Skip to main content

4 டூ 44... பாஜகவின் விஸ்வரூப வெற்றி! சாத்தியமானது எப்படி?

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

ghmc

 

 

நேற்று வெளியான ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் பலருக்கு அதிர்ச்சியை அளித்திருக்கும். தெலங்கானா ராஷ்த்ரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சி தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியாகவும், பாஜக மற்றும் ஒவைஸியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். போன்ற கட்சிகளின் தொண்டர்களுக்கு இன்பதிர்ச்சியாகவும் அமைந்திருக்கும்.

 

இந்தியாவின் நான்காவது பெரிய மாநகராட்சியாக செயல்பட்டு வருவது ஹைதராபாத். அப்படிப்பட்ட மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெறுவது என்பது தேசிய கட்சிகள் அந்த மாநில கட்சிகளுக்கு ஒரு முக்கியமானது, கௌரவமானது என்று பல கோணங்களில் எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு இடையே கண்டிப்பாக கடுமையான போட்டி நிலவும், அப்படிதான் இங்கும் நிலவியது. 

 

மொத்தம் 150 வர்டுகளுக்கு நடைபெற்ற இந்த மாநகராட்சி தேர்தலில் 149 வார்டுகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. மீதமுள்ள ஒரு தொகுதி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அந்த வார்டின் முடிவு வெளியாகவில்லை. இந்தத் தேர்தலில் தெலங்கானா ராஷ்த்ரிய சமிதி 55 வார்டுகளில் வெற்றிபெற்று, அதிக வார்டுகளில் வெற்றிபெற்ற கட்சியாக இருந்தாலும் இது ஒரு மிகப்பெரிய சரிவு. ஆமாம், கடந்த தேர்தலை ஒப்பிட்டு பார்த்தால் 44 வார்டுகள் குறைவாக வென்றுள்ளது. இந்த தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது பாஜக, 48 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. கடந்த தேர்தலில் வெறும் 4 வார்டுகளில் மட்டும்தான் வெற்றிபெற்றிருந்தது. ஓவைஸியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 44 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. கடந்த தேர்தலிலும் அதே எண்ணிக்கையான 44 வார்டுகளில் வெற்றிபெற்றிருந்தது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

 

பாஜகவின் இந்த அசூர வளர்ச்சி பலரையும் வாய்பிழக்க செய்துள்ளது. பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களான அமித்ஷா, யோகி ஆதித்யநாத், தேஜஸ்வி சூர்யா, பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இராணி, ஜே.பி. நட்டா ஆகிய அனைவரும் ஹைதராபாத்தில் முகாமிட்டார்கள். எப்போதும் இல்லாத வகையில், இந்தமுறை மாநகராட்சி பிரச்சாரம் சூடுப்பிடித்தது. பாஜக ஒரு பக்கம் இஸ்லாமிய விரோத பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஹைதராபாத்தின் பழமை வாய்ந்த பெயரான பாக்யாநகர் பெயர், பாஜக ஆட்சியில் ஹைதராபாத்தை என்ற பெயரை தூக்கிவிட்டு சூட்டப்படும் என்று யோகி ஆதித்யநாத் பேசியது சர்ச்சையானது. சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ஆர், நமக்கு எதிரியல்ல என்பதை தெரிந்துகொண்ட பாஜக, ஒவைஸியை தாக்கியே பிரச்சாரம் செய்தது. அதேபோல கே.டி.ஆருக்கு பதிவிடுவதும், ஓவைஸிக்கு பதிவிடுவதும் ஒன்றுதான் என்று பிரச்சாரம் செய்தது. இதன் மூலமாக இந்துக்களின் வாக்கு வங்கியை அள்ளியது. இந்த தேர்தலில் பாஜகவின் இப்படியான பிரச்சாரங்களால் மத அரசியல் நன்கு கலக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், ஹைதராபாத் பல தரப்பு மக்களும், இந்தி, உருது பேசுபவர்களும் அதிகம் இருப்பதனால் வாக்கு அரசியலுக்காக வெறுப்பு பிரச்சாரத்தில் மாநில கட்சிகள் ஈடுபடாது. என்னதான் ஓவைஸியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி குறைந்தளவிலான தொகுதிகளில் போட்டியிட்டு 44 இடங்களில் வெற்றிபெற்றிருந்தாலும், பாஜக வாக்குகளை பிரிப்பதால் அடுத்த தேர்தல்களில் அது அவர்களுக்கு தலைவலியாக மாறலாம்.

