Skip to main content

ஓ.பி.எஸ். மகனுக்கு உள்ள ஒரே தகுதி... ஜெமிலா கடும் தாக்கு

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெமிலா நக்கீரன் இணையதளத்திடம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவற்றிலிருந்து...
 

அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. பொது சின்னம் அளிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?
 

பொதுச் சின்னம் ஒதுக்கச் சொல்லியிருப்பது எங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. மேலும் எந்தச் சின்னம் என்பதை முடிவு செய்வதை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துவிட்டார்கள். அவர்கள் எந்தச் சின்னம் கொடுத்தாலும் வெற்றி பெறுவோம். 

 

jameela ammk


 

தேர்தல் களத்தில் உங்கள் கட்சி நிலவரம் எப்படி உள்ளது?
 

தேர்தல் களத்தில் எங்கள் கட்சி சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அந்த அளவிற்கு துணிச்சலான வேட்பாளர்கள் தான் எங்களிடம் உள்ளனர். அதிமுகவிலிருந்து மட்டுமல்ல புதிய வாக்காளர்களும் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். உதராணத்திற்கு டி.டி.வி.தினகரன் செல்லும்போது வழி முழுக்க பெரும் வரவேற்பு உள்ளதை பார்க்கலாம். அதனால் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதேபோல் மிக எளிதாக வெற்றி பெற அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.
 

குழந்தையே பிறக்கவில்லை பெயர் வைக்கத்துடிக்கிறார்கள் என்று முதல்வரும், அமமுக என்பது பிரைவேட் லிமிடெட், அது ஒரு கட்சியாகவே நடக்கவில்லை என அமைச்சர் இராஜேந்திர பாலாஜி போன்றோர் பிரச்சாரத்தில் பேசுகிறார்களே?
 

அவர்கள், ‘மோடி எங்கள் டாடி’ என்றெல்லாம் பேசுகிறார்கள். இதுவெல்லாம் ஏற்புடையதாகவா இருக்கிறது? இன்று அவர்கள் முழுவதுமாக பாஜகவின் வாயாக இருக்கிறார்கள். மோடியின் மக்கள் விரோத செயல்களையெல்லாம் மக்கள் நலத்திற்கான விஷயங்கள் என்று பேசுகிறார்கள்.
 

இவர்களின் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள இவர்கள் இப்படி பேசிவருகின்றனர். அவர்கள் தரப்பில் நியாயம் இருக்கிறது என்பதுபோல் மக்களிடம் காட்டவேண்டும் என்பதற்காக இப்படி பேசுகிறார்கள். மற்றப்படி உண்மையாகவே மக்களும், கட்சியில் இருக்கும் தொண்டர்களும் இவர்கள் ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக இருக்கிறார்கள் அதனால் இவர்களை ஏற்கக்கூடாது என்ற முழு மனநிலையோடு இருக்கிறார்கள். 
 

அதிமுகவிலிருந்து 60 முதல் 70 சதவீத நிர்வாகிகள் அமமுகவில் இருக்கிறார்கள். அதேபோல் மற்றக் கட்சிகளில் இருந்தும் என்னைப்போல் அமமுகவில் இணைந்து இருக்கிறார்கள். இவையெல்லாமே டிடிவி தினகரனுக்கு கிடைத்த பெரிய பரிசு போன்றுதான். 
 

ரஜினி உள்பட பலர் வெற்றிடம் இருக்கிறது அதனை நிரப்ப வேண்டும் என்று வெறும் வாய்ச்சொல்லாகத்தான் இருக்கிறார்கள். யாரும் களத்தில் இறங்கவில்லை. அப்படி இருக்கும்போது களத்தில் இவ்வளவு பிரச்சனைகள் கொடுக்கும்போதும்கூட துணிச்சலாக தினகரன் வருகிறார் எனும்போது மக்களும் இதைதான் விரும்புகிறார்கள். ஜெயலலிதாவை மக்கள் ஏன் விரும்பினார்கள் என்றால் எதையும் துணிச்சலோடு அவர்கள் எதிர்கொண்ட விதம். அதேபோன்று தினகரனும் பண்ணும்போது மக்களுக்கு பிடிக்கிறது.
 

அதிமுகவின் கூட்டணி வெற்றி கூட்டணி என்கிறார்களே? அதுகுறித்து உங்கள் பார்வை?
 

