Skip to main content

‘தியாகத்தை மதிக்க மறுப்பவர், மறந்து திரிபவர், தமிழராகார், மனிதராகார்!’ -அண்ணாவுக்கு இத்தனை ஆதங்கம் ஏன்?

Published on 15/09/2020 | Edited on 15/09/2020

தமிழ்நாடு என பெயர் மாற்றம் காண விருதுநகரில் உண்ணாவிரதமிருந்து சங்கரலிங்கனார் இறந்துபோனதை அன்றைய காங்கிரஸ் கட்சியினர் உயிர்த்தியாகமாகப் பார்க்கவில்லை. மாறாக, கேலி பேசினார்கள். அன்றைய சென்னை ராஜ்ஜியத்தின் முதலமைச்சர் காமராஜரோ “இப்படியான பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லை. மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிடுகிற சமாசாரம் இது.” என்றார்.
 

 

annduarai letter about tamilnadu name changing

 

12 கோரிக்கைகளில் ஒன்றுகூட அன்றைய காங்கிரஸ் ஆட்சியால் பரிசீலிக்கப்படாத நிலையில் சங்கரலிங்கனார் இறந்தே போனார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்குப் பெயர் மாற்றம் கொண்டுவரும் தீர்மானம் ராஜ்யசபாவில் கொண்டுவரப்பட்டது. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் “தமிழ்நாடு என்று பெயரை மாற்றுவதால் என்ன ஆதாயம்?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்தார் அண்ணாதுரை -
 

''பாராளுமன்றத்தை ஏன் லோக்சபா என்கிறோம். அதில் நமக்கு என்ன ஆதாயம் கிடைத்துவிட்டது. பிரசிடென்டை, ராஷ்டிரபதி என்று அழைக்கிறோமே... அதில் என்ன ஆதாயம் கிடைத்து இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாடு என்று பெயர் வைப்பது அதன் அடையாளத்தை குறிக்கும் செயல். பெயர் மாற்றத்தின் மூலம் உணர்வுபூர்வமான மனநிறைவு கிட்டும் என்பதுதான் உண்மையான ஆதாயம். ஒரு தொன்மையான பெயர் மீட்டு எடுக்கப்பட்டு, மக்கள் மனதில் பதியவைக்கப்படுவதுதான் ஆதாயம். பெயர் மாற்றம் என்ற ஒரு சிறிய சிரமத்தை மேற்கொள்வதற்கு இவ்வளவு சரியீடு போதாதா?'' என்றவர்,   “தமிழ்நாட்டுக்கு 'சென்னை மாநிலம்’ என்ற பெயர்தான் இருக்கும் என்றால், கேரளத்துக்கு திருவனந்தபுரம், ஆந்திரத்துக்கு ஹைதராபாத், குஜராத்துக்கு ஆமதாபாத் என்றெல்லாம் பெயர் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும் என்று எச்சரித்தபோது, அவையில் என்ன நடந்தது தெரியுமா? பலத்த சிரிப்பலை எழுந்தது.  
1956, அக்டோபர் 13-ஆம் தேதி சங்கரலிங்கனார் இறந்துவிட, ஒருவாரம் குமுறலைத் தேக்கி வைத்திருந்த அண்ணா, 21-ஆம் தேதி ‘வீரத்தியாகி’ என்று தலைப்பிட்டு, தன் தம்பிமார்களுக்கு கடிதம் எழுதினார். அதில்,  தனது ஆத்திரத்தைக் கண்ணியத்துடனும் உருக்கத்துடனும்  வெளிப்படுத்தினார். அண்ணா எழுதிய கடிதம் இதோ -  


 

annduarai letter about tamilnadu name changing

 

காங்கிரஸ் கொடி, அந்தக் குடிலின்மீது பறந்துகொண்டிருக்கக் கண்டதும், தம்பி, எனக்குச் சொல்லொணாத வேதனைதான்! உள்ளே உயிர் போகட்டும், கவலையில்லை, உணவு உட்கொள்ளப்போவதில்லை - என்று கூறிக்கொண்டு ஒரு முதியவர் சாகும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறார் - அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டதே, காங்கிரஸ் ஆட்சி, அலங்கோலங்களைப் போக்கிக்கொண்டு, அறவழி நிற்க வேண்டும் என்பதற்காக; அந்தக் குடிலின்மீது, அவர் உயிரைக் குடித்துக்கொண்டிருக்கும் கொடுமையை விளக்கவா காங்கிரஸ் கொடி பறந்துகொண்டிருக்கவேண்டும்!

