Skip to main content

“வெற்றிமாறன் என்னை சந்தித்து சில தகவல் பெற்றிருக்கலாம்” - ‘விடுதலை’ திரைப்பட வாத்தியார் மகன் சோழன் நம்பியார் !

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

Chozhan Nambiyar Special Interview

 

சமீபத்தில் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வரும் 'விடுதலை' படத்தில் அதிகம் கவனிக்க வைத்தது விஜய் சேதுபதி ஏற்று நடித்த பெருமாள் வாத்தியார் எனும் கதாபாத்திரம். இந்த கேரக்டர் அதிக கவனம் பெற்றதற்குக் காரணம் இது கலியபெருமாள் என்கிற உண்மைக் கதாபாத்திரத்தைத் தழுவி உருவான ஒன்று என்பதுதான். தமிழ்த் தேசிய போராளி கலியபெருமாள் அவர்களுடைய மகன் சோழன் நம்பியார் இந்தப் படம் குறித்தும் அவருடைய தந்தை குறித்தும் பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

என்னுடைய தந்தை கலியபெருமாளை வாத்தியார் என்றுதான் அனைவரும் அழைப்பார்கள். அவர் ஒரு பள்ளி ஆசிரியர் என்பதையும் தாண்டி பொதுத் தொண்டில் அதிகம் ஈடுபட்டவர் என்பதால் இந்தப் பெயர் அவருக்கு வழங்கப்பட்டது. அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றியவர். சில உண்மைச் சம்பவங்களை விடுதலை படத்தில் வைத்துள்ளனர். பொதுமக்களுக்கு நேரடியாகப் புரியாவிட்டாலும் இதில் ஈடுபட்டவர்களுக்கு படத்தில் காட்டப்படும் பல விஷயங்களின் பின்னணி புரியும். 1950 காலகட்டங்களில் என் தந்தை பொன்பரப்பியில் ஆசிரியராக இருந்தார். ஆரம்பத்தில் அவர் பெரியாரிய இயக்கங்களில் இருந்தார். ஏற்றத்தாழ்வுகளைக் கடுமையாக எதிர்த்ததால் பெரியாரிய இயக்கங்களோடு இணைந்து பணியாற்றினார். வர்க்க விடுதலையின் மீதும் ஆர்வம் கொண்டதால் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பயணித்தார்.

 

மக்கள் தங்களுடைய அன்றாடப் பிரச்சனைகளையும் என்னுடைய தந்தையிடம் எடுத்து வருவார்கள். அவரும் அதைத் தீர்த்து வைப்பார். நாங்கள் ஐந்து பேர் சகோதர, சகோதரிகள். எங்கள் தந்தை ஒரு விவசாயியாகவும் இருந்தார். சமூகத்துக்காகப் போராடினாலும் குடும்பத்தையும் நன்றாக கவனித்துக் கொண்டார். எங்கள் தந்தையின் மீது அனைவருக்கும் இருந்த மரியாதையின் காரணமாக காவல்துறை மூலமாக ஆரம்பத்தில் எந்த பிரச்சனையும் வந்ததில்லை. நக்சல்பாரி இயக்கம் தொடங்கிய பிறகு பல்வேறு பிரச்சனைகள் வந்தன. பாதுகாப்புக்காக வெடிகுண்டு செய்தபோது அது வெடித்து விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு மத்திய அரசிடமிருந்து கடுமையான ஒடுக்குமுறைகள் வந்தன. யாரும் புகாரளிக்க முன்வராத நிலையில், ஒருவரை வற்புறுத்தி புகார் கொடுக்க வைத்தனர். அதில் எங்களுடைய ஒட்டுமொத்த குடும்பமும் சிறை சென்றோம். தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டோம். 

 

10 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் அனைவரும் சென்னை சிறைக்கு மாற்றப்பட்டோம். அப்போதுதான் தந்தையை மீண்டும் பார்த்தோம். நாங்கள் பிறக்கும் போதே கம்யூனிஸ்டுகளாகப் பிறந்தோம். பொதுவுடைமைச் சிந்தனை எங்களுக்குள் ஊறியிருந்தது. போராளிகள் சிறையில் அடைக்கப்பட்ட வரலாறு குறித்து தொடர்ந்து படித்து வந்தோம். அதனால் எங்களுக்கு சிறைத் தண்டனை கிடைத்தபோது இயல்பாக ஏற்றுக்கொண்டோம். விடுதலை படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படம் குறித்து என்னிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் தமிழ்த் தேசிய போராட்டங்களின் போது அவரை நான் சந்தித்திருக்கிறேன். என் தந்தை குறித்து நான் எழுதிய புத்தகத்தை அவர் படித்திருக்கிறார். திரைத்துறையினரோடும் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. விடுதலை படத்தில் விஜய் சேதுபதியை சூரி கைது செய்யப் போகும் காட்சியில் மக்கள் விஜய் சேதுபதிக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர். இதுபோன்ற பாதுகாப்பு மக்கள் செல்வாக்கினால் என் தந்தைக்கு இருந்தது.

