Skip to main content

அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டம்; தனித்தனியாக திட்டமிடும் இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா

Published on 11/10/2022 | Edited on 11/10/2022

 

A.D.M.K. Golden Jubilee!

 

அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டு நிறைவு விழாவை எடப்பாடி, பன்னீர், சசிகலா மூவரும் மூன்று திசைகளில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். இந்த கொண்டாட்டங்கள் மூலம் தங்களின் வலிமையை அரசியலில் நிரூபிக்கவும் நிலைநிறுத்தவும் பல்வேறு காய்களை நகர்த்தி வருகின்றனர். தொண்டர்கள் தங்கள் பக்கம்தான் இருப்பதைக் காட்ட மூன்று தரப்புமே வரிந்து கட்டுவதையறிந்து மூன்று தரப்பிலும் ரவுண்ட் அடித்தோம்.

 

எடப்பாடியின் திட்டம் நிறைவேறுமா?


அ.தி.மு.க.வின் பிறந்தநாளை (அக்டோபர் 17) விமர்சையாகக் கொண்டாடுவது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களிடம் சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி விவாதித்தார். அப்போது, ‘அ.தி.மு.க. தலைமையகத்தில் கட்சிக் கொடியேற்றி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி, மூத்த நிர்வாகிகளுடன் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினால் அன்றைய தினம் நம்மை நோக்கித்தான் மீடியாக்களின் பார்வை முழுமையாக இருக்கும்’ என சொல்லியிருக்கிறார்கள் மூத்த தலைவர்கள். ஆனால் எடப்பாடியின் யோசனை வேறாக இருந்துள்ளது.

 

A.D.M.K. Golden Jubilee!
கோப்புப் படம்

 

இதுகுறித்து அவருக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசியபோது, "கட்சித் தலைமையகத்தில் கொண்டாடுவது வழக்கமானதாகத்தானே இருக்கும்? அதற்கு மாறாக, தலைவரின் (எம்.ஜி.ஆர்.) சத்யா ஸ்டூடியோவில் இயங்கும் எம்.ஜி.ஆர். - ஜானகி அம்மாள் கல்லூரி வளாகத்தில் தொண்டர்கள் புடை சூழ பொன்விழா ஆண்டை கொண்டாடினால் மிக விமர்சையாக இருக்குமே என ஒரு யோசனையைத் தெரிவித்தார்.

 

ஆயிரக்கணக்கான தொண்டர்களைத் திரட்டி அவர்கள் மத்தியில் அ.தி.மு.க. கொடியேற்றி, சிறப்புரையாற்றினால் கட்சியின் பொதுக்குழு மட்டுமல்ல; கட்சித் தொண்டர்களும் என் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதை ஓ.பி.எஸ்., சசிகலா மற்றும் பா.ஜ.க. தலைமைக்கு காட்டலாம் என்பதே எடப்பாடியின் திட்டம். மேலும், சசிகலாவும் ஓ.பி.எஸ்.ஸும் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தில் கொண்டாடத் திட்டமிடுவார்கள் என்பதால், எம்.ஜி.ஆர். நிறுவிய சத்யா ஸ்டூடியோ வளாகத்தில் நாம் கொண்டாடினால் சென்டிமெண்டாக நல்லாயிருக்கும் என எடப்பாடி யோசித்தார்.

 

அவரின் இந்த யோசனையை பலரும் ஏற்றார்கள். உடனே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம், ஜானகி அம்மாள் கல்லூரி வளாகத்தில் அ.தி.மு.க. பிறந்தநாளை கொண்டாடுவதற்கான அனுமதியை அந்த கல்லூரியை நிர்வகிக்கும் குமார் ராஜேந்திரனிடம் (எம்.ஜி.ஆர். குடும்பத்தினர்) கேட்குமாறு சொல்லியிருக்கிறார் எடப்பாடி. குமார் ராஜேந்திரனிடம் இதுகுறித்து கடம்பூர் ராஜு விவாதிக்க, பள்ளி-கல்லூரி வளாகங்களில் அரசியல் கட்சிகளின் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என அரசாணை இருப்பதை அவரிடம் சுட்டிக் காட்டியிருக்கிறார் குமார் ராஜேந்திரன். இதனை எதிர்பார்க்காத கடம்பூர் ராஜு, குமார் ராஜேந்திரன் கூறியதை எடப்பாடியிடம் சொல்ல, எடப்பாடிக்கு மூட் அவுட். அதேசமயம், ஜானகி அம்மாள் கல்லூரி வளாகத்தில் பொன்விழாவைக் கொண்டாடியே ஆக வேண்டும் என நினைக்கிறார் எடப்பாடி. இது சாத்தியமாகுமா? எனத் தெரியவில்லை” என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

படை திரட்டும் சசிகலா! பம்மும் ஆதரவாளர்கள்!


