Skip to main content

ஆவின் தலைமை அதிகாரிக்கு கரோனா! அச்சத்தில் சென்னைவாசிகள்! அலட்சியத்தில் அதிகாரிகள்! 

Published on 02/06/2020 | Edited on 02/06/2020
madhavaram aavin milk


 

கோயம்பேடு சந்தையில் ஏற்பட்ட கரோனா விபரீதம் போல ஆவின் பால்பண்ணையிலும் ஏற்படும் என அலறுகிறார்கள் அதன் பணியாளர்கள். கடந்த மாதம் சென்னையிலுள்ள மாதவரம் பால்பண்ணை ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை ஆவின் நிர்வாக உயரதிகாரிகள் மூடி மறைக்க முயற்சித்த நிலையில் அதனை நக்கீரன் இணையதளத்தில் அம்பலப்படுத்தினோம். 


மேலும், சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் துறையின் செயலாளர் கோபால் ஐ.ஏ.எஸ். ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.  உரிய நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்கள். ஆவின் நிர்வாக இயக்குநர் வள்ளலார் ஐ.ஏ.எஸ்.சுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உயரதிகாரிகள் அறிவுறுத்தினர். 

அதேசமயம், மாதவரம் பால்பண்ணையை முழுமையாக லாக் டவுன் செய்து, பால் பண்ணை மற்றும் பால் டேங்கர் லாரிகள் அனைத்தையும் மருத்துவரீதியாக சுத்தப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியிருந்தோம். தமிழக சுகாதார துறையின் அறிவுறுத்தல்களும் இதுவாகத்தான் இருந்தது. ஆனால், மாதவரம் பால்பண்ணையில் பரவிய தொற்று குறித்து போதிய அக்கறை காட்ட மறுத்ததுடன், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதிலும் உயரதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. 
                     
இதன் விளைவு, தற்போது ஆவின் நிர்வாக தலைமை பொறுப்பில் உள்ள உயரதிகாரி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் அறிந்து, ஆவின் நிறுவன பணியாளர்கள் மட்டுமல்லாமல்  சம்மந்தப்பட்ட தலைமை அதிகாரி சென்று வந்துள்ள அலுவலக பணியாளர்களும் மிரண்டு போயிருக்கிறார்கள். 
                         

 

இந்த சம்பவம் ஆவின் பணியாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து மேலும் நாம் விசாரித்தபோது, ‘’தமிழக ஆவின் நிறுவனத்துக்கு சென்னையில் மாதவரம், அம்பத்தூர், காக்களூர், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பால் பண்ணை இருக்கிறது. ஆவின் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநராக இருக்கும் தலைமை அதிகாரி ஒருவருக்குத்தான் தற்போது கரோனா தாக்கியிருக்கிறது. மேற்கண்ட 4 பண்ணைகளில்தான் தமிழகத்தின் வட மாவட்டங்களிலிருந்து தினந்தோறும் கொண்டு வரப்படும் பால், குளிரூட்டப்பட்டு பால் பாக்கெட்டுகளாக மாற்றப்படுகின்றன. 
                     
அவைகள் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளுக்கு மக்களுக்கு விநியோக்கிக்கப்படுகிறது. தினமும் சென்னையில் மட்டும் 15 லட்சம் பால் பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன. அந்த வகையில் சுமார் 60 லட்சம் பேர் தினமும் ஆவின் பாலை பயன்படுத்துகிறார்கள். மக்களின் உணவு பொருளாக இருக்கும் பால் விசயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். அதுவும் கரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கூடுதல் கவனம் தேவை. 
                         
 

nakkheeran app




ஆனால், கடந்த மாதம் 2 பேருக்கு கரோனா தொற்று செய்யப்பட்ட சூழலில், மாதவரம் பால் பண்ணையை மூடுங்கள் என ஆவின் உயரதிகாரிகளுக்கு ஆவின் பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அந்த யோசனையை குப்பையில் வீசிவிட்டனர். பால் பண்ணைகள் வழக்கம்போல் இயங்கின. பாதுக்காப்பற்ற தன்மை நிலவியது. ஒப்பந்த பணியாளர்களை மிரட்டி வேலை வாங்கினர். அவர்களில் பலர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள்.  இரண்டு பேருக்கு இருந்த அந்த தொற்று மெல்ல பரவி சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தொற்று பரவி விட்டது. அதன்பிறகாவது ஆவின் நிர்வாகம் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்.  அப்போதும் அக்கறை காட்டவில்லை. 
                             
மாதவரம் பால் பண்ணையை மூடினால் தாங்கள் செய்துள்ள தவறுகள் எல்லாம் அம்பலமாகி விடும் என நினைத்தே தேவையான மருத்துவ நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவில்லை. அதன் விளைவு, தற்போது, ஆவினின் தலைமை அதிகாரிக்கே  தொற்று தாக்கியிருக்கிறது. மேற்கண்ட 4 பால் பண்ணைகளுக்கும், நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்துக்கும் சம்மந்தப்பட்ட இணை நிர்வாக இயக்குநர் தினமும் வந்து போகிறவர் என்பதால் தற்போது அனைத்துப் பணியாளர்களும் அச்சத்தில் இருக்கிறார்கள். கோயம்பேடு சந்தையில் ஏற்பட்டது போல ஒரு விபரீதம், ஆவின் பால் பண்ணைகள் மூலம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதிகாரிகளின் அலட்சியம், மக்களுக்கும் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஆவின் பால் பாக்கெட்டுகள் மூலம் தொற்று பரவுமா? என சென்னைவாசிகள் பயப்படுவதில் அர்த்தமில்லாமல் இல்லை!‘’ என சுட்டிக்காட்டுகிறார்கள் ஆவின் பணியாளர்கள்.


 

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.