Skip to main content

திராவிடத் தெருவின் கதைக்கு உலகளாவிய அங்கீகாரம்! அமேசான் போட்டியில் நக்கீரன் பொறுப்பாசிரியர் முதலிடம்!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

2k kid thiruvalluvar aandu book won in amazon pen to publish


இரண்டு வருடங்களுக்கு முன்பு 'அமேசான் பென் டூ பப்ளிஷ்' என்றால் அமேசானில் விற்கப்படும் ஏதோ ஒரு பொருள் என்றுதான் பலரும் நினைத்திருப்பர். ஆனால் சென் பாலன் என்ற மருத்துவர் ஒருவர் தனது நூலை அதில் பதிவேற்றி, முதல் பரிசாக ஐந்து லட்ச ரூபாய் வென்ற பிறகுதான் தமிழ் இணைய உலகத்தின் கவனம் இந்தப் போட்டியின் மீது திரும்பியது.  
 


பல தளங்களிலும் வலுவாக கால் பதித்து வரும் அமேசான், இ புக் அல்லது இணையவழி புத்தகங்கள் மீது வாசகர்களின் கவனத்தை ஈர்க்க உருவாக்கியது தான் இந்தப் போட்டி. முதல் வருடம் பெரிய போட்டியோ ஆரவாரமோ இன்றி நடந்து முடிந்தது பென் டூ பப்ளிஷ். ஆனால் அடுத்த வருடம் (2019) பொறி பறந்தது என்று சொன்னால் மிகையாகாது. இரண்டாவது வருடமே இப்படியொரு வரவேற்பு தமிழில் வரும் என்று அமேசானே எதிர்பார்த்திருக்காது. அந்தளவிற்கு எழுதிக் குவித்துவிட்டார்கள் இணையத் தமிழர்கள்.  

முதலில் எப்படிப்பட்ட போட்டி இது என்று பார்த்துவிடுவோம். புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டு வெளியாகும். மக்கள் வாங்கி படிப்பார்கள். அதை வைத்து சில போட்டிகள் நடக்கும். சிறந்த புத்தகங்களுக்கு விருதுகள் கொடுக்கப்படும். இந்த வழக்கத்தை நாம் பார்த்திருப்போம். இதை அப்படியே இன்டர்நெட் தளத்திற்கு எடுத்து வந்தது அமேசான். அதுதான் 'பென் டூ பப்ளிஷ்'. அதாவது நீங்கள் ஒரு புத்தகம் எழுத வேண்டும். அது பத்தாயிரம் வார்த்தைகளுக்கு மேற்பட்ட நீண்ட வடிவமாகவோ பத்தாயிரம் வார்த்தைகளுக்குட்பட்ட சிறிய வடிவமாகவோ இருக்கலாம். புத்தகம் புனைவு, கட்டுரைத் தொகுப்பு என எந்த வகையிலும் இருக்கலாம்.  

இப்படி எழுதி முடிக்கப்பட்ட புத்தகத்தை, அமேசான் தளத்திலுள்ள கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங் என்ற சுட்டியில் சென்று நேரடியாக அமேசானில் பதிவேற்ற வேண்டும். இப்படி பதிவேற்றப்படும் புத்தகங்கள் அனைத்தும் அமேசான் கிண்டில் (இ புத்தகங்களுக்கான அமேசானின் தனிச்செயலியில் இதனைப் பிரபலப்படுத்தத் தான் இந்தப் போட்டியே) செயலியில் பதிவாகிவிடும்.  

இப்படிப் பதிவேற்றப்பட்ட இ புத்தகங்கள் அனைத்தும், பதிவேற்றப்பட்ட நாளில் இருந்து முதல் சுற்றில் கலந்து கொள்ளும். இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நாள் வரையில் இந்த முதல் சுற்று நடைபெறும். இந்தச் சுற்றில் புத்தகங்களுக்குக் கிடைக்கப்படும் விமர்சனங்கள், புத்தகங்களின் விற்பனை, ரேட்டிங் போன்ற விஷயங்களை வைத்து அடுத்த சுற்றுக்கு ஐந்து புத்தகங்கள் தேர்வாகும். அந்த ஐந்து புத்தகங்களில் இருந்து சிறந்து மூன்று புத்தகங்களை நடுவர்கள் தேர்ந்தெடுப்பர். இதுதான் அமேசானின் பென் டூ பப்ளிஷ் போட்டி. 

