Skip to main content

900 ஆண்டுகள் பழமையான வெண்பா பாடல் கல்வெட்டு; ராமநாதபுரத்தில் கண்டுபிடிப்பு

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

900 year old Venpa Song Inscription discovered in Ramanathapuram

 

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் சுமார் 900 ஆண்டுகள் பழமையான வெண்பா பாடல் கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

 

உத்தரகோசமங்கையிலிருந்து திருப்புல்லாணி செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள வேட்டை மண்டபத்தின் கிழக்குப் பகுதி உத்தரத்தில் இருந்த பாடல் கல்வெட்டை, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கண்டுபிடித்து, மோ.விமல்ராஜ், திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவன் து.மனோஜ் ஆகியோருடன் படி எடுத்து, தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் உதவியுடன் படித்தார். இதை ஆய்வு செய்த பின் கல்வெட்டு ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது,

 

மண்டப அமைப்பு

6மீ நீளம் 6மீ அகலத்தில் சதுர வடிவில் அமைந்துள்ள மண்டபத்தில், மொத்தம் 16 சதுரத் தூண்கள் வெட்டுப் போதிகையுடன் உள்ளன. மண்டபம் மேற்கிலுள்ள உத்தரகோசமங்கை சிவன் கோயிலை நோக்கி அமைந்துள்ளது. தூண்கள் கடற்கரைப் பாறைகளால் ஆனவை.

 

900 year old Venpa Song Inscription discovered in Ramanathapuram

 

நேரிசை வெண்பா

“தென்னண் தமிட் செய்ய மாறற்கி யாண்டு எட்டாண்டில் துன்னு சடைய சோழ பாண்டீச்சரற்கு நன்னுதலாய் அண்டர் தருக்காவைக் காயபன் சேர ஆண்ட பிள்ளை மண்டபமும் செய்தான் மகிழ்ந்து” என கல்வெட்டு 3 வரியில் அமைந்திருந்தாலும், இது 4 வரியில் அமைந்த வெண்பா பாடல் ஆகும்.

 

பாடலின் முதலிரண்டு வரிகளில் ஒரு எதுகையும் அடுத்த இரண்டு வரிகளில் வேறு ஒரு எதுகையும் என இரு விகற்பமாய் அமைந்து, நன்னுதலாய் என்ற தனிச்சொல் பெற்று வருவதால் இது இருவிகற்ப நேரிசை வெண்பா ஆகும். கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இது கி.பி.12-ம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது என உறுதிப்படுத்தலாம். 

 

பாடலின் பொருள்

தென் திசையின் தலைவனாய் மதுரையில் சங்கம் அமைத்து தமிழை இயற்றிய பாண்டியன் மாறனுக்கு ஆண்டு எட்டாண்டில், தருக்காவைச் சேர்ந்த அண்டரான காயபன் சேர ஆண்ட பிள்ளை என்பவர் துன்னு சடைய சோழ பாண்டீச்சரற்கு அழகாய் ஒரு மண்டபமும் மகிழ்ச்சியுடன் செய்து கொடுத்தார் என்பது இப்பாடலின் பொருள். தென்னண், தென்னன் ஆகிய சொற்கள் தென்திசையின் தலைவன் என்ற பொருளில் பாண்டியரைக் குறிக்கிறது. ஆனால் மன்னர் பெயர் இதில் இல்லை. கி.பி.12-ம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த ஒரு பாண்டிய மன்னனின் 8-ம் ஆட்சியாண்டில் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பல பாடல் கல்வெட்டுகளில் மன்னர் பெயர் இடம் பெறுவதில்லை. அண்டர் என்பதற்கு இடையர் என பொருள்.

 

900 year old Venpa Song Inscription discovered in Ramanathapuram

 

மேலும் துன்னுசடைய சோழபாண்டீச்சரர் என கல்வெட்டில் குறிப்பிடப்படுவது, உத்தரகோசமங்கையில் கோயில் கொண்டுள்ள சிவனின் பழைய பெயராக இருக்கலாம். முதலாம் ராஜேந்திரசோழன் காலம் முதல், சோழபாண்டியர் என்ற பெயரில் சோழர்களே பாண்டிய நாட்டை நேரடியாக ஆண்டு வந்தனர். அச்சமயத்தில் இறைவனுக்கு இப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

 

மண்டபத்தைக் கட்டிய காயபன் சேர ஆண்டபிள்ளை, அண்டர் என்ற இடையர் குலத்தையும், தருக்காவை என்ற ஊரையும் சேர்ந்தவர். யானை மலை உள்ளிட்ட இடங்களில் உள்ள தமிழி கல்வெட்டுகளில் காயபன் என்ற பெயர் வருகிறது. இடையருக்கு பிள்ளைப் பட்டம் இருந்ததை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது. ‘மண்டபமும் செய்தான் மகிழ்ந்து’ என்பதிலிருந்து இத்துடன் வேறு ஒரு திருப்பணியையும் இறைவனுக்கு இவர் செய்துள்ளார் எனலாம். தருக்காவை என்பது மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள தருக்காக்குடி என்ற ஊராக இருக்கலாம். ராமநாதபுரம் மாவட்டத்தின் முதல் பாடல் கல்வெட்டு உள்ள இம்மண்டபத்தையும் கல்வெட்டையும் அரசு பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

 

 

 

Next Story

கள்ளக்கடல் எதிரொலி; தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
  Sea rage in Dhanushkodi

கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்த நிலையில் ராமநாதபுரம் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளக் கடல் எச்சரிக்கை எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சுமார் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசப்படும், 10 அடி உயரத்திற்கு அலைகள் எழும் என்பதால் மக்கள் யாரும் கடல் பகுதிகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நேற்றே ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், கடற்கரைப் பகுதிகளில் இறங்கவும் குளிக்கவும் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். நேற்று இரவு முதல் வழக்கத்திற்கு மாறாக காணப்படுகிறது. சூறைக்காற்று வீசுவதால் அந்தப் பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்காமல் கடற்கரை ஓரமாக நின்று பார்த்துவிட்டு செல்கின்றனர்.

Next Story

பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நொறுங்கிய ஆட்டோ-இருவர் காயம்

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Auto crushed by bus - Two injured

ராமநாதபுரத்தில் அரசு பேருந்தும், பயணிகள் ஆட்டோவும் மோதிக் கொண்டதில் ஆட்டோ நொறுங்கியதில் ஆட்டோவில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து வளைவில் திரும்பும்போது எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணித்த இருவர் காயம் அடைந்தனர். சித்தார்கோட்டை வழியாக அரண்மனை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து வளைவில் திரும்பிய போது ஆட்டோ நேருக்கு நேர் மோதியது. இதில் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய ஆட்டோ முழுவதுமாக சேதமடைந்தது. அதேநேரம் பேருந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் மின்கம்பமும் சேதமடைந்தது. உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.