Skip to main content

அண்ணாவின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்... அடல் பிஹாரி வாஜ்பாய் நக்கீரனுக்கு அளித்த சிறப்பு பேட்டி... பகுதி 1

Published on 16/08/2018 | Edited on 16/08/2018

இந்தியப் பிரதமரை தமிழ் பத்திரிகைக்காக தனி பேட்டி காண்பது பகீரத பிரயத்தனம் என்பது தெரிந்தும், நக்கீரன் தனது முயற்சியை உறுதியுடன் தொடங்கியது. தேசிய ஏடுகள் தவிர, வேறு எந்த மாநில மொழி ஏட்டிற்கும் பிரதமர் வாஜ்பாய் அதுவரை சிறப்பு பேட்டி அளித்ததில்லை. 1998 செப்டம்பரில் முதல்முறையாக நக்கீரனுக்கு பேட்டியளித்தார் அடல் பிஹாரி வாஜ்பாய். 

 

vaajpeyee


 

நக்கீரன்:  இந்தியாவின் பிரதமராக ஒருநாள் வருவோம் என்று நீங்கள் எப்போதாவது கனவு கண்டதுண்டா?


வாஜ்பாய்: நாட்டுக்கு சேவை செய்ய, மக்கள் எப்படிப்பட்ட பொறுப்புகளை எனக்கு அளித்தாலும், அதனை ஏற்க நான் எப்போதும் தயாராகவே இருந்திருக்கிறேன். எனினும் இன்ன பொறுப்புத்தான், அதாவது பிரதமர் பதவிதான் வகிக்க வேண்டும் என்று நான் சொந்த முறையில் ஒருபோதும் கருதியதில்லை. என்னைப் பொறுத்தவரையில் பிரதமர் பதவி என்பது ஒரு அலங்காரப் பதவி அல்ல. இந்திய நாட்டிற்கு தொண்டு செய்ய கிடைத்த நல்லதோர் வாய்ப்பு என்றே நான் கருதுகிறேன். கடந்த 40 ஆண்டுகாலத்திற்கும் மேலாக பாராளுமன்றத்தில் நான் எதிர்கட்சி வரிசையிலேயே அமர்ந்து பணியாற்றியிருக்கிறேன். இப்போதுதான் அரசுக்கு தலைமை வகிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனினும், எதிர்க்கட்சியில் பணியாற்றிய அந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி என்னுடைய அணுகுமுறை என்பது எப்போதும் ஒரேமாதிரியானதுதான்; அது நான் மக்களின் ஊழியன் என்பதே!

 

 

 

நக்கீரன்: அரசியல் பணிகள் பொதுத்தொண்டுகளுக்கு மத்தியில் கவிதைகள் எழுத எப்படி முடிந்தது?


வாஜ்பாய்: முதலில் நான் ஒரு கவிஞன்; அப்புறம்தான் நான் அரசியலுக்கு வந்தேன். நான் குவாலியர் நகரத்தில் பிறந்தேன். நான் பிறந்த அந்த மண் கவிதை, இசை போன்ற கலைகளை வளர்த்துப் பெருமை பெற்ற பூமி! குவாலியர் நகரின் காற்றிலும்கூட கவிதையும் இசையும் கலந்து மணம் வீசிடும் என்கிற அளவுக்கு கலை வளர்த்த நகர் அது. அதுவும் தவிர என்னுடைய குடும்பமும் கலைக்குடும்பம்தான். எனது தாத்தா சம்ஸ்கிருத மொழியில் மிகவும் பாண்டித்தியம் பெற்றவர் என்பதோடு, மிகச்சிறந்த கவிஞராகவும் திகழ்ந்தவர்; தாத்தாவைப் போலவே எனது தந்தையும் கவிஞரே. அப்பா கலந்துகொள்ளும் கவி அரங்கங்களுக்கெல்லாம் நானும் போவேன். சின்னஞ்சிறு வயது முதலே எனக்கு கவிதைகளில் ஒரு ஈடுபாடு உண்டு; நாளாவட்டத்தில் அது என்னை கவிதை எழுதத் தூண்டியது; மெள்ள மெள்ள நான் கவிஞன் ஆனேன்!

