Skip to main content

உனக்கான உணவை நீயே உண்டாக்கு! வேளாண் கல்வியில் புதுமை படைக்கும் சேது குமணன்...

Published on 01/06/2020 | Edited on 01/06/2020
sivagangai karaikudi


விளை நிலங்கள் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். அனைவரும் விவசாயம் செய்ய முன்வர வேண்டும். உணவு தேவையில் நாம் தன்னிறைவை பெற வேண்டும் என்பதற்காக சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே 250 ஏக்கரில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார் சேது குமணன்.


தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் இங்கு கல்வி கற்று வருகின்றனர். மாணவர்களை காட்டிலும், மாணவிகளின் எண்ணிக்கையே அதிகம்.

ஊரடங்கு காலத்தில் ஒருநாள் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தோம். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரை தாங்கி நிற்கும் அந்த வளாகம் முழுமையும் குளு குளு தென்றல் காற்று வீசியது. சில ஆண்டுகளுக்கு முன்பு கருவேல காடாக இருந்த அந்த பகுதி, இப்போது வேம்பு, பூவரசு, அத்தி, வாகை என வகை வகையான மரங்களால் நிறைந்து நிற்கிறது.

ஆடு, கோழி, புறா, பன்றி, மீன் என அனைத்திற்கும் கல்லூரி வளாகத்தில் தனித்தனி பண்ணைகள் உள்ளன. இதுதவிர பூச்சியியல் துறை ஆய்வகம், மண் அறிவியல் ஆய்வகங்களும் இடம்பிடித்திருக்கிறது. மண் புழு உரம் தயாரிப்பது, பஞ்ச காவியம் தயாரிப்பது எப்படி, அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்பதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விரிவாக விளக்குகின்றனர்.

 

 


இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் கடலை, எள், கத்தரி செடிகள் தலையாட்டி நிற்கின்றன. வெண்டைக்காய் பறிப்பது, பாகற்காய், புடலங்காய் செடிகளுக்கு கவாத்து செய்வது என மாணவர்கள் பரபரப்பாக இயங்குகின்றனர். இன்னொரு பக்கம் நெல் நடவு பணிகளும் நடைபெற்று வருகின்றன. காக்கி சீருடையில் இருக்கும் மாணவிகள் வரிசை மாறாமல் நடவு நட வேண்டும் என்பதற்காக இருபுறமும் கயிறு கட்டி ஒரே சேர நடவு நட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் பேச்சு கொடுத்தோம், “நாளைக்கு நாம் சாப்பிட நல்ல சாப்பாடு வேண்டும். அதற்கு இயற்கை முறையில் அரிசி, காய்கறியை உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கான வழிமுறைகள் இங்கே கற்றுத்தரப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஆடு, மாடு, பன்றி போன்ற கால்நடை வளர்ப்பின் மூலமும் லாபம் ஈட்டுவது, மூங்கில் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்குவது, தேனீ வளர்ப்பு மூலம் தேன் சேகரிப்பு போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல.. எங்களுக்கான உணவை நாங்களே தயார் செய்து கொள்ள வேண்டும் என்பது கல்லூரி எங்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம்” என்றனர்.

 


யார் இந்த சேது குமணன்?

பல கோடி ரூபாய் முதலீடு செய்து வேளாண்துறைக்கு என்று கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தும் சேதுகுமணன். சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கத்தை சேர்ந்தவர். இவர் சென்னையில் மெட்ரிக்குலேசன் பள்ளி, மகளிர் கலை அறிவியல் கல்லூரியையும், சொந்த ஊரான கண்டரமாணிக்கம் கிராமத்தில் தொழில் பயிற்சி கல்லூரியும் நடத்தி வருகிறார். அவரிடமும் பேசினோம்.

 

nakkheeran app




“அப்பா தமிழ் வாத்தியார். சின்ன வயசில் சினிமா மேல் அதிக ஆர்வம். படம் எடுக்கும் எண்ணத்தில் சென்னைக்கு சென்றேன். ஆனால் சினிமாவில் நிலைப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பது ஆரம்பத்திலேயே புரிந்துவிட்டது. பின்னர் ஒரு பேக்டரியில் வேலை பார்த்தேன், பெட்டிக்கடை நடத்தினேன், கல் உடைத்தேன் அவ்வளவு ஏன் ஒயின்ஷாப்பிலும் வேலை பார்த்தேன்”  என்று சின்ன இடைவெளி விட்டு தொடர்ந்தார். 1988-ல் ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்தேன். அந்த பள்ளியின் தாளாளர் உதவியுடன் தனியே ஒரு பள்ளி ஆரம்பித்தேன். முதல் ஆண்டில் 8 பிள்ளைகள் சேர்ந்தனர். அந்த 8 பேருக்கும் ஆயா, ஆசிரியர், வேன் டிரைவர் எல்லாமே நான்தான். அதன் பிறகு படிப்படியாக மாணவர் சேர்க்கை அதிகரித்தது. இப்போது பல்கி பெருகி 10 ஆயிரம் மாணவர்களாக உயர்ந்திருக்கிறது“ என்றவர் தொடர்ந்து,

“மார்க் மட்டுமே மாணவர்களுக்கு முக்கியம் அல்ல என்பதை பெற்றோர் உணர வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித் திறமை இருக்கும். அதை ஊக்குவித்தால் அவன் சிறந்த மாணவனாக மாறலாம். அதை விடுத்து இன்ஜினியராகனும், டாக்டராகனும்னு உங்கள் விருப்பத்தை நீங்கள் பிள்ளைகளிடம் திணிக்காதீர்கள். நல்ல நிலம் பார்த்து நல்ல விதை விதைத்தால் நல்ல பலனை பெற முடியும்” என்கிறார்.

 ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து கொள்ள வேண்டிய  ஆத்மார்த்தமான வார்த்தை இது!

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக தேர்தல் அறிக்கை; ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று (14.04.2024) வெளியிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பாஜக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில், குழாய் மூலம் எரிவாயு எப்படிக் கொண்டு செல்ல முடியும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையான செயல் ஆகும். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு ஆகும். அதாவது 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52 ஆயிரம் வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளைக் காட்ட முடியுமா?. 

 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

நாடாளுமன்றத்தில் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அந்த சட்டம் இப்போதைக்கு அமலுக்கு வராது. பெண்களுக்கான 33 சதவித இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய ரயில் விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல. பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார். 

Next Story

காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீர் ரத்து!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Amit Shah's road show suddenly canceled in Karaikudi

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (12.04.2024) தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அமித்ஷாவின் பயணத்திட்டத்தின் படி நாளை சிவகங்கை மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (13.04.2024) கன்னியாகுமரியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதனையடுத்து அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் தென்காசியில் நடைபெறும் வாகனப் பேரணியில் கலந்துகொள்கிறார். அதே சமயம் நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார்.

இதன்படி சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித்ஷா நாளை ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்த உள்ளார் என பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதும், சென்னையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நடத்திய ரோடு ஷோவுக்கு போதிய வரவேற்பு இல்லை என்ற விமர்சனமும் மக்கள் மத்தியில் எழுந்தது கவனிக்கத்தக்கது.