Skip to main content

சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே இழந்த ’சினிமா ராணி’டி.பி.ராஜலட்சுமி!

Published on 11/11/2019 | Edited on 12/11/2019
c

 

மிழ் சினிமாவின் முதல் நடிகை, தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குநர், தயாரிப்பாளர், நாவலாசிரியர் என பன்முகம் கொண்டவர் டி.பி.ராஜலட்சுமி. நாடகம், சினிமா, இலக்கியம் என்ற வட்டத்திற்குள் அடங்கிவிடாமல், விதவை மறுமணத்திற்கு ஆதரவாகவும், பெண் சிசுக்கொலைகளுக்கு எதிராகவும், குழந்தை திருமணங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து தன்னை சமூக சீர்திருத்தவாதி என்றும் அடையாளப்படுத்திக்கொண்டவர்.  நாடகங்கள் மூலமாக தேசபக்தி பாடல்களை பாடி சுதந்திர தாகத்தை தூண்டி வந்ததால் சிறைக்கும் சென்றுவந்த போராளி.  

 

அக்காலகட்டத்தில் நாடகம், சினிமாவுக்கு வருவதற்கு ஆண்களே அஞ்சியிருந்த சூழலில், அதுவும் பொதுவெளியில் நடமாட தயங்கும் பிராமணர் குடும்பத்தில் பிறந்த ராஜலட்சுமி, நடிக்க வந்ததோடு அல்லாமல், சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கியது ஆச்சரியம். 

 

குழந்தைப்பருவத்தில் வறுமையில் வாடினாலும், இளம் பருவத்தில் வளமாக இருந்தும், ராஜலட்சுமியின் கடைசிக்காலம் வறுமை, பக்கவாதம், வாடகை வீடு என்று கழிந்தது பேரதிர்ச்சி.

 

சினிமா பார்ப்பது ஒரு பாவச்செயல்:

 இருபதாம்  நூற்றாண்டின் தொடக்கத்தில் சினிமா பார்ப்பதே பாவம் என்ற நம்பிக்கை இருந்தது. சினிமாவைப் பார்ப்பதே பாவம் என்ற நிலை இருந்தபோது சினிமாவில் நடிப்பது பற்றி கேட்கவா வேண்டும்.  சினிமாவில் நடிக்க வருவதற்கு ஆண்கள் தயங்கினார்கள்.  அதிலும் பெண்கள் அஞ்சி நடுங்கினர். விலைமாதுக்கள் கூட சினிமாவில் நடிக்க பந்தார்கள். ’அது தருகிறேன்.. இது தருகிறேன்..’ என்று கெஞ்சி கூத்தாடித்தான் ஆண்களை நடிக்க வைத்தனர்.  கெஞ்சிக்கூத்தாடியும் பெண்கள் நடிக்க வராததால், ஆண்களையே பெண் வேடமிட்டு நடிக்க வைத்தார்கள்.  பின்னாளில்,  சினிமா ஒரு கலை என்பதையும், அது ஒரு தொழில் என்பதையும் உணர்ந்து ஹாலிவுட்டில் பெண்கள் நடிக்க வந்தார்கள்.  இந்தியாவைப் பொறுத்தவையிலும் ஆங்கிலோ இந்தியப்பெண்கள் முதலில் நடிக்க சம்மதித்தனர்.  அப்புறம்தான் நம்மூர்ப்பெண்கள் நடிக்க முன்வந்தனர்.

t

இந்தியாவின் முதல் படமான ’ராஜா ஹரிச்சந்திரா’ படத்தில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தனர்.  தென்னிந்தியாவில் தயாரான’திரெளபதி வஸ்திராபரணம்’ படத்தில் திரெளபதியாக  வயலெட்பெரி என்னும் வெள்ளைக்காரப்பெண்மணி நடித்தார். ’அனார்கலி’ திரைப்படத்தில் ருபிமேயர்ஸ் என்ற யூதப்பெண்ணை சுலோசனா என்று பெயர்மாற்றி நடிக்க வைத்தனர்.  கெளதம புத்தரின் வாழ்வைக்கூறும் ‘லைட் ஆப் ஏசியா’ என்கிற படத்தில் கெளதமரைக்காதலிக்கும் இளவரசி கோபாவாக,  ரெனீஸ்மித் என்கிற ஆங்கிலோ இந்தியப்பெண்மணியை சீதாதேவி என்று பெயர் மாற்றி நடிக்க வைத்தனர்.

