Skip to main content

"இவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டால், அனைவரது கண்களிலும் கண்ணீர் வரவழைக்கிற அளவிற்கு வாழ முடியும்" - நடிகர் ராஜேஷ் நெகிழ்ச்சி! #2 

 

spb

 

 

இந்திய திரை இசையின் முக்கிய அடையாளமாக இருந்த பாடகர் எஸ்.பி.பி சில தினங்களுக்கு முன்னால் இயற்கை எய்தினார். பல்வேறு பிரபலங்கள் அவருடனான தங்கள் அனுபவம் குறித்தும், எஸ்.பி.பி அவர்களின் அறியாத பக்கம் குறித்தும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ராஜேஷ் நம்மோடு பகிர்ந்து கொண்ட தகவலின் இரண்டாம் பகுதி...

 

"நான் எஸ்.பி.பி அவர்களை பல இடங்களில் சந்தித்திருக்கிறேன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஒரே மாதிரியாக பணிவாக கும்பிடுவார். ஓரளவுக்கு வளர்ந்த பிறகு அனைவருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று தோன்றும். குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் ஏதாவது நினைத்து கொள்வார்களோ என்று தோன்றும். அவர் அவ்வளவு கடினமாக உழைத்துள்ளார். கடைநிலை தொழிலாளி முதல் பெரிய சாதனையாளர்கள் வரை அவர் சென்றடைந்திருக்கிறார். நம்மிடம் இருக்கும் பல தரப்பட்ட சோகங்களை நீக்குவதற்கு அவர் பாடல்கள் பயன்பட்டன. அமெரிக்காவில் கிளின்டன் கூட இவர் பாடலைக் கேட்டுப் பாராட்டி, நான் இந்தியா வந்தால் நீங்கள் பாடுவீர்களா என்று கேட்டார். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் சென்றடைந்திருக்கிறார். அவரால் பலனடைந்தவர்கள் பலர் உள்ளனர். குறிப்பாக இன்றும் அவரது பாடல்களைப் பாடி பல கடைநிலை இசைக்கலைஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர் பாடி சம்பாதித்ததை விட, அவரது பாடல்களைப் பாடி அதிகம் சம்பாதித்தவர்கள் தமிழகத்தில் நிறைய பேர் உள்ளனர்.

 

அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள். நடிகர்கள் என அனைவரிடமும் நானே சென்று நேரடியாக பழகுவேன். ஆனால், எஸ்.பி.பி. அவர்களிடம் மட்டும் நான் பழகவேயில்லை. அதற்கான சந்தர்ப்பமும் எனக்கு அமையவில்லை. அதை நினைத்தால் இப்போது வருத்தமாக உள்ளது. கரோனா அச்சுறுத்தல் இல்லாத சூழல் இருந்திருந்தால் அவரை மருத்துவமனையில் சென்றே சந்தித்திருப்பேன். அவர் மரணச்செய்தி கேட்டதும், மாலை வாங்கிக்கொண்டு நாங்கள் சிலர் வந்தோம். அதற்குள் அவர் உடலை கொண்டு சென்றுவிட்டார்கள். அவர் உடலைப் பார்க்க முடியாதது வருத்தமாக உள்ளது. பின் அவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிவிட்டு திரும்பினேன்.

 

நான் நடித்த படங்களில் கூட பல பாடல்கள் பாடியிருக்கிறார். அவர் பாடிய பாடலுக்கு நான் வாய் அசைத்திருக்கிறேன் என்பதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அப்துல்கலாம் அவர்கள் மறைவின்போது எவ்வளவு பெரிய எழுச்சி இருந்ததோ, அதற்கு இணையான எழுச்சி இப்போதும் இருந்தது. கரோனா காரணமாக அதன் முழுவீச்சையும் நம்மால் பார்க்க முடியவில்லை. சாப்பிட முடியவில்லை, ரொம்ப வருத்தமாக உள்ளது என்று சிலர் என்னிடம் கூறினார்கள். அந்த அளவிற்கு அவரை மக்கள் நேசித்திருக்கிறார்கள். ஜேசுதாஸ் அவர்களுக்கு செய்த பாதபூஜை எல்லாம் உண்மையான அன்பு இருந்தால் மட்டுமே செய்ய முடியும். எவ்வளவு பெரிய குருபக்தி என்று பாருங்கள்.

 

நான் ஒரு முன்னூறு நபர்களின் வாழ்க்கை வரலாறு படித்து, 200 மனிதர்களின் நல்ல குணங்களையெல்லாம் ஒருங்கிணைத்து ராஜேஷ் என்ற ஒரு மனிதனாக என்னை உருவாக்கி கொண்டேன். அவையெல்லாம் தேவை இல்லை என்பதை எஸ்.பி.பி. அவர்களின் இறப்பின் போது உணர்ந்தேன். எஸ்.பி.பி. அவர்கள் ஒருவரை நாம் பின்பற்றினாலே, 200 மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியெல்லாம் படிக்க தேவையில்லை. இவர் ஒருவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டால், நாம் இந்த உலகத்தை விட்டுச்செல்லும்போது அனைவரது கண்களிலும் கண்ணீர் வரவழைக்கிற அளவிற்கு வாழ முடியும் என்று புரிந்து கொண்டேன்".

 

முந்தைய பகுதி 

"அனைவருமே அவரை நல்ல மனிதன் என்கிறார்கள்... இது எப்படி சாத்தியம்?" -ஆச்சரியப்படும் நடிகர் ராஜேஷ்! #1