நடுநிசி - எனவே அங்கு நான்கைந்து பேர் மட்டுமே இருந்தனர் - ஒரு திரை போடப்பட்டிருந்தது, குடில் வாயிலில் அதை நீக்கியபடி உள்ளே சென்று பார்த்தேன் - கயிற்றுக் கட்டிலின்மீது சுருண்டுபடுத்திருந்த உருவம் தெரிந்தது - மங்கலான விளக்கொளியில், எனக்கு அவருடைய முகம் தெளிவாகத் தெரியவில்லை! சில விநாடி உற்றுப்பார்த்த பிறகே தெரியமுடிந்தது.

அமைதி குடிகொண்டிருந்த இடம்; நாங்கள், சத்தம் ஏதும் எழலாகாது, அவருக்குச் சங்கடம் ஏற்படும் என்று எண்ணிக்கொண்டபடி உடன் வந்த தோழரை, எழுப்பாதீர் ஐயா! என்று ஜாடை காட்டிச் சொன்னோம். அவரோ, தியாகத் திருவைத் தொட்டுத் தட்டினார். சங்கரலிங்கனார் கண் திறந்தார் - தூக்கமல்ல, சோர்வினால் செயலற்றுப்போன நிலை.

"ஐயா! அண்ணாத்துரை...'' என்றார் அந்த நண்பர், ஒருவிநாடி அவர் என்னைப் பார்த்தார் - அந்தப் பார்வையின் முழுப்பொருளை "பாவி' நான், அன்று சரியாக உணர்ந்து கொள்ளமுடியவில்லை! செத்துக்கொண்டு இருக்கிறேனடா, செயலறியாதவனே! என்பதல்லவா அந்தப் பார்வையின், பொருள்.

மிகப் பெருங்குணம் வாய்ந்தவர் அந்தப் பெரியவர்.

annduarai letter about tamilnadu name changing

 

"அண்ணாத்துரை...'' என்று அந்த நண்பர் சொன்னதும், என் இரு கரங்களையும் பற்றிக்கொண்டார் - அவருடைய முகத்தருகே என் கரங்கள் - கண்ணீர் கரத்தில் தட்டுப்பட்டது, என் கண்கள் இருண்டுவிடுவது போன்றதோர் நிலை ஏற்பட்டது.

"தலைமாட்டிலே' நான் உட்கார அவர், இடம் செய்துதர சிறிது, நகர்ந்தார் - நான் அமர்ந்தேன் - அவருடைய போர்வை கலைந்தது. எலும்புக்கூடாகத் தெரிந்தார். பழுத்த பழம்! பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டு காலந்தள்ளிக் களித்திடவேண்டிய வயது - உண்ணாவிரதம் மேற்கொண்டு அறுபது நாட்களுக்கு மேலாகிவிட்டன. பச்சைத் தமிழர்தான் பரிபாலனம் செய்கிறார், பாதி உயிர்போய்விட்டது என்று கூறாமற் கூறிக்கொண்டு குமுறிக்கிடக்கிறார், காங்கிரஸ் ஆட்சியைக் காணவேண்டும் என்பதற்காக, கடமை உணர்ச்சியுடன் தொண்டாற்றித் தொண்டு கிழமான அந்தத் தூயவர்.