 

நக்கீரன்: அரசியலில் ஈடுபட்டதற்காக எப்போதாவது நீங்கள் வருத்தப்பட்டதுண்டா?


வாஜ்பாய்: ஒருபோதும் இல்லை. அரசியலில் ஈடுபட்டது என்பது நான் விரும்பி ஏற்றுக்கொண்ட காரியமாகும். எனது இளமைப் பருவத்தில் நான் விரும்பி ஏற்றுக்கொண்ட சில இலட்சியங்கள் கொள்கைகளின் அடிப்டையிலேயே நான் அரசியலுக்கு வந்தேன். கல்லூரியில் படித்த காலத்தில் நான் மாணவர் இயக்கங்களில் தீவிர பங்குகொண்டேன். கல்லூரி நாட்களில் அரசியலில் எனக்கு ஏற்பட்ட ஈடுபாடே இயற்கையாக என்னை தேசிய அரசியலில் கொண்டுவந்து சேர்த்தது. ஆகவே அரசியலில் ஈடுபட்டதற்காக வருந்தவேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டதில்லை. எனினும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் கவிதை, இலக்கியம், சங்கீதம் போன்ற துறைகளில் ஈடுபட்டு சாதனை குவிக்க முடியாத வகையில் அரசியல் ஈடுபாடு எனது நேரம் முழுவதையும் ஈர்த்துக்கொண்டு விட்டது என்பது தான் அது.


 

vaajpeyee


 

நக்கீரன்: நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் நீங்கள் முதல்வரிசையில் இருக்கிறீர்கள். உங்களைக் கவர்ந்த பேச்சாளர் யார் என்று சொல்ல முடியுமா?


வாஜ்பாய்: இளமைப் பருவத்தில் என்னை மிகவும் கவர்ந்த பேச்சளார் எனது தந்தைதான். அவர் கலந்துகொள்ளும் கவி அரங்க நிகழ்ச்சிகளில் கவிதை பாடுவதோடு அவர் சொற்பொழிவும் ஆற்றுவார். கவிதையையும் அவர் உணர்ச்சி பாவத்துடன், கலைநயம் ததும்ப படிப்பர். அவரிடமிருந்தே நான் உணர்ச்சிப் பிரளகத்துடன் சொற்பொழிவாற்ற கற்றுக்கொண்டேன்; பிற்காலத்தில் எனது அரசியல் மேடை பிரசங்கங்கள் மக்கள் விரும்பி கேட்கும் அளவிற்கு அமைந்ததற்கு அப்பாவின் முன்னுதாரணமே காரணம். பாராளமன்றத்திக்கு உள்ளேயும், வெளியேயும் ஏராளமானோர்களின் பேச்சுக்களை கேட்டு நான் வியந்திருக்கிறேன். கோவா விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களில் ஒருவரான நாத்பை நாடாளுமன்றத்தில் அற்புதமாகப் பேசுவார். அதுபோலவே கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பூபேஷ்குப்தாவும் தலைச்சிறந்த பேச்சாளராக திகழ்ந்தவர்.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அது இந்திய அரசியலுக்கு மிகச்சிறந்த பேருரையாளர்கள் சிலரை அளித்திருகிறது.  அண்ணாவின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் அவரது தமிழ் உரைகள் மிக இனிமையானதாகவும், மண்ணின் மணம் கமிழ்வதாகவும் இருக்கும். ஆங்கிலத்தில் பேசும்போதும் சரி; அவரது அவரது பேச்சு சக்திவாய்ந்ததாகவும் அதேசமயம் தெளிவு மிகுந்ததாகவும், திட்டவட்டமானதாகவும் அமைந்திருக்கும். அவர் பேசி முடித்ததும் நான் அவர் அருகில் சென்று அவரது உரையின் சிறப்புகளை கூறி பாராட்டுவேன். அதேபோலவே அவரும் என்னுடைய பேச்சை பாராட்டி மகிழ்வர். 1965ஆம் ஆண்டு மாநிலங்கவையில் அண்ணா இந்தி மொழி பற்றி பேசினார் அப்போது அவர் பேசியது நினைவுக்கு வருகிறது. "நாங்கள் இந்தியை ஏன் எதிர்க்கிறோம் ? அதுபற்றி வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி விளக்கிட விரும்புகிறேன். இந்தி மொழி மட்டுமில்லை; எந்த மொழி மீதும் எங்களுக்கு வெறுப்பு இல்லை. எல்லா மொழிகளையும் நாங்கள் விரும்பவே செயகிறோம் இந்திமொழியைப் பொறுத்தவரையில் எனது அருமை நண்பர்  வாஜ்பாய் பேசுவதை கேட்கும் ஒவ்வொரு சமயமும் அதுவொரு நல்லமொழி என்றே நான் எண்ணுவேன்" என்று அண்ணா குறிப்பிட்டுட்டார்.    

