Skip to main content

வீட்டுக்குள்ளேயே இருக்கச் சொல்லும் அரசாங்கம் ஒருபுறம்... வீட்டுக்குப் போக வழி கேட்கும் ஏழைகள் மறுபுறம்...!

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

கூட்டம் சேரக்கூடாது, கும்பலாக சுற்றக்கூடாது என நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கும் சூழலில்தான், இந்தியாவின் தலைநகர் டெல்லியிலிருந்து பேரணி போல திரண்ட மக்கள் தங்கள் சொந்த மாநிலங்கள் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் பிற மாநிலங்களிலிருந்து தலைநகருக்கு வந்த தொழிலாளர்கள்.

 

Corona virus issue - Government curfew - Poors waiting in Delhi

 

 

உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வந்த தொழிலாளர்கள் டெல்லியில் குடும்பத்தோடு தங்கி வேலை பார்த்து வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் அவர்களுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. அன்றாடம் உழைத்தால்தான் சாப்பாடு என்ற நிலையில், 4 நாட்களாக உணவுக்கு வழியில்லை. கைக்குழந்தைகளின் அழுகையை நிறுத்த முடியவில்லை. பசியும் பட்டினியுமாக எத்தனை காலம் தலைநகரில் உயிரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அத்துடன், அவர்கள் முடங்கியிருப்பதற்கு வீடும் கிடையாது. தெருவோரமே பல குடும்பங்களின் வசிப்பிடம்.

 

Corona virus issue - Government curfew - Poors waiting in Delhi

 

 

போக்குவரத்தும் முடக்கப்பட்ட நிலையில், கொடும்பசியுடன் தலைநகரிலிருந்து 500, 600 கி.மீ தொலைவில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கே போய்விடலாம் எனப் புறப்பட்டுவிட்டனர். கரோனா தொற்று பரவும் அச்சத்தில் உள்ள மத்திய-மாநில அரசாங்கங்கள் இந்தத் தொழிலாளர்களின் அவலத்தை இப்போதுதான் தங்கள் கழுத்தை லேசாகத் திருப்பி பார்க்கத் தொடங்கியுள்ளன.

பிற மாநிலத் தொழிலாளர்களை டெல்லி காப்பாற்றும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சொந்த ஊருக்குச்  செல்பவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Corona virus issue - Government curfew - Poors waiting in Delhi

 

 

ஆனால், இத்தனை பேருக்கும் எப்படி பேருந்து அல்லது பிற வாகன வசதி செய்து தரப்படும், எத்தனை நாட்களுக்குள் செய்து தரப்படும், அதுவரை அவர்கள் கரோனா தொற்று ஏற்படாமல் தங்குவதற்கு எங்கே இடம், உணவுக்கு என்ன வழி என்று தெரியாத நிலையே நீடிக்கிறது. 

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு இன்று (மார்ச் 28) அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், கொரோனா வைரஸ் பரவலைத்  தடுக்கும் வகையில் பிறப்பிக்கட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நாடு முடங்கியுள்ள நிலையில் வெளிமாநிலங்களிலிருந்து வேலைக்கு வந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட வீடற்ற மக்களுக்கு மறுவாழ்வு முகாம்கள் மற்றும் பிற இடங்களில் தங்க வைத்து, உணவு உள்ளிட்ட வசதிகளை மாநில பேரிடர் பொறுப்பு நிதியிலிருந்து செய்து தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

 

Corona virus issue - Government curfew - Poors waiting in Delhi

 ஒவ்வொரு மாநிலத்திலும், (குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில்) குவிந்திருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கும் இடமின்றி, தின்பதற்கு உணவின்றி சுற்றுத் திரிவது, கொரோனா தொற்றுப் பரவல்  குறித்து அந்தந்த மாநில மக்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சொந்த மாநிலம் என்றாலும் வெளி மாநிலம் என்றாலும் மக்களுக்கு வயிறும் பசியும் ஒன்றுதான். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கங்களின் கடமை.