 

அப்பாவுடைய வாழ்க்கையோடு ஓரளவு ஒத்துப்போகும் அளவுக்கு இந்தப் படம் இருந்தது. கமல் நடித்த நாயகன் படமும் அப்பாவின் வாழ்க்கையை எனக்கு நினைவுபடுத்தும். என் தந்தை ஒரு வெகுஜனப் போராளி. விடுதலை படம் விறுவிறுப்பாகவும், தமிழ்த் தேசிய உணர்வைத் தூண்டும் வகையிலும் இருந்தது. ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகள் தான் அதிகமாக சிறைப்படுத்தப்பட்டனர். அவர்களை சிறையில் அடித்துத் துன்புறுத்துவது தொடர்ந்து நிகழ்ந்தது. சிறைக் கைதிகளுக்கு சரியான உணவு வழங்குவது போன்ற பிரச்சனைகளுக்காக சிறையிலும் என் தந்தை போராடி காவலர்களால் தாக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு பெரிய ஆளுமையாகவே இருந்தார். அவர் மீது இருந்த மரியாதையால் அவர் பெரிதாகத் தாக்கப்பட்டதில்லை. ஆனால் மற்றவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு அப்போது இந்திரா காந்தியும் ஆதரவு கொடுத்தார். போராளிகளுக்கு முகாம் அமைத்து அரசாங்கத்தின் சார்பிலேயே பயிற்சியும் வழங்கப்பட்டது. அடுத்து வந்த ராஜீவ் காந்தி ஒரு தனி மாநிலம் பெற்றுத்தர முயற்சி செய்தார். ஆனால் அதைப் போராளிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

இந்திய அரசின் அமைதிப்படை தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் ஒடுக்கியது. மத்திய அரசின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் ரயில் விபத்து சம்பவம் நடத்தப்பட்டது. என் தந்தைக்குப் பிறகு கட்சியைக் கட்டி எழுப்பிய தமிழரசன் தான் அந்தப் போராட்டத்தை முன்நின்று நடத்தினார். பொதுமக்களை பாதிக்கும் அளவுக்கு தமிழ்நாடு விடுதலைப் படை எதையும் செய்யக்கூடாது என்று என் தந்தை அறிவுறுத்தினார். வங்கிக் கொள்ளையிலும் ரயில் விபத்திலும் என் தந்தைக்கு முழுமையான உடன்பாடு இல்லை. கலைஞர், எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த காலத்தில் தான் என் தந்தையின் பெரும்பாலான செயல்பாடுகள் இருந்தன. அனைத்து ஆட்சிகளிலுமே ஒடுக்குமுறைகளும் இருந்தன. விடுதலை படத்தில் என் தந்தையின் கதாபாத்திரத்தை வெற்றிமாறன் நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார். உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்கிற கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தில் ஒரு கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆளுக்கு 5 செண்ட் நிலம் வழங்கப்பட்டது.

 

அறுவடை இயக்கம், சர்க்கரை ஆலைக்கு எதிரான போராட்டம் என்று எண்ணிலடங்கா வெகுஜனப் போராட்டங்களில் என் தந்தை ஈடுபட்டிருக்கிறார். விடுதலை படத்தின் இயக்குநர் என்னை சந்தித்து சில தகவல்களைப் பெற்றிருந்தால் படத்தை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாம் என்கிற வருத்தம் இருக்கிறது. ஆனால் வெற்றிமாறன் நல்ல முறையிலேயே இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். என் தந்தையின் பாத்திரத்துக்கு விஜய் சேதுபதி ஒரு சிறந்த தேர்வு.

 

 

Next Story

5 நிமிடம் நிற்காத கைதட்டு - சர்வதேச அரங்கில் ‘விடுதலை’க்கு பாராட்டு

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
viduthalai get standing ovation in Rotterdam Film Festival

53வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழா, கடந்த ஜனவரி 25 தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 4 வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு நாடுகளிலிருந்து திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. அந்த வகையில், பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில் ராம் இயக்கியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' தேர்வாகியது. இப்படம் இன்னும் வெளிவராத நிலையில் முதல் முறையாக அங்கு கடந்த 30ஆம் தேதி திரையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த விழாவின் லைம்லைட் பிரிவில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மற்றும் வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படமும் தேர்வாகியது. மேலும் விடுதலை இரண்டாம் பாகமும் இதில் ப்ரீமியர் செய்யப்பட தேர்வாகியது. அதன்படி ‘விடுதலை பாகம் 1’ நேற்று (31.02.2024) திரையிடப்பட்டது. படம் முடிந்தவுடன் திரையரங்கில் அமர்ந்திருந்த அனைவரும், எழுந்து நின்று 5 நிமிடம் கைதட்டி பாராட்டு தெரிவித்துள்ளனர். இதை தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் எக்ஸ் தளத்தில் தெரிவித்து, அது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளது. விடுதலை இரண்டாம் பாகம் வருகிற 3ஆம் தேதி திரையிடப்படவுள்ளது.

விடுதலை படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாகம் 1 கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

“திரைத்துறைக்கே நல்லது கிடையாது” - நயன்தாராவுக்கு ஆதரவு அளித்த வெற்றிமாறன்

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Vetrimaran who supports Nayanthara for annapoorani movie issue

நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த மாதம் 1 ஆம் தேதி வெளியான படம் அன்னபூரணி. 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தமன் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 

இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாகக் குறிப்பிட்டு மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு இப்படத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் படத்தை தடை செய்யவேண்டும் எனப் பதிவிட்டு வந்தனர். மேலும் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நீக்கப்பட்டது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன், புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது என்று கூறினார். இது குறித்து அவர் பேசியதாவது, “தணிக்கைச் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது. இது ஓடிடிக்கும் பொருந்தும். ஆனால், மத்திய தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை, புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது என்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது. ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கை குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் தணிக்கைக் குழுவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.