அ.தி.மு.க.வின் பொன்விழாவைக் கொண்டாடுவது குறித்து தனது ஆதரவாளர்களை சென்னையிலுள்ள தனது முகாம் அலுவலக வீட்டிற்கு கடந்த வாரம் அழைத்திருந்தார் சசிகலா. அவர்களுடன் நடத்திய ஆலோசனையில், "தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அது போல வருகிற தை பிறக்கும்போது அ.தி.மு.க. நம் கைக்கு வரும். அதற்கு முன்னோட்டமாக, கட்சியின் பொன் விழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

 

A.D.M.K. Golden Jubilee!
கோப்புப் படம்

 

அன்றைய தினம் தலைவரின் (எம்.ஜி.ஆர்.) ராமாபுரம் இல்லத்துக்கு செல்கிறேன். அங்கு தலைவர் பெயரிலுள்ள பள்ளியின் ஆடிட்டோரியத்தில் கட்சிக் கொடியேற்றி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுவோம். இந்த நிகழ்ச்சியின்போது தொண்டர்கள் கூட்டம் பிரம்மாண்டமாக இருக்கவேண்டும். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்தும் தொண்டர்களை திரட்டி வாருங்கள். தொண்டர்கள் நம் பின்னால் தான் இருக்கிறார்கள் என்பதை பலருக்கும் காட்ட வேண்டும். அ.தி.மு.க.வின் பொன்விழாவில் நாம் சபதம் ஏற்கலாம்’ என்று சொல்லி, படை திரட்ட ஆதரவாளர்களை முடுக்கிவிட்டிருக்கிறார் சசிகலா.

 

ஆனால், அவர்களோ, தொண்டர்களை அழைத்துவரத் தேவையான செலவினங்களுக்கு நாம் எங்கே போவது என பம்முகிறார்கள். இது பற்றி சசிகலாவின் கவனத்துக்கு சென்றுள்ளது. ஆனால், செலவினங்களுக்கு பணம் கொடுப்பது பற்றி சசிகலா இப்போது வரை வாயைத் திறக்கவில்லையாம். பொதுவாகவே பணம் கொடுத்து உதவுவதில் அவரும் சரி, அவரது குடும்பமும் சரி, மிகக் கறாராக இருப்பார்கள். தாராள மனம் இருக்காது. தொண்டர்களின் பணத்தைக் கரைப்பதுதான் அவர்களது குறியாக இருக்கும். அவர்களை நம்பி செலவு செய்து கடனாளியான தொண்டர்கள்தான் அதிகம்.

 

2017-ல் அவர் சிறைக்குச் செல்ல சென்னையிலிருந்து கிளம்பிச் சென்றபோது, எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையைக் கொடுத்தார். அதேபோல, அந்த இல்லத்தில் இயங்கும் எம்.ஜி.ஆர். பெயரிலிருக்கும் காதுகேளாத வாய்பேச இயலாத பள்ளிக் குழந்தைகளுக்கு 18 லட்சம் ரூபாய் மதிப்பில் காது கேட்கும் கருவிகளை கொடுத்தார் சசிகலா.

 

அன்றைக்கு சுகாதார அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் தான் இந்த கருவிகளை வாங்கி வந்தார். கருவிகளை பொருத்திக் கொண்ட குழந்தைகளுக்கு காது நன்றாக கேட்டது. அந்த குழந்தைகள் மகிழ்ந்து போனார்கள். ஆனால், 15 நாட்களாகியும் அந்த கருவிகளை கொள்முதல் செய்த நிறுவனத்துக்கு பணம் கொடுக்காததால் சம்பந்தப்பட்ட நிறுவனம், குழந்தைகளிடமிருந்து கருவிகளை பறித்துக் கொண்டு போனது. இந்த விசயம் விஜயபாஸ்கருக்கும் தெரியப்படுத்தப்பட்ட நிலையிலும் கண்டுகொள்ளப்படவில்லை.

 

அதேபோல, எம்.ஜி.ஆர். குடும்பத்தினருக்கு சசிகலா கொடுத்த காசோலை, சில கையெழுத்து பிரச்சனையால் திரும்பிவிட்டது. இதனை டி.டி.வி. தினகரன், விவேக் இருவருக்கும் எம்.ஜி.ஆர். குடும்பத்தினர் தெரிவித்தனர். தினகரனுக்கோ விவேக்கிற்கோ 10 லட்சம் ஒரு பெரிய தொகை அல்ல. ஆனாலும் அந்த தொகையை கொடுக்கவில்லை.