 

2014ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆளும் கட்சியான பிறகு மத அரசியல், பிளவு என்பது பல மாநிலங்களில் வெளிப்படுகிறது. அதன்படிதான் தெலங்கானாவில் பாஜக இந்த முக்கியமான தேர்தலில் 12 மடங்கு வளர்ந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெரிதாக தங்களின் பிரச்சாரங்களிலும் ஈடுபடவில்லை, மக்களுக்கும் அவர்கள் மீது நம்பிக்கையின்றி இருப்பதன் வெளிப்பாடாகவே இந்த தேர்தலின் முடிவுகள் தெரிவிக்கிறது. மத்தியில் பாஜகவுக்கு எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸ், ஏற்கனவே வலுவாக இருந்த ஓர் மாநிலத்தில் மிகவும் மோசமாக வலுவிழந்திருக்கிறது. தலைவர் யார்? உட்கட்சி பூசல், ஜூனியர் சீனியர் மோதல் என்று நாட்டு பிரச்சனைக்கு சமமாக கட்சிக்குள்ளும் ஒரு பிரச்சனையை வைத்திருக்கிறது காங்கிரஸ், அதன் வெளிபாடுதான் காங்கிரஸின் தொடர் தோல்வி. அப்படியே அவர்கள் வெற்றிபெற்றாலும் சூழ்ச்சியில் விழும் அளவிற்குதான் தங்கள் கட்சி வேட்பாளர்கள் சிலரை வைத்திருக்கிறது. தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து வலுவாக இருந்த டி.ஆர்.எஸ். கட்சியின் பலத்தை சோதித்துபார்த்த பாஜக, அவர்களின் 2023ஆம் ஆண்டு தேர்தல் வெற்றி கனவை சின்னாப்பின்னமாக உடைத்திருக்கிறது.

 

தற்போது நடைபெற்ற மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற பகுதிக்குள் 24 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. மொத்தம் 120 தொகுதிகள் எனும்போது, இந்த பகுதிக்குள் 20 சதவீத தொகுதிகள் அடங்குகிறது. தற்போதைய மாநகராட்சி தேர்தல் வெற்றியை பார்க்கும்போது, பாஜக இந்த பகுதிகளுக்குள் 7 முதல் 8 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் அதிலாபாத், கரிம் நகர் மற்றும் நிஜாமாபாத் உள்ளிட்ட வட தெலங்கானா பகுதி தொகுதிகளில் வெற்றிபெற்று வலுவான நிலையில் இருப்பதன் மூலம் பாஜக வளர்ச்சியடைந்துகொண்டுதான் இருக்கிறது. தெலங்கானாவில் கடந்த இரண்டு வருடங்களில் பாஜக நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. அதற்கு முக்கிய காரணியாக இருப்பது கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு ஹைதராபாத்தில் ஆர்.எஸ்.எஸின் வளர்ச்சி. அதற்கு ஒரு உதாரணம் 2019ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் ஹைதராபாத் வந்தபோது நடந்த பேரணியைக் குறிப்பிடலாம்.

 

மேற்கு வங்கத்தில் மாநகராட்சி தேர்தலில் இரண்டாம் நிலையை எட்டியது பாஜக, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விஸ்வரூபம் எடுத்து 18 தொகுதிகளில் வெற்றியைக் கண்டது. இதற்கும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸின் திட்டமிட்டுதல், பிரச்சாரங்கள், வெறுப்பு அரசியல் போன்று அவர்களின் அடிப்படை விஷயங்கள் காரணமாக அமைந்தது. அந்த மாநிலத்தில் யாராலும் அசைக்க முடியாத ஒரு அரசியல் தலைவராக பார்க்கப்பட்ட மம்தாவை பாஜக அசைத்து பார்த்திருக்கிறது. திரிணாமூல் vs காங்கிரஸ் என்பதை திரிணாமூல் vs பாஜக என்று அனைத்துவிதமான களத்திலும் மாற்றி அமைத்திருக்கிறது.

 

கலவரத்தில் தொடங்கி தேர்தல் களம் வரை இருவரும் எதிர், எதிர் என்றாகிவிட்டது. அடுத்த வருடம் நடைபெற உள்ள மேற்குவங்க சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது பாஜக. இதேதான் ஒடிஷா மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தலில் பாஜக எதிர்கட்சியாக இருக்க காரணம் என்று புரியவைக்கிறது. எங்கெல்லாம் காங்கிரஸ் இரண்டாம் நிலையில் இருந்ததோ, அங்கெல்லாம் பாஜக தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

 

 

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.