த மூதாட்டி எஸ்டர் குனியோ கூறுகையில், “ஹமாஸ் அமைப்பை சேர்ந்த இரண்டு நபர்கள் ஒரு நாள் காலை என்னுடைய வீட்டிற்குள் நுழைந்து எனது குடும்பம் எங்கே? என்று கேட்டனர். அதற்கு நான் மட்டும் தான் தனியாக இருக்கிறேன் என்று எனது மொழியில் கூறினேன். எனக்கு ஆங்கிலம் தெரியாததால் அவர்கள் என் மீது கோபமாகி எந்த மொழியில் பேசுகிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு நான் அர்ஜெண்டினாவில், ஸ்பானிஷ் மொழியில் பேசுகிறேன் என்று கூறினேன். அதற்கு அர்ஜெண்டினா என்றால் என்ன..? என ஒருவர் கேட்டார்.

 An old lady who cleverly escaped from Hamas soldiers because Is Messi name?;

நீங்கள் கால்பந்து பார்ப்பீர்களா..? அதில் வரும் மெஸ்ஸியின் ஊர்தான் எனது ஊர் என தெரிவித்தேன். அதை கூறியதும், அவர்களிடம் இருந்த துப்பாக்கியை என்னிடம் கொடுத்துவிட்டு என்னுடன் செல்பி எடுத்துவிட்டு சென்றனர். நான் மெஸ்ஸியின் பெயரை குறிப்பிட்டதால் நான் காப்பாற்றப்பட்டேன்” என்று கூறினார். ஹமாஸ் படையினரால் கடத்தப்பட இருந்த மூதாட்டி, பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொன்னதால் காப்பாற்றப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

GOAT மெஸ்ஸி - புகழாரம் சூட்டிய மு.க.ஸ்டாலின்

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

jh

 

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி வழிநடத்தும் அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று அசத்திய நிலையில், நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜெண்டினா. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தியது.

 

அர்ஜெண்டினா, பிரான்ஸ் அணிகள் மூன்றுக்கு மூன்று (3-3)என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்ததால் பெனால்டி சூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி சூட் அவுட்டில் (4-2) என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா  வெற்றி பெற்றது. அர்ஜெண்டினா அணிக்காக மெஸ்ஸி 2, டி மரியா ஒரு கோல் அடித்தனர். 36 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினா அணி மீண்டும் கோப்பையைக் கைப்பற்றியது. 

 

இந்நிலையில் அர்ஜெண்டினா அணியை வெற்றியை உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறார். தமிழக முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்ற அர்ஜெண்டினா அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " கால்பந்து உலகக் கோப்பை வென்ற அர்ஜெண்டினா அணிக்கும், GOAT மெஸ்ஸிக்கும் வாழ்த்துக்கள். கோல் கீப்பர் மார்டினெஸ்க்கு சிறப்பு வாழ்த்துக்கள் " என்று பதிவிட்டுள்ளார்.