விழுப்புரம் மாவட்டத்தின் உள்கிராமம் ஏழுசெம்பொன். நமது நண்பரோடு டூவீலரில் அந்த கிராமத்தின் வழியே சென்றபோது ஊர்முகப்பில் பாழடைந்த நிலையில் ஒரு சிவன் கோவில் உள்ளது. அதன் உள்ளே கம்பீரமான தோற்றத்தில் லிங்க வடிவில் சிவன் காட்சியளிப்பதை பார்த்ததும் நாம் கீழே இறங்கி சிவனை வணங்கினோம். கோயிலுக்கு பக்கத்தில் பெட்டிக்கடை வைத்திருக்கும் பெரியவர் சக்கரவர்த்தி நம்மிடம் வந்தவர், 'ஊருக்கு புதுசா' என்றார். 'ஆமாம்' என்றோம். அவரிடம் பேசியபடியே நமது நண்பர், பெரியவரே 'உங்கள் கடையில் சிகரெட் இருக்கா' என்றார்.
எங்கள் இருவரையும் ஏற இறங்க பார்த்தவர், "எங்க ஊரைப்பற்றி நீங்க கேள்விப்பட்டதில்லையா?" என்றார் கொஞ்சம் கோபம் கலந்த குரலில். 'என்ன விஷயம்?' என்றோம். 'எங்க ஊர் கடைகளில் பீடி சிகரெட் விற்பனை செய்வது இல்லை'. 'அட இது என்னங்க புதுமையா இருக்கு, பள்ளி மாணவர்கள் கூட ஸ்டைலா சிகரெட் பிடிக்கிற இந்த காலத்தில் இது என்ன கட்டுப்பாடு' என்றோம்.
'தம்பிகளா... அதை பற்றி வாக்குவாதம் செய்யாதிங்க, மீறினால் உங்களுக்கு தர்ம அடி கிடைக்கும்'' என்றார் பெரியவர். இதற்குள் அங்கே ஊர் முக்கியஸ்தர்கள் பலர் அங்கே கூடிவிட்டனர். அப்போதுதான் நாம் பத்திரிகையாளர் என்ற விஷயத்தை சொல்லி தம் அடிப்பதில் என்ன கட்டுப்பாடு என்று விலாவாறியாக சொல்லும் படி அவர்களிடம் கேட்டோம்.
'எங்க ஊர்ல சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறோம். ஊரில் பொது இடங்கள், தெருக்கள், கோயில் வளாகம் உட்பட எந்த இடத்திலும் புகைபிடிக்க கூடாது என்ற ஊர் கட்டுப்பாடு உள்ளது. இது இன்றோ நேற்றோ வந்ததில்லை. எங்க அப்பன் பாட்டன் முப்பாட்டன் காலத்திலேயே இந்த கட்டுப்பாடு உள்ளது. மீறி யாராவது புகைபிடித்தால் ஆண், பெண், சிறுவர் என பலரும் சேர்ந்து தர்மஅடி கொடுத்து திருந்தவைப்போம். இந்த கட்டுப்பாட்டினால் எங்க ஊரில் உள்ள எந்த கடைகளிலும் பீடி, சிகரெட் போன்ற புகை பிடிக்கும் வகைகளை விற்பதே இல்லை' என்கிறார் பெரியவர் சக்கரவர்த்தி.
