Skip to main content

சேலம்: ஊருடன் கூடி தேரிழுத்த நக்கீரன்... தளவாய்ப்பட்டியை தத்தெடுக்கிறது ஆவின்!

சேலம் ஆவினில் தேக்கி வைக்கப்படும் கழிவு நீர் மற்றும் அதீதமான நிலத்தடி நீரூற்றால் வா-ழ்வாதாரம் இழந்து தவித்து வரும் தளவாய்ப்பட்டி கிராமத்தையே தத்தெடுக்க முன்வந்திருக்கிறது சேலம் ஆவின் பால்பண்ணை.

சேலம் மாநகராட்சி எல்லையை ஒட்டியுள்ளது தளவாய்ப்பட்டி. இங்கு, 1984ம் ஆண்டு முதல் ஆவின் பால்பண்ணை செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது. கொள்முதல் செய்யப்படும் பாலை குளிரூட்டல், பதனிடுதல், பால் பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக அதிகளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு பயன்படுத்தப்பட்ட பிறகு வீணாகும் கழிவு நீர் பண்ணையின் மற்றொரு பகுதியில் பரந்த வெளியில் திறந்தநிலையில் தேக்கி வைக்கப்படுகிறது.

 

avin Adopting the thalavaipatti


இவ்வாறு நீண்ட காலமாக தேக்கி வைக்கப்படும் கழிவு நீரால் (ஒருமுறை சுத்திகரிக்கப்பட்ட நீர்தான்) பண்ணைக்கு பின்புறம் கிழக்கு, தென்கிழக்கு பகுதியில் உள்ள ரொட்டிக்கார வட்டம் என்ற சிறு கிராமமே தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதாவது, பால் பண்ணையில் தேக்கி வைக்கப்படும் கழிவு நீரால், ரொட்டிக்கார வட்டம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் தானாகவே ரீசார்ஜ் ஆகி, உயர்ந்து விடுகிறது. இதனால் 3 முதல் 5 அடி தோண்டினாலே நிலத்தடி நீரூற்று வந்து விடுகிறது. நிலவியல் ரீதியாகவே தாழ்வான பகுதி என்பதும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க மற்றுமொரு காரணம்.

இதனால் மழைக்காலங்களில் ரொட்டிக்கார வட்டத்தில் பலருடைய வீடுகளில் தரைதளத்தை பிளந்து கொண்டு நிலத்தடி நீர் 'குபுகுபு'வென்று ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கிறது. பத்துக்கு பத்து சதுர அடி கொண்ட ஓர் அறை, மூன்று மணி நேரத்தில் ஒரு அடி உயரத்திற்கு நிலத்தடி நீரூற்றால் நிரம்பி விடுகிறது. அந்த தண்ணீரை அவர்கள் மோட்டார் வைத்து வெளியேற்றி வருகின்றனர்.

 

avin Adopting the thalavaipatti


வீட்டில் நீர்ப்பாங்கான தரையிலேயே 24 மணி நேரமும் வெறுங்கால்களுடன் நடப்பதால் அப்பகுதி மக்கள் எல்லோருமே கடுமையான சேற்றுப்புண்ணால் மழைக்காலம் முழுவதும் அவதிப்படுகின்றனர். சிலருக்கு கால் விரல்கள் அழுகிப்போகும் அளவுக்கு புண்களால் அரிக்கப்பட்டு உள்ளன. நிலத்தடி நீரூற்றால் சந்திரன்(72), சண்முகம் (40) ஆகியோருக்குச் சொந்தமான பேக்கரி பொருள்கள் தயாரிக்கும் இரண்டு தொழிற்கூடங்கள் இடிந்து விழுந்துவிட்டன. நீர்ப்பாங்கான இடத்தில் குழந்தைகளை வைத்துக்கொண்டு அவதிப்பட்டு வந்த குமார், செல்வம் ஆகியோர் ரொட்டிக்கார வட்டத்தை விட்டு கோயில்மரம் என்ற இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டனர்.

நிலத்தடி நீரூற்று பெருகி திறந்தவெளியில் தேங்கிக் கிடப்பதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. இதனால் பலர் டெங்கு, சிக்குன்குன்யா, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக அக். 17ம் தேதி தளவாய்ப்பட்டி மக்கள் நக்கீரனுக்கு விடுத்த அழைப்பின்பேரில் ரொட்டிக்கார வட்டம் கிராமம் முழுவதும் கள ஆய்வு செய்தோம். நம்முடன் ஆவின் பொது மேலாளர் / மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, ஆவின் தலைவர் ஜெயராமன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் களத்தில் இறங்கி  பார்வையிட்டனர். அன்று இரவே ஆவின் அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

