Skip to main content

கடைக்கோடி கிராமத்தில் பிறந்து நாட்டுப்புற மேடைகளில் சாதிக்கும் அண்ணன் தங்கை குயில்கள்...!

 

Born in village, brother and sister quills to achieve on stage ...!

 

கலைத்துறையில் பி.யூ.சின்னப்பா முதல் பல ஜாம்பவான்களைப் பெற்றெடுத்த பூமி புதுக்கோட்டை. இன்றுவரை கரகாட்டம், நாடகம், மண்ணிசைப் பாடல்கள் என கலைப் பயணம் புதுக்கோட்டை மண்ணில் மறையாமல் நிலைத்து நிற்கிறது.

 

இப்படியான புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான ஆவுடையார்கோவில் ஒன்றியம் கரகத்திக்கோட்டை அருகே உள்ள விளத்தூர் என்னும் குக்கிராமத்தில் வானம் பார்த்த பூமியில் விவசாயி இளங்கோவன் - யோகாம்பாள் தம்பதிக்குப் பிறந்த காளிதாஸ், ஆனந்தி என்னும் குழந்தைகள் தான் தற்போதைய சாதனைக் குயில்கள். இதுவரை இருவரும் 200 மேடைகளில் ஏறிப் பாடி அசத்தி இருக்கிறார்கள். நாட்டுப்புற கச்சேரியில் காளிதாஸ், ஆனந்தி வேண்டும் என்று கிராம மக்களே வேண்டும் என்று அழைத்துச் செல்கிறார்கள்.

 

Born in village, brother and sister quills to achieve on stage ...!

 

காளிதாஸ் ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தமிழக அளவில் சேலத்தில் நடந்த கலைத் திருவிழாவில் பங்கேற்று பாடலாசிரியர் ஏகாதசி எழுதிய 'ஆத்தா உன் சேல' பாடலைப் பாடி இரண்டாம் பரிசு பெற்று தான் பிறந்த கிராமத்திற்கும், படிக்கும் பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தவரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி கலையின் மீது ஆர்வம் கொண்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் அழைத்துச் சென்ற போது, மீண்டும் ஒரு முறை அந்தப் பாடலை பாட வைத்து மெய்மறந்து ரசித்தார் மாவட்ட ஆட்சியர். ஆட்சியர் முன்பு பாடிய அந்த பாடல் வீடியோ தான் இன்று வைரலாக பரவி மாணவனைத் தேடி பலரையும் இழுத்திருக்கிறது.

 

ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவன் காளிதாஸை சந்தித்தோம்.

 

Born in village, brother and sister quills to achieve on stage ...!

 

''எங்க அப்பா அம்மா விவசாய வேலை செய்றாங்க. அப்பா வெளியூர் எல்லாம் போய் வேலை செஞ்சிட்டு வருவார். நானும் தங்கச்சி ஆனந்தியும் தொடக்கப்பள்ளி எங்க ஊரான விளத்தூர்ல படிச்சுட்டு கரக்கத்திக்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் படிச்சோம். அந்தப் பள்ளியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தனித்திறமை நிகழ்ச்சி நடத்துவாங்க. நான் 8 ம் வகுப்பு படிக்கும் போது 'அத்தை மக உன்னை நினைச்சு' என்ற நாட்டுப்புறப் பாடலை பாடினேன். தங்கச்சி ஆனந்தியும் பாடியதைப் பார்த்து எல்லாரும் பாராட்டினாங்க. இதைப் பார்த்த எங்க பள்ளி தலைமை ஆசிரியர் சபரிநாதன் நாட்டுப்புற பாடகர் களபம் செல்ல தங்கையா கிட்ட போன்ல பேசி எங்கள் மாணவர்கள் நல்லா பாடுறாங்க உங்க கச்சேரியில வாய்ப்புக் கொடுங்கன்னு கேட்டார். உடனே போன்லயே எங்களைப் பாடச் சொன்னாங்க பாடினோம். நீங்க புதுக்கோட்டை வாங்கன்'னு சொன்னார். போய் பாடிக் காட்டினோம். நல்லா இருக்குனு சொல்லி அடுத்தடுத்து மேடை நிகழ்ச்சிகள்'ல பாட வாய்ப்பு கொடுத்தார். நானும் தங்கச்சியும் இதுவரை 150, 200 மேடைகளில் பாடிட்டோம்.

 

அப்புறம் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி எல்லாம் ஆவுடையார் கோவில் வந்த பிறகு என்னோட பாடல் திறனைப் பார்த்த தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன் எங்க தமிழய்யா குமார் கிட்டச் சொல்லி என்னைப் போட்டிகளுக்கு அனுப்பத் தயார் செய்ய சொன்னார். தமிழய்யாவும் எனக்கு ஊக்கமளித்து போட்டி நடக்கும் இடங்களுக்கு அழைத்துப் போனார். ஒன்றிய, மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநிலப் போட்டிக்குத் தயாரான போது கவிஞர் ஏகாதசி எழுதிய அம்மா, அப்பா பற்றிய பாடல்களைப் பாட சில நாட்கள் தயாரானேன்.