t

நடிக்க வரும் பெண்களுக்கு பெயர் மாற்றுவது என்பது சினிமா தொடங்கிய காலத்திலேயே உருவாகிவிட்டது. என்ன வேறுபாடு என்றால், அன்று வேறு ஊர் பெண்களுக்கு நம்ம ஊர் பெயர்களை வைத்தார்கள்; இன்று நம்ம ஊர் பெண்களுக்கே வேற்று மொழிப்பெயர்களை வைக்கிறார்கள். அதே போல் நடிகைகள் இறக்குமதியும் தொடக்கத்திலிருந்தே இருந்துள்ளது. இதுவும் அன்று நம்ம ஊர் பெண்கள் நடிக்க வராததால் வேறு வழியின்றி தேவை கருதி வரவழைத்தனர். 

 

தாதா சாகேப் தயாரிப்பில் இந்தி்யாவில் தயாரான முதல் படத்தில் நடிகைகள் நடிக்கவில்லையென்றாலும், பால்கேயின் இரண்டாவது படமான  1914ல் தயாரான மோகினி பஸ்மசூர் படத்தில் துர்காபாயும் அவரது மகள் கமலாபாய் கோகலேயும்  நடித்தனர். இவர்களே இந்தியத்திரைப்படத்தில் நடித்த முதல் இந்தியப் பெண்கள். இதையடுத்து சினிமாவில் பெண்களின் பங்களிப்பாக, 1926ல் ஒரு பெண் தயாரித்த முதல் இந்தியப் படம் புல்புல் எ பரிஸ்தான். இதை ஃபாத்மா பேகம். என்பவர் இயக்கியுள்ளார். இதையடுத்து தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் நடிக்க வந்த முதல் நடிகை டி.பி.ராஜலட்சுமி. இவர், தமிழ் சினிமாவின் முதல் நடிகை என்பதோடு அல்லாமல் முதல் பெண் இயக்குநர், முதல் பெண் தயாரிப்பாளர், முதல் பெண் பாடலாசிரியர், நாவலாசிரியர் என்ற பெருமைக்கும் உடையவர்.  

t

 

7வயதில் திருமணம்; 8வயதில் விவாகரத்து:

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஏழை பிராமணக்குடும்பத்தில் 11.11.1911ல் பிறந்தார் டி.பி.ராஜலட்சுமி.  தந்தை பஞ்சாபகேச அய்யர், தாயார் மீனாட்சி அம்மாள்.  அக்கால வழக்கப்படி 7 வயதில் ராஜலட்சுமிக்கு திருமணம் நடந்தது.  வரதட்சனை விவகாரத்தினால் 8 வயதில் வாழாவெட்டி ஆனார்.  வறுமையினாலும் மகளின் நிலைமையினாலும் மனங்கலங்கி படுத்த படுக்கையாகக்கிடந்து பஞ்சாபகேச அய்யர் மறைந்தார்.  இதையடுத்து, பிழைப்புதேடி தாயாருடன் டி.பி.ராஜலட்சுமி திருச்சிக்கு குடிபெயர்ந்தார்.

 

கூத்தாடிகள்:

ராஜலட்சுமியின் அம்மா மீனாட்சி நன்கு பாடக்கூடியவர், அவரிடம் படித்து நன்கு பாடக்கற்றுக்கொண்டார் ராஜலட்சுமி. அத்தோடு நாடகங்களில் நடிக்கவும் ஆர்வம் கொண்டிருந்தார். நாடகங்களைப் பார்த்து நடிப்பின் மீது  மிகுந்த ஆவல் கொண்ட ராஜலட்சுமிக்கு, தானும் நடித்து சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.  நாடகம் என்றாலே கேவலமாக கருதப்பட்ட காலம் அது.  நாடகங்களில் நடிப்பவர்களை கூத்தாடிகள் என்று இழிவாக பேசுவது வழக்கம். இதனால் தன் மகளை நடிக்க அனுப்புவதற்கு தயங்கினார் மீனாட்சி அம்மாள்.  ஆனால், வறுமையின் கொடுமையை சமாளிக்க முடியாமல் மகள் நாடகத்தில் நடிக்க சம்மதி்த்தார். 

