Skip to main content

ஸ்டாலினை இழுத்துட்டு வந்தாங்க... மிசாவில் நடந்த பரபரப்பு தகவல்... பாஜகவிற்கு ஏற்பட்ட டென்ஷன்! 

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம், "மிசா' என்கிற நெருக்கடி நிலைப் பிரகடனத்தை 1975, ஜூன் 25-ந் தேதி நடுஇரவில் அறிவித்தார் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி. பத்திரிகைச் சுதந்திரம் நசுக்கப்பட்டது. காங்கிரஸ் அல்லாத அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் காரணமின்றி கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் தடைசெய்யப்பட்டன. சென்னை கடற்கரையில் சத்யாக்கிரகப் போராட்டம் நடத்திய சுமார் ஆயிரத்துஐநூறு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மிசாவில் கைதாகி, கொட்டடியில் அடைக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டனர்.

 

bjpஇதுநடந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், உத்திரப்பிரதேச உயர்நீதிமன்றம் மிசா கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இதன் மூலம், வடமாநிலங்களில் சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஒருங்கிணைந்த ஆந்திரா, அசாம் போன்ற மாநிலங்களில் மிசாவால் பாதிக்கப்பட்ட தியாகி களுக்கு எந்த நலனும் ஏற்படவில்லை. எனவே, இந்த மாநிலங்களைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள், அசாமின் கோவர்த்தன பிரசாத் அடல் தலைமையில், "லோக் சங்கர்ப்ப சமிதி' எனப்படும் ஆக்ஷன் கமிட்டி அமைத்து நிவாரண உதவிகள் கேட்டு போராடி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, நெருக்கடி நிலைக்கால போராட்ட வீரர்களின் சங்கமவிழாவின் மூன்றாவது மாநாடு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மார்ச் 01-ல் நடந்தது. இதில் ஆக்ஷன் கமிட்டியைச் சேர்ந்த ஆந்திராவின் அசோக்குமார் யாதவ், கர்நாடகாவின் மஞ்சுநாத், கேரளாவின் மோகனன், பா.ஜ.க. எம்.பி. கைலாஷ் சோனி உள்ளிட்ட தலைவர்களுடன், தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். மிசா தியாகிகள் நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.
 

bjpஇந்த மாநாட்டிற்கு பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். பரபரப்புகளைப் பேசி பற்றவைக்கும் ஹெச்.ராஜா வேறொரு நிகழ்ச்சி காரணமாக மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. மிசாவால் பாதிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி, பரமக்குடியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி மோதிலால், மாநாட்டிற்கு வந்திருந்தார்.


மேடையில் அவர் பேசுகையில், “நாங்கள் சிறையில் பட்ட துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உடம்பெல்லாம் கொடூரமா அடி விழும். வலி பொறுக்காம கத்தினா கூடுதலா லத்தியடி கிடைக்கும். எவ்வளவு பலமா அடிச்சாலும் ரத்தம் வராது. ஆனா, உள்ளுக்குள்ள தீப்பிடிச்ச மாதிரி எரியும். சிறையில் எங்களுக்குப் பக்கத்து செல்லில்தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் இளைஞர். ஒருநாள் ஸ்டாலினை இழுத்துட்டு வந்து எங்க முன்னாடி நிறுத்தி கொடூரமா அடிச்சாங்க. அவர் தடுமாறி கீழ விழுந்தும் விட்டு நகரலை. அவர் மேல கவசம்போல நாங்கெல்லாம் விழுந்து தடுத்தோம். இப்படியே மூணுமாசம் சித்திரவதையா முடிஞ்சு, அரை உசுரா வெளியே வந்தோம். இதுமாதிரி சித்திரவதைகளை அனுபவிச்ச எங்களில் பலர், வறுமையால கஷ்டப்படுறாங்க. மோடி அரசு வந்தும் எங்க குடும்பப்பாடு தீரலை'' என்று அவர் பேசியபோதே, உடலெல்லாம் மிசா அடியை எண்ணி நடுங்கியதை உணர முடிந்தது.

கேரள கமிட்டித் தலைவரான மோகனன், "ஜெயராம் பணிக்கர் என்றொரு ஜெயில் ஆபீஸர், புதுப்புது சித்திரவதைகளைக் கண்டுபிடித்து டார்ச்சர் பண்ணினார். எங்களோட ராஜன் சிறையிலேயே அடித்துக் கொல்லப்பட்டார். இத்தனை கொடுமைகளை அனுபவித்து, தியாகம் செய்த நமக்கு, எந்தப் பலனும் இல்லாமல் போய்விட்டதே'' என்று வருந்திப் பேசினார். ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்த ஆந்திர கமிட்டியின் அசோக்குமார் யாதவ், “ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்குக் கிடைப்பதுபோல, தென்னிந்திய மாநிலங்களுக்கும் பென்ஷன் உதவி கிடைக்க வேண்டும். இல்லையென்றால் பெரிய போராட்டமாக வெடிக்கும்'' என்று எச்சரித்தார்.