அது முழுக்க சந்தர்ப்பவாத கூட்டணி. பாமக தனது தனித்துவத்தை இழந்துவிட்டது. காரணம் 2016 காலகட்டத்தில் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என விளம்பரம் செய்து, அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆகியோர் திராவிட கட்சிகள்தான் தமிழகத்தையே குட்டிச்சுவராக்கிவிட்டனர் என்று மிகவும் மோசமான, பகிரங்கமான குற்றச்சாட்டுகளை சொன்னதோடு, இழிவான சொற்களையும் பயன்படுத்தினர். இன்று திராவிட கட்சியான அதிமுகவிடம் கூட்டணி வைத்துள்ளது பாமக.


மேலும் அதிமுகவையும் மறைந்த ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்த பாமகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. இது ஜெயலலிதாவுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். வெற்றி பெறவேண்டும் என்று கூட்டணி அமைத்ததை யாரும் இரசிக்கவில்லை. அந்த இரு கட்சிக்குள் இருப்பவர்களும்கூட இதனை இரசிக்கவில்லை. சிலர் இதனை வெளிப்படையாக சொல்லிவிட்டனர். இன்னும் சிலரால் இதனை சொல்லமுடியவில்லை.

 

admk-pmk


 

அப்படியென்றால் பாமக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிமுகவிற்கு வேலை செய்வார்களா? செய்ய மாட்டார்களா?
 

நிச்சயமாக செய்யமாட்டார்கள். இப்போதே மேடைகளில் அங்கங்கே பிரச்சனைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் கூட்டணி அமைத்துவிட்டால் தொண்டர்களும், நிர்வாகிகளும் வேலை செய்துவிடுவார்கள் என்றும் மட்டும் பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில் களநிலவரம் அதுகிடையாது.


எப்போதும் உணர்வுபூர்வமாக இருப்பவர்கள் தொண்டர்கள்தான். அப்படிப்பட்டவர்கள் ஜெயலலிதாவை இழிவாகப்பேசியவர்களை கூட்டணியில் சேர்த்திருப்பதை  ஏற்கமாட்டார்கள். இவர்கள் வேண்டுமானால் பதவிக்காகவும் வெற்றிக்காகவும் அதையெல்லாம் மறந்திருக்கலாம். உணர்வுபூர்வமாக இருந்திருந்தால் இவர்களே கூட்டணி அமைத்திருக்கமாட்டார்கள்.

 

Ravindranath Kumar - Thanga Tamil Selvan


 

வாரிசு அரசியல் கூடாது என்று சட்டம் இருக்கிறதா? என்று பன்னீர்செல்வம் தனது மகனை தேனி வேட்பாளராக நிறுத்தும்போது கேட்கிறார். மேலும், ‘நிச்சயமாக தங்கத்தமிழ்செல்வனை தோற்கடிப்பேன் அதற்கான வியூகம் என்னிடம் உள்ளது’ என்று பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் சொல்லுகிறார். உண்மையில் அமமுகவின் கள நிலவரம் தேனியில் எப்படி இருக்கிறது?

 

தேனி தொகுதியின் அதிமுக வேட்பாளருக்கு பன்னீர்செல்வத்தின் மகன் எனும் தகுதியைத் தவிர வேறு எந்த தகுதியும் கிடையாது. அதனால் நிச்சயம் தங்கத்தமிழ்செல்வன் வெற்றிபெறுவார். தங்கத்தமிழ்செல்வன் அதே தொகுதியில் இருந்தவர். ஜெயலலிதாவிற்காக தொகுதியைவிட்டுக்கொடுத்துவிட்டு வந்தவர். இப்போதும் தனது பதவியை தூக்கி எறிந்துவிட்டு வந்திருக்கிறார் என்றால் அவ்வளவு கொள்கை பிடிப்புடன் இருப்பவர். அதனால் மக்கள் அவருக்கான அங்கீகாரத்தை கொடுப்பார்கள்.

 

பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு விசாரணை கமிஷன் அமைத்து உண்மையை வெளியே கொண்டுவருவேன் என்று தெரிவித்தார். ஆனால் இன்று அமைக்கப்பட்டிருக்கும் விசாரணை கமிஷனுக்குக்கூட போகமுடியவில்லை. அப்படியென்றால் அவரிடம் என்ன உணமை இருக்கிறது?. இது அனைத்து மக்களுக்கும் தெரியும். தனது முதல்வர் பதவி போனது என்பதுதான் அவருக்கு கஷ்டமாக இருந்ததே தவிர, வேறு எதுவும் கிடையாது. துணை முதல்வர் பதவி கொடுத்ததும் அவர் அனைத்தையும் மறந்துவிட்டார்.

 

அமமுக தனியாக நிற்க என்ன காரணம், வாக்கு வங்கியை காட்ட வேண்டும் என்பதுதான் குறிக்கோளா?
 