 

கதாநாயகன்:


திருச்சியில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் அறிமுகம் கிடைத்ததோடு அல்லாமல், அவருடைய நடிப்பு பயிற்சியும் ராஜலட்சுமிக்குக் கிடைத்தது. திருச்சியில்  அப்போது வெற்றிகரமாக நடந்து வந்த சாமண்ணா நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்க ராஜலட்சுமிக்கு சந்தர்ப்பம் வந்தது. தனது 11வது வயதில் ராஜலட்சுமி நாடக நடிகையானார். அவர் நடித்த முதல் நாடகம் ’பவளக்கொடி’. இந்த நாடகத்தில் கதாநாயகன் வேடத்தில், அதாவது அர்ச்சுனன் வேடத்தில் நடித்தார் ராஜலட்சுமி.

 

அந்தக்கம்பெனியில் அவருக்கு30 ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது.  அதன் பின்னர் கே. எஸ். செல்லப்பாவின் நாடகக் கம்பனியில் 75 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்து நடித்தார். பின்னர் கே. பி. மொய்டீன் சாகிப் நாடக மன்றத்தில் மூன்றாண்டுகள் கதாநாயகியாக நடித்தார். அந்நாடகக் குழு பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் நாடகங்களை நடத்தினார்கள். பின்னர் கன்னய்யா நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தார்.  எஸ். ஜி. கிட்டப்பாவுடன் ’ராமா பட்டாபிஷேகம்’, எம். கே. தியாகராஜ பாகவதருடன் ’பவளக்கொடி’,’கோவலன்’  ஆகிய சில நாடகங்களில் நடித்தார். 18-வயதில் திரைப்பட உலகில் நுழைந்தார். 

 

சிறைவாசம்:

  நாடகங்களில் வெறுமனே நடித்து ஆடிப்பாடுவது என்றில்லாமல், தேசபக்திப்பாடல்களைப் பாடி சுதந்திர தாகத்தை தூண்டிவந்தார் ராஜலட்சுமி.  ‘ராட்டினமாம் காந்தி கைபாணமாம்’, ‘இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண் சண்டை’ ஆகிய தேசபக்திபாடல்கள் மிகப்பிரபலம்.  இவரது பாடல்களுக்காகவே நாடகங்கள் பார்க்க ரசிகர்கள் கூடினர்.  தேசபக்தி பாடல்களை பாடியது குற்றமென்று ஆங்கிலேய அரசினரால் பலமுறை கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்ல நேரிட்டது ராஜலட்சுமிக்கு. 

ட்

முதல் மவுனப்படத்தில் ராஜலட்சுமி:

தமிழ் சினிமாவின் முதல் மவுனப்படத்தில் நடித்தவர் என்ற பெருமைக்குரியவர் ராஜலட்சுமி.  1917ல் ஆர். நடராஜ முதலியார் தயாரித்த தமிழ்த் திரைப்படவுலகின் முதல் மவுனப் படமான "கீசகவதம்"  படத்தில் ராஜலட்சுமி நடித்தார். அடுத்து, 1929ல் ஏ. நாராயணன், ராஜலட்சுமியைத் தனது ‘கோவலன்’ படத்தில் மாதவியாக நடிக்க வைத்தார். இது இவர் நடித்த இரண்டாவது மவுனத் திரைப்படமாகும். இதனைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் ‘உஷா சுந்தரி’, ராஜா சாண்டோவின் "இராஜேசுவரி" (1931) என சில மவுனப்படங்களில் நடித்தார். 

 

முதல் குறும்படத்தில் ராஜலட்சுமி:

தமிழ் சினிமாவின் முதல் குறும்படத்தில் நடித்த பெருமைக்கும் உரியவர் ராஜலட்சுமி.   மும்பையைச் சேர்ந்த சாகர் மூவிடோன் தயாரிப்பில் 1931ல் "குறத்தி பாட்டும் நடனமும்" என்ற நான்கு ரீல் குறும்படத்திலும் நடித்தார்.

