Skip to main content

அதிமுக – அமமுக இணைப்புக்கு அச்சாரம் போட்ட ஓ.பி.எஸ்.!!!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
ops

 

சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும் நேரம் நெருங்கும் இந்த நேரத்தில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற கேள்வி கட்சிக்குள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தினாலும் ஓ.பி.எஸ். நேற்று போட்ட ஒரு ட்வீட் அமமுக – அதிமுக இணைப்புக்கு அச்சாரம் என்று கட்சியின் உள் வட்டத்தை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

 

அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்கிற பரபரப்பான கேள்விகளுக்கு அமைச்சர்கள் தரும் பதிலும் கட்சிக்குள் பெரிய அதிர்வலைளை ஏற்படுத்தி வருகின்றன.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கலந்து ஆலோசனை செய்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போன்றவர்கள் சொல்லும் கருத்துகள் இப்போது தேவையற்றவை. அவர் உங்களை முதல்வர் வேட்பாளர் என்று இப்போதே கூறுகிறார். இதுகுறித்து நீங்கள் தான் வெளிப்படையாக பேச வேண்டும் என்று சொல்ல அதற்கு எடப்பாடி பழனிசாமி, சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் நானே பேசுகிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

 

இந்த நிலையில் 13ம் தேதி அதிமுக தலைமைக் கழகத்தில் நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்திய பிறகு, “சட்டமன்ற தேர்தல் பணிகளை நாங்கள் தொடங்கிவிட்டோம். முதல்வர் வேட்பாளர் என்பதையெல்லாம் கட்சி உரிய நேரத்தில் முடிவு செய்யும்” என்று அறிவித்தார் கே.பி.முனுசாமி. வெளிப்படையாக பேசி இன்னும் டெம்போவை உயர்த்தினார்.

 

அதே வேகத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் செல்போனில பேசிய கே.பி.முனுசாமி, அமைச்சர் என்ற முறையில் உங்கள் துறை பற்றி பேசுங்கள். மாவட்ட விவகாரங்கள் பற்றி பேசுங்கள். யார் முதல்வர் என்பது பற்றியெல்லாம் இப்போது பேச வேண்டாம் என்று கறாக பேசியதாக சொல்கிறார்கள் கட்சியின் உயர்மட்ட தொடர்பு உடையவர்கள்.

 

இந்த நிலையில் தொலைகாட்சிகளில் எல்லாம் அதிமுக அடுத்த முதல்வர் யார்? எடப்பாடி, பன்னீர் செல்வம், வேலுமணி, என்று மக்கள் கருத்து எடுத்து பெரிய டென்ஷனை உண்டாக்கியது கட்சியின் உயர் மட்டத்தில் உள்ளவர்களுக்கு. இந்த நிலையில் தான் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மாலை தனது ட்விட்டர் பதிவில், கருத்து தெரிவித்தார்.

 

ops

 

 

அதில், தொடர்ந்து 3-வது முறையாக 2021ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள். தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!” என்று கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

 

ஓ.பி.எஸ்.-இன் இந்த ட்விட்டர் பதிவுக்கு அடிப்படைக்காரணம் தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!! என்கிற வார்த்தையில் ஜெ. வழியை பின்பற்றும் அனைவரும் நேர்வழியில் நின்றால் நாளை நமதே என்று வெற்றி என்பது, – தினகரனின் கட்சியியான அமமுக இணைப்பு தான் சொல்கிறார் என்கிறார்கள்.

 

ஏற்கனவே அதிமுகவில் சசிகலா தலையீட்டை எதிர்த்து வெளியே சென்று பிஜேபி ஆதரவுடன் மீண்டும் துணை முதல்வர் ஆன ஓ.பி.எஸ். தற்போது முதல்வர் யார் என்கிற சர்ச்சை தலைவிரித்தாடும் இந்த நேரத்தில் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் அம்மா வழி வந்த அனைவரும் நேர் வழி என்று அழைத்து அதிமுக – அமுமுக இணைப்பு அச்சாரம் என்று சொல்கிறார்கள்…

 

 

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.