அவர், உண்ணாவிரதம் மேற்கொள்வதற்கான காரணங் களை விளக்க வெளியிட்ட அறிக்கையையும். அவர் வெளியிட்ட கோரிக்கைகளையும் நான் பார்த்திருக்கிறேன் அதிலே ஒன்றுகூட சொந்த நலன்பற்றியது என்று சுட்டிக்காட்ட, சூட்சித்திறன் மிக்கோரால்கூட, முடியாது. நாடே கேட்கும் கோரிக்கைகள். நல்லோர் எவரும் மறுக்கமுடியாத கோரிக்கைகள் நாடாள்வோரின் கவனத்துக்கு நாள்தவறாமல் பல கட்சிகளும் வைத்த வண்ணம் இருக்கும் கோரிக்கைகள் இவைகளை நிறைவேற்றி வைப்பதாலே, காங்கிரஸ் ஆட்சி அழியாது இந்திய ஐக்கியம் பாழ்படாது. எந்த வகுப்பாருக்கும் கேடுவராது, பெரும்பணச் செலவு ஏற்படாது, சட்டச் சிக்கல் எழாது.

மாற்றுக் கட்சிகளுக்கு மணிமகுடம் கிடைத்து விடாது.

பச்சைத் தமிழரின் பரிபாலனத்துக்குக் கூடக் குந்தகம் ஏதும் நேரிட்டுவிடாது. அவர் கோரிக்கை மொத்தம் 12 - அதிலே 10, மத்திய சர்க்காரைப் பொறுத்தது, இரண்டே இரண்டுதான் மாகாண சர்க்கார் சம்பந்தப்பட்டது என்று திருப்பூரில் முதலமைச்சர் என்ற முறையில் காமராஜர், விளக்கம் அளித்திருக்கிறார்.

முதலமைச்சர் பேசினார், காங்கிரஸ்காரர் பேசவில்லை!

மந்திரிப் பதவி பேசிற்று, மனிதாபிமானம் பேசவில்லை.

விளக்கம்தரப்பட்டது, இதயம் திறக்கப்படவில்லை.

கேட்டது 12 அதில் 10 மத்திய சர்க்கார் சம்பந்தப்பட்டது என்று சட்ட நுணுக்கம் காட்டும் முதலமைச்சர் செய்தது என்ன? சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை டில்லிக்கு அறிவித்தாரா? அறிவித்து ஆவன செய்வதாக, அந்தப் பெரியவருக்குத் தெரிவித்தாரா? தெரிவித்துவிட்டு, என்னால் ஆனதைச் செய்வேன் என்று வாக்களித்தாரா?

இல்லை! இல்லை! இப்போது விளக்கம் அளிக்கிறார்!

நாம் எதைச் சொன்னாலும் கேட்டுத் தீரவேண்டிய பக்குவத்தில் நாடு இருக்கிறது, நமக்கென்ன என்று பேசினாரேயன்றி, இதயத்திலிருந்தா எண்ணம் வெளிவந்தது.

மத்திய சர்க்கார் சம்பந்தப்பட்ட பத்து இருக்கட்டும் - இவர் சம்பந்தப்பட்ட இரண்டு இருக்கிறதே, அதற்கென்ன பதில் அளித்தார்! இப்போது விளக்கம் அளிக்கிறார். இவருடைய விளக்கம் அந்த வீரத்திருவிளக்கு அணைந்தபிறகு வெளிவந்திருக்கிறது. எத்துணை அன்பு ததும்பும் நெஞ்சம், தம்பி, நமது முதலமைச்சருக்கு. எனக்குப் பழக்கமில்லை, உனக்குத் தெரிந்திருக்காது, சங்கரலிங்கனாரை, காமராஜருக்குத் தெரியாதா? இப்போது காமராஜர், காரில் போவார், நடந்து செல்லும் நண்பர்களைக் கண்டு உறவாட இயலாது; முதலமைச்சர் என்ற முறையில் அது முடியாததாகிவிட்டிருக்கக்கூடும்; முன்பெல்லாம், கடைவீதியில் கண்டிருப்பாரே அந்தக் கடமையாற்றிய வீரரை, திடலில் பார்த்திருக்கக் கூடுமே அந்தத் தியாகியை! விருதுநகர்தானே அவர் இருப்பிடம்! ஏன், சங்கரலிங்கனாரின் மாண்பை மறந்திடத் துணிந்தார்? யார் கேட்கமுடியும்? ஆச்சாரியாராக இருந்தால் கேட்கலாம் - கேட்கலாமா - கடாவலாம், சாடலாம், கிளர்ச்சி செய்யலாம், கவிழ்த்தேவிடக் கிளம்பலாம் - காமராஜர் பச்சைத் தமிழராயிற்றே! சங்கரலிங்கனார் உயிர்த்தியாகம் செய்து கொண்டாரே, என்பாய். ஆமாம் - என்ன செய்வது - பரிதாபமாகத்தான் இருக்கிறது - இருந்தாலும்...' தம்பி! இப்படிப் பேசிட முடிகிறதே, இன்று. இப்படிப்பட்ட தமிழகத்தில், எப்படி இருப்பார், சங்கரலிங்கனார். மரணம்! மேல் என்றார்.