கிடையாது. தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் எந்தவித நன்மையும் நடைபெறப்போவதில்லை என்பது முதல் காரணம். காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுக்கும் மாநிலத்தின் மீது அக்கறை கிடையாது. அதைத் தவிர்த்து மாநில கட்சிகளான பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் எல்லாம் மிகவும் மோசமாக அதிமுகவை விமர்சித்த கட்சிகள். இப்படி விமர்சித்தவர்களுடன் எப்படி கூட்டணி அமைக்க முடியும்?. அப்படி அமைத்திருந்தால் அது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியாகத்தான் இருந்திருக்கும். அது மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டணியாக இருக்காது. 
 

ஆர்.கே.நகர் தேர்தலில் ஒரு புறம் திமுக பல கட்சிகளை இணைத்து கூட்டணி வைத்து போட்டியிட்டது. அதிமுகவும் கூட்டணி வைத்து போட்டியிட்டது. அப்படி இருக்கும்போது, எஸ்.டி.பி.ஐ. கட்சி மட்டும்தான் அப்போது ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கி வெற்றிக்காக உழைத்தார்கள். அவர்களுக்கு நன்றியுடனும் அப்போதே எங்கள் அணியுடன் கொள்கையுடன் ஒத்துப்போய் வேலை செய்ததாலும் அவர்களுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளது அமமுக. 

 

 

 

 

 

Next Story

“பெரிய இயக்குநர்கள் நேரடியாக அணுகுவார்கள்” - சரண்யா ரவிச்சந்திரன் பேட்டி!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 Saranya Ravichandran | Indian2 | Kamal Haasan | Shankar |

தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரண்யா ரவிச்சந்திரன் அண்மையில் வெளியான  இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இந்நிலையில்  நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக அவரை சந்தித்தபோது, அவரின் சினிமா வாழ்க்கை பற்றிய சுவாரசியமான தகவல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். 

தொடக்கத்தில் வந்த பட வாய்ப்புகள் அணுகுமுறைகள் பற்றியும், தற்போது  வரும் பட வாய்ப்புகளின் அணுகுமுறையிலும் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளது என்ற கேள்வி குறித்து அவர் பதிலளிக்கையில் "மரியாதையில்தான் எல்லாம் உள்ளது, அவர்கள் மதிக்கவில்லை என்பதால்தான் நமக்கு திரைத்துறையில் நல்ல இடத்திற்குப் போக வேண்டும் என்ற வெறி வரும். அப்படிதான் அவர்கள் நம்மை புஷ் பண்ணிக் கொண்டு செல்வார்கள். சில சமயங்களில் இயக்குநர் அவரே வந்து அணுகாமல், ஏன்  உதவியாளரை அனுப்புகிறார் என்று தோன்றும், இயக்குநருக்குப் பல வழிகளில் அழுத்தம் இருக்கும், அடுத்த காட்சி குறித்த சிந்திப்பார்கள், ஆனால் சில பெரிய இயக்குநர் அவர்களாகவே வந்து நம்மிடம் அணுகுவார்கள், அது சில இயக்குநர்களின் ஸ்டைலாக இருக்கும் 

நான் முதல் படத்தில் நடிக்கும்போது படப்பிடிப்பில் என்னிடம் இயக்குநர் பேசவே இல்லை. நானே அவரை அழைத்து என்னுடைய சீன் எப்போது வரும், நான் இங்குதான் உட்கார்ந்திருப்பேன் என்னைத் தேடாதீர்கள் என்று சொல்லுவேன், ஆனால் நான் நடித்து முடித்தபோது  படப்பிடிப்பின் இடைவேளையில் அவரே என்னிடம் வந்து சாப்டிங்களா? என்றெல்லாம் பேசினார். நம்ம வேலையைச் சரியாக செய்யும்போது அவர்களே மரியாதை தருவார்கள்" என்று கூறினார்.

Next Story

“என்கவுண்டர் சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” - டிடிவி தினகரன்!

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
TTV Dhinakaran says chennai thiruvenkadam incident raises doubts

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் சமூகவலைத்தளப்பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விசாரணைக் கைதி திருவேங்கடம் என்பவர், சென்னை மாதவரம் அருகே தப்பியோட முயன்ற போது காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல எனவும், உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என அவரது குடும்பத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், தமிழகக் காவல்துறை அரங்கேற்றியிருக்கும் என்கவுண்டர் சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கொலை நடந்த அன்றே தாமாக முன்வந்து காவல்துறையினரிடம் சரணடைந்த விசாரணைக் கைதி திருவேங்கடம், தப்பியோட முயன்றதன் காரணமாகவே சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி முன்பின் முரணாக அமைந்துள்ளது. எனவே, விசாரணைக் கைதி திருவேங்கடம் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்வதோடு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.