Skip to main content

குதிரை படத்துடன் 800 ஆண்டுகள் பழமையான காரணவர் கல்வெட்டு கண்டுபிடிப்பு...

Published on 05/10/2020 | Edited on 05/10/2020

 

800 year old inscription with horse image ...

 

 

கோட்டுருவமாக வரையப்பட்ட குதிரையின் படத்துடன் காரணவர் பெயர் குறிப்பிடும் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவை சேர்ந்த புரசலூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவை சேர்ந்த புரசலூர் கண்மாயில் சிதறிக் கிடக்கும் கற்களில் பழமையான கல்வெட்டுகள் இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்கள் செ.இரமேஷ், த.ஸ்ரீபால் ஆகியோர் கொடுத்த தகவலின்பேரில், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அக்கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு செய்தார். 

 

இதுகுறித்து இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, “புரசலூர் கண்மாய் பகுதியில் பழமையான ஒரு கோயில் இருந்து அழிந்து போயிருக்கிறது. அக்கோயில் கற்கள், கண்மாயில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இக்கற்களை பல ஆண்டுகளுக்கு முன் இவ்வூர் கண்மாய் மடைகள் கட்டப் பயன்படுத்தியுள்ளனர். சமீபத்தில் புதிதாக மடை கட்டுவதற்காக பழைய கற்களை அகற்றியபோது அதில் கல்வெட்டுகள் இருந்ததை அவ்வூரைச் சேர்ந்த ரமேஷ், ஸ்ரீபால் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். 

 

800 year old inscription with horse image ...

 

கண்மாயில் சிதறிக் கிடப்பவை, கோயில் கருவறையின் வெளிப்பகுதியில் உள்ள ஜகதி, குமுதம், யாளிவரி, போதிகை, கபோதத்தின் நாசிக்கூடுகள் ஆகியவற்றின் உடைந்த பகுதிகள் ஆகும். இதில் ஜகதியில் இரண்டும், குமுதத்தில் ஒன்றுமாக மூன்று கல்வெட்டுகள் உள்ளன. முழுமையாக இல்லாமல் துண்டுகளாக உள்ள இக்கல்வெட்டுகள் கி.பி. 13ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை ஆகும். 

 

குமுதத்தின் உடைந்த கல்லில் உள்ள 4 வரி கல்வெட்டில், நிலத்தின் எல்லை குறிப்பிடப்படுகிறது. எனவே இவ்வூர் கோயிலுக்கு நிலதானம் வழங்கி இருப்பதை அறியமுடிகிறது. இதில் வருள்வாசகநல்லூர் எனும் ஊர் குறிப்பிடப்படுகிறது. இது திருவருள்வாசகநல்லூராக இருக்கலாம். 

 

ஜகதியில் இருந்த இரு துண்டுக் கல்வெட்டுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. இதில் ஒன்றில் இத்திகுளத்தராயன் என்பவர் பெயரும், அஞ்சு நிலையூர்க்கு சமைந்த காரணவர் பெயரும், அடுத்ததில் வெண்கலம் பறித்து மண்கலம், சுபமஸ்து ஆகிய சொற்களும் காணப்படுகின்றன. இதில் காரணவர் பெயருக்குக் கீழே குதிரையின் படம் கோட்டுருவமாக  வரையப்பட்டுள்ளது. 

 

காரணவர், படைக்காரணவர் எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுபவர்கள் படை வீரர்கள் ஆவர். இக்கல்வெட்டில் குதிரை படம் வரையப்பட்டிருப்பதன் மூலம் அவர்களை குதிரைப்படை வீரர்களாக கருதலாம். அருப்புக்கோட்டை, இலுப்பைக்குடி, பள்ளிக்குறிச்சி, திருமோகூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்த காரணவர் பற்றி கி.பி.13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் சொல்லப்படுகிறது. படைவீரர்களுக்குத் மன்னர்கள் தானமாக வழங்கிய பள்ளிக்குறிச்சி என்ற ஊரை காரணவர்கள் நிர்வகித்து வந்துள்ளனர். 

 

கல்வெட்டில் சொல்லப்படும் அஞ்சு நிலையூர் மதுரை அருகிலுள்ள நிலையூராக இருக்கலாம். ஐந்து வகையான நிலைப்படையினர் தங்கியிருந்த ஊர் என்பதால் இவ்வூருக்கு இப்பெயர் வந்துள்ளது. அஞ்சு நிலையூரைச் சேர்ந்த  காரணவர்கள் புரசலூர் கோயிலுக்கு தானம் வழங்கி இருக்கலாம். 

 

800 year old inscription with horse image ...

 

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகிலுள்ள மூக்கையூர், நரிப்பையூர் இடையே குதிரைமொழி என்ற இடம் உள்ளது. இது பாண்டியர் காலத்தில் அரபுநாட்டு குதிரைகள் வந்திறங்கிய ஒரு துறைமுகமாக இருந்திருக்கலாம். இங்கு இறங்கிய குதிரைகளை சாயல்குடி வழியாக மதுரை கொண்டு செல்லும் பெருவழிக்கு அருகில் புரசலூர் உள்ளது. மேலும் மேலக்கிடாரம், நரிப்பையூர் உள்ளிட்ட சாயல்குடியின் கடற்கரைப் பகுதியிலும், அருப்புக்கோட்டை, மதுரையிலும் காரணமறவர்கள் என்பவர்கள் தற்போதும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

மக்கள் செலுத்தவேண்டிய கடமை உள்ளிட்ட வரிகளை செலுத்தாமல் இருப்பவர்களின் வீட்டுக்குள் நுழைந்து, வெண்கலத்தால் ஆன பாத்திரங்களை கைப்பற்றியும், மண்ணால் ஆன பாத்திரங்களை உடைத்தும் வரிவசூல் செய்யும் வழக்கம் இருந்துள்ளதை வெண்கலம் பறித்து மண்கலம் தகத்தும் என்ற கல்வெட்டு வரிகள் மூலம் அறிய முடிகிறது. மேலும் இவ்வூர் தொடக்கப்பள்ளி அருகில், கி.பி.18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, கணவன் இறந்தபின் உடன்கட்டை ஏறிய பெண்களுக்கான இரு சதிக்கற்கள் உள்ளன” இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.