 

முதல் பேசும்படத்தில் ராஜலட்சுமி:

 தமிழின் முதல் பேசும் படத்தில் நடித்த பெருமையும் உண்டு ராஜலட்சுமிக்கு.  முதல் பேசும் படமான காளிதாஸ் படத்தில் கதாநாயகியாக நடித்தார் ராஜலட்சுமி.  இந்தியில் முதல் பேசும்படத்தை தயாரித்த அர்தேஷிர் இரானி தயாரிப்பில், எச்.எம்.ரெட்டி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் இப்படம் தயாரானது.   தமிழ், தெலுங்கு இரு மொழிகளுக்கும் முதல் பேசும்படம் காளிதாஸ்தான்.  இப்படத்தில் கதாநாயகன் தெலுங்கு என்பதால் அவர் தெலுங்கில் பேசி நடித்திருப்பார்.  கதாநாயகி ராஜலட்சுமி தமிழர் என்பதால் அவர் தமிழில் பேசி நடித்திருப்பார்.  துணைநடிகள் அனைவரும் ஹிந்திக்காரர்கள் என்பதால் அவர்கள் ஹிந்தியில் பேசி நடித்தார்கள்.

 

இப்படி மும்மொழிகள் கொண்டு இரு மொழிகளில் தயாரான காளிதாஸ் படம் 31.10.1931ல் திரைக்கு வந்தது. சென்னையில் இப்படம் ‘கினிமா செண்ட்ரல்’ தியேட்டரில் ரிலீஸ் ஆனது.   இந்த தியேட்டர் பின்னாளில் ‘முருகன் டாக்கீஸ்’ என பெயர் மாறியது.  

 

காளிதாஸ் படத்திற்கு, ’மிஸ் டி.டி.ராஜலஷ்மி நடிக்கும் காளிதாஸ். முழுதும் பேச்சு, பாடல், நடனம் நிறைந்த காட்சி. இம்பீரியல் மூவிடோன் கம்பெனியாரால் தயாரிக்கப்பட்டது.  உயர்ந்த கீர்த்தனங்கள், தெளிவான பாடல்கள், கொரத்தி நாட்டியங்கள், பாதி கெஜட் காட்சிகளும் காண்பிக்கப்படும்’’என்று விளம்பரம் வெளியிடப்பட்டது.

 

மறுமணம் :

1932ல் காளிதாஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து ’ராமாயணம்’ படத்தில் நடித்தார். இதில் சீதை, சூர்ப்பனகை என இரண்டு மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். இக்காலகட்டத்தில் இவருக்கு ’சினிமா ராணி’ என்ற பட்டமும் வழங்கி மகிழ்ந்தனர் ரசிகர்கள். தொடர்ந்து, அரிச்சந்திரா, கோவலன், சத்தியவான் சாவித்திரி, உஷா சுந்தரி, ராஜேஸ்வரி, மதுரை வீரன் ஆகிய படங்களில் நடித்தார். 1933 இல் டி.பி. ராஜலட்சுமி நடித்து வெளிவந்த வள்ளி திருமணம் தமிழின் முதல் வெற்றிப்படம் ஆகும்.

 

விடுதலை போராட்டத்தின் மீதும், காங்கிரஸ் கட்சியின் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் ராஜலட்சுமி.  ஆகவே, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு காங்கிரஸ்காரர் டி.வி.சுந்தரத்தை மறுமணம் செய்துகொண்டார்.

m

’வள்ளித்திருமணம்’ படத்தில் நடித்தபோது, நாரதர் கேரக்டரில் நடித்த டி. வி. சுந்தரத்துடன் காதல் உண்டாகி, அப்போதே திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்திற்கு பின்னர் இருவரும் கல்கத்தாவில் வாழ்ந்தார்கள். அங்கேயே திரௌபதி, அரிச்சந்திரா, குலேபகாவலி போன்ற படங்களில் நடித்து வந்தார்கள். சுந்தரம், ராஜலட்சுமி தம்பதியினருக்கு 1936ல் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு கமலா என்ற பெயரிட்டார்கள். 

t

கல்கத்தாவில் இருந்து சென்னை திரும்பிய ராஜலட்சுமி,  ‘ஸ்ரீ ராஜம் டாக்கீஸ்’ என்ற கம்பனியைத் தொடங்கி, தன் மகள் பெயரிலேயே, ’மிஸ் கமலா’ என்று தானே கதை,வசனம் எழுதி கதாநாயகியாக நடித்து, தயாரித்து, இயக்கி வெளியிட்டார். இதன் மூலம் தமிழின் முதல் பெண் தயாரிப்பாளர் எனும் பெயரும் ராஜலட்சுமிக்கு கிடைத்தது. இப்படம் 1936ல் வெளிவந்து தோல்வி அடைந்தது. ஆனாலும், பின்னாளில் வந்த ‘அரங்கேற்றம்’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ’மனதில் உறுதி வேண்டும்’படங்களுக்கு  முன்னோடி சினிமாவாக இது அமைந்தது.   விதவையின் மறுமணம் பற்றி பேசிய புரட்சிப்படம் அது. 