 

annduarai letter about tamilnadu name changing

 

"ஐயா! இன்றைய ஆட்சி கருணைக்குக் கட்டுப்படுவதாகக் காணோமே. ஆட்சியை நடத்தும் கட்சி, இது பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லையே. எத்துணை பயங்கரமான பலி கொடுத்தாலும். திருந்தும் என்று தோன்றவில்லையே. இந்த ஆட்சியிலே, உண்ணாவிரதம் இத்துணை உறுதியுடன் இருக்கிறீரே... பலன் இராதே...''

என்று நான் கூறினேன் - தட்டுத் தடுமாறிக்கொண்டுதான். அவரோ அனுவபமிக்கவர், நான் பள்ளிச்சிறுவனாக இருந்த நாட்களிலேயே பரங்கி ஆட்சியை எதிர்த்திடும் பணியில் ஈடுபட்டவர் - அவருக்கு நான், யோசனை கூறுவது என்றால், சரியான முறையாகுமா என்ற அச்சம் என்னைப் பிய்த்தது. இவ்வளவு இன்னலை, இந்தத் தள்ளாத வயதிலே அனுபவிக்கத்தான் வேண்டுமா என்று நான் பதறியதால் கேட்டேன், தம்பி! அவர் சொன்ன பதில், என்னைத் திடுக்கிடவைத்தது அப்போது; இப்போது கண்களைக் கலங்கச் செய்கிறது; இல்லை... நான் செத்துவிடுகிறேன்... பிறகாவது பார்ப்போம்... சண்டாளர்கள்... எவ்வளவோ கண்டித்துக் காட்டுகிறீர்கள்... திருந்துகிறார்களா... என்று அவர் சொன்னார், நெஞ்சு உலர்ந்ததை அறிந்து, பக்கத்தில் ஒரு நாற்காலிப் பலகைமீது இருந்த தண்ணீர்க் குடத்தைப் பார்த்தார். மண்பாண்டம் தம்பி குளிர்ந்த தண்ணீர்! பக்கத்தில் ஒரு முழுங்கு தண்ணீர் மட்டுமே கொள்ளத்தக்க சிறு மண் குடுவை அதிலே தண்ணீர் நிரப்பி, அவர் வாயருகேகொண்டு சென்றேன் - நாகரீக உணர்ச்சியை அந்த நேரத்திலும் காட்டியதைக் கேள் தம்பி - அந்தக் குடுவையை அவர்தம் கரத்தால் வாங்கி, இரண்டு கரண்டி அளவு தண்ணீர் பருகினார்.

பிறகு, அவர், மெள்ளப் பேசலானர் - எனக்கு, அவருக்குக் களைப்பு மேலிட்டுவிடுமே என்று பயமாக இருந்தது; அவரோ, தமக்கு "முடிவு' விரைவிலே இருக்கிறது என்ற எண்ணத்தினாலோ என்னவோ, என்னிடம் பேசவேண்டியதைப் பேசிவிட வேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டவர் போலப் பேசினார்.

எல்லையை வாங்க முடியாதா?
இதில் என்ன கஷ்டம்?
இதய சுத்தியோடு இரண்டு மணி நேரம் ஆந்திர சர்க்காருடன் பேசினால், காரியம் நடக்காதா...?

என்று கேட்டார்... பதில் நானா கூறவேண்டும்... நாடு அல்லவா அந்த நல்லவரின் கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும்.

கவர்னருக்கு ஏன் இலட்ச இலட்சமாகச் சம்பளம்? ஒரு வடநாட்டான்... நீங்கள் கண்டித்தீர்கள்... நியாயம்... ஏன், வீண் செலவு... என்ன பிரமாதமான வேலையாம், கவர்னருக்கு... காலணா செலவில்லாமல், கச்சிதமாக எங்கள் வி.வி. சண்முக நாடார் பார்ப்பாரே, இந்தக் கவர்னர் வேலையை...