வேதனையில் வெந்துபோயிருந்தவர்களின் கொதிப்பை அடக்கும் வகையில் பேசிய இல.கணே சன், “உங்கள் கஷ்டங்களை நான் உணர்வேன். உங்களின் நெருடல் எனக்கும் உள்ளது. அதனால், அமைச்சர் அனந்தகுமார் மூலமாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். முத்தலாக் தடை, ராமஜென்ம பூமி, சி.ஏ.ஏ. போன்றவற்றைப் போலவே, ஒரேயொரு கையெழுத்தால் நமது கோரிக்கைகளும் நிறைவேறும். நிச்சயம் நமது பிரதமர் அதை நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது'' என்றார்.

ஏற்கனவே, சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம் நாடு முழுவதும் வலுத்து வருகிறது. இதற்கிடையே, கட்சியின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ஸில் கிளம்பியிருக்கும் இந்த உரிமைப்போர் பா.ஜ.க.விற்கு இரட்டைத் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

 

Next Story

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; திமுக முன்னிலை!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
DMK lead in Vikravandi by-election!

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். அதோடு 11 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்திருந்தது. தவெக தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் சூழலில் ஜூலை 10 ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. சரியாகக் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டத்தில் திமுக வேட்பாளர் 470 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.  பாமக வேட்பாளர் அன்புமணி 450 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 47 வாக்குகளும் பெற்றுள்ளார்.

Next Story

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா; தமிழக காங்கிரஸ் கண்டனம்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Tamil Nadu Congress condemns Karnataka government on Cauvery issue

தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திற்குத் தண்ணீர் தரவே முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “காவிரி பாசனப் பகுதியில் 28 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகாவின் வலியுறுத்தலை மீறி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் பற்றாக்குறை இருப்பதால் தற்போதைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட  முடியாது” என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து ஆலோசனை நடத்தக் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சியினருக்கும் முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 

இந்த நிலையில் கர்நாடக அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நீரை ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறக்க வேண்டிய ஜூன் 12 ஆம் தேதி திறக்காத காரணத்தால் டெல்டா விவசாயிகள் நிலத்தடிநீரை பயன்படுத்தி கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆணையின் படி 12 ஆம் தேதியில் இருந்து ஜூலை மாதம் இறுதிவரை நாளொன்றுக்கு 1 டி.எம்.சி. காவிரி நீரை திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசை அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஜூலை மாதம் வரை 1 டி.எம்.சி. நீரை திறந்துவிட முடியாது என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆணையின் படி மிக மிக குறைந்த நீரை தான் வழங்கும்படி கோரியிருந்தது. அந்த குறைந்தபட்ச நீரை கூட கர்நாடக அரசு தர மறுப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. இந்த போக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை உதாசீனப்படுத்துகிற செயலாகும். 

காவிரி நீர் பங்கீட்டின்படி தமிழகத்திற்கு ஜூன் மாதம் ஏறத்தாழ 9 டி.எம்.சி.யும், ஜூலை மாதத்தில் 31 டி.எம்.சி.யும் ஆக மொத்தம் 40 டி.எம்.சி. தண்ணீர் பெறுகிற உரிமை நமக்கு இருக்கிறது. ஆனால் இதுவரை 4.6 டி.எம்.சி. தான் கர்நாடக அரசு கடந்த 10 ஆம் தேதி வரை வழங்கியிருக்கிறது. இதன்படி ஏற்கனவே 19.3 டி.எம்.சி. தரவேண்டிய நீர் நிலுவையில் இருக்கிறது. இதுகுறித்து காவிரி ஒழுங்காற்றுக் குழு குறிப்பிடாமல் பொதுவாக 12 ஆம் தேதியில் இருந்து நாள் தோறும் 1 டி.எம்.சி. வீதம் ஜூன் 31 ஆம் தேதி வரை வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு 1 டி.எம்.சி. திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை மறுக்கிற வகையில் கர்நாடக அரசின் முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன். தண்ணீர் பற்றாக்குறையில் குறுவை சாகுபடியை நிறைவு செய்யாமல் இருக்கும் சிரமமான நிலையை கர்நாடக முதலமைச்சர் புரிந்துகொண்டு காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மௌனம் காத்து வேடிக்கை பார்க்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தை புறக்கணித்து வந்த ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கை தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்பதையே உறுதி செய்கிறது. எனவே காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையை நிறைவேற்ற பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.