தேர்தல் என்றாலே பணமும் அதை கொண்டுசெல்லும் கண்டெய்னரும் செய்திகளாகிவிடும். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, பழனியப்பன் ஆகிய ஐவரிடம் கைப்பற்றப்பட்ட பணம் 20 கண்டெய்னர் லாரிகளில் சிறுதாவூர் பங்களாவில் இருந்து தேர்தலுக்காக கொண்டு செல்லப்படுகிறது என 29 மார்ச் 2016ம் வருடம் அன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நலக் கூட்டணி சார்பில் குற்றம் சாட்டினார். உடனே நக்கீரன் களமிறங்கி சிறுதாவூர் பங்களாவில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னரை படம் எடுத்து வெளியிட்டது.
நக்கீரன் செய்தி வெளியான இரண்டு மாதம் கழித்து கரூர் மாவட்டத்தில் பெருமாநல்லூர், குனத்தூர் பைபாஸில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் மூன்று கண்டெய்னர் லாரிகளையும் அதனை பின் தொடர்ந்து வந்த மூன்று கார்களையும் பத்து கிலோ மீட்டர் தூரம் நீண்ட சேசிங்குக்குப் பிறகு செங்கப்பள்ளி என்ற இடத்தில் மடக்கினர். அந்த கார்களில் இருந்தவர்கள் தங்களை ஆந்திர மாநில போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். ஏன் எங்களைக் கண்டதும் ஓடினீர்கள் என்று போலீசார் கேட்டதற்கு, உங்களை வழிப்பறி கொள்ளையர்கள் என நினைத்து பயந்து விட்டோம் என பதில் சொன்னார்கள். மூன்று கண்டெய்னர்களையும் திறந்து பார்த்தபோது கட்டுக்கட்டாக பணம். பணத்தை முழுவதும் எண்ணியபோது 570 கோடி இருந்தது. இது யாருடைய பணம் என்பதற்கு அந்த லாரியை ஓட்டி வந்தவர் களிடமும் காவலுக்கு வந்ததாகச் சொல்லக்கூடியர்களிடமும் சரியான பதில் இல்லை.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அந்த கண்டெய்னர் லாரிகளில் இருந்த பணம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு சொந்தமானது. அவை கோயம்புத்தூரில் இருந்து விசாகப்பட்டிணத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்கு முறையான ஆவணங்கள் இல்லை. என்றாலும் அந்தப் பணம் வங்கிப் பணம் என அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மூலம் வங்கிக்கு அளிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் மத்தியில் இருந்த மோடி அரசு அப்பொழுது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் பணத்தைக் காப்பாற்ற வேஷம் போட்டது என சொல்லப்பட்டது.
2021 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இந்தச் சூழலிலும் கண்டெய்னர்கள் நகரத் தொடங்கிவிட்டன. சென்னையில் அமைச்சர் வேலுமணியின் வீடு அமைந்துள்ள கிரீன்வேஸ் சாலையின் பக்கத்தில், போட் கிளப் சாலையில் உள்ள அதிரடிப்படை கமாண்டோக்களின் தலைமையகமான 'மருதம்' காம்ப்ளக்ஸ் அருகில் இருந்து தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்படுகிறது. மருதம் காம்ப்ளஸில் முதல்வருக்கு பாதுகாப்பு அளிக்கும் வாகனங்கள் மற்றும் கமாண்டோக்கள், பயிற்சி பெறும் இடத்திற்குப் பக்கத்தில் இரண்டு மூடிய ஷெட்டுகள் இருக்கிறது. கரூர் அன்புநாதன் 2016ல் பணம் எண்ணும் மிஷினுடன் தேர்தலுக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் பணத்தைக் கொண்டு போனார். அதை வந்திதா பாண்டே என்கிற போலீஸ் அதிகாரி கையும் களவுமாகப் பிடித்தார். அதுபோலவே பணம் எண்ணும் மிஷினுடன் கரூர் அன்புநாதன் தினமும் இங்க வந்து பணத்தை கண்டெய்னர்களில் ஏற்றிக்கொண்டிருக்கிறார்.