 

 

 

நக்கீரன்: நீங்கள் சினிமாக்கள் பார்த்ததுண்டா? படங்களில் உங்களுக்கு பிடித்த படங்கள் எவை என்பதையும், உங்களை கவர்ந்த நடிகர் நடிகையர்கள் யார் யார் என்பதையும் சொல்ல முடியுமா?


வாஜ்பாய்: படங்களை அடிக்கடி பார்ப்பதற்கு எனக்கு நேரம் கிடைப்பது இல்லை. எப்போதாவது பார்ப்பதுண்டு.நக்கீரன்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் பற்றி உங்கள் கருத்து என்ன?


வாஜ்பாய்: தமிழ் மொழி மீதும், தமிழ் கவிதைகள் பற்றியும் எப்போதுமே எனக்கு மிக உயர்ந்த மதிப்பு உண்டு. எனினும் தமிழ் கவிதைகளை தமிழிலேயே படிக்க எனக்கு தெரியாது. இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்கவிதைகளை பலவற்றை நான் படித்திருக்கிறேன். சமூக சீர்திருத்தம், ஆன்மிகம், தேசபக்தி, தமிழ் கலாச்சாரத்தின் பெருமை போன்றவைகளை விளக்கிடும் அந்த தமிழ் இலக்கியங்கள் அனைத்துமே தனித்தன்மை வாய்தவைகளாகா விளங்குகின்றன. 1996 மே மாதம் பா.ஜ.க. அரசு மீதான நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது நாடாளமன்றத்தில் நான் பேசியபோது மகாகவி பாரதியார் 'எங்கள் தாய்' என்ற தலைப்பில் பாடிய 'முப்பது கோடி முகமுடையாள்; உயிர் மொய்ம்புறமென்னுடையாள் என்ற கவிதையை நான் மேற்கோள் காட்டினேன். அதை இன்னமும் பலர் நினைவுபடுத்தி பாராட்டிருக்கிறார்கள்.  திருவள்ளுவரைப் பொறுத்தவரையில் அவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல; அவர் தலை சிறந்த தத்துவஞானி, அவரது கவிதை வரிகள் வாழ்க்கையின் ஆனைத்துத் துறைகளுக்கும் வெளிச்சம் தரக்கூடிய வாழிகாட்டியாகும். நான் எனது நூலகத்தில் அடிக்கடி திருக்குறளை எடுத்து படிக்கும் பழக்கம் உள்ளவனாகவே இருக்கிறேன். நக்கீரன்: உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார் யார்?


வாஜ்பாய்: இந்தியில் நிரவாவை எனக்கு ரொம்பவும் பிடிக்கவும். பெங்காலியில் குருதேவர், ரவிந்தரநாத் தாகூரையும் நான் விரும்பி படிப்பேன்; இந்தி ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் கே.எம்.முன்ஷியின் படைப்புகள் எனக்கு பிடித்தவை. எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ராஜாஜியும் ஒருவர்.இந்தியப் பிரதமரை தமிழ் பத்திரிகைக்காக தனி பேட்டி காண்பது பகீரத பிரயத்தனம் என்பது தெரிந்த்தும், நக்கீரன் தனது முயற்சியை உறுதியுடன் தொடங்கியது.

(தொடரும்)

 

 

 

 

 

 

 

Next Story

“ஸ்மிருதி இராணியை இழிவுபடுத்த வேண்டாம்” - ராகுல் காந்தி வேண்டுகோள்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Rahul Gandhi said that Don't insult Smriti Irani

கடந்த 2019 நாடாளுமன்றத்  தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது குடும்பத் தொகுதியான அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி தோற்கடித்தார். அதேபோன்று இந்த முறையும் ராகுல் காந்தியை அமேதி தொகுதியில் தோற்கடிப்பேன் என்று ஸ்மிருதி இராணி சவால் விடுத்தார். ஆனால் கடைசி நேரத்தில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடாமல், காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். 

