/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3647.jpg)
குஜராத் முதல்வராக இருந்து இந்திய பிரதமராக மாறிய பின்பும் குஜராத் கலவரத்தின் கெடுவாசனை மோடியைத் துரத்தி வருகிறது.
குஜராத்தில் 2002ல் நடந்த கலவரத்தில் காங்கிரஸ் எம்.பி.யான எஸ்ஸான் ஜாஃப்ரி உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பலியானார்கள். இதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். இந்த கலவரம் குறித்து ஆவணப்படம் ஒன்றை பி.பி.சி. தயாரித்துள்ளது. இரு பகுதிகளைக் கொண்ட இந்த ஆவணப்படத்தின் பெயர் "இந்தியா: தி மோடி கொஸ்டின்'. ஜனவரி 17 ஆம் தேதி இதன் முதல் பகுதியை பி.பி.சி. ஒளிபரப்பியது. அதில் கலவரத்துக்கு மோடியே பொறுப்பு என கூறப்பட்டுள்ளதால் சர்ச்சையாகியுள்ளது.
இதுகுறித்து இந்திய தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிரச்சார நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதென்றும், பாரபட்சமும் காலனி ஆதிக்க மனப்பான்மையும் வெளிப்படையாகத் தெரிவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி விமர்சித்துள்ளார்.
இந்த ஆவணப்படத்துக்கு தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பா.ஜ.க. உள்பட அனைத்துத் தரப்பிலும் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும் பி.பி.சி. தெரிவித்துள்ளது. மேலும், தொடரில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் உரிமையையும் இந்திய அரசுக்கு வழங்கினோம். ஆனால் அது பதிலளிக்க மறுத்துவிட்டதாக கருத்துதெரிவித்துள்ளது.
குஜராத் கலவரத்தில் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்ததால்அன்றைய டோனி பிளேர் அரசுகுஜராத் கலவரம் குறித்து விசாரணை ஒன்றை நடத்தியது. அந்த விசாரணை அமைப்பு அளித்த தகவல்கள் மூலமே இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்தின் முன்னாள் உயர்மட்டத் தூதரக அதிகாரி, ஆர்.எஸ்.எஸ்.ஸின் துணை ராணுவ அமைப்பான விஷ்வ இந்து பரிஷத்இந்த வன்முறையைத் திட்டமிட்டு நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
அன்றைய இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ஜாக் ஸ்ட்ரா, குஜராத்தின் தலைமை பீடத்திலிருந்தவர்கள்கலவரத்தின்போது செயல்படவிடாமல் போலீஸை பின்னிருந்து கட்டுப்படுத்தியதையும், இந்துத்வவாதிகளை ஊக்குவித்ததையும் பற்றி இந்த ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பரந்தளவில் முஸ்லிம் பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் ஆவணப்படம் தெரிவிக்கிறது.
இந்த ஆவணப்படம் இந்தியாவில் ஒளிபரப்பப்படவில்லை. இங்கிலாந்தில் செயல்படும் பிபிசி ஐபிளேயரில் மட்டுமே வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் அதனைப் பார்த்தவர்கள் மூலம் இந்தியாவிலும் யூடியுப்பில் சில பகுதிகள் பரவ, அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு தற்போது இந்தியாவில் இந்த ஆவணப் படத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்தின் அதிபர் ரிஷி சுனக், "உலகின் எந்தப் பகுதியில் அநீதி நடந்தாலும் தட்டிக் கேட்போம். ஆனால் ஒரு தலைவரின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது'' எனத்தெரிவித்துள்ளார்.
பி.பி.சி.யின் ஆவணப்படம் இந்துத்துவர்களையும், பா.ஜ.க.வினரையும் கொதிப்படைய வைத்திருக்கிறது.
க. சுப்பிரமணியன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)