Skip to main content

“சசிகலாவை மட்டுமல்ல... ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்-ஸையும் விசாரியுங்கள்” - கே.சி. பழனிசாமி

Published on 20/10/2022 | Edited on 20/10/2022

 

ADMK Ex MP KC Palanisamy comment on Arumugasamy and Aruna Jagadhesan commission
கோப்புப் படம்

 

தமிழ்நாடு சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 17ம் தேதி முதல் 19 வரை மூன்று நாட்கள் நடைபெற்றன. இதில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன. இரண்டு அறிக்கைகளும் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தி தமிழ்நாட்டை பரபரப்பாக்கியுள்ளது. இந்நிலையில், அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியை சந்தித்து உரையாடினோம். 

 

அவர் தெரிவித்த கருத்தில் சில...


ஆறுமுகசாமி ஆணையமும், அருணா ஜெகதீசன் ஆணையமும் சட்டசபையில் அறிக்கைகளை சமர்ப்பித்திருக்கிறார்கள். இந்த மாதிரியான நேரத்தில் சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பான பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவைக் காவலர்களால் வெளியேற்றப் பட்டிருக்காங்க. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?


கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக அதிமுகவை வழி நடத்திய ஜெயலலிதா மரணம் குறித்து நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிற பொழுது, எடப்பாடி பழனிசாமி எல்லா கருத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு அந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து அது விவாதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தால் போற்றுதலுக்கு உரியவராக பார்க்கப்பட்டிருப்பார். மாறாக, ‘ரோம் பற்றி எரிகின்றபோது பிடில் வாசித்துக் கொண்டிருந்த மன்னனைப் போல’ அதிமுக தொண்டர்கள் உணர்ச்சிப் பிழம்பில் கொதித்துக் கொண்டிருக்கும்போது இந்த மாதிரியான சப்பை விசயங்களுக்காக பிரச்சனை செய்வது அவர்கள் அந்த அறிக்கையை தவிர்க்க நினைக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

 

ஜெயலலிதா இறந்த தேதி குறித்த முரண்பட்ட தகவல் உள்ளது, ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த தவறிவிட்டார்கள், ஜெ. மற்றும் சசி மீண்டும் இணைந்த பிறகு அவர்களுக்குள் சுமூகமான உறவு இல்லை, என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விசயங்களைப் பற்றி உங்கள் கருத்து?

 

இறந்த தேதி குறித்து ஆணையம் குறிப்பிட்ட தேதியில் தொலைக்காட்சி செய்திகள் அப்போதே வந்தன. பின்னர்தான் அதை மறுத்திருந்தாங்க. சசிகலா மீண்டும் இணைந்த பிறகு கட்சியின் நிதி தொடர்பான விசயங்களை எடப்பாடி கவனிக்கட்டும் என அம்மா சொல்லி இருந்தது, அவர்களுக்கிடையில சுமூகமான உறவு இல்லைங்கிற மாதிரி தான் இருந்தது. அதுபோல இந்த ஆணையம் சுட்டிக்காட்டி இருக்கிற பல விசயங்கள் சரியாக இருக்குமென்பது தான் என்னோட பார்வை.

 

சசிகலா, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவர் சிவராமன் உள்ளிட்ட எட்டு பேரை மீண்டும் விசாரிக்கணும்னு ஆணையம் பரிந்துரை வழங்கியிருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?


குற்றவியல் சட்டப்படி எப்.ஐ.ஆர் போட்டு அவங்கள விசாரிக்கணும். கூடவே ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இரண்டு பேரையும் விசாரிக்கணும். இவங்க தானே அம்மா மறைவுக்கு பிறகு முதலமைச்சர்களாக இருந்தவர்கள். ஒரு குற்றத்தை மறைக்க துணை போகிறவர்களும் குற்றவாளிகள் தானே! ஓ.பி.எஸ் அந்த காலகட்டத்தில் முதல்வராக இருந்தவர். ஈ.பி.எஸ் அதன் பிறகு 4 ஆண்டுகள், 3 மாதங்கள் முதல்வராக இருந்தவர். ஏன் அவர்கள் இந்த உண்மையை வெளிக்கொண்டு வர முயற்சி செய்யவில்லை? குறைந்த பட்சம் அம்மா இறந்த தேதியையாவது ஏன் மாற்றி அறிவிக்கவில்லை? அதிமுக தொண்டர்களின் கொந்தளிப்பை அடக்குவதற்காகத் தானே இந்த ஆணையமே அவர்களால் அமைக்கப்பட்டது! இந்த ஆணையத்தின் மீது, உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் பெற்ற தடையை விலக்குவதற்கான நடவடிக்கையைக் கூட எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது எடுக்கவில்லை. அவர்கள் அப்போதிருந்து இப்போது வரை இதை தவிர்க்கவே முயற்சிக்கிறார்கள்.

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கணும்னு சொல்லிருக்காங்களே. அது பற்றி...


சம்பவம் நடந்தப்போ மாவட்ட ஆட்சியரும் சரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சரி அந்த மாவட்டத்திலேயே இல்லன்னு சொல்லிருக்காங்க. எடப்பாடி பழனிசாமி கூட அப்போ வெள்ளந்தியா சொல்லிருப்பாரு, “டி.வில பார்த்துதான் நான் அந்த செய்திய தெரிஞ்சிகிட்டேன்”னு. அப்போ அந்த துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யாரு, முதலமைச்சர் உத்தரவு இல்லாமல் அந்த துப்பாக்கி சூடு நடந்துடுச்சான்னு எல்லாமே விசாரிக்கப்படனும். காலுக்கு கீழ சுடனும் என்கிற விதியை மீறி மார்பிலும் தலையிலும் சுட்டிருக்காங்க. அப்போ அந்தப் படுகொலை வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டிருக்கு. ஸ்டெர்லைட்ல பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி இருந்திருக்கார் அவரும் விசாரிக்கப்படனும்.

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.