 

இந்த செக் விவகாரமும், கருவிகள் விவகாரமும் சிறையில் இருந்த சசிகலாவுக்கு தெரியப்படுத்தப்பட்டது. ஆனால், அது பற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை. இப்போது வரை அந்த தொகையையும் கொடுக்கவில்லை; கருவிகளையும் வாங்கித் தருவதற்கும் அக்கறை காட்டவில்லை. இதுதான் சசிகலா. அதனால் தான் அவரை நம்பி கடனாளியாக விரும்பாமல் படை திரட்டுவதில் பம்மி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.


இதற்கிடையே இன்னொரு விவகாரமும் இதில் இருக்கிறது. எம்.ஜி.ஆர். இல்லத்தில் அ.தி.மு.க.வின் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதன் ஏற்பாடுகளை கவனிக்க, ஆவின் வைத்தியநாதனிடம்தான் ஜெயலலிதாவும் சரி, சசிகலாவும் சரி பொறுப்பை ஒப்படைப்பார்கள். ஏனோ இந்த முறை ஆவின் வைத்தியநாதன் ஒதுங்கிக்கொண்டிருக்கிறார். இதனால் சசிகலாவின் அ.தி.மு.க. பொன்விழா நிகழ்விற்கான ஏற்பாடுகளை யார் கவனிப்பது என்கிற குழப்பம் சசிகலா முகாமில் அலையடித்துக்கொண்டிருக்கிறது.


இதுகுறித்து சசிகலா ஆதரவாளர்களிடம் பேசியபோது, "ஒருவேளை யார் எடுத்து நடத்தினாலும் சசிகலா நினைப்பது நடக்காது. ஏனெனில், பள்ளி வளாகத்தில் இருக்கும் ஆடிட்டோரியத்தில் உள்ள கம்பத்தில் அ.தி.மு.க. கொடியேற்றத் திட்டமிடுகிறார் சசிகலா. அந்த கம்பத்தில் தேசியக் கொடி மட்டும் தான் ஏற்றப்பட வேண்டும். கட்சிக் கொடி ஏற்ற முடியாது. கட்சி பேனர்களையும் கொடிகளையும் பள்ளி வளாகத்தினுள் கட்டுவதற்கும் அனுமதியில்லை. அரசியல் நிகழ்ச்சிகளோ ஆடல் பாடல்களோ நடத்தக்கூடாது என அரசாணை இருப்பதால் பள்ளி வளாகத்தில் சசிகலா நினைப்பது சாத்தியமாகாது. பள்ளி வளாகத்துக்கு வெளியே போரூர் சாலையில்தான் கட்சிக் கொடியையோ பேனரையோ கட்டிக்கொள்ள முடியும். இதை செய்யக்கூட ஆட்கள் இல்லை. இந்த நிலையில், யாரை வைத்து தனது வருகையை பிரமாண்டப்படுத்தி எடப்பாடிக்கு செக் வைக்கலாம் என யோசிக்கிறார் சசிகலா'' என்கிறார்கள் அழுத்தமாக.


பொன்விழா பொதுக்கூட்டம் எடப்பாடிக்கு ஓ.பி.எஸ். செக்!

 

A.D.M.K. Golden Jubilee!
கோப்புப் படம்


அ.தி.மு.க. பொன்விழாவை சென்னை தி.நகரிலுள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் கொண்டாடவிருக்கிறார் ஓ.பி.எஸ். இதனை பிரம்மாண்டப்படுத்த திட்டமிடப்படுகிறது. இந்த இல்லத்தில் சசிகலா பெயரில் அமைக்கப்பட்ட கல்வெட்டு கம்பத்தில்தான் அவர் கொடியேற்ற வேண்டும் என்பதால் எம்ஜிஆர் இல்லத்தை தவிர்க்கலாமே என சிலர் ஓ.பி.எஸ்.ஸிடம் சொல்லி வருகிறார்கள். இதனால் எம்.ஜி.ஆர். இல்லம் நிகழ்வை ஓ.பி.எஸ். தவிர்க்கும்பட்சத்தில் திருச்சியில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்தி எடப்பாடிக்கு தனது பலத்தைக் காட்ட சீனியர்களிடம் ஆலோசித்து வருகிறார் ஓ.பி.எஸ்.


ஆக, அ.தி.மு.க. பொன்விழாவை வைத்து ஒருவரை ஒருவர் மிஞ்சுவதற்கு துடிக்கிறார்கள் எடப்பாடி, பன்னீர், சசிகலா! யார் ஜெயிக்கிறார்கள்ங்கிறது அன்றைக்குத் தெரியும்!

 

 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.