இதன் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்தப் போட்டியில் நீங்கள் கலந்து கொள்ள முடியும். அதே சமயம், இத்தகைய பரபரப்பான போட்டி உலகளவில் மூன்றே மூன்று மொழிகளில் தான் நடக்கிறது. ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ். வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசு, இதர பரிசுகள் என பல கௌரவங்களை வழங்குகிறது அமேசான்.  

 

 

 

2k kid thiruvalluvar aandu book won in amazon pen to publish

 

இதன் இந்த வருடப் போட்டியில் தான் பொறி பறந்தது. அந்தளவிற்குப் புத்தக எண்ணிக்கையிலும், விற்பனையிலும், விமர்சனங்களிலும் மற்ற மொழிகளை விட தமிழ் நின்று விளையாடியது. உலகின் பல மூலைகளில் இருந்தும் எண்ணற்றோர் கலந்து கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்தப் போட்டி முடிவுகளில்தான் தமிழில், பத்தாயிரம் வார்த்தைகளுக்குட்பட்ட புத்தகப் பிரிவில் முதல் பரிசை வென்றுள்ளார் 'நக்கீரன்' பொறுப்பாசிரியர் திரு. கோவி. லெனின். இதற்கு அவர் எழுதிய புத்தகம் ‘2 கே கிட் – திருவள்ளுவர் ஆண்டு’.  

இந்த தலைமுறைக்கு பெரிதும் பரிச்சயப்படாத ஆனால் தெரிந்து கொண்டாக வேண்டிய வரலாற்றை இயல்பான ஒரு புனைவாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். மொத்த குறுநாவலுமே தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு தெருவைப் பற்றியதுதான். ஒரு தெரு. தமிழகத்தில் எங்கு வேண்டுமாலும் இருக்கக் கூடிய ஒரே தெரு. வருடங்கள் உருண்டோட உருண்டோட, எத்தகைய மாறுதல்களைச் சந்திக்கிறது. அதன் மனிதர்களுக்கு என்னென்ன முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான் இந்தக் கதை.  

ஒரு தெருவை வைத்து என்ன பெரிதாகச் சொல்லிவிட முடியும் என்று தோன்றலாம். ஆனால் இந்தப் புத்தகம் தனித்து நிற்பதற்கான காரணமே இதுதான். அந்த ஒரு தெருவின் கதை மூலமாக ஒட்டுமொத்த தமிழ் நாட்டின் சமூக, பொருளாதார மாற்றங்களும் முன்னேற்றங்களும் தெளிவாகப் பேசப்பட்டிருக்கிறது. குறிப்பாக திராவிடக் கட்சிகளின் வரவிற்குப் பிறகு சமூகத்தின் பலவேறுபட்ட பிரிவினரும் எப்படிச் சமத்துவ ஏணியின் அடுத்தடுத்த படிகளுக்கு ஏறினர், எப்படிப் பழைய பஞ்சாங்கங்கள் மாற்றி எழுதப்பட்டன, சமூக பொருளாதார மாற்றங்கள் எப்படிச் சம வாய்ப்பையும் முன்னேற்றத்தையும் வழங்கின என்பதற்கான ஒரு ஆதாரமாக நிற்கிறது இந்தப் புத்தகம்.  

ஆனால் இது எதுவும் பிரச்சார நேரங்களில் சொல்லப்படும் சாதனைகளைப் போல ஒன்று, இரண்டு என பாயிண்ட் பை பாயிண்ட்டாகச் சொல்லப்படவில்லை. சமூக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு தெரு. அதன் மனிதர்கள். ஆண்டுகள் கடக்க கடக்க, அந்தத் தெருவிற்கும் அதன் மனிதர்களுக்கும் நிகழும் மாற்றங்கள். அதன் வழியாகக் களையப்படும் ஏற்றத்தாழ்வுகள். நிமிர்ந்தெழும் சமத்துவம். இதன் வழியாகவே திராவிடக் கட்சிகள் தமிழ்ச் சமூகத்தில் கொண்டு வந்த முன்னேற்றங்களைச் சொல்கிறது 2 கே கிட்.  