t


இரட்டை தலைப்புகள்: 

மிஸ்.கமலா படத்தைத் தொடர்ந்து ’மதுரை வீரன்’ (1938) படத்தை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துக்கும் இவரது சகோதரர் டி. பி. ராஜகோபால் இசையமைத்திருந்தார். திரைப்படக் கம்பெனியை மற்றொரு சகோதரர் டி. பி. ராஜசேகரன் கவனித்து வந்தார்.

t

நாடகம், சினிமாவோடு நின்றுவிடாமல் இலக்கியத்துறையில் கால்பதித்து நாவல்கள் எழுதினார்.  கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், விமலா, சுந்தரி, வாஸந்திகா, உறையின் வாள்  என்று ஐந்து நாவல்கள் எழுதியுள்ளார்.  அவர் எழுதிய நாவல்களில் பெண் உரிமைகளை வலியுறுத்தி வந்தார்.  “கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்” என்ற  இந்த நாவலிலும் சமூக முன்னேற்றக் கருத்துக்களே மையமாக உள்ளன.

 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் இரட்டைத் தலைப்பிடும் முறை வழக்கத்திலிருந்தது. பத்திரிக்கைகளில் இடம்பெறும் செய்தியின் தலைப்புகள் தொடங்கி, நாவல் தலைப்புகள், சிறுகதைத் தலைப்புகள், நூலின் தலைப்புகள், திரைப்படத் தலைப்புகள் என அனைத்துத் தலைப்புகளும் இரண்டிரண்டாக இடப்படுவது வழக்கம். முதல் தலைப்புக்கும் அடுத்த தலைப்புக்கும் இடையே அல்லது என்ற சொல் இடம்பெறும். இம்மரபைப் பின்பற்றி ராஜலட்சுமியும்,  ’கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்’ என இரட்டைத் தலைப்பு வைத்துள்ளார். கமலவல்லியை டாக்டர் சந்திரசேகரன் காதலிப்பதும் உமையப்பன் என்ற தீயவனால் பல இடையூறுகள் ஏற்படுவதும் பின்னர் பிறர் உதவியால் யாவும் சுபமாய் முடிவதும்தான் இந்த நாவலின் கதை. முதல் நாவலான கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் நாவலைத் தம் இருபதாவது வயதில் எழுதியுள்ளார். கதாநாயகியாக நடித்துத் தமிழின் முதல் பேசும்படம்; வெளிவந்த அதே ஆண்டில் டி.வி. பாலகிருஷ்ண நாயுடு என்பவரால் இந்நாவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

திரைப்படத்துறையில் இருந்துகொண்டே சமூக உணர்வுடன் கூடிய இலக்கியப் படைப்பை அளித்த ராஜலட்சுமியை பாராட்டாதவர்கள் இருந்ததாக தெரியவில்லை.


இலங்கை திலகம் :

இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் சென்று நாடகங்கள் நடத்தி வந்தார் ராஜலட்சுமி.  1935ல் பர்மாவில்  நாடகம் நடத்தினார். பர்மாவின் ரங்கூன் நகரில் இவரது நாடகம் மூன்று மாதத்திற்கு மேல் தொடர்ந்து வெற்றிகரமாக நடந்தது. 1936ல் இலங்கையில் நாடகம் நடத்தினார். இவரது நாடகத்தை கண்டுகளித்த இலங்கை ரசிகர்கள் இவருக்கு ‘இலங்கை திலகம்’ என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தனர்.

 

ராஜலட்சுமி நடித்த படங்கள்:

காளிதாஸ், ராமாயணம், வள்ளித்திருமணம், சத்தியவான் சாவித்திரி, திரௌபதி வஸ்திராப ஹரணம், கோவலன், பக்தகுசேலா, குலேபகாவலி, பூர்ணசந்திரா, சம்பூர்ண அரிச்சந்திரா, பாமா பரிணயம், மிஸ்கமலா, வீர அபிமன்யு, சீமந்தனி, கௌசல்யா பரிணயம், நந்தகுமார், அநாதைப் பெண் சுகுண சரஸா, தமிழ் தியாகி, மதுரைவீரன், குமார குலோத்துங்கன், பக்த குமணன் (அல்லது) ராஜயோகி, மாத்ருதர்மம், உத்தமி, பரஞ்சோதி, ஜீவஜோதி, இதயகீதம் என்று ராஜலட்சுமி 27 படங்களில் நடித்துள்ளார். 