தினமும் இரண்டு லாரிகள் புறப்பட்டுச் செல்கின்றன என நமக்கு அங்கிருக்கும் அதிரடிப்படை வீரர்களே தகவல் அளித்தனர். நாம் சென்று பார்த்தோம். அந்த வளாகத்தில் லாரிகள் நிற்கக் கூடிய அளவிற்கு இரண்டு பெரிய ஷெட்டுகள் முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் நிற்க வைக்கப்படும் இடத்திலேயே இருந்தது. நாம் அந்த ஷெட்டுகளை படம் எடுக்க முயன்றபோது, கமாண்டோ படை வீரர்கள் ஓடிவந்து நம்மை வழிமறித்தனர். ஒரு கட்டத்தில் நம்மைக் கைது செய்வதாகக் கூறினார்கள். நாம், கமாண்டோ படை அலுவலகத்தை மட்டும்தான் படம் எடுத்தோம் என விளக்கினோம். அதன்பிறகு நம்மை விடுவித்தார்கள். மருதம் காம்ப்ளக்ஸூக்கு மொத்தம் 3 வழிகள் இருக்கிறது. அந்த 3 வழிகளையும் படம் எடுத்துவிட்டு வந்தோம். அந்த கமாண்டோ அலுவலகம் உச்சபட்ச பாதுகாப்புடன் இருந்தது. அதன் வழியே யார் நடந்து போனாலும் வயர்லஸ் உதவி உடன் போலீசார் ஓடிவந்து கேள்வி கேட்டபிறகுதான் அனுப்புகிறார்கள்.
தேர்தல் வியூகங்கள் குறித்து அ.தி.மு.க.வினரிடம் நாம் பேசியபோது, "இந்த முறை எடப்பாடியின் கணக்கு என்பது, மூன்று கோடி வாக்காளர்களுக்கு தலா 2000 ரூபாய் என்பதாகும். இதுவே ஆறாயிரம் கோடி ரூபாய் ஆகிறது. இதுதவிர தேர்தல் செலவுகளுக்கு ஒரு தொகுதிக்கு 50 கோடி ரூபாய் 234 தொகுதிக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் என மொத்தம் கிட்டதட்ட 20 ஆயிரம் கோடி ரூபாயை தேர்தல் செலவுக்கு ஒதுக்கி வைத்துவிட்டார்.
தங்கமணி, வேலுமணி ஆகியோர் கள்ளக் குறிச்சி மாவடடத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை குமரகுரு மூலமாக வடமாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை கவனித்துக் கொள்கிறார்கள். டெல்டா மாவட்டங்களுக்கான பொறுப்பை அமைச்சர் காமராஜ் ஏற்றுள்ளார். தென்மாவட்டங்களுக்கு தளவாய் சுந்தரம் என பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார் எடப்பாடி. மணியான இரண்டு அமைச்சர்கள்தான் வைட்டமின் "ப' சப்ளையர்கள். மருதம் காம்ப்ளக்ஸில் ஏகப்பட்ட எச்சரிக்கை உணர்வுடன் இந்த விசயம் வெளியே லீக் ஆகிவிடக்கூடாது என அதிகமான போலீசாரை போட்டு கண்காணிக்கிறார்கள் என்கிறார்கள் அதிமுகவினர்.
இதுபற்றி நம்மிடம் பேசும் அரசு அதிகாரிகள், "நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சித்துறை, மின்சாரத்துறை ஆகிய துறைகளில் உள்ள ஒப்பந்தக்காரர்களிடம் வேக வேகமாகப் பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆறு மாதங்களில் வரக்கூடிய டெண்டர்களுக்கான தொகையை இப்பொழுதே வசூலிக்க எடப்பாடி பழனிசாமி இந்தத் துறையில் உள்ள அதிகாரி களுக்கும், அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் மற்ற துறைகளில் எவ்வளவு காசு வரும் எனக் கணக்கிட்டு அதனையும் அமைச்சர்களிடம் இருந்து முன்கூட்டியே வசூலிக்க எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இப்படி சேரும் பணம் எல்லாம்தான் கண்டெய்னர்கள் வழியாக தமிழகம் முழுவதும் செல்கிறது. அதுமட்டுமில்லாமல் மத்திய அரசுக்கு மாதம் மாதம் எடப்பாடி அரசு கப்பம் கட்டுவதற்கு கண்டெய்னர் லாரிகள் மூலமாவே வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
வட மாநிலங்களுக்கு கப்பம் கட்டும் பணம் கொண்டு செல்லப்படுவது வழக்கமாக நடைபெறும் ஒன்று தான். ஆனால், இப்பேபொழுது தேர்தல் பணமும் சேர்ந்து போவதால் லாரிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது'' என்கிறார்கள் விவரம் அறிந்த அதிகாரிகள்.
இதற்கு ஆதாரமாக ஒரு சம்பவத்தையும் சுட்டிக்காட்டுகிறார்கள். கரோனா காலத்தில் எடப்பாடி மகன் மிதுன், கொங்கு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபருடன் தனி விமானத்தில் மொசாம்பிக் நாட்டிற்கும், இந்தோனேஷியாவுக்கும் சென்று வந்தார். அவர் சென்ற தனி விமானத்தில் இருந்த வெயிட்டான அமவுண்ட்கூட, மருதம் கமாண்டோ மூலம் கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தனி விமானத்தில் ஏற்றப்பட்டது என்கிறார்கள் விசயம் அறிந்த அதிகாரிகள்.