Skip to main content

என்னவெல்லாம் செய்தார் ஒடிஷாவின் மோடி??? பிம்பமும், உண்மையும்...

Published on 01/06/2019 | Edited on 01/06/2019

நேற்று முன்தினம் (மே 30) பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது. அப்போது அதிகமாக பேசப்பட்டவர் பிரதாப் சந்திர சாரங்கி. மிகவும் எளிமையானவர், சைக்கிளில்தான் செல்வார், ஒடிஷாவின் நரேந்திரமோடி என்றெல்லாம் புகழ்ந்தனர். ஆனால் அந்த எளிமை, எளிமை என்ற புகழ்ச்சிக்கு பின்னால் இருக்கும் கொடூரம் அநேகருக்கு தெரியாது. 
 

pratap sarangi


64 வயதான அவர் சைக்கிளில் செல்கிறார், மண்வீட்டில்தான் வசிக்கிறார், பிரச்சாரத்தைகூட ஆட்டோவில் சென்றுதான் செய்தார். என்றெல்லாம் அவரின் எளிமையான பிம்பம் மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்குபின் இருக்கும் கொடூரம் அந்த எளிமையான பிம்பத்திற்கு பின்னால் மறைந்துவிட்டது.

அவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள்... அவரின் மொத்தசொத்து 16.5 இலட்சம். கையிருப்பு தொகை 15,000. அதேபோல் அவர்மீது அச்சுறுத்தல், கலகம் செய்தல், மதம், இனம் முதலியவற்றின் அடிப்படையில் இரு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தது, ஒதுக்கிவைத்தது உட்பட பல பிரிவுகளின்கீழ் குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

மார்ச் 2002, அந்த காலகட்டத்தில் அவர், பஜ்ரங் தள் என்ற அமைப்பின் மாநில தலைவராக இருந்தார். இந்த பஜ்ரங் தள் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரு கிளை அமைப்பாகும். அப்போது அவர் கலவரம் செய்தது, கொலை முயற்சி, அரசாங்க சொத்திற்கு சேதம் விளைவித்தது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.

 

 

pratap sarangi



இந்த கலவரம் அயோத்தியிலுள்ள ராமர் கோவில் இடத்தை ஒப்படைக்கவேண்டும் என்றுகூறி நடந்தது. சட்டமன்றத்தை தாக்க முயற்சித்த 500 பேர் விஷ்வ ஹிந்து பரிசத், துர்க வாஷினி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள். இதனால்தான் ஒடிஷா காவல்துறை அதிகாரிகள் இவரை கைது செய்தனர்.

இவற்றிற்கெல்லாம் மேலாக 1999 ஜனவரியில் நடந்த சம்பவம்தான் கொடூரமானது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாதிரியார் கிரகாம் ஸ்டெய்ன்ஸ் என்பவரையும், அவரது இரு மகன்களையும் (ஒருவருக்கு வயது 11, இன்னொருவருக்கு 7) எரித்து கொலை செய்தனர். இதற்கு மூளையாக, முக்கிய ஆளாக இருந்தது இந்த எளிய மனிதர்தான். அவர்கள் கிறித்துவ மதத்திற்கு கட்டாயமாக மாற்றியதாக அவர் கூறினார். இந்த வழக்கை விசாரித்த அரசு தரப்பு வழக்கறிஞர் அவரை குறுக்கு விசாரணை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கிறித்துவ மிஷினரிகளுக்கு எதிராக சாரங்கி தலைமையிலிருந்த பஜ்ரங் தள் அமைப்பும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியாக நடந்துள்ள பல வன்முறைகளை மறைப்பதற்காகத்தான் அவர் எளிமையானவர், சைக்கிளில் செல்பவர், நடந்து செல்பவர் என்பது போன்ற பிம்பங்கள் உண்டாக்கப்பட்டன.  
 

 

Next Story

“மீண்டும் பாஜகவிற்கு செல்வேன்” - ஈஸ்வரப்பா திட்டவட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Eshwarappa says I will go back to BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. அந்த வகையில், பா.ஜ.க - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். மேலும், முதற்கட்டமாக நடைபெறும் 14 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் கடந்த 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து, அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், கர்நாடகா மாநில முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ.கவின் மூத்த தலைவருமான கே.எஸ். ஈஸ்வரப்பா, ஹவேரி மக்களவைத் தொகுதியில் தனது மகன் கே.ஈ. கந்தேஷ் போட்டியிட பா.ஜ.க தலைமைக்கு வாய்ப்பு கோரியிருந்தார். ஆனால், அம்மாநில பா.ஜ.க தலைவர் பி.ஓய். ராகவேந்திரா, அந்த வாய்ப்பை வழங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கட்சி மீது அதிருப்தியில் இருந்த கே.எஸ். ஈஸ்வரப்பா, இந்த விவகாரம் குறித்து கட்சி மேலிடத்தில் புகார் அளித்தார். ஆனால், அதுவும் பயனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, ராகவேந்திரா போட்டியிடும் சிவமோகா தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக கே.எஸ். ஈஸ்வரப்பா அதிரடியாக அறிவித்தார். இதனையடுத்து மீதமுள்ள 14 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. இந்த வேட்புமனு தாக்கலானது கடந்த 19ஆம் தேதி வரை நடைபெற்றது. அப்போது கே.எஸ். ஈஸ்வரப்பா, ராகவேந்திரா போட்டியிடும் சிவமோகா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார். இத்தகைய செயல் பா.ஜ.க.வினர்  மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. 

Eshwarappa says I will go back to BJP

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு தராததால் சுயேச்சையாக போட்டியிட்ட கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் கே.எஸ். ஈஸ்வரப்பாவை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கி பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. ஷிவமோகா தொகுதியில் பாஜக வேட்பாளர் கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவிக்கையில், “கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளேன். இன்னும் நம்பிக்கை உள்ளது.  கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டத்திற்குப் பயப்படவில்லை. இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் பா.ஜ.க.வுக்கு செல்வேன். 5 முறை தாமரை சின்னத்தில் போட்டியிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.