Skip to main content

காமராஜருடன் இணைந்து தேசியத்தை உயர்த்தியவர் சிவாஜி கணேசன்! -காங்கிரஸ் கலைப்பிரிவினருடன் கலந்துரையாடிய கே.எஸ்.அழகிரி

Published on 14/05/2020 | Edited on 14/05/2020

 

sivaji


கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக கடந்த 50 நாட்களாக நீடித்து வரும் பொது ஊரடங்கினால் நாடு முழுவதும் பல்வேறு பணிகள் முடக்கப்பட்டன. அதில் அரசியல் கட்சிகளின் பணிகளும் அடங்கும். பொது வெளியில் அரசியல் கட்சிகள் நிவாரண உதவிகள் வழங்குவதைத் தவிர, அந்தக் கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகளும் முடங்கிப் போயின! 
              

குறிப்பாக, தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான தேர்வு உள்ளிட்ட பல முக்கியப் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டன. ஆளும் கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல்கள் உள்ளிட்டவைகளுக்கு எதிராக நடத்தப்படும் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களும் மிஸ்ஸிங்! 
             

இந்த நிலையில்தான், அரசியல் நடவடிக்கைகளை ஆன்லைனில் தொடர்வோம் என முடிவு செய்து கட்சியினருடன் காணொலி காட்சி மூலம் பேசத் துவங்கினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். காணொலி காட்சி மூலம் அரசியலை முன்னெடுக்கும் பணியைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறார். தி.மு.க.வைப் பின்பற்றி தங்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளன. 
 

ddd

                

அந்த வரிசையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவு தலைவர் சந்திரசேகரன், தமிழகம் முழுவதுமுள்ள கலைப்பிரிவின் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நிகழ்வை முன்னெடுத்திருந்தார். சமீபத்தில் நடந்த அந்தக் காணொலி காட்சியின் வழியாகக் கலைப்பிரிவு நிர்வாகிகளுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், கட்சியின் கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரனும் விவாதித்தனர்.
                     

கரோனா நெருக்கடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கலைப்பிரிவு சார்பில் செய்யப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், வெளி மாநிலத் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்குரிய உதவிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசித்தார் கே.எஸ்.அழகிரி. தங்கள் மாவட்டத்திலுள்ள பிரச்சனைகள், அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காத சூழல், தாங்கள் செய்துள்ள பணிகள் என அனைத்தையும் விவரித்தனர் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் கணொலியில் கலந்துகொண்ட கலைப்பிரிவு நிர்வாகிகள். 
                      

KS Azhagiri


இந்த நிகழ்வின் போது, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் குறித்த பல நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் கே.எஸ்.அழகிரி. கலைப்பிரிவினருடன் மனம் திறந்த கே.எஸ். அழகிரி, ‘’கலை என்றாலே அது நடிகர் திலகம் சிவாஜிதான். தமிழகத்திற்கு தேசிய சிந்தனைகளை ஊட்டியவர் சிவாஜி. சிவாஜியின் ஒவ்வொரு திரைப்படமும், அவரது அங்க அசைவுகளும், ஒவ்வொரு செயல்பாடும் தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு வலுசேர்த்தது என்பதை யாரும் மறைத்துவிட முடியாது. 


ஒரு காலத்தில் திராவிடமா? தேசியமா? என்கிற சூழல் வந்தபோது, பெருந்தலைவர் காமராஜருடன் தேசியத்தைத் தூக்கி நிறுத்தியவர் அண்ணன் சிவாஜி அவர்கள். இன்றைக்கும் சிவாஜி அவர்களின் பெயரால் கலைப்பிரிவின் மூலம் அதன் தலைவர் சந்திரசேகரனும் மற்ற நிர்வாகிகளும் பல்வேறு பணிகளைச் செய்து வருவது மகிழ்ச்சியைத் தருகிறது‘’ என்று சிவாஜியை நினைவூகூர்ந்தார் கே.எஸ்.அழகிரி.
                           