அதே சமயம் அமேதியில் ஸ்மிருதி இராணியை எதிர்த்து ராகுல் காந்தி குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய நபரான கிஷோரி லால் சர்மாவைக் காங்கிரஸ் நிறுத்தியது. பின்னர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இராணியைத் தோற்கடித்து கிஷோரி லால் சர்மா அமோக வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து தோல்வியை ஒப்புக்கொண்ட ஸ்மிருதி இராணி, தொடர்ந்து அமேதி தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் ஸ்மிருதி இராணிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஸ்மிருதி இராணியை இழிவுபடுத்த வேண்டாம் என நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில், “வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜம். அதனால் அந்த விஷயத்தில் ஸ்மிருதி இராணி அல்லது வேறு எந்தத் தலைவர்களையும், இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், கேவலமாக நடந்து கொள்வதையும் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மக்களை அவமானப்படுத்துவதும் அவமதிப்பதும் பலவீனத்தின் அடையாளம், வலிமை அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

‘ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்’ - மத்திய அரசு அறிவிப்பு

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
central govt said June 25 to be observed as Constitution black Day

1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 352 தொகுதிகளையும், கம்யூனிஸ்ட்கள் 48 தொகுதிகளையும், ஜனசங்கம் 22 தொகுதிகளையும், காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் 16 தொகுதிகளையும் கைப்பற்றியது. உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் ராஜ் நாராயணன் போட்டியிட்டார். இதில் ராஜ் நாராயனணை தோற்கடித்து ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றிபெற்றார்.

இந்த நிலையில், இந்திராகாந்தியின் வெற்றியை எதிர்த்து ராஜ் நாராயணன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இந்திராகாந்தியின் வெற்றி செல்லாது என்று கடந்த 1975 ஆம் ஆண்டு ஜூன்12 ஆம் தேதி அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹ தேர்தலில் வெற்றிபெற இந்திராகாந்தி பல்வேறு முறைகேடுகளில் ஈட்டுப்பட்டுள்ளார். அதனால் அவரது வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார். மேலும், தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதால் அடுத்த 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் இந்திராகாந்தி போட்டியிட முடியாது என்றும் உத்தரவிட்டார். 

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை இந்த தீர்ப்பு ஏற்படுத்திய நிலையில், அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் இந்திராகாந்தி. ஆனால் 1975 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் ஆண்டு அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி, கிருஷ்ண ஐயர் இந்திராகாந்தி மனுவைத் தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார். இதனால் இந்திராகாந்திக்கு நெருக்கடி அதிகரித்து, கட்டாயம் பதவி விலகி ஆக வேண்டிய சூழல் உருவானது.

இந்த சூழலில் 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி நள்ளிரவில் இந்தியாவில் அவசரநிலை சட்டத்தை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அமல்படுத்தினார். இந்தியாவில் முதல்முறையாக எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. நாடுமுழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் நடவடிக்கைகளுக்கு உள்ளாகினர். எதிர்க்கட்சி தலைவர்கள் மீசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டு சித்ரவதைகள் செய்யப்பட்டனர். பத்திரிக்கைகள் தனிக்கை செய்யப்பட்டது. இதனால் மக்கள், அரசியல் கட்சியினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பலரும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் கழித்து 1977-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் திரும்பப் பெறப்பட்டது. பிற்காலங்கள் நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தியதற்காக மக்களிடம் இந்திராகாந்தி மன்னிப்பு கேட்டதாக  கூறப்படுகிறது. இன்றளவும் எமர்ஜென்சி கலத்தை இந்தியா நாட்டின் கருப்பு தினமாகப் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.

மத்தியில் ஆளும் பாஜக காங்கிரசுக்கு எதிராக எமர்ஜென்சி காலத்தையே முன்வைத்து மக்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறது. இந்த நிலையில்தான், ஜூன் 25 ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவசர நிலையால் பாதிக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 ஆம் தேதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

The website encountered an unexpected error. Please try again later.