 

2k kid thiruvalluvar aandu book won in amazon pen to publish

 

ஆசிரியர் கோவி. லெனின் இதற்காகப் பயன்படுத்தியிருக்கும் கதாப்பாத்திரங்களும், குறிப்பிட்டு சொல்லியிருக்கும் நிகழ்வுகளும் சுவாரசியமானவை மட்டுமல்ல ஆழமானவையும் கூட. இரண்டடுக்கு வீடு, கழிவறை கூட இல்லாத வீடு, பூசாரி, நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் என தமிழ்நாட்டில் கடந்த நாற்பதாண்டுகளில் வாழ்ந்த எவருக்கும் எளிதில் அந்நியோன்யமாகி விடக்கூடிய ஒரு தெருவையும் கதாப்பாத்திரங்களையும் கொண்டே இந்தக் கதையைக் கட்டமைத்துள்ளார்.  
 

http://onelink.to/nknapp


சாலைகள், கழிவு கொட்டகைகள், பின் கழிவறை எனத் தெருவில் நடக்கும் மாற்றங்களும், இட ஒதுக்கீட்டில் படிப்பு, வெளிநாட்டு வேலை என மனிதர்களின் வாழ்வில் நடக்கும் மாற்றங்களும் திணிக்கப்படாமல் தன்னியல்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு புனைவிற்கேயுரிய சுவாரசியம் குறையாமலும் சொல்லவேண்டிய கருப்பொருளின் ஆழம் அகலாமலும் எழுதப்பட்டுள்ளது "2 கே கிட் – திருவள்ளுவர் ஆண்டு". புத்தகம் முழுக்க இழையோடியபடி வரும் நகைச்சுவை இதன் மற்றோர் சிறப்பம்சம்.

இப்படி ஆரம்பத்தில் இருந்து சிரித்து ரசித்து படிக்க வைக்கும் புத்தகம், அதன் கடைசிப் பக்கத்தில் மிகப்பெரும் உணர்வலைகளை நெஞ்சில் ஏற்படுத்துகிறது. தமிழ்ச் சமூகத்தின் சமகால அவலங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு அதை இந்தக் கதையில் போக்கோடு இயல்பாகச் சேர்த்ததோடு மட்டுமல்லாமல், இறுதி வரியின் மூலம் மறதி தட்டிப்போன நம் மனக்குளத்தில் பெரும் கல்லைப் போட்டு சஞ்சலத்தை ஏற்படுத்துவதென்பது ஒரு புனைவாசிரியரின் கைவண்ணம் மட்டுமல்ல, ஒரு சமூக ஆசிரியரின் அக்கறையும் கூட. இரண்டையும் செழுமையமாக நிறைவேற்றியிருக்கிறார் ஆசிரியர் கோவி. லெனின்.  

நாம் பார்த்த, நாம் நடந்த, நாம் வளர்ந்த, நாம் வாழ்ந்த ஒரு தெருவின் கதையைப் படிப்பதே மிக நெகிழ்வான ஒரு வாசிப்பனுபவம். அப்படிப்பட்ட ஒரு தெருவின் கதைக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்திருப்பதென்பது மகிழ்ச்சி மட்டுமல்ல, பெருமையும் கூட. இதனைச் சாத்தியப்படுத்திய 'நக்கீரன்' பொறுப்பாசிரியர் கோவி. லெனின் அவர்களுக்கு 'நக்கீரன்' சார்பில் எண்ணற்ற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். நமது திராவிடத் தெருக்களின் கதையை உலகின் பலகோடி தெருக்களுக்கு கொண்டு சென்று மகுடம் சூட்டியதற்கு அந்தத் தெருக்களின் வாழ்த்துகளும் கோவி.லெனினுக்கு உரித்தாகும்.

 

 

Next Story

சென்னையில் விர்ச்சுவல் ஷாப்பிங்; அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

 Amazon brings its much-celebrated Amazon Xperience Arena to Chennai

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  அமேசான் எக்ஸ்பீரியன்ஸ்  அரங்கை சென்னைக்கு கொண்டு வந்திருக்கிறது;  வணிக வாடிக்கையாளர்களுக்கு மொத்த கொள்முதல் மீது கூடுதல் சேமிப்பை அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 வழங்கியிருக்கிறது

 

பண்டிகைக் காலத்தில் சென்னையில் வணிக வாடிக்கையாளர்கள் வாகனம், ஃபர்னிச்சர்ஸ், லேப்டாப் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்கு அமேசான் எக்ஸ்பீரியன்ஸ் அரீனா (Amazon Xperience Arena)  மூலம் சென்னையில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் செய்வதில் பெரும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறது. அதாவது,  Xperience Arena  என்பது அமேசானில் இடம்பெறும் பொருட்களுக்கு உயிர்கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு விர்சுவல் இடமாகும். 

