Skip to main content

அரவக்குறிச்சியில் சோர்ந்துவிட்டனர் அதிமுகவினர்... விவரிக்கிறார் சிவசங்கர்

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

மே 19ஆம் தேதி அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிமுகவில் இருந்து அமமுக சென்று தற்போது திமுகவின் வேட்பாளராக போட்டியிடுகிறார் செந்தில்பாலாஜி. இதனால் அந்த இரு கட்சிகளையும் எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் உள்ளார். அரவக்குறிச்சியில் வெளியூர் திமுக நிர்வாகிகளையம் தேர்தல் பணியில் அமர்ந்தியுள்ளது திமுக தலைமை. அரியலூர் திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிவசங்கர் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். களநிலவரம் குறித்து அவரை தொடர்பு கொண்டோம்...


எப்படி உள்ளது தொகுதி நிலவரம்?

திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதிமுகவின் பணி செந்தில்பாலாஜி பணிக்கு முன்பு தொய்வடைந்துவிட்டது. செந்தில்பாலாஜியின் திட்டமிடல், அந்த பணிகளை கொண்டுபோய் சேர்க்கிற விதத்திற்கு முன்பு அதிமுகவினரால் ஈடுகொடுக்க முடியவில்லை. அதேபோல வெளியூரில் இருந்து தேர்தல் பணிக்காக வந்துள்ள திமுகவினர் மற்றும் உள்ளூர் திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். இதனை அதிமுகவினராலோ, அமமுகவினராலோ எதிர் கொள்ள முடியவில்லை. 

S. S. Sivasankar aravakurichi by election campaign

நான்கு தொகுதியில் அரவக்குறிச்சியில்தான் எடப்பாடி பழனிசாமி கவனம் செலுத்துகிறார். செந்தில் பாலாஜியை தோற்கடிக்க வேண்டும் என்று கட்சியினரை வேலை வாங்குகிறாராமே?

உண்மைதான். எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் இரண்டு பேருமே செந்தில் பாலாஜி மீது கடும் கோபத்தில் உள்ளனர். செந்தில் பாலாஜி மீது கடும் குற்றச்சாட்டுக்களை வைத்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். ஆனால் அவை எதுவும் பொதுமக்களிடம் எடுபடவில்லை. மேலும் உள்ளூர் அதிமுகவினர் முழு மனதோடு வேலை செய்வதாக தெரியவில்லை. 


அதிமுக வேட்பாளர்தானே நிற்கிறார். எப்படி அதிமுகவினர் சோர்வடைவார்கள்?

செந்தில்பாலாஜி பணி எப்படி இருக்கும் என்று உள்ளூர் அதிமுகவினருக்கு நன்றாகவே தெரியும். அமைச்சராக இருந்தபோதும், எதிர்க்கட்சியில் இருந்தபோதும் செந்தில் பாலாஜி பொதுமக்களிடம் எப்படி நடந்து கொண்டார் என்பது அதிமுகவினருக்கு நன்றாகவே தெரியும். ஆகையால் அவர் கையாளும் தேர்தல் விதம் அதிமுகவினருக்கு தெரியும். இதனால் அவருக்கு ஈடுகொடுக்க முடியாமல் சோர்ந்துவிட்டனர். அதிமுக வேட்பாளர் கடந்த 2011ல் வேட்பாளராக நின்று தோல்வி அடைந்தவர். அதற்கு பிறகு அவர் கட்சி பணிகளில் ஈடுபடாமல் இருந்திருக்கிறார். ஆகையால் கட்சியின் தொண்டர்களுக்கும் அவருக்குமான நெருக்கம் இல்லை. புதியவராக தெரிகிறார். 


வேலூர் போலவே அரவக்குறிச்சியிலும் ரெய்டு போன்ற விஷயங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறதே?

கடந்த முறை செந்தில் பாலாஜி போட்டியிடும்போது அவரை தம்பிதுரை உள்ளிட்டவர்கள் கூட இருந்து எதிர்த்தார்கள். தற்போது எதிரணியில் இருப்பதாலும், மத்திய அரசு துணையோடும் எதிர்க்கிறார்கள். தொகுதியில் எந்த விதிமுறைகளையும் திமுகவினர் மீறவில்லை. விதிமுறைகளை மீறியதாக இதுவரை தேர்தல் ஆணையம் எந்த வழக்குப்பதிவும் செய்யவில்லை. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மிகச் சரியாக போய்க்கொண்டிருக்கிறது. 


செந்தில்பாலாஜி அதிமுகவில் இருந்தார் பின்னர் அமமுக, அதனைத் தொடர்ந்து தற்போது திமுகவில் இருக்கிறார். இதுபற்றி நீங்கள் பிரச்சாரத்தில் இருக்கும்போது பொதுமக்கள் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி திமுகவினர் என்ன நினைக்கிறார்கள்?

தொகுதியில் அது ஒரு குற்றச்சாட்டாகவே இல்லை. திமுகவைப் பொறுத்தவரை நல்ல வேட்பாளர் கிடைத்திருக்கிறார் என்றுதான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிதான் அந்த குற்றச்சாட்டை சொல்லிக்கொண்டிருக்கிறாரே தவிர பொதுமக்களோ, திமுகவினரோ செந்தில்பாலாஜியைப் பற்றி எந்த குறையும் சொல்லவில்லை. 


செந்தில் பாலாஜிக்கு வெற்றி வாய்ப்பு நெருக்கடியாக இருக்கும் என்று சொல்லுகிறார்களே?

ஆரம்பத்தில் அப்படி சொன்னார்கள். கடந்த 25ஆம் தேதியில் இருந்து இங்கு பணியில் உள்ளோம். மெல்ல மெல்ல தொகுதி மக்களின் செல்வாக்கு இவரது பக்கம் உள்ளது என்பதை அதிமுகவினரே வெளிப்படையாக உணருகிறார்கள். அவரது வெற்றிக்கு எந்த நெருக்கடியும் இல்லை. குறைந்தபட்சம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.