'எனக்கு 60 வயது ஆகுது. எங்க தாத்தாவே சொல்லியிருக்காரு வெள்ளைக்காரன் ஆண்ட காலத்திலே இருந்து ஊரிலே இந்த கட்டுப்பாடு உள்ளதாம். ஒருமுறை ஊர்ல ஏதோ பிரச்சினை ஏற்பட்டு பெரிய பெரிய போலீஸ் அதிகாரிகள் எல்லாம் வந்தாங்க. கும்பலாக இருந்த அந்த இடத்தில் ஊர் பிரச்சினை பற்றி பேசிக்கொண்டே ஒரு பெரிய அதிகாரி சிகரெட் எடுத்து பற்றவைத்தார். அங்கிருந்த பெரியவர்கள், 'சார் எங்க ஊர்ல யாருமே புகைபிடிக்க கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. அதை மீறி யாரும் இங்கே பீடி,சிகரெட் பிடிப்பதில்லை, நீங்களும் சிகரெட் பிடிக்காதீங்க என்றார்கள். அதை கேட்ட அந்த அதிகாரியும் ஊரில் ஒற்றுமையாக கடைபிடித்து வரும் கட்டுப்பாடு பற்றி விபரமாக கேட்டுவிட்டு அதற்கு நானும் மதிப்பளிக்கிறேன் என்று புகைபிடிக்காமல் இருந்து பிரச்சனை குறித்து பேசி முடித்துவிட்டு சென்றார். அதுவரை அவரோடு வந்திருந்து அதிகாரிகள் அனைவரும் புகைபிடிக்காமல் இருந்துவிட்டு சென்றனர்' என்கிறார் பெரியவர் பாண்டுரங்கன்.
'எங்க ஊர் கஞ்சனூர் போலீஸ் எல்லையில் உள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஸ்டேஷனில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் புகார் சம்பந்தமாக விசாரணை செய்ய எங்கள் ஊருக்கு வந்தார். வந்தவர் விசாரணை செய்து கொண்டே ஸ்டைலாக சிகரெட் எடுத்து பற்றவைத்தார். அங்கிருந்தவர்கள் பவ்யமாக, "அய்யா எங்க ஊர்கட்டுப்பாடு, ஊருக்குள் வரும் உள்ளூர் ஆட்களாக இருந்தாலும், வெளியூர் ஆட்களாக இருந்தாலும், பெரிய அதிகாரிகளாக இருந்தாலும் யாரும் புகைபிடிக்க கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. தயவு செய்து நீங்கள் அதற்கு மதிப்பளித்து புகைபிடிக்காதீர்கள்" என்று சொல்லியுள்ளார்.
அந்த போலீஸ்காரர் ரொம்பத் திமிராக, 'யோவ் பொது இடத்துல சிகரெட் பிடிப்பதைத் தடுக்க நீங்கள் யார், இது என் சுதந்திரம். அரசாங்கமே பீடி, சிகரெட்டை தயாரித்து விக்க சொல்லுது, அதை பிடிக்காதே என்று சொல்ல நீங்கள் யார்? உங்க வீட்டுக்குள்ளயா வந்து புகைபிடித்தேன்? இது பொது இடம் இது அரசுக்கு சொந்தம். அதனால் புகைபிடிப்பது என் சுதந்திரம் அதை தடுக்க நீங்கள் யார்?' என்று திமிராகவும் மிரட்டலாகவும் பேசியபடி புகை பிடிக்க ஆரம்பித்தார். ஊர்மக்கள் பலரும் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. ஊர் கட்டுப்பாட்டை மதிக்காமலும் அதை மீறியதாலும் கோபமடைந்த ஊர்மக்கள் அந்த போலீசுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
சட்டை கிழிந்த நிலையில் ஓடிப்போய் காவல்நிலையத்திலிருந்த மேல் அதிகாரியிடம் சொல்ல எங்கள் ஊரின் கட்டுபாட்டை தெரிந்துவைத்திருந்த அந்த அதிகாரி, 'ஊர் கட்டுபாட்டை மீறியது உன் தவறு என்றும் கிராம மக்கள் எடுத்து சொல்லியும் கட்டுப்பாட்டை மீறி உன் போலீஸ் என்ற திமிரைக் காட்டலாமா? மக்கள் கட்டுப்பாட்டோடு கடைபிடிக்கும் ஒரு நல்ல பழக்கத்தை போலீஸ்காரரான நீங்களே மீறலாமா?' என்று அந்த போலீஸ்காரரை கடுமையாக எச்சரித்து அறிவுரை கூறியுள்ளார். அப்படிப்பட்ட பெருமைபெற்ற ஊர் எங்கள் ஊர்' என்கிறார்கள் கலியபெருமாள், சக்ரவர்த்தி ஆகியோர்.
