Skip to main content

இரண்டடி திருக்குறளை ஓவியமாக்கும் சாதனை பெண் ‘செளமியா’

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

 ARTIST SOWMIYA | THIRUKURAL | PAINTING |

 

ஓவியம் மீதான ஆர்வம் வருவதற்கான காரணம் என் நினைவில் இல்லை. ஆனால், ஆரம்பம் முதலே எனக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் ஓவியம் வரைவேன். நோட்டுப்புத்தகத்தில் கூட ஓவியங்களே அதிகம் தென்படும். ஒரு கட்டத்தில் வாழ்க்கைக்கு ஓவியம் எப்படி உதவும் என தோன்றியது. அப்போது தனியார் நிறுவனத்தில் விஷுவல் மீடியா டிப்ளோமா படிப்பில் சேர்ந்தேன். இதற்கு முன் பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்திருப்பேன். எந்த ஒன்றில் கவனம் செலுத்துவது. எந்தெந்த வடிவங்களில் ஓவியம் வரையப்படுகிறது என்பது பற்றிய பயிற்சிகளை எடுத்துக் கொண்டேன். இதற்குப் பிறகு ஓவியங்களில் இருக்கும் வகைகள் பற்றி அறிந்து கொண்டேன். அங்கு பயிற்சி பெற்ற பிறகு வல்லுநராக உருப்பெற்றேன். 

 

எந்தவொரு ஓவியம் வரையும் பொழுதும் சிரமத்தை உணர்ந்ததில்லை. மாறாக அது மகிழ்ச்சியையே அளித்திருக்கிறது. இன்றோடு 1318 வது நாளாக நான் தொடர்ந்து வரைந்து வருகிறேன். இதில் இத்தனை சவால்கள் இருந்தாலும் முற்றிலும் இந்தப் பயணம் சந்தோசமாக தான் இருந்துள்ளது. முதுகலைப் பட்டமும் படித்து விட்டு, தற்போது ஆய்வு செய்து முனைவர் பட்டத்திற்கு பதிவு செய்யலாம் என சிந்தித்தேன். நமக்கு தெரிந்த ஓவியத்தை குறித்தே ஆய்வு மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன். நாலுவரி கவிதைகளை வைத்து ஓவியமாக எப்படி மாற்றுகிறார்கள் என்பது குறித்து சில ஆய்வுகள் இருக்கின்றன. அதேபோல், தமிழிலும் அதிகளவு சிறந்த இலக்கியங்கள் இருப்பதனால் இதனைத் தெரிவு செய்தேன்.

 

தமிழ் இலக்கியம் என முடிவு செய்த பின், முதலில் நினைவிற்கு வந்தது திருக்குறள். தமிழ் மொழியை கடந்து அவர்களின் வாழ்க்கை முறை எவ்வாறாக இருந்தது, எந்த மாதிரி சூழ்நிலைகளில் வாழ்ந்தோம், இப்பொழுது தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள் போன்ற கேள்விகள் எழும். விட்டலாச்சாரியா, வரலாற்றுப் படங்களை விரும்பிப் பார்க்கும் பழக்கம் அதிகம் உண்டு. ராஜாக்கள் காலத்து கதைகள் மிகவும் ஆர்வம் ஊட்டக் கூடியதாக இருந்தது. காலங்கள் செல்ல இதுபோன்ற படங்களின் வரவு குறையத் தொடங்கியது. ரசிகர்களின் மனதைக் கவரக் கூடிய படங்கள் அவர்களின் மரபு சார்ந்து எடுக்கப்படுபவையாக பெரும்பாலும் உள்ளது. மேலும் அவை அவர்களிடத்தில் ஆர்வத்தை உருவாக்கும். 

 

இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் முதல் பெரியோர் வரை பரீட்சயமான திருக்குறளில் இருந்து ஓவியத்தை துவங்கலாம் என முடிவெடுத்தேன். ஓவியம் வரைய ஆரம்பித்த முதல் பதினைந்து நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. முதல் நூறு நாட்களில் நேரம் தவறாமையைக் கற்றுக்கொண்டேன். அடுத்து, சிறிய அளவிலான தாளில் வரையத் தொடங்கி பின்பு பெரிய தாளுக்கு மாறினேன். வரையும் பொழுது சில யுக்திகளைக் கையாண்டு, யதார்த்தவாதம், உருவக முறைகளை பயன்படுத்தினேன். மக்களுக்கு பழமொழிகளைப் போல எளிமையில் எடுத்துரைக்க, அவர்களுக்கு நல்லது - கெட்டது எனத் தோன்றும் விசயங்களை வைத்து வரைந்தேன்.. இவ்வளவு நாட்களை கடந்தும் இன்றும் வரைதலின் சுவாரஸ்யம் அதிகரித்துள்ளது.