பாபர் மசூதியா..? ராமர் கோவிலா..?
நீண்ட நெடிய சட்ட போராட்டங்கள், கலவரங்கள், ஆயிரக்கணக்கான உயிர் பலிகள் என அனைத்தையும் கடந்து, இன்று தனது விடையின் மிக அருகாமையில் பயணித்து கொண்டிருக்கிறது இந்த கேள்வி. கடந்த சில நாட்களாக, நாடு முழுவதும் பாதுகாப்பு பணிக்காக போலீசார், கலவரங்களை தடுக்க பாதுகாப்பு படையினர், நாட்டின் முக்கிய இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் என மத்திய அரசையும், மாநில அரசுகளையும் பம்பரமாக வேலை செய்ய வைத்துள்ளது இந்த கேள்வியின் கடைசிகட்ட பயணம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்த அயோத்தி நிலப்பிரச்சனை கடந்து வந்த வரலாறு என்பது மிகப்பெரியது எனலாம்.
16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி அமைந்திருக்கும் இடம் ராமர் பிறந்த இடமென்றும், இங்கு பதினாறாம் நூற்றாண்டு வரை அவருக்கு ஒரு கோவில் இருந்ததென்றும் இந்து மக்களின் ஒரு பிரிவினரால் நம்பப்படுகிறது. 1527 -லேயே மசூதி கட்டப்பட்டாலும், அப்பகுதியை இந்து மக்களும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர் என்று குறிப்பிடுகிறார் அக்காலகட்டத்தில் வாழ்ந்த வில்லியம் பின்ச் என்கிற ஆங்கிலேய வணிகர். அதன்பிறகு 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரண்டாம் ஜெய் சிங் அயோத்தி பகுதியை ஆண்டபோதும், மசூதியின் அருகிலேயே ராமருக்கு சிலை வைத்து இந்து மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.
இப்படி இரு சமூக மக்களும் அப்பகுதியில் தத்தம் வழிபாடுகளை மேற்கொண்டு வந்த இந்த நிலை 19 ஆம் நூற்றாண்டில் மெல்ல மாறத் தொடங்கியதாக கூறப்படுகிறது. 1853 ஆம் ஆண்டு அயோத்தி பகுதியில் இந்து மற்றும் இஸ்லாமியர்கள் இடையே முதல் கலவரம் நடந்ததாக பதிவு செய்யட்டுள்ளது. அன்றைய ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ஆரம்பத்தில் பெரிதும் கண்டுகொள்ளப்படாத இந்த சண்டை, சில காலம் கழித்தே ஆங்கில அதிகாரிகளின் கவனத்தை பெறத் தொடங்கியது என கருதலாம். இதனையடுத்து 1859 ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஒரு அரணை ஏற்படுத்திய ஆங்கிலேய அரசு, இஸ்லாமிய மக்கள் வழிபடவும், இந்து மக்கள் வழிபடவும் தனித்தனி பகுதிகளை ஒதுக்கியது. ஆங்கிலேயரின் இந்த திட்டம், அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் வரை சரியாகவும், அமைதியான முறையிலும் பின்பற்றப்பட்டது. ஆனால் சுதந்திரம் பெற்ற அடுத்த இரண்டாவது ஆண்டே அயோத்தி மீண்டும் 1853 போன்று மீண்டுமொரு பதட்டத்தை சந்திக்க நேரிட்டது.
1949ல் ராமர் மற்றும் சீதையின் சிலைகள் பாபர் மசூதியினுள் கொண்டு வைக்கப்பட்டது. இதன் விளைவாக அப்பகுதி முழுவதும் மதரீதியிலான பிளவுகள் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தன. இந்த விவகாரத்தால் மேலும் சிக்கல் எழாமல் இருப்பதற்காக அப்பகுதிக்கு பூட்டு போட்டது அன்றைய அரசு. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன. இதனையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இந்து அமைப்புகள் சார்பிலும், இஸ்லாமிய அமைப்புகள் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நீதிமன்ற வழக்குகள் மேலோட்டமான ஒரு குறுகிய கால அமைதியை இந்த விவகாரத்தில் கொண்டுவந்தாலும். அதன் அடியாழத்தில் சிக்கல்கள் வளர்ந்துகொண்டேதான் இருந்தன.
இப்படிப்பட்ட மேலோட்டமான அமைதி நிலவிய ஒரு சூழலில், அந்த அமைதியை அசைத்து பார்த்தது ஒரு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு. 1986 ஆம் ஆண்டு, அலஹாபாத் மாவட்ட நீதிமன்றம் ஒன்று இந்த விவகாரத்தில் அளித்த தீர்ப்பில், மசூதி அமைந்துள்ள பகுதியில் இந்துக்களுக்கு பூஜை செய்ய அனுமதி வழங்கப்படுவதாக அறிவித்தது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு, இரு சமூகத்திற்கு இடையே அடியாழத்தில் வளர்ந்துகொண்டிருந்த அமைதியின்மையை மீண்டும் வெளியே தலைதூக்க வைத்தது. மசூதியை இடித்து விட்டு அங்கு ராமருக்கு கோவில் கட்ட வேண்டுமென சங்பரிவார் அமைப்புகள் முழங்கின. மசூதி தங்களுக்கு வேண்டுமென இஸ்லாமிய அமைப்புகள் எதிர் முழக்கங்கள் எழுப்பின.