இந்தக் கட்டுப்பாடு எதனால் வந்தது என சுப்பிரமணியன் என்பவரிடம் கேட்டோம். 'சுமார் 100 ஆண்டுகளுக் முன்பே எங்கள் ஊரில் குடிசைவீடுகள் அதிக அளவில் இருந்துள்ளன. அப்போது யாரோ ஒரு வழிப்போக்கன் சுருட்டு பிடித்துவிட்டு, அதை அணைக்காமல் அடிக்கட்டையை அப்படியே வீதியோரம் வீசிவிட்டுபோக அந்த சுருட்டு குப்பையில்போய் விழுந்து. அது கொஞ்சம் கொஞ்சமாக புகைந்து தீயாக பரவி ஊர் முழுக்கு இருந்த குடிசை வீடுகள் அனைத்தும் எறிந்து நாசமாகிவிட்டது. அப்போது மக்கள் வீடு இல்லாமல் புதுவீடு கட்ட பட்ட கஷ்டங்கள் துன்பங்கள் ஏராளம். அப்போதுதான் ஊர் கூட்டம் போட்டு இனிமேல் ஊரில் யாரும் புகைபிடிக்க கூடாது, பீடி சிகரெட் வாடையே ஊரில் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை விதித்தனர். அந்த கட்டுப்பாட்டை இன்றுவரை மட்டுமல்ல, இனிமேலும் தொடர்ந்து கடைபிடிப்போம், அதை யாரும் மீறமாட்டோம், யாரும் மீறவிடமாட்டோம். -ஊரில் உள்ள மக்களுக்குள் எத்தனை கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் புகைக்கு போட்ட தடையை யாருமே மீற மாட்டார்கள். இந்த விஷயத்தில் எங்கள் மக்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்கிறார் சுப்பிரமணியன்.
இளைஞரான துளசிதாஸ், எங்க ஊரில் வீட்டுக்கு இரண்டு மூன்று பட்டதாரிகள் உள்ளனர். அதேபோல் அரசுப் பணிகளிலும் நிறைய பேர் உள்ளனர். பள்ளி கல்லூரிகளுக்கு வெளியூர் போய் படிக்கிறார்கள். அப்படிப்பட்ட எங்க ஊர் இளைஞர்களுக்கு 'தம் அடிக்க வேண்டும்' என்ற எண்ணமே வருவதில்லை. ஊரில் காலங்காலமாக கடைபிடித்துவரும் இந்த பழக்கம், எங்களது ஜீன்களிலே ஊரிப்போய் உள்ளது, சிறுவர்களுக்கு பயத்தையும், இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் கட்டுப்பாட்டையும் கொடுக்கிறது. இந்த பரம்பரை புகை தடை செய்யப்பட்டதை வரவேற்கிறோம். மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்த அன்புமணி, பொது இடங்களில் புகைபிடிக்க கூடாது என்ற சட்டத்தை இந்திய அளவில் கொண்டுவந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதை அப்போது மத்திய மாநில அரசுகள் பரபரப்பாக வரவேற்றதே தவிர, ஆனால் அதை எந்த அரசுகளும் முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆனால் எங்கள் ஊரில் அந்த காலத்திலேயே அந்த சட்டத்தை போட்டு அதை முழுமையாக நிறைவேற்றி வருகிறார்கள். காலம்காலமாக எங்கள் ஊரில் உள்ள புகைக்கு தடை சட்டம், அரசாங்கத்திற்கே முன்மாதிரியாக விளங்கி வருகிறது என்பது எங்களுக்கு பெருமை என்கிறார் துளசிதாஸ்.
மதிப்புமிக்க இந்த ஊரைப் போல நாட்டில் உள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் புகையில்லாத சட்டத்தை இந்த ஊரைப் பார்த்தாவது நிறைவேற்றுமா மத்திய மாநில அரசுகள்.