தனது சொந்த நாடான ஜெர்மனியில் தனது சொந்த மதமான யூத மதத்தினர் கொன்று ஒழிக்கப்படும் அபாயம் இருப்பதை, ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லியிருக்கிறார் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.
தனது சகோதரி மஜாவுக்கு 1922 ஆம் ஆண்டு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அனுப்புனர் முகவரி ஏதும் இல்லை. தனது நண்பரான ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் வால்தெர் ராதெனாவ் என்பவர் யூதர் என்பதால் கொல்லப்பட்டார். அடுத்து ஐன்ஸ்டீன் கொல்லப்படுவார் என்று போலீஸ் எச்சரித்தது. இதையடுத்து அவர் தலைமறைவானார்.
பெர்லினிலிருந்து வடக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு இடத்துக்கு மாறினார். அனேகமாக ஜெர்மனியின் துறைமுக நகரான கீல் நகரில் இருந்தபோது இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். அங்கிருந்துதான் ஐன்ஸ்டீன் தனது ஆசிய பயணத்தை தொடங்கினார்.
“நான் எங்கிருக்கிறேன் என்று யாருக்கும் தெரியாது. நான் காணாமல் போனதாகக்கூட நம்புவார்கள். ஆனால், நான் நன்றாக இருக்கிறேன். ஜெர்மானியர்களில் யூத எதிர்ப்பாளர்கள் வளர்ச்சி பெறுகிறார்கள். யூதர்களுக்கு பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் இது மோசமான நேரம். எனவே, ஒரு அரையாண்டுக்கு எல்லாவற்றையும் துறந்து வெளியேறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று ஐன்ஸ்டீன் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.
அவர் வெளிநாடுகளில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த சமயத்தில்தான், ஒளிமின் விளைவுக்கான நோபல் பரிசு அவருக்கு அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் ஜெர்மனிக்கு திரும்பினார். அதன்பின்னர், 1930களில் நாஜிக்கட்சி ஆட்சிக்கு வந்து யூதர்களை அரசுப் பதவிகளில் இருந்தும், ஆசிரியர் பணிகளில் இருந்தும் விலக்கிவைக்க சட்டங்களை இயற்றியது. இதையடுத்து, ஜெர்மனியைவிட்டு அமெரிக்காவில் குடியேறினார் ஐன்ஸ்டீன்.
இப்போது, ஐன்ஸ்டீன் எழுதிய அந்த கடிதம் இந்திய ரூபாய் மதிப்பில் 36 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்போயிருக்கிறது.