வீட்டுக்குள் முடங்குங்கள் என்று பிரதமரும் மாநிலங்களின் முதல்வர்களும் தெரிவித்தனர். வீட்டுக்குப் போக வழி காட்டுங்கள் என்கிறார்கள் ஏழைத் தொழிலாளர்கள். பால்கனியில் நின்று கைதட்டி பாரத் மாதாவுக்கு ஜே என்று முழக்கமிட்டவர்கள், இப்போதுதான் குனிந்து பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள், உண்மையான பாரதத்தை.

 

 

Next Story

“ஹரியானா அரசின் முன் கைகளைக் கட்டிக்கொண்டு நின்று கேட்க முடியும்” - ஆம் ஆத்மி அமைச்சர்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
 pleads the Delhi minister to Haryana government

தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தலைநகர் டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. 

மேலும், ஹரியானா அரசு டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரில் பற்றாக்குறை ஏற்பட்டதால், டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இன்னும், சில பகுதிகளில் வாழும் மக்கள் டேங்கர் லாரியை நோக்கி முண்டியடித்துக் கொண்டு தண்ணீரைப் பிடிப்பதற்காக காலி குடங்களுடன் செல்லும் காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனிடையே தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், தண்ணீர் வீணாவதைத் தடுக்கவும் டெல்லி நீர்வளத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 

சில தினங்களுக்கு டெல்லியில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவ வேண்டும் என உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசு முதல்வர்களுக்கு டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடிதம் எழுதியிருந்தார். மேலும், உ.பி மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் டெல்லிக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, டெல்லியில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைக் கண்டித்து அம்மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், டெல்லி அமைச்சர் அதிஷி இன்று (17-06-24) வசிராபாத் தடுப்பணையை ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “வசிராபாத் அணையில் இருந்து தண்ணீர் பல நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. வசிராபாத் அணைக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இப்போது ஆற்றுப் படுகை தெரியும் அளவுக்கு நீர்மட்டம் குறைந்துவிட்டது. டெல்லி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையைத் தீர்க்க ஹரியானா அரசிடம் நாம் முறையிட மட்டுமே செய்யலாம். 

ஹரியானா மாநிலம் யமுனையில் இருந்து தண்ணீர் விடாத வரை, டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு தொடரும். முனாக் கால்வாயில் மிகக் குறைந்த அளவு தண்ணீர் வருகிறது. மறுபுறம், வசிராபாத் அணைக்கு தண்ணீர் வரவில்லை. ஹரியானா அரசின் முன் கைகளை கட்டிக்கொண்டு நின்று டெல்லி மக்களின் உயிர் அவர்களின் கையில் உள்ளது என்று என்னால் கூற முடியும்” என்று கூறினார். 

Next Story

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
Cabinet meeting chaired by Prime Minister Modi

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (09.06.2024) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜெ.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், மனோகர் லால் கட்டார், குமாரசாமி, பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், ஜிதன் ராம் மாஞ்சி, ராஜிவ் ரஞ்சன் சிங், சர்பானந்த சோனாவால், விரேந்திர குமார், ராம் மோகன் நாயுடு, பிரகலாத் ஜோஷி, ஜூவல் ஓரம், கிரிராஜ் சிங், அஸ்வினி வைஷ்னவ், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பூபேந்தர் யாதவ், கஜேந்திரசிங் செகாவத், அன்னபூர்ணா தேவி, கிரண் ரிஜிஜூ, ஹர்திப்சிங் புரி, கிஷன் ரெட்டி, சிராக் பாஸ்வான், மன்சுக் மாண்டவியா மற்றும் சி.ஆர்.பர்டில் ஆகியோருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனையடுத்து தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள் பதவியேற்றனர். இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர். 

Cabinet meeting chaired by Prime Minister Modi

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் புதியதாக பதவியேற்ற மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் தொடங்கியது. இதில் நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கான தேதி, 100 நாட்கள் செயல் திட்டம், மக்களவை சபாநாயகர் தேர்வு செய்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீடுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.