என்று, அவர் கூறியபோது, நான் உருகிப்போனேன்.

சங்கரலிங்கனார், காங்கிரஸ்காரர் - என்றாலும், காரிய மாற்றும் ஆற்றல் கொண்டவர் வி.வி. சண்முகம், எனவே அவர் காங்கிரஸ்காரராக இல்லாதுபோயினும் பரவாயில்லை என்று எண்ணிய அரசியல் கண்ணியம் என்னை உருகச் செய்தது.

எனக்கு அவர், பேசப்பேச, நாம் அவருக்கு மெத்தச் சங்கடம் தருகிறோமே, என்ற பயமே மேலிடத் தொடங்கிற்று. அவரோ பேசுவதையும் நிறுத்திக்கொள்ளவில்லை, என் கரங்களையும் விடவில்லை.

இந்த அளவுக்கு அவர் பேசினதாலேதான், நான், அவர் உயிருக்கு ஆபத்து இராது, என்றுகூட எண்ணிக் கொள்ள நேரிட்டது.

காமராஜர் வரப்போகிறார், இரண்டோர் நாட்களில் என்று நான் கேள்விப்பட்டதால், ஒரு தைரியம் கொண்டிருந்தேன் - காமராஜர், கனிவு காட்டுவார், கோரிக்கைகளிலே சிலவற்றையாவது நிறைவேற்றிவைத்து, அந்தக் குணவானுடைய உயிரைக் காப்பாற்றிவிடுவார் என்று எண்ணிக்கொண்டேன்.

 

annduarai letter about tamilnadu name changing

 

நான் கண்டேனா, நாடாள வந்தவர்கள், மனதை இரும்பாக்கிக் கொள்ளவேண்டும் என்பதை, காமராஜா, அதுபோலவே மலைகுலைந்தாலும் மனம் குலையாத தமிழனல்லவா! அதனால், பிணமானாலும் பரவாயில்லை, கோரிக்கைகளுக்கு இணங்குவதாகக் கூறமாட்டேன், கூறினால் "கௌரவம்' என்ன ஆவது, என்று கருதுபவர் போலத் தம் போக்கால் காட்டிக்கொண்டார்; சங்கரலிங்கனார், எழுபது நாட்களுக்கு மேல் உண்ணாவிரதமிருந்து, மூர்ச்சையாகிவிட்ட பிறகு, மதுரை மருத்துவ விடுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மறைந்து போனார், அவருடைய உயிர்தான் போயிற்றே தவிர, முதலமைச்சர் பதவிக்கு உள்ள "கௌரவம்' இருக்கிறதே, அது போகவில்லை! போகவிடவில்லை காமராஜர்! சங்கரலிங்கனார்கள் சாகலாம், பிழைக்கலாம், காமராஜர், முதலமைச்சர் பதவிக்கு உள்ள கௌரவத்தைக் குலைத்துக் கொள்வாரா! உறுதியாக இருந்துவிட்டார்.

உண்மையிலேயே மோசமாகிவிட்டது.

உயிர் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

பேச்சு நின்றுவிட்டது; ஊமை மூச்சுதான் இருக்கிறது.

எந்த விநாடியும் உயிர் போய்விடக்கூடும். மேல் மூச்சு வாங்குகிறது; கண் மூடிவிட்டது; கால் வீக்கம் கண்டுவிட்டது.

தம்பி! ஒற்றர் படையினரும்' உற்ற நண்பர்களும், பதவிக்குப் பிறகு பெற்ற தோழர்களும், நிலைமையைக் காமராஜருக்கு, இதுபோலெல்லாம் எடுத்துச்சொல்லாமலா இருந்திருப்பார்கள். என்ன சொன்னாரோ முதலமைச்சர்!

அப்படியா...
ஆமாம்...
அட, பாவமே...
நிஜமாவா...
போய்விடும்னே சொல்றாங்களா...
பெரிய தொல்லையாப் போச்சே...