avin Adopting the thalavaipatti


ஆய்வில் கண்ட காட்சிகளை படங்களுடன், விரிவான 18.10.2019ம் தேதி, நக்கீரன் இணையதளத்தளத்தில் காலை 7.14 மணிக்கு கட்டுரை வெளியிட்டோம். அன்றே ஆவின் பொதுமேலாளர் விஜய்பாபு மற்றும் ஒட்டுமொத்த சேலம மாவட்ட அரசு இயந்திரமும் ரொட்டிக்காரவட்டத்தில் குவிந்துவிட்டனர். முதல்கட்டமாக ஆவின் பால் பண்ணையில் பரந்த வெளியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த கழிவு நீர், பண்ணையின் மற்றொரு பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அனைவரிடமும் நின்று நிதானமாக குறைகளைக் கேட்டு, உள்வாங்கிக் கொண்டார் ஆவின் பொது மேலாளர்.

அதற்கு அடுத்த நாளான இன்று (அக். 19) ரொட்டிக்காரவட்டத்திலும், மல்லமூப்பம்பட்டியிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

avin Adopting the thalavaipatti


நேற்று முன்தினம் நிலத்தடி நீரூற்றால் பதினோரு குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்கக் கேட்டிருந்தோம். இன்று நாம் சென்றிருந்தபோது மேலும் சிலர் அதுபோன்ற பிரச்னையில் சிக்கித் தவிப்பதாகக் கூறினர். அதாவது, ரொட்டிக்கார வட்டத்தைச் சேர்ந்த சண்முகம், குப்புசாமி, ரதி, சந்திரன், மல்லிகா, சரவணன், பாப்பா, சின்னதுரை, குமார், செல்வம், ராஜேந்திரன், ஆறுமுகம், மணி, சேட்டு, முருகன் ஆகிய 15 குடும்பங்கள் மழைக்காலங்களில் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். இதையும் நாம், இன்று (அக். 19) ஆவின் பொது மேலாளரின் கவனத்திற்குக் நேரடியாக கொண்டு சென்றோம்.

ரொட்டிக்கார வட்டம், தளவாய்ப்பட்டி கிராம மக்களின் பிரச்னைகளைக் கேட்டுக்கொண்ட ஆவின் பொது மேலாளர் விஜய்பாபு, உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து நம்மிடம் பேசினார்.

 

avin Adopting the thalavaipatti


''ஆவினில் தேக்கி வைக்கப்பட்டுள்ள கழிவு நீரை பால் பண்ணையின் மற்றொரு பகுதிக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. குழாய் மூலமாக ஏரிக்குள் கொண்டு செல்வது குறித்தும் ஆராய்து வருகிறோம். ஆனால் அந்தளவுக்கு இங்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதில்லை. இங்குள்ள தண்ணீரை கால்நடை தீவன வளர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மழைக்காலங்கள் மட்டுமின்றி குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவமுகாம்கள் நடத்தப்படும். நேற்று உடனடியாக தளவாய்ப்பட்டி, ரொட்டிக்காரவட்டத்தில் கொசு ஒழிப்புப் புகை மருந்து அடிக்கப்பட்டது. சில இடங்களில் 'ஆயில் பால்'கள் போடப்பட்டுள்ளன. நிலத்தடி நீரூற்று பிரச்னை உள்ள பகுதிகளில் பாதை அமைப்பதற்கு வசதியாக முதல்கட்டமாக கிராவல் மண் கொட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நீண்ட காலப் பணிகளின் கீழ், இப்போது பால் பண்ணையில் பத்து லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் பிளாண்ட் பயன்பாட்டில் இருந்தாலும், 5 லட்சம் லிட்டர் வரை மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. அதை மேலும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்துள்ள 33 குடும்பங்களுக்கு பட்டா கிடைக்கவும், நிலத்தடி நீரூற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரவும் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும். அவர்களுக்கு உரிய தீர்வுகள் கிடைக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 

avin Adopting the thalavaipatti


ரொட்டிக்காரவட்டத்தில் தளவாய்பட்டியில் உள்ள நூலகம், அரசுப்பள்ளிகள் ஆகியவற்றையும் பார்வையிட்டேன். அவற்றை தத்தெடுக்கலாம் என்றிருக்கிறோம். தளவாய்ப்பட்டி கிராமத்தை முழுவதும் தத்தெடுக்கும் யோசனையும் இருக்கிறது,'' என்றார் விஜய்பாபு.

ஆண்டுக்கு கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வணிகம் செய்து வரும் சேலம் ஆவின், இதுவரை இல்லாத வகையில் தளவாய்ப்பட்டி கிராமத்தை இப்போதுதான் புதிய கோணத்தில் பார்க்கத் தொடங்கியிருக்கிறது. தளவாய்ப்பட்டி மக்கள், ஆவின் ஆகியோருடன் கரம் கோக்க 'நக்கீரன்' எப்போதும் தயாராக இருக்கிறது. வெளிச்சம் பரவட்டும். 

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...