 

சேலத்தில் நடந்த கலைத் திருவிழாவில் நம்ம பாட்டை வேற யாரும் பாடிறக் கூடாதுனு நினைச்சிகிட்டு இருந்தேன். ஆனா எனக்கு முன்னால போன ஒரு மாணவர் ஆத்தா உன் சேல பாடலைப் பாடிவிட்டார். எனக்கு பயமானது ஆனால் தமிழய்யா தைரியமா நீ பாடுனு சொன்னார். நானும் ஆத்தா உன் சேல பாடலைப் பாடினேன். முதல் பரிசு கிடைக்குன்னு சொன்னாங்க. ஆனால் 2 ம் பரிசு கிடைத்தது. அதுவே எனக்கு மகிழ்ச்சி தான். இதுவரை என்னை அனுப்பிய தலைமை ஆசிரியர் தாமரை செல்வனுக்கும் என்னை அழைத்துச் சென்ற தமிழய்யா குமார் மற்றும் என்னை ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள் சக மாணவர்களுக்கும் நன்றி சொல்லனும்.

 

Born in village, brother and sister quills to achieve on stage ...!

 

பரிசோடு ஊருக்கு வரும் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி அய்யா என்னை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து போனாங்க. பயத்தோட போனேன். ஆட்சியர் அம்மா என்னை பாடச் சொன்னாங்க போட்டியில் பாடிய பாடலை பாடினேன். முழுமையாக கேட்டுட்டு பாராட்டினாங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஆட்சியர் முன்னால பாடிய அந்த பாடல் வீடியோ தான் இப்ப வைரலாகிட்டு இருக்கு. தொடர்ந்து கலைத்துறையில் படித்து சாதிக்கனும். நிறைய பாடனும், வாய்ப்புக் கிடைத்தால் சினிமாவிலும் பாடனும்'' என்றார்.

 

அண்ணனுக்கு சற்றும் சளைக்காத தங்கை ஆனந்தியை (10 ம் வகுப்பு மாணவி) ஆவுடையார் கோவில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் சந்தித்தோம்...

 

''அண்ணன் பாடுறதைப் பார்த்து நானும் பாடினேன். கேட்டவர்கள் பாராட்டினாங்க. அண்ணன் கரகத்திக்கோட்டை பள்ளியில தனித்திறன் நிகழ்ச்சியில பாடிய போது தலைமை ஆசிரியர் சபரிநாதன், பல நாட்டுப்புறக் கலைஞர்களை வெளி உலகிற்கு காட்டி பிரபலமடைய செய்த நாட்டுப்புற பாடகர் 'களபம் செல்ல தங்கையா'விடம் எங்களை அனுப்பினார்.ஃபோனில் பாடியதை கேட்டதும் எங்களை புதுக்கோட்டை வரச் சொன்னார். தெற்கு, வடக்கு தெரியாத ஊருக்கு பயந்துகிட்டே போனோம். பாடச் சொல்லி கேட்டாங்க. அப்பறம் வீட்டுக்கே கூட்டி போனாங்க. அடுத்த சில நாட்கள்ல பாட வாய்ப்புக் கொடுத்தாங்க. தொடர்ந்து எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். நானும் அண்ணனும் சோகப் பாடல்கள், காதல் பாடல்கள் என ரெண்டு பேரும் இணைந்து தான் பாடுவோம். எங்களுக்கென்று ரசிகர்கள் உருவாகிட்டாங்க. இப்ப எந்த நிகழ்ச்சியானாலும் காளிதாஸ் - ஆனந்தி வரனும் என்று கேட்கிறார்கள்.

 

Born in village, brother and sister quills to achieve on stage ...!

 

இப்ப நடந்த கலைத் திருவிழா போட்டிக்கு என்னையும் அண்ணன் அழைத்தார் நான் போகல. அண்ணன் வெற்றி பெற்று வருவார்னு எதிர்பார்த்தேன். 2 வது பரிசு வாங்கிட்டது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. நான் எப்பவுமே எங்க அண்ணன் கூட சேர்ந்து பாடிகிட்டே இருக்கனும் என்கிறது தான் என் ஆசை. ஆனாலும் படிச்சு நான் ஒரு ஆசிரியராக வரனும். எங்க பாடல்களைப் பார்த்து  சினிமாவில் பாட வாய்ப்புக் கிடைத்தால் நன்றாக பாடுவோம். யார் அந்த வாய்ப்பு தருவாங்கனு தெரியல. ஆனால் நிச்சயம் அந்த வாய்ப்பு கிடைக்குனு நம்புறோம்.

 

நாங்க ரெண்டு பேரும் மேடைகள்ல பாடுவதை பார்த்துட்டு எங்க அப்பா அம்மாகிட்ட சொல்லும் போது அவங்க ரொம்ப சந்தோசமா இருக்காங்க. அந்த மகிழ்ச்சி எப்பவும் நிலைத்து இருக்கனும்'' என்றார்.