Skip to main content

“பஸ் ஓடுனாத்தான்யா… நம்ம பொழைப்பு ஓடும் சாமி…!''- ஊரடங்கால் முடங்கிய ஓலைக் கொட்டான் தொழில்!!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020
Cottage iCottage industry merchantsndustry merchants



தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமமான நாகலாபுரத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, பனை ஓலை கொட்டான்களை தயாரித்து, வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர் கிராம மக்கள்.. இந்த ஊரடங்கு அவர்களையும் விட்டுவைக்கவில்லை.


ஓலைக்கொட்டான் செய்யும் தொழிலாளர்களிடம் பேசினோம். “எங்க வூட்டுக்காரர், அவுக அப்பா எல்லோரும் காலங்காலமாக இந்த தொழில் செய்றாங்க. நான் இந்த ஊருக்கு வாழ்க்கைப்பட்டு வரும்போது, ஒரு ஜோடி கொட்டான் எட்டணா(50 பைசா) இப்போ 8 ரூபாய். போன வருசம் எல்லாம் ஜோடி 10 ரூபாய்க்கு வித்தோம். இப்ப கொஞ்சம் குறைச்சிருக்கோம். பிளாஸ்டிக் பைகளுக்கு அரசாங்கம் தடை விதிச்சதனால எங்களுக்கும் ஆர்டர் அதிகம்  கிடைச்சது. தினமும் 2 ஆயிரம் கொட்டான்,  3 ஆயிரம் கொட்டான்னு பஸ்களில் ஏற்றி வெளியூருக்கு அனுப்பினோம்.

 

 


இப்ப இந்த ஒன்றரை மாசமா  கடைகளை மூடிட்டாங்க பாருங்க... அப்படியே ஆர்டரும் நின்னுபோச்சு... வெளியூர்களுக்கு அனுப்ப முடியலை, அதனால வருமானமும் இல்லாம போச்சுய்யா" என்றபடியே வார்த்தையில் வால்யூமை குறைத்தார் மாடத்தி  அம்மாள்.

 

 

Cottage industry merchants


அவரே தொடர்ந்து, “ராஜபாளையம், கோவில்பட்டி, திருச்செந்தூர் போன்ற ஊர்களுக்கு சேவுக்கடை வியாபாரிகள் வாங்குறாங்க. மெட்ராஸ்ல இப்ப ஓலைக்கொட்டான்ல பிரியாணி விக்கிறாங்களாம். வாரம் ஒருமுறை மெட்ராசுக்கும் பெட்டி ஏத்துவோம்.

முதல்ல 15 குடும்பங்கள் இந்த வேலையில இருந்துச்சு. இப்ப 2 குடும்பங்கள்தான் செய்றோம். கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டதால்,  இப்ப எங்களுக்கு பெரிய திண்டாட்டமா இருக்குய்யா... இனி எப்படியாவது 10 நாளை ஓட்டிட்டோம்னோ,  அங்கிட்டு கடையை திறந்துடுவாங்க.. ஆர்டர் வர ஆரம்பிச்சிடும், நாங்களும் பஸ்ல ஓலைக் கொட்டான்களை அனுப்பி வைப்போம். எங்களுக்கும் பிழைப்பு ஓடும்" என்றார் பக்குவமாக ஓலைகளை கிழித்தபடி.

 

Cottage industry merchants


இவரைப் போலவே ஓலைப் பெட்டி செய்யும் காளியப்பனோ, "எங்க அப்பா காலத்தில் இருந்து இந்த தொழில் செய்யுறேன். ஓலைப் பெட்டி செய்வேன், சித்தாள் வேலைக்கு  போவேன், பெயிண்ட் அடிக்க போவேன். இருந்தாலும் இந்த கொட்டான் முடையுறதுல இருக்கிற திருப்தி வேற எதுலயும் கிடையாது.


இந்த ஓலைக் கொட்டான்ல காராச்சேவு போட்டு வச்சு 10 நாள் கழிச்சு  எடுத்து சாப்பிட்டு பாருங்க. அப்படியே  கம கமன்னு வாசம் அருமையா இருக்கும். காரச் சேவுல இருக்கிற மொறு மொறுப்பும் குறையாது. அதேபோல கருப்பட்டி மிட்டாய் வச்சு சாப்பிட்டு பாருங்க சும்மா தேவாமிர்தமா இருக்கும். ஓலைக்  கொட்டானை  பயன்படுத்திட்டு தூரப் போட்டாலும் மண்ணுக்கும்  கெடுதி கிடையாது மக்கிப்போயிடும்.

 

 

Cottage industry merchants

 

கவுர்மெண்ட் இந்த பிளாஸ்டிக் பைகள் தடையை கடுமையாக்கணும்.  அப்படினாதான்  எங்கள மாதிரி ஆளுக கஞ்சி குடிக்க முடியும். இந்த ஓலைக் கொட்டான்ல பெருசா லாபம் வந்திடாது. ஒரு கொட்டானுக்கு அடக்கவிலையே ரூ.3 வரைக்கும் வந்திடும்.  இருந்தாலும் நாம்ம செய்யுற தொழில் மூலமா மண்ணும், மக்களும் நன்மை பெருகிறார்கள் என்ற திருப்தி இருக்கு. அது போதும் எங்களுக்கு!" என்றார் அவர்.

