Skip to main content

'தமிழ்நாட்'டின் முதல் முதலமைச்சர்!

Published on 15/09/2020 | Edited on 03/02/2021

 

anna

 

அண்ணா என்று சொன்னவுடனே நம் நினைவுக்கு வருவது மாநில சுயாட்சி. திராவிட நாடு, தனிநாடு கோரிக்கையை அழுத்தமாக வைத்தவர், அதற்கான அத்தனை செயல்பாடுகளையும் உயிருடன் இருக்கும்வரை நிறைவேற்றிக்கொண்டே வந்தார், மாநில சுயாட்சி என்ற பெயரில். அதன் முதல் பெரும் வெற்றிதான் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிட்டது. இது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல. மாநில நலன்களை இரண்டாம் பட்சமாக்கிய மத்திய அரசுக்கு எதிரான முதல் சம்மட்டி அடி. அண்ணாவின் ஆட்சியில்தான் பெயர் மாற்றம் நடந்தது. அந்தவகையில் தமிழ்நாட்டின் முதல் முதல்வர் அண்ணாதான்.

 

இன்றைக்கு பலரும் நினைக்கலாம், 'வெறும் பெயர்மாற்றம்தானே, இதில் என்ன இருக்கிறது' என்று. அவர்களுக்கு நிகழ்கால சான்றுகளே இருக்கின்றன. 29.01.2018ல் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லம் மற்றும் தமிழ்நாடு விருந்தினர் இல்லம் ஆகியவற்றிற்கு வைகைத் தமிழ் இல்லம், பொதிகைத் தமிழ் இல்லம் எனப்பெயர் மாற்றப்பட்டது. பெயரில் என்ன இருக்கிறது என நினைப்பவர்கள், தமிழ்நாடு இல்லம் என்ற இந்தப் பெயரை மாற்ற எண்ணும் நோக்கத்தையும் இதன்பின் இருக்கும் அரசியலையும்  புரிந்துகொண்டால் அந்த மாற்றம் எவ்வளவு பெரியது என்பதை அறியலாம்.
 

நாம் எண்ணும் அளவிற்கு அது உடனேவோ அல்லது எளிதாகவோ கிடைத்த வெறும் பெயர் மாற்றம் இல்லை, அதுதான் மாநில சுயாட்சிக்கான தொடக்கப்புள்ளி. 1956ம் ஆண்டு இந்தக் கோரிக்கைக்காக தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். 1957ம் ஆண்டு முதல்முறையாக திமுக வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. அப்போதும் தமிழ்நாடு பெயர் மாற்றத்தை வலியுறுத்தியது. ஆனால் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு பல்வேறு காரணங்கள் கூறி அதை நிறைவேற்றவில்லை. பின் 1967 மார்ச் 6ல் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியமைத்தது, ஜூலை 18ல் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் போடப்பட்டது.

 

anna


 

இந்திய நாடு, தேசிய ஒற்றுமை என்ற பெயரில் இந்தித் திணிப்பும் டெல்லிக்கு மட்டுமே முக்கியத்துவம் என்ற நிலையும் தெற்கு கண்டுகொள்ளப்படாததும் நிகழ்ந்துகொண்டிருந்தபோது தமிழ்நாடு எனப் பெயரிட்டது வரலாற்றின் உச்சம்தான். இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்த பேரறிஞர் அண்ணா சுயமரியாதைத் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது முதற்கொண்டு பல முக்கிய திட்டங்களைக் கொண்டுவந்தார். அப்படிப்பட்ட தலைவர் மானமிகு. அண்ணாதுரையின் நினைவுகளோடு பெருமையாக, கம்பீரமாகக் கூறுவோம், தமிழ்நாடு என்று அதுதான் நாம் அண்ணாவிற்கு செய்யும் மரியாதை.

 

 

 

 

Next Story

‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் -  முதல்வர் வீடியோ வெளியிட்டு வாழ்த்து! 

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Celebrating 'Tamil Nadu Day' - Chief Minister released a video and congratulated him!

மெட்ராஸ் மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் தேதி, தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18 அன்று கொண்டாடப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க இந்த ஆண்டு ஜூலை 18 தமிழ்நாடு நாள் விழா பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மாளிகையில் இன்று (18.07.2024) நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை அருள் வரவேற்புரையும், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர். காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர், சி.வி.எம்.பி. எழிலரசன் மற்றும் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர்  கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்கள் தலைமையுரையும்,  தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் விழாச் சிறப்புரையும் ஆற்ற உள்ளனர். 

Celebrating 'Tamil Nadu Day' - Chief Minister released a video and congratulated him!

மேலும் ஆழி. செந்தில்நாதன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. அதில் "தமிழ்நாடு வாழ்வும் வரலாறும்" என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானாவும், "சென்னை மாகாணமும் செயற்கரிய போராட்டங்களும்" என்ற தலைப்பில் சிவ.சதீஸும், "சென்னை மீட்பும் வரலாறும்" என்ற தலைப்பில் அனு கிரகாவும், ."திராவிட இயக்கத் தலைவர்களும் நவீன தமிழ்நாடும்" என்ற தலைப்பில் சூர்யா கிருஷ்ணமூர்த்தியும், "தமிழ்நாடு பெயர்மாற்றப் போராட்ட வரலாறு" என்ற தலைப்பில் மா.மதன் குமாரும் கருத்துரையாற்ற உள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு  நாள் குறித்த தனது வாழ்த்து செய்தியை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளார். அதில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா தமிழக சட்டப்பேரவையில் தமிழ் நாடு பெயர் சூட்டி பேசிய வீடியோ காட்சியை பகிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “கடல் கண்டு, மலை கண்டு பயன்கொண்ட தமிழ்நாடு வாழ்க. களங்கண்டு, கலை கண்டு, கவின் கொண்ட தமிழ்நாடு வாழ்க. உடல் கொண்டு, உரங்கொண்டு, உயிர் கொண்ட தமிழ்நாடு வாழ்க. ஜூலை 18, தமிழ்நாடு நாள், தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போதே நம் உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு ஆற்றல் பிறக்கிறது. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க” எனப் பேசியுள்ளார். 

Next Story

தமிழ்நாடு நாள் விழா; பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிப்பு!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Tamil Nadu Day Celebration; Competition announcement for school students

தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் நாளினை ‘தமிழ்நாடு நாளாக’ கொண்டாடப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பிற்கிணங்க 2022ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழ்நாடு நாள் விழா முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.  இதில் முதல் மூன்று பரிசுகள் மாவட்ட அளவில் வழங்கப்படும். அதோடு முதல் பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெறுவார்கள். சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடம் வகிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 18 ஆம் நாளன்று நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட உள்ளது.

அதன் ஒரு பகுதியாகச் சென்னை மாவட்ட அளவில் நடைபெறும் மாவட்டப் போட்டி 09.07.2024 அன்று சென்னை அண்ணாசாலையில் அரசினர் மதரசா ஐ ஆஜம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் ரூபாயும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்படுவார்கள் எனத் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு : ஆட்சிமொழி தமிழ், பேச்சு போட்டிக்கான தலைப்பு : 1. குமரி தந்தை மார்சல் நேசமணி, 2. தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, 3. முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகும்.