8000-year-old neolithic hand axe found in search of government school girl

திருவண்ணாமலை மாவட்டம், மேல்முத்தானூர் அரசு உயர்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவியின் தேடலில் 8000 ஆண்டுகள் பழமையான புதிய கற்கால கைக்கோடரிகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேல்முத்தானூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் செயல்பட்டுவரும், தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தில் பள்ளி மாணவர்களுக்குப் பழமையான கல்வெட்டுகள், நாணயங்கள், பானை ஓடுகள், கற்கருவிகள், வரலாற்றுச் சின்னங்கள் ஆகியவற்றை அடையாளம் காண, மன்றச் செயலரும், சமூக அறிவியல் ஆசிரியருமான ரா.ரேவதி பயிற்சி கொடுத்து வருகிறார். இதனால் மாணவர்கள் தங்கள் பகுதிகளில் தொல்லியல் தேடலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் காவிரிப்பட்டினம் என்ற ஊரைச் சேர்ந்த மு.சௌந்தர்யா என்ற மாணவி தங்கள் நிலத்தில் மேற்கொண்ட விவசாயப் பணியின் போது, புதிய கற்காலத்தைச் சேர்ந்த கல்லால் ஆன இரண்டு கைக்கோடரிகளைக் கண்டெடுத்து ஆசிரியர் ரா.ரேவதியிடம் கொடுத்தார். இவற்றை ஆய்வு செய்த பின் ஆசிரியர் ரா.ரேவதி இதுபற்றிக் கூறியதாவது,

Advertisment

8000-year-old neolithic hand axe found in search of government school girl

புதிய கற்காலம்

காவிரிப்பட்டினத்தில் கிடைத்த செல்ட் வகை கைக்கோடரிகள் புதிய கற்காலத்தைச் சேர்ந்தவை. புதிய அகழாய்வுகள் மூலம் தமிழ்நாட்டின் புதிய கற்காலம் கி.மு.6,000 முதல் கி.மு.2,200 வரையிலானது எனத் தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மனிதன் நாடோடி வாழ்க்கையில் இருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறிய இக்காலகட்டத்தில் வழுவழுப்பான கற்கருவிகள், கையாலும், சக்கரத்தாலும் செய்யப்பட்ட மட்பாண்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளான்.

Advertisment

10 செ.மீ. நீளம் 4.5 செ.மீ. அகலம், 8 செ.மீ நீளம், 4 செ.மீ அகலம் ஆகிய அளவுகளில் இக்கருவிகள் உள்ளன. இவை சுமார் 8000 ஆண்டுகள் பழமையானவை. கருங்கல்லால் ஆன இவற்றை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றியுள்ளனர். இவற்றின் அகன்ற பகுதி கூர்மையானதாகவும், குறுகிய பகுதி பட்டையாகவும் உள்ளன. மரத்தாலான தடியில் கட்டி இவற்றை ஆயுதமாகவும், நிலத்தைக் கொத்துவதற்கும், கீறுவதற்கும் பயன்படுத்தியுள்ளார்கள்.

8000-year-old neolithic hand axe found in search of government school girl

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த பகுதிகளாகச் சவ்வாது மலையில் கீழையூர், பாதிரி, நாச்சாமலை போன்ற இடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது கைக்கோடரி கிடைத்த காவிரிப்பட்டினம் கல்வராயன் மலைத்தொடர் பகுதியைச் சேர்ந்ததாகும். பீமாரப்பட்டி பகுதியில் உருவாகி தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் ஒரு ஆறு இப்பகுதியில் ஓடுகிறது.

மலையின் சமவெளிகளில் வாழத்தொடங்கிய புதிய கற்கால மனிதன், மலையடிவாரங்களிலும் பின்னர் தன் குடியேற்றங்களை அமைத்தான். சவ்வாது, கல்வராயன் மலைப் பகுதிகளிலிருந்து தென்பெண்ணை ஆற்றுப் படுகைகளில் புதிய கற்கால மக்கள் பரவி இருந்திருப்பதை இங்குக் கிடைத்த கைக்கோடரிகள் மூலம் ஊகிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். மாணவி சௌந்தர்யாவை தலைமை ஆசிரியர் கு.கொளந்தை மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.