என்ற விதமாகத்தான் அவர் கூறியிருப்பார்; வேறு விதமான பேச்சு இருந்திருந்தால்தான், சங்கரலிங்கனாரை நாடு இழந்திருக்காதே!

துணிவுடன், நடப்பது நடக்கட்டும் என்று இருந்து விட்டிருக்கிறார்.

ஏழை அழுத கண்ணீருக்கே பயப்படவேண்டும். நேர்மையான ஆட்சியாளர் என்கிறார்கள். சுடலையின் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. காமராஜர் ஒரு சொட்டுக் கண்ணீர் விடவும் மறுக்கிறார் - வேறு வேலை நிரம்ப!

நான் சாவதனாலாவது...

என்று அந்த உத்தமர் என்னிடம் சொன்னார் - தமிழர் சமுதாயம் இன்று அடைந்துள்ள சீர்கெட்ட நிலைமை உணராது இதுபோலப் பேசுகிறாரே என்று நான் எண்ணி வருந்தினேன்.

பொட்டி சீராமுலு உண்ணாவிரதம் இருந்தார் - ஆந்திரம் அலறித் துடித்தது - சங்கரலிங்கனார் சாகக்கிடக்கிறார் என்று தெரிந்து, தமிழகம் என்ன கோலம் கொண்டிருந்தது - ஒவ்வொரு காங்கிரஸ்காரரையும் உரைத்தும் நிறுத்தும் பார்த்து, எந்தக் "கோஷ்டி' என்று கண்டறியும் காரியத்தில் ஈடுபட்டிருந்தது!

எப்போதும்போல, மாணவ மணிகள்தான், தமிழ் இனம் இன்னமும் தலைதூக்கவே முடியாத நிலைக்குத் தாழ்ந்து அழுந்திவிடவில்லை என்பதைக் காட்டும்விதத்தில், மௌன ஊர்வலம் நடத்தியும், அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றியும், தன் கடமையைச் செய்தது.

மதுரையிலும் வேறு இரண்டோர் இடங்களிலும், தமது கழகம் அனுதாபக் கூட்டம் நடத்திற்று.

மற்றப்படி பார்க்கும்போது, தமிழகம், காமராஜ் கோலத்தில்தான் இருக்கிறது.!

இந்தத் திங்கள் 21-ம் நாள், தமிழகம் தன் கடமையைச் செய்யும் - நாடெங்கும் அனுதாபக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருவகையில் ஆறுதல்தான். ஆனால், தம்பி, அந்த உத்தமர் தம் இன்னுயிரை ஈந்தாரே, நாம் என்ன செய்யப் போகிறோம்.

தமிழ்நாடு என்ற பெயர் பெறுவதற்காவது நாம் முனைந்து நிற்க வேண்டாமா?

ஒப்பற்ற ஒரு உத்தமரின் தியாகம், இதற்குக்கூடவா வழி ஏற்படுத்தாது.

சங்கரலிங்கனாரைத்தான் சாகடித்து விட்டீர்கள், உங்கள் அலட்சியப்போக்கினால். அவருடைய உள்ளத்தில் ததும்பிக்கொண்டிருந்த ஆசையில், ஒன்றே ஒன்றையாவது. தமிழ்நாடு என்ற பெயர் தரும் காரியத்தையாவது செய்யக்கூடாதா என்று காங்கிரஸ் ஆட்சியைக் கேட்கும் அளவுக்காவது தமிழகம் செயல் படலாகாதா?

அந்தோ! அருமைத் தியாகியே! தமிழகத்திலே யன்றோ, உன் அரும்பெரும் தியாகம் கண்டனர்.

தாசர் புத்தி தலைக்கேறிவிட்ட தமிழகமாயிற்றே!

தருக்கரிடம் சிக்கிச் சீரழிந்து கிடக்கும் தமிழக மாயிற்றே!

 

annduarai letter about tamilnadu name changing

 

உண்மைத் தியாகத்தின் உயர்வு அறியாத உலுத்தர்கள் உயர் இடம் பிடித்துக்கொண்டு, அன்பு, அறம், ஆகியவற்றை அழித்தொழிக்கும் நிலைக்கு வந்துற்ற தமிழகமாயிற்றே!