விஸ்வ இந்து பரிஷத் போன்ற நேரடி சங்பரிவார் அமைப்புகளும், பாஜக உள்ளிட்ட சில கட்சிகளும் ராமருக்கு கோவில் கட்டுவதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கின. ஒருபுறம், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு 1989 நவம்பர் மாதம், மசூதிக்கு அருகாமையில் கோவில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்திய அதேநேரம், நாடு முழுவதும் ராமர் கோவிலுக்கு ஆதரவு திரட்டும் வகையில் அத்வானி ரதயாத்திரையை மேற்கொண்டார். கோவில் கட்டுவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்திருந்த இந்த காலகட்டத்தில்தான் பாபர் மசூதி இடிப்பு நாடு முழுவதும் கலவரங்களை ஏற்படுத்தியது.
டிசம்பர் 6, 1992 அன்று இந்து அமைப்புகளின் கரசேவகர்கள் ஆயிரக்கணக்கானோர் பாபர் மசூதி முன்னிலையில் கூடினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் மசூதி இடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கலவரங்களில் உயிரிழந்தனர். மும்பையில் 700 பேர், கோத்ரா ரயில் எரிப்பில் 58 பேர் என கலவரங்களும், மரணங்களும் தொடர்கதையானது. பாபர் மசூதி இடிப்பு தொடர்பான விசாரணையை லிபரான் விசாரணை ஆணையமும், நிலம் தொடர்பான வழக்கை அலகாபாத் நீதிமன்றமும் விசாரித்தன. 1993 ல் இந்த நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது.
மசூதி இடிப்பு விவகாரத்தை 3 மாதங்களில் விசாரிக்க வேண்டுமென லிபரான் விசாரணை ஆணையதிற்கு ஆணையிடப்பட்ட நிலையில், இந்த விசாரணை சுமார் 17ஆண்டுகள் நடைபெற்றது. 8 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு, 17 ஆண்டுகாலம் விசாரணை மேற்கொண்டு, இந்த ஆணையம் சமர்ப்பித்த அறிக்கை ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மசூதியை இடிப்பதற்கான திட்டத்தில் பாஜகவின் சில முக்கிய தலைவர்கள் ஈடுபட்டதாக அதில் கூறப்பட்டதாக தகவல் வெளியானது.
இதற்கடுத்து, நில விவகாரத்தில் 2010-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரித்து இஸ்லாமிய அமைப்பான சன்னி வக்பு வாரியம், மற்றும் இந்து அமைப்புகளான நிர்மோகி அகாரா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது. அலஹாபாத் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, அந்த ஆண்டே விஷ்வ இந்து பரிஷத், மற்றும் அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர் சட்ட வாரியம் ஆகிய இரண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதனையடுத்து 2011 ல் அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
இதன்பிறகு வேகமெடுக்காத இந்த வழக்கின் விசாரணை 2019 ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறப்போவதால் சூடுபிடிக்க ஆரம்பித்தது. ஓய்வுக்கு முன் தீர்ப்பை வழங்குவேன் என கூறிய ரஞ்சன் கோகாய், அதற்காக ஒருபுறம் மத்யஸ்த குழு, இன்னொருபுறம் 40 நாட்கள் தொடர் விசாரணை என வேகம் காட்டினார். இந்த சூழலில் தற்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணை அனைத்தும் முடிவடைந்து தீர்ப்புக்காக மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அரசு ஒருபுறம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்கள் கடந்தகால வரலாற்றின் மோசமான அனுபவங்களால் பயம் படர்ந்த நிலையிலேயே காணப்படுகின்றனர் எனலாம். குறிப்பாக அயோத்தி மக்கள் தீர்ப்புக்கு முன்னரே, தங்கள் குடும்பங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். விசேஷங்கள் தள்ளிவைக்கப்படுகின்றன, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வெளியூருக்கு அனுப்பப்படுகிறார்கள், ஆண்கள் சமையல் பொருட்களை வாங்கி சேமித்து வைக்கிறார்கள், இப்படி அயோத்தி உள்ளூர் மக்கள் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த திட்டமிடலை மேற்கொண்டு வருகின்றனர். தீர்ப்பு எவ்வாறு வந்தாலும், அதனை முழுமனதோடு ஏற்று அனைவருமே அமைதியாக செல்ல வேண்டும் என அரசியல் தலைவர்களும், சமூக அமைப்புகளின் தலைவர்களும் கூறி வரும் நிலையில், அவ்வாறு நடந்தால் மகிழ்ச்சியே என்கின்றனர் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த திட்டமிடலில் கவலையடைந்துள்ள பொதுமக்கள்.