ட்

புரட்சி :

விதவை மறுமணத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து புரட்சியை ஏற்படுத்திய ராஜலட்சுமி, குழந்தைத் திருமணத்திற்கு எதிராகவும், சிசுக் கொலைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார். பெண் சிசுக்கொலைக்கு குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், சிசு கொலை செய்யப்படவிருந்த ஒரு பெண் சிசுவை தானே தத்தெடுத்து, அக்குழந்தைக்கு ’மல்லிகா’ என பெயர் சூட்டி வளர்த்து, அந்த பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் செய்துவைத்து புரட்சி செய்தார் ராஜலட்சுமி.


கச்சை அணிய மறுப்பு:

t

சினிமாவில் பணம், புகழ் சேர்ந்தாலும் ராஜலட்சுமி தன் சுயமரியாயை விட்டுக்கொடுக்காதவர். இதனால், நந்தகுமார் படத்தில் நடித்தபோது,  சர்ச்சை உண்டானது. அப்படத்தில் கிருஷ்ணனின் தாய் யசோதா வேடத்தில் நடித்தார். புராண காலத்தின்படி யசோதை கச்சை கட்டித்தான் நடிக்க வேண்டும். ஆனால், ராஜலட்சுமியோ கச்சை அணிய மாட்டேன்.  ரவிக்கைதான் அணிவேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டார். 

 

இப்படத்தின் இந்திப்பதிப்பில் நடிக்கும் நடிகை கச்சை அணிந்துதான் நடிக்கிறார் என்று ஏ.வி.எம்.செட்டியார் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப்பார்த்தார்.   ரவிக்கைதான் என்று ராஜலட்சுமி பிடிவாதமாக இருந்தார்.  

 

வற்புறுத்தினால்  படத்தில் நடிக்காமல் விலகிவிடுவேன் என்று கூறிவிட்டதால், செட்டியார் அதற்கு மேல் அவரிடம் பேசவில்லை.  கடைசியில் 'நந்தகுமார்' திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பில்  ரவிக்கை அணிந்துதான் வந்தார் யசோதா.

 

அம்மா வேடம்:

t

நாற்பதுகளில் சினிமாவின் முகம் மாறியது. தமிழ் சினிமாவின் வடிவம் மாறியதோடு மட்டுமல்லாமல் புதியவர்கள் வருகையும் அதிகரித்தது.   சினிமாவுக்கு வர தயங்கியிருந்தது எல்லாம் ஒரு காலம் என்றாகி, சினிமாவுக்கு ஆர்வத்துடனும், தைரியத்துடனும்  நடிக்க வந்துகொண்டிருந்தனர்.  எதிலும் விட்டுக்கொடுத்து போகாத ராஜலட்சுமிக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் வயது மூப்பின் காரணமாக படங்களே இல்லாத நிலை ஏற்பட்டது.

 

19 ஆண்டுகாலம் திரையுலகில் வலம் வந்த ராஜலட்சுமி கடைசிக்காலத்தில் ’ஜீவஜோதி’, ’இதயகீதம்’ படங்களில் அம்மா கேரக்டரில் நடித்தார் ராஜலட்சுமி. 1950-ல் வெளிவந்த 'இதயகீதம்' என்ற படம்தான் டி.பி.ராஜலட்சுமி நடித்த கடைசிப் படம். 

 

காணிக்கை:

t

சுதந்திரப்போராட்டத்தை மையமாக வைத்து’இந்தியத்தாய்’ என்ற பெயரில் ஒரு தேசபக்தி படத்தை இவர் இயக்கி, தயாரித்தார். சென்சார் கெடுபிடிகளுக்கு சிக்கி மீள முடியாததால், பெரும் நஷ்டத்தை சந்தித்தார். ஆனாலும், ‘’இந்திய விடுதலை போராட்டத்திற்கு நான் அளித்த சிறு காணிக்கை இது’’என்று கூறிவிட்டார். 