கலைப்பிரிவு நிர்வாகிகளிடன் தொடர்ந்து பேசிய அவர், ‘’இன்றைக்கு ஒரு உயிர்க்கொல்லி நோய் உலகம் முழுவதும் வந்திருக்கிறது.  பல நாடுகள் சிறப்பாக இந்த விவகாரத்தைக் கையாளுகிறார்கள். இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்மையான ஒத்துழைப்பைக் காங்கிரஸ் தந்து வருகிறது. அதே நேரத்தில், அரசாங்கத்தின் தவறுகள், மெத்தனப்போக்குகள், இயலாமைகள், அதனால் ஏற்படும் இழப்புகளை எடுத்துச் சொல்ல வேண்டிய எதிர்க்கட்சி பொறுப்பில் நாம் இருக்கிறோம். 
                                

http://onelink.to/nknapp

 

ஒரு பேரிடர் நிகழ்ந்துள்ள நேரத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கலாமே தவிர அவர்கள் செய்கிற தவறுகளைக் கண் மூடித்தனமாக ஆதரித்து விட முடியாது. அப்படித் துணை போனால் வரலாறு நம்மை மன்னிக்காது‘’ என்பதில் தொடங்கி இந்தப் பேரிடர் காலத்தில் மத்திய-மாநில அரசுகள் செய்துள்ள பல தவறுகளையும் சுட்டிக்காட்டியதுடன், பாதுகாப்பு கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்ய கலைப் பிரிவு நிர்வாகிகளுக்கு வலியுறுத்தினார் கே.எஸ்.அழகிரி.


 

 

Next Story

“குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்” - ப.சிதம்பரம் திட்டவட்டம்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
The Citizenship Amendment Act will be repealed says p Chidambaram

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வேலையின்மை இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால் ஆகும். சில பிரிவினர் இந்த பிரச்சனையை குறைத்து மதிப்பிடுகின்றனர். ஆனால் இது மிகப்பெரிய பிரச்சனை. எனது அனுபவத்தில் இவ்வளவு பெரிய வேலையின்மை விகிதம் இருந்ததில்லை.

தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைந்துள்ளது, உழைக்கும் மக்கள் தொகை குறைந்துள்ளது. பெண் தொழிலாளர் பங்கேற்பு வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும் பட்டதாரிகளிடையே வேலையின்மை அதிகமாக உள்ளது. அதாவது வேலையின்மை 42% ஆக உள்ளது. பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்களின் அவமானகரமான நிகழ்வு இதுவாகும்.

பல்வேறு சட்டங்களின் தொகுப்புகளை நாங்கள் ரத்து செய்வோம், திருத்துவோம் மற்றும் மதிப்பாய்வு செய்வோம். அதில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. விவசாயிகளின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வசதிச் சட்டம் 2020,  இந்திய தண்டணைச சட்டத்திற்கு (IPC) இணையான பாரதிய நியாய சன்ஹிதா,  கிரிமினல் தண்டனைச் சட்டம் (CrPC) என்ற பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் ஆதாரச் சட்டமான பாரதிய சாக்ஷ்யா சட்டம்.

இந்த ஐந்து சட்டங்களும் முற்றிலுமாக ரத்து செய்யப்படும். பின்னர் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும். அப்போது 25 சட்டங்கள் திருத்தப்பட்டு அரசியலமைப்புக்கு இணையாக கொண்டு வரப்படும். எனவே குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார். 

Next Story

பாஜகவில் இணைந்த பிரியங்கா காந்தியின் ஆதரவாளர்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Supporter of Priyanka Gandhi who joined BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய ஆதரவாளர் தஜிந்தர் சிங் பிட்டு பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சில மணி நேரங்களிலேயே இவர் பாஜவில் இணைந்துள்ளார். ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியின் செயலாளராக பதவி வகித்து வந்த தஜிந்தர் சிங் நேற்று (20.04.2024) தனது ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அளித்தார். அதனைத் தொடர்ந்து ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் தவுத்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்தது குறித்து தஜிந்தர் சிங் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “கடந்த 35 வருடங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். இன்று அக்கட்சியில் இருந்து விலகிவிட்டேன். யாருக்கு எதிராகவும் நான் பேச விரும்பவில்லை. மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக, நான் பாஜகவில் இணைந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.