 

இந்நிகழ்வானது, சென்னை எஸ்ஆர்எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. அமேசான் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை அனைவருக்கும் வழங்கியது. தவிர, ஊடகங்கள், இணைய பிரபலங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த பிராண்டுகளை ஆராய்வதற்கும், தற்போது நடைபெற்று வரும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் அற்புதமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பெறுவதற்கும் ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்கியது.

 

அமேசான் எக்ஸ்பீரியன்ஸ் அரீனா ஏழு கவர்ச்சிகரமான மற்றும் இண்டர்ஆக்டிவ் மண்டலங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது, வாடிக்கையாளர்களுக்கு உற்சாகமான போட்டிகளில் பங்கேற்கவும், அற்புதமான அமேசான் பரிசுகளை வெல்லவும் உதவியது. ஸ்மார்ட்ஃபோன்கள், மடிக்கணினிகள், பெரிய உபகரணங்கள், தொலைக்காட்சிகள், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட வகைகளில் பரந்த தேர்வுகளில் இதுவரை பார்த்திராத ஒப்பந்தங்களை அனுபவிக்கும் வாய்ப்பையும் இது வழங்கியது.

 

இதுகுறித்து அமேசான் இந்தியா இயக்குநர் சுசித் சுபாஸ் பேசுகையில், “அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் 2023-ல் சென்னையில் உள்ள அமேசான் எக்ஸ்பீரியன்ஸ் அரங்கில் கிடைக்கும் அற்புதமான சலுகைகள் மற்றும் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  சென்னையில் வணிக வாடிக்கையாளர்கள் அமேசான் பிசினஸிலிருந்து கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து ஷாப்பிங் செய்து வருகின்றனர். இந்த பண்டிகைக் காலத்தில், வணிக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகள், அற்புதமான சலுகைகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் எங்களது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023-ன் போது அவர்கள் அதிகமாக ஷாப்பிங் செய்யவும் மேலும் சேமிக்கவும் உதவுகிறோம்" என்றார். 

 

 

Next Story

அமேசான் காட்டில் 17 நாட்கள் தவித்த குழந்தைகள்; நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

amazon forest flight incident four child recover safety

 

கொலம்பியாவில் உள்ள அமேசான் வனப்பகுதியில் இருந்து தனி விமானத்தில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு கடந்த 1 ஆம் தேதி ஒரு தம்பதியினர் அவர்களது 11 மாதக் குழந்தை உட்பட 4 குழந்தைகளுடன் பயணம் செய்தனர். இவர்கள் சென்ற விமானமானது அமேசான் வனப்பகுதிக்கு மேலே வான்வெளியில் பறந்தபோது விமானி தங்களது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்திலேயே விமானமானது, விமான நிலையத்துடன் தனது கட்டுப்பாட்டை இழந்தது.

 

இந்நிலையில் காணாமல் போன விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்தது. மேலும் இந்த தேடுதல் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த 15 ஆம் தேதி விமானத்தின் சில பாகங்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்ட தேடுதல் பணியில் விமானத்தில் பயணம் செய்த விமானி மற்றும் குழந்தைகளின் தாய் மற்றும் தந்தை ஆகிய மூவரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

 

மேலும் இந்த விமானத்தில் பெற்றோருடன் பயணம் செய்த குழந்தைகள் பற்றிய விபரம் ஏதும் தெரியாத நிலையில் தொடர்ந்து தேடுதல் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் விபத்து நிகழ்ந்த 17வது நாளில் 11 மாத குழந்தை உள்பட 3 குழந்தைகளை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகள் கடந்த 17 நாட்களாக வனப்பகுதியிலேயே சிறிய அளவில் அங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு குடில் போன்று அமைத்து தங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து கொலம்பியா அதிபர் ட்விட்டரில், இந்த தேடுதல் முயற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.