இயல்பு நிலை எப்போது திரும்பும் என ஏழைக் குடும்பங்கள் பல காத்திருக்கிறது. அவர்களில் இவர்களை போன்ற எளிய ஜனங்களும் காய்ந்து போன வயிறோடு நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

 

 

Next Story

நிழற்குடையில் வசித்த ஐஸ் வியாபாரி- கோட்டாட்சியர் முயற்சியால் கிடைத்த வீடு; குவியும் பாராட்டுகள்

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
An ice dealer who lived in Nilukudai - a house obtained through the efforts of Kotatsiyar; Accumulations abound


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை முருகன் கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஒரு நிழற்குடையில் தவளைக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவரான சுப்பிரமணியன் தனது சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது மாற்றுத்திறனாளி பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வந்து தங்கியுள்ளார். சுப்பிரமணியன் பகலில் சைக்கிளில் கிராமம் கிராமமாகச் சென்று ஐஸ் வியாபாரம் செய்து அதில் கிடைத்த வருமானத்தில்தான் மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வந்தார்.

பகலில் மாற்றுத்திறனாளி பெண் மட்டுமே அங்கிருந்தார். கரோனா காலத்தில் அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலராக இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் அரங்க.வீரபாண்டியன் ஆய்வு மேற்கொண்ட போது நிழற்குடையில் தங்கி இருந்த இவர்களுக்கும் உணவு வழங்கியதோடு அவர்களுக்கு என்று தனி வீடு கட்டிக் கொடுக்க நினைத்தார். இதையறிந்த ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்.

இந்நிலையில் தான் கந்தர்வக் கோட்டையில் நடந்த சமாபந்திக்கு வந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசனிடம், பேருந்து நிழற்குடையில் வயதான தந்தையுடன் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார். அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மனைப்பட்டா கொடுத்தால் உடனே வீடு கட்டிக் கொடுக்கிறேன் என்று கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன் கோரிக்கை வைக்க உடனே அந்த நிழற்குடைக்குச் சென்று மாற்றுத்திறனாளி பெண்ணை சந்தித்து விபரங்களை கேட்டறிந்த கோட்டாட்சியர், உடனே வீட்டுமனைக்கு இடம் தேர்வு செய்ய வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கொத்தகம் கிராமத்தில் இடம் தேர்வு செய்து மனைப்பட்டா வழங்கியதுடன் அவர்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் ஆகியவற்றைப் பெற்றுக் கொடுத்ததுடன் உதவித் தொகைக்கும் விண்ணப்பித்துள்ளார். அதே நேரத்தில் மனைப்பட்டா கிடைத்தவுடன் கோட்டாட்சியரிடம் சொன்னது போல வீடு கட்டத் தயாரான கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், தனது சொந்த செலவில் ரெடிமேட் கான்கிரீட் சுவர் அமைத்து ஆஸ்பெட்டாஸ் சீட்டில் அழகிய வீடு கட்டி மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிப்பறை வசதிகளையும் செய்தார். கூடுதல் செலவினங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவையறிந்து அவருக்கான உதவிகளை இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி செய்தார்.

இந்தநிலையில் கோட்டாட்சியர் முருகேசனை தொடர்பு கொண்ட கிராம நிரவாக அலுவலர் வீரபாண்டியன், உங்களிடம் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி வீடு கட்டி முழுமை அடைந்துள்ளது சார் குடியரசு தினத்தில் நீங்கள் வந்து வீட்டை மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அன்புக் கோரிக்கை வைக்க கொத்தகம் சென்ற கோட்டாட்சியர் வீட்டை திறந்து வைத்து குடியேற்றி வைத்து கிராம நிர்வாக அலுவலரையும்  இணைந்து செயல்பட்ட இளநிலை உதவியாளர் பரமேஸ்வரியையும் பாராட்டினார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு முதியவர் சுப்பிரமணியனுக்கு ஒரு விபத்தில் கை உடைந்ததால் ஐஸ் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருவதால் அவர் பெட்டிக்கடை வைக்க உதவி செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்றார். யாரேனும் உதவும் நல் உள்ளங்கள் மாற்றுத்திறனாளி பெண்ணை வைத்துக் கொண்டு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வருமானமின்றி உள்ள சுப்பிரமணியனுக்கு உதவிகள் செய்ய நினைத்தால் உதவலாம்.

இதனைப் பார்த்த கிராம மக்கள் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் தொடர்ந்து உதவிகள் செய்து வரும் கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மற்றும் உதவிய உள்ளங்களை பாராட்டி வருகின்றனர்.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.