Skip to main content

தாதாக்கள், ரவுடிகள், மாஃபியாக்கள் பா.ஜ.க.வில் சேருவார்கள்: மக்கள் அதிர்ச்சியடைந்து பாஜகவை தூக்கி எறிவார்கள்! எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலடி

Published on 12/08/2020 | Edited on 12/08/2020

 

v p duraisamy bjp

 

பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி இன்று காலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ''தி.மு.க. Vs அ.தி.மு.க. என போன வாரம் வரை நிலைப்பாடு இருந்தது. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் சேர்ந்த பிறகு பா.ஜ.க. Vs தி.மு.க. என்ற நிலை மாறியிருக்கிறது. இது வளர்ச்சி. நாங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம். கூட்டணிக்கு தலைமை நாங்கள்தான். நாங்கள் தேசிய கட்சி'' என்றார். தி.மு.க.வில் இருந்து வேறு யாராவது பா.ஜ.க.வுக்கு வருகிறார்களா என்ற கேள்விக்கு, ''நாகரீகம் கருதி நாங்கள் சொல்ல மாட்டோம். நிரம்பப் பேர் வருவார்கள். நீங்களே ஆச்சரிப்படுவீர்கள். அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாவார்கள்'' என்றார். 

 

வி.பி.துரைசாமியின் பேட்டி குறித்து அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் நக்கீரன் இணையத்தளத்தில் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார். 

 

"தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு தியங்கியே கிடந்தது", என்று விவேக சிந்தாமணியில் ஒரு பாடல் உண்டு. அது போல், 'தாமரை' மலரில் தேன் குடித்த வண்டாக வி.பி.துரைசாமி இருக்கிறார் போலும். அதனால் தான், "போன வாரம் வரை தி.மு.க Vs அ.திமு.க என இருந்தது. இந்த வாரம் பா.ஜ.க Vs தி.மு.க என மாறி விட்டது", என்று சொல்கிறார். 

 

ஒரே வாரத்தில் நிலைமை மாறி விட்டதாம், அதுவும் ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் தி.மு.கவிலிருந்து பா.ஜ.க.வில் சேர்ந்ததால் இவ்வளவு வேக வளர்ச்சியாம். ஏற்கனவே கு.க.செல்வம் அ.தி.மு.க.வில் இருந்தார், பிறகு தி.மு.க.வில் இருந்தார். இப்போது பா.ஜ.க.வில் சேர்ந்திருக்கிறார். அவர் உடன் இரண்டு பேர் கூட போகவில்லை. ஆனால், வளர்ச்சியாம்.

 

நாட்டில் இருப்போர் எல்லோருக்கும் "ஆண்ட்டி-இண்டியன்" சர்டிபிகேட் கொடுத்து முயற்சி செய்தும் சாரண இயக்கத்துத் தேர்தலில் தோற்று போய் விட்டார் எச்.ராஜா. இப்போ கு.க.செல்வம் வந்ததால், தாமரை பூத்து குலுங்கப் போகிறதாம். 

 

s. s. sivasankar

 

பா.ஜ.கவின் புது தலைவர் முருகன் கட்சியில் புதியவர்களைச் சேர்க்கக் கடும் முயற்சி எடுக்கிறார். அப்படித்தான், வி.பி.துரைசாமியையும், கு.க.செல்வத்தையும் சேர்த்தார். எண்கவுண்டருக்கு போலீஸால் தேடப்படும் கல்வெட்டு ரவி, ஆறு முறை குண்டர் சட்டத்தில் சிறைசென்ற சத்யராஜ் ஆகிய வடசென்னை தாதாக்களை பா.ஜ.க.வில் சேர்த்து கட்சியை "வலு"ப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். 

 

வி.பி.துரைசாமி சொல்கிறார், "இன்னும் நிரம்ப பேர் வருவாங்க, நீங்க ஆச்சரியப்படுவீங்க, அவங்க அதிர்ச்சிக்குள்ளாவாங்க", என்று.

 

CNC

 

இரண்டு நாட்களுக்கு முன், பா.ஜ.க. தேசிய செயற்கு உறுப்பினர் பெரம்பலூர் அடைக்கலராஜ் அபின் கடத்தி, போலீஸில் சிக்கி இருக்கிறார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் தைரியத்தில் தானே இந்தக் கேவலமான வேலையை பா.ஜ.க.வினர் செய்கிறார்கள் என மக்கள் நினைக்கிறார்கள்.

 

வி.பி.துரைசாமி சொல்வது போல், கல்வெட்டு ரவி, குண்டாஸ் சத்யராஜ், அபின் அடைக்கலராஜ் வழியில் இன்னும் பல தாதாக்கள், ரவுடிகள், போதை மஃபியாக்கள் என நிரம்பப் பேர் பா.ஜ.கவில் சேருவார்கள். மக்கள் அதைக் கண்டு ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைவார்கள். பா.ஜ.க.வை தமிழகத்தை விட்டுத் தூக்கி எறிவார்கள்! இவ்வாறு கூறியுள்ளார். 

 

 


 

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.