 அவர் அப்படி கூறினாலும், அதற்கு பின்னால் இருந்த அவரின் வலியை உணரமுடிந்தது.  அந்தப்படத்தினால் ஏற்பட்ட கடன் சுமையினால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளானார். இதனால் ராஜலட்சுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.  ரத்த அழுத்த நோய்க்கு ஆளாகி, அதன் விளைவாக கைகால்கள் இயங்காமல் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையானார்.

கமலா

ட்

கீழ்ப்பாக்கத்தில் இவருக்கு 10 சொந்த வீடுகள் இருந்தன.  கடைசிக்காலத்தில் எல்லாம் விற்றுத்தீர்ந்த பின்னர்,   ஒரே ஒரு வீடு மட்டும் மிச்சம் இருந்தது.  அந்த வீட்டையும் தன் மகள் கமலாவிற்கு  கொடுத்துவிட்டு, வாடகை வீட்டில் வசித்தார்.  சென்னை கீழப்பாக்கம் ஆஸ்பிரான் கார்டன் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் அவரின் கடைசிக்காலங்கள் கழிந்தன. 

 

காலத்தின் கோலத்தை நினைத்து நினைத்து  மனம் உடைந்துபோன ராஜலட்சுமி நினைவிழந்தும் போனார். இனி இழப்பதற்கு உயிரைத்தவிர வேறொன்றும் இல்லை என்ற நிலையில் நாட்கள் நகர்ந்தபோது,  1964ல் அவர் அதையும் இழந்தார். 

 

சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே இழந்த இந்தக்கலைஞரை ‘சினிமா ராணி’ என்று திரையுலகம் கொண்டாடுகிறது.

 

- கதிரவன்

 

Next Story

‘நாதுராம் கோட்சே’ திரைப்படம்; வெளியீட்டுக்கு முன்பே கிளம்பிய எதிர்ப்பு 

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Opposition to the movie 'Nathuram Godse'

பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய கிடுகு திரைப்படத்தின் இயக்குநர் வீர முருகன், நாதுராம் கோட்சே என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏற்கெனவே இந்த இயக்குனர் எடுத்த கிடுகு திரைப்படத்தில், வேளாங்கண்ணி மாதா கோயில், முன்பு இந்துக் கோயிலாக இருந்தது எனவும், தற்போது அங்கு மதமாற்றம் தீவிரமாக நடக்கிறது எனப் பல்வேறு சலசலப்பை இந்தத் திரைப்படத்தில் பதிவு செய்து பீதியைக் கிளப்பியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இந்தப் படத்தில், சங்கி, நீட், காடுவெட்டி, ஆணவக்கொலை, திராவிட மாடல், விடுதலை சிறுத்தை, சாத்தான்குளம் என எக்கச்சக்கமான குறியீடுகள் காட்டப்பட்டிருப்பதாக மிகப்பெரும் சர்ச்சை கிளம்பியது. 

முற்போக்கு அரசியல் பேசும் பலரையும் கடுமையாக விமர்சிக்கும் இந்தப் படத்தில், இந்து அறநிலையத்துறை அரசிடம் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பேசியிருந்ததால் இந்தப் படத்தை வெளியிடுவதில் மிகப்பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அதன் பிறகு ஒரு வழியாக யூடியூப் சேனல் ஒன்றில் இந்தப் படத்தினை வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில், இந்த இயக்குநர் தனது இரண்டாவது படத்தை இயக்கியிருக்கிறார். இதற்கான படப்பிடிப்புகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாக சொல்லப்படும் வேளையில், மதுரையில், இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியீடு நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்துகொண்டுள்ளார். 

மேலும், படத்தில் நடித்த திரைக்கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

அப்போது, நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய அர்ஜூன் சம்பத், செய்தியாளர்களை சந்தித்த போது, கிடுகு திரைப்படத்தை தயாரித்து, பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு மத்தியிலே, அதை யூட்டியூப்பில் வெளியிட்டு, உலகெங்கும் இருக்கக் கூடிய தமிழ் ரசிகப் பெருமக்களின் பேராதரவைப் பெற்ற அந்தப் படக் குழுவினருக்குப் பாராட்டு விழா நடத்துவதாகவும், கிடுகு திரைப்படத்தில் திராவிட இயக்கங்களின் முகத் திரையை கிழித்து மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்ததால் இந்தப் பாராட்டு விழா என்றும் கூறியிருக்கிறார். மேலும், இவர்களின் அடுத்த தயாரிப்பான நாதுராம் கோட்சே திரைப்படத்தின் டிரெய்லரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கிடுகு திரைப்படம் வெளியீட்டிற்கு எப்படி இந்து மக்கள் கட்சி துணை நின்றதோ அது போல் நாதுராம் கோட்சே திரைப்படத்திற்கும் இந்து மக்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது. இந்தத் திரைப்படத்தில் தமிழகம் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் இந்துக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான கருத்துகள் இடம் பெற்று இருக்கின்றன. ஏழு எட்டு மொழிகளில் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறார்கள். எனவே இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், இந்தத் திரைப்படம் திமுக அரசின் அச்சுறுத்தலால் திரை அரங்குகளில் வெளியிடப்படாமல் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட இருக்கிறது எனவும் கூறியிருக்கிறார். மேலும், தொடர்ந்து பேசிய அர்ஜூன் சம்பத், ஜல்லிக்கட்டு அரங்கிற்கு கலைஞர் பெயரை வைப்பது எதற்காக? எனவும், கலைஞருக்கும் ஜல்லிக்கட்டிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அந்த வளாகத்தில் தீரன் சத்தியமூர்த்தி சிலை கலைஞரின் காலடியில் இருப்பது போல கலைஞருக்கு மிகப் பெரிய சிலை வைத்துள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். 

மேலும் தொடர்ந்து பேசியவர், திமுக ஆட்சி செய்யும் போது எல்லா இடத்திலும், கலைஞரின் சிலை, தந்தை பெரியாரின் சிலை போன்றவற்றை வைத்து, தமிழ்நாட்டில் இந்துக்களை ஒழித்துக் கட்டுவதற்கு முயற்சி செய்வதாகவும், தமிழ்நாட்டில் தேசியத் தலைவர்களின் முக்கியத்துவத்தை குறைக்கும் வண்ணமும் இவ்வாறு திட்டமிட்டு செய்வதாக கூறியிருக்கிறார். இதனால், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் கருத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இந்தியா முழுக்க படித்த பட்டதாரிகள் பலர் வேலையில்லாமல் வெளி நாடுகளுக்கு சென்று மிகவும் சிரமப்படும் வேளையில், இது போன்று மத கலவரத்தை உண்டு செய்யும் படங்களை எடுத்து தமிழகத்தில் கலவரம் செய்ய விழைகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

Next Story

‘நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை'- பாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

nn

 

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக இரண்டாவது பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (21.11.2023) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி, கலை பண்பாடு மற்றும் செய்தித்துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான மு.பெ. சாமிநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், பல்கலைக்கழக துணைவேந்தர் சீ. சௌமியா, பல்கலைக்கழக பதிவாளர் சிவசௌந்தரவள்ளி, கர்நாடக இசைக் கலைஞரும் சமூக செயற்பாட்டாளருமான டி.எம். கிருஷ்ணா, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

இந்த விழாவில் பிரபல பின்னணி பாடகி பி. சுசீலாவுக்கும், கர்நாடக, இந்துஸ்தானி மற்றும் மேலைநாட்டு இசைக் கலைஞர் பி.எம். சுந்தரத்திற்கும் டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாடகி பி. சுசீலாவின் இருக்கைக்கே சென்று மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கி கௌரவித்தார். இதையடுத்து மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

 

பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “பாடகி பி. சுசீலா, பி.எம். சுந்தரம் ஆகிய இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்குவதன் மூலம் முனைவர் பட்டமே பெருமை கொள்கிறது. பாடகி சுசீலாவின் குரலில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அதில் நானும் ஒருவன். நான் எப்போதுமே வெளியூருக்கு இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது காரில் அவருடைய பாட்டைக் கேட்டுக்கொண்டே போவேன். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, அடிக்கடி நான் பல இடங்களில் அதைப் பாடியிருக்கிறேன். ‘நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை; உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை; காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை; உன்னை கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை’. அதனால் மேடைக்கு வந்தவுடனே அம்மையாரை பார்த்தவுடன் வணக்கம் சொல்லிவிட்டுத்தான், நான் உங்கள் ரசிகன் என்று வெளிப்படையாகவே சொன்னேன்'' என்றார்.