அரசியல் கட்சியினரின் பாராட்டுக்கள், உறவினர்கள், நண்பர்களின் வாழ்த்துக்கள், மீடியாக்களின் பேட்டிகள், சமூக ஊடகங்களில் வைரலாகிக்கொண்டேயிருக்கும் புகைப்படங்கள், இடைவிடாது அடித்துக்கொண்டேயிருக்கும் செல்போனின் ரிங்டோன் என திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறார் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயர் பதவியை ஏற்றிருக்கும் 21 வயதான கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன்.
அண்மையில் நடந்த கேரள உள்ளாட்சித் தேர்தலில் இடது சாரிகளின் எல்.டி.எப்.பின் உறுப்பு அணிகளான டி.ஒய்.எப்.ஐ., எஸ்.எப்.ஐ. உள்ளிட்ட அணிகள் தரைச்சக்கரமாய் சுற்றி தேர்தல் பணிகளை மேற்கொண்டிருக்கின்றனர். அதில் 20 சதம் பேர் இளைஞர் பட்டாளம்.
விளைவு உள்ளாட்சித் தேர்தலில் முதன்மை ஸ்தானத்திற்கு வந்த எல்.டி.எப். அணி குறிப்பாக மாநிலத்திலுள்ள 6 மாநகராட்சிகளில், ஐந்து மாநக ராட்சிகளைத் தன் வசப் படுத்தியது. திருவனந்தபுரம் மாநகராட்சியின் மொத்த முள்ள 100 வார்டுகளில் 55 வார்டுகளை எல்.டி.எப். அணியும், பா.ஜ.க. 35 வார்டுகளையும், காங்கிரஸ் 10 வார்டுகள் என்ற அளவில் கைப்பற்றின.
இதில் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக யாரைத் தேர்வுசெய்வது என்பது பற்றிய நிலைப்பாடு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட் டத்தில் ஆய்வுக்கு வந்தது.
விவாதத்தின்போது கட்சியின் சாதாரணத் தொண்டனாகப் பணியாற்றி சி.பி.எம்.மின் மேல்மட்டப் பொறுப்புவரை வளர்ந்தவரும் எந்தப் பிரச்சனை என்றாலும், துணிச்சலாக அணுகுபவருமான 21 வயது கல்லூரி மாணவியான ஆர்யா ராஜேந்திரனை மேயராக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. 28ந் தேதி இந்தியாவின் இளம் மேயராகப் பதவி ஏற்றார் ஆர்யா.
திருவனந்தபுரத்திலுள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. மற்றும் சட்டம் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவி ஆர்யா ராஜேந் திரன். அவரது குடும்பம் வாடகை வீட்டில்தான் வசிக்கின்றது. தந்தை ராஜேந்திரன் எலக்ட்ரிஷியன். தாய் ஸ்ரீலதா வோ எல்.ஐ.சி. ஏஜெண்ட். பூஜப்புரை கேசவதேவ் சாலையில் உள்ள சாதாரண ஒரு வாடகை வீட்டில் வசிக் கும் அவரை சந்தித்தோம்.
""வேலை பார்த்தால்தான் பாடு கழியும் குடும்பம் எங்களது. 12 வயதிலேயே கட்சிப் பயணம் தொடங்கியது. பின்பு பார்ட்டியின் உறுப்பினர். மாணவ அணியான எஸ்.எப்.ஐ., அடுத்து டி.ஒய்.எப்.ஐ. என்று பொறுப்பு களுக்குப் பிறகு தற்போது இந்தியக் கூட்டமைப்பின் மாவட்டப் பொறுப்பிலிருக்கின்றேன். எனக்கு எல்லாமே பார்ட்டிதான். கட்சியின் வேலைகள், மாணவர்களுக்கான பிரச்சினைகளை ரொம்பச் செய்திருக்கேன். என் உடன்பிறந்த அண்ணன் இஞ்சினியரிங் முடித்து இப்போது துபாயில் பணி.
அப்பா, பார்ட்டியின் கிளை உறுப்பினராக இருப்பதோடு திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளுக்கு சின்ன வயசில் என்னையும் அண்ணன் அரவிந்தனையும் மறக்காமல் கூட்டிட்டுப் போய் கையில் கொடியையும் தருவார். எனக்கு அம்மா, அப்பா பிறகு தெரிந்தது எல்லாமே பார்ட்டிதான். கட்சியில் உறுப்பினராக இருந்து கடைசி வரை விசுவாசமாக இருக்கணும்னுதான் நினைத்தேனே தவிர இவ்வளவு பெரிய பொறுப்புக்கு ஆசைப்படவில்லை.
பார்ட்டி என்மீது நம்பிக்கை வைத்து எங்களின் 47-வது வார்டான முடவன்முகல் வார்டில் போட்டியிட வைத்தது. எங்கள் வார்டில் சி.பி.எம். காங்கிரஸ், பி.ஜே.பி., சுயேட்சை என்று நான்குமுனைப் போட்டி. கட்சி மற்றும் எனது தீவிரச் செயல்பாடுகளால் 2863 வாக்குகள் பெற்று 549 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறவைத்தார்கள் என் வார்டு ஜனங்க.
இந்த தேர்தல்ல எங்க பார்ட்டி எல்.டி.எப்.ஐ.யை இல்லாமல் பண்ணனும்னு காங்கிரஸ் ஒரு பக்கமும், மத்திய பி.ஜே.பி.அரசு, சி.பி.ஐ., ஐ.டