Skip to main content

சொந்த பந்தங்களே வாங்க தயங்குகிறபோது... ஊரடங்கு காலத்தில் உயிர்த்தெழுந்த மனித  மாண்பு! -மதம் கடந்த சேவை!

Published on 08/07/2020 | Edited on 08/07/2020
 service

 

கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை, சொந்த பந்தங்களே வாங்கத் தயங்குகிறார்கள். பலர் நீங்களே உடலை அடக்கம் செய்துவிடுங்கள் என்று சுகாதாரப் பணியாளர்களிடம் எழுதிக் கொடுக்கிறார்கள். எங்கே அந்த உடலை தொட்டால் தொற்று பரவிவிடுமோ என்கிற அச்சம் மக்களைச் சூழ்ந்திருக்கிறது.

இந்த அச்சம்தான் மிகச்சிறந்த மருத்துவ சேவைகளைச் செய்தவரான மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்யவிடாமல், ஆம்புலன்ஸ் மீது கல்வீசி, கட்டைகளால் தாக்கி விரட்டியடிக்கச் செய்தது. புதுச்சேரி மாநிலத்தில் முதன்முதலாக கரோனாவால் இறந்தவரின் உடலை, அவசர அவசரமாக அடக்கம் செய்யப்போய் சுகாதாரப் பணியாளர்களே குழிக்குள் வீசிவிட்டுச் சென்ற கொடூரத்திற்கும், இதே அச்சம்தான் காரணம். தொற்று ஏற்பட்டவரின் குடும்பத்தினரை தனிமைப்படுத்தி இருப்பதாலும், அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

இப்படி ஒட்டுமொத்த சமூகமும் கையறு நிலையில் இருக்கும் இக்கட்டான சூழலில், கோவிட்-19 வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்யும் அரும்பணியினைத் தங்கள் பொறுப்பில் எடுத்து, சேவையாக செய்து வருகிறார்கள் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த தோழர்கள். அதுபோலவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ. இதன் அரசியல் அமைப்பு) தோழர்களும் இந்த சேவையை முழுவீச்சில் செய்து வருகின்றனர்.

த.மு.மு.கவினரால் தற்போது வரை தமிழகம் முழுவதும் 125 பேரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஊரடங்கு சமயத்தில் கரோனா அல்லாமல் வேறு காரணங்களுக்காக இறந்தவர்களின் உடல்களையும் த.மு.மு.க.வினர் நல்லடக்கம் செய்கின்றனர்.

இதுதொடர்பாக த.மு.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனியிடம் நாம் பேசிய போது, “நீங்கள் நடந்துசெல்லும் பாதையில் கிடக்கும் முள்ளை, பிறரின் நலனை எண்ணி தூக்கி வீசுவதைக்கூட இறைவணக்கம் தான் என்கிறார் நபிகள் நாயகம். இந்த அடிப்படைப் பயிற்சியை இயக்கத்தின் தொடக்க காலத்திலிருந்து கொடுத்து வருகிறோம்.

இதன் விளைவாக, 2004ல் சுனாமி தாக்கியபோது எங்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காக களத்தில் நின்றார்கள். தரங்கம்பாடியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையிலிருந்த 5 உடல்களை தூய்மை பணியாளர்களே அப்புறப்படுத்த தயங்கியபோது, எங்கள் தோழர்களே அடக்கம் செய்தார்கள். இதுபோன்ற எல்லா பேரிடர் சமயத்திலும் த.மு.மு.க. தோழர்கள் முன்னின்று உதவியிருக்கிறார்கள்.

 

service

 

இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு பிரச்சனைகளைத் தந்திருக்கிறது கரோனா. இதில் முக்கியமானது கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம் செய்யமுடியாமல் போகும் கொடுமை. எனவே, கரோனா அச்சத்தின் காரணமாக, மனித மாண்பை இழக்கும் இந்த இழிநிலையை உணர்ந்து, கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய முடிவுசெய்தோம். அச்சப்படுவோர் சாதி, மத பேதமின்றி உடல்களை எங்களிடம் தாருங்கள், நாங்கள் முறைப்படி நல்லடக்கம் செய்கிறோம் என கோரிக்கையை முன்வைத்தோம். எங்கள் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழகம் முழுவதும் இதற்காக குழுக்களை அமைத்தார்.

 

service

 

இதுவரை 125 உடல்களை அடக்கம் செய்திருக்கிறோம். கரோனாவால் உயிரிழந்த தமிழக பள்ளிக் கல்வித்துறையின் இணைச் செயலாளர் ராமச்சந்திரனின் உடலை, எங்களது அண்ணா நகர் தோழர்கள்தான் அடக்கம் செய்தார்கள். உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி இருக்கும் நெறிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்பு உபகரணங்களின் துணையோடு இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்கு துணிச்சல் மட்டுமே போதுமானதாக இல்லை, போட்டி போட்டுக்கொண்டு உதவக்கூடிய பணியும் இதுவல்ல. இதன்மூலம் எந்த தனிமனித அடையாளமும் கிடைக்கப் போவதில்லை. இறைவன் பார்க்கிறான் என்ற எண்ணத்தில் கடமையைச் செய்கிறோம்'' என்றார் உருக்கமாக.

இதேபோல், பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள், கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். புதுச்சேரியில் கரோனாவால் மரணமடைந்தவரின் உடல் புதைகுழிக்குள் தூக்கி வீசப்பட்ட காட்சி, சமூக வலைதளங்களில் பரவியதை பார்த்து பதறி, உடனடியாக அந்த மாநில அரசை தொடர்புகொண்டு, உடல்களை அடக்கம் செய்யும் பணிக்கு தங்களை அனுமதிக்க கோரினர், முதல்வர் நாராயணசாமியும் அனுமதியளித்தார். இதுவரை 11க்கும் மேற்பட்ட உடல்களை அங்கே அடக்கம் செய்துள்ளனர் இந்த அமைப்பினர்.

சென்னையிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் தொடர்ந்து அழைப்புகள் வரவே, கரோனாவால் இறந்தவர்களின் உடல்களை பாதுகாப்பாகவும் மரியாதையாகவும் எடுத்துச் சென்று அடக்கம் செய்வதில் துணை நின்றுள்ளனர். பிராமண குடும்பத்தினர் தங்கள் மத வழக்கப்படி சடங்குகள் செய்ய வேண்டும் என்றபோது அதற்கும் உதவி செய்து, அதன்பின் இறுதி நிகழ்வு நடைபெற்றுள்ளது.

“இதுவரை சென்னையில் 69 உடல்களை அடக்கம் செய்துள்ளோம். 2 உடல்களை எரியூட்டி உள்ளோம். உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி உரிய பாதுகாப்பு உடைகள் அணிந்து, 12 அடி ஆழக்குழியில் நல்லடக்கம் செய்கிறோம்’’ என்கிறார் எஸ்.டி.பி.ஐ. ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம்.

‘மதம் கடந்து வெளிப்படுகிறது மனித மாண்பு.’

 

Next Story

பா.ஜ.க. - த.ம.மு.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
BJP  TMMK. Alliance agreement signed between

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (20.03.2024) தொடங்கி இருக்கும் நிலையில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ.க. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க.விற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டி.டி.வி. தினகரன் வரும் 24 ஆம் தேதி தேனியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் கையெழுத்திட்டார். அதில், “2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.