இங்கே அறம் ஏது? வீரம் எங்ஙனம் எழும்? நீதிக்கு வழி ஏது? நிமிர்ந்து நின்று உரிமை பேசுவோர் யார்? என்றெல்லாம் அழுதபடி கேட்கத் தோன்றுகிறது.

அண்ணா! அப்படி ஒரே அடியாகத் தமிழகத்தைத் தாழ்த்திவிடாதே - தமிழகம் தயக்கமடந்திருக்கிறது, உண்மை; ஆனால் உத்தமரின் உயிர்த்தியாகம், தமிழகத்தின் கண்களிலே குருதி பீறீட்டுவரச் செய்திருக்கிறது; கட்சி பேதமின்றி, இந்தக் கட்டத்தில், சங்கரலிங்கனாரின் தியாகத்தை நினைவிற்கொண்டு, தமிழ்நாடு என்ற பெயர் கிடைக்கச் செய்வதற்கான கிளர்ச்சியினைத் துவக்க ஆற்றல் உள்ளவர்கள் அனைவரும் ஒரு அணிவகுப்பாகுவர், அனுதாபக் கூட்டமே, அதற்கான நாளாகும்.

அந்தச் சூள் உரைத்திடும் நாளாக அமையும் - என்று கூறிடும் எண்ணற்ற தம்பிகளைக் காண்கிறேன். அவர்களிடம் எனக்கு நிரம்ப நம்பிக்கையும் உண்டு.

வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு நாம் அனைவரும், நமது நெஞ்சு நெக்குருக வணக்கம் கூறுகிறோம்.

அவர் காட்டிய தியாகப் பாதையில் செல்வதென்பது அனைவருக்கும் சாத்தியமானதல்ல; ஆனால் அவருடைய தியாகத்தை மதிக்க மறுப்பவர், மறந்து திரிபவர், தமிழராகார், மனிதராகார்!

தமிழகம் விடுதலைபெறுவதற்கே இந்த வீரத்தியாகம் பயன்படப் போகிறது.

பிறபிற இடங்களில், இத்தகைய சம்பவம், கலகத்துக்கு பலாத்காரத்துக்கு வழிகோலும் - காண்கிறோம்.

தமிழகத்தின் முறை தனித்தன்மை வாய்ந்தது; அறவழியின்படி உள்ளது.

அறம் வெல்லும், நிச்சயமாக வெல்லும்; அறம் ஆர்ப்பரிக்காது, அத்துமீறிய காரியத்துக்கு மக்களைச் செலுத்தாது அதன் பயணம் துரிதமானதாக இராது - ஆனால் தூய்மையானதாக இருக்கும்.

அறம் நிச்சயமாக வெல்லும் - ஆனால் அது கடுமையான காணிக்கைகளைக் கேட்கும்.

மிகக் கடுமையான காணிக்கை தரப்பட்டாகிவிட்டது; வீரத்தியாகி உயிரை அர்ப்பணித்தார்.

தமிழக விடுதலைக்காக, நாமும் காணிக்கைதரத் தயாராகவேண்டும்; அந்தப் பக்குவம் நமக்கு ஏற்படவேண்டும்; வீரத்தியாகியின் நினைவு, நமக்கு உள்ளத் தூய்மையை, உறுதியை தியாக சுபாவத்தை தருவதாக அமைதல்வேண்டும். தியாகிக்குத் தலைவணங்குவோம்! தாயகத்துக்குப் பணிபுரிவோம்.

அன்பன்,

 


 
21-10-56

 
வெள்ளையனை எதிர்த்து விடுதலை பெற்ற அதே போர்க்குணத்துடன், சுதந்திர இந்தியாவில்  தமிழ் மொழிக்காகப் போராடி உயிரை அர்ப்பணித்த வீரத்தியாகிகளும் நம்மிடையே வாழ்ந்திருக்கின்றனர். ‘தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’ என்று எழுதிய பாரதிதாசன் ‘தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்!’ என்கிறார்.
சங்கரலிங்கனார் உயிர் நீத்த இந்நாளில் தாய்த்தமிழைப் போற்றுவோம்!

 

 

 

 

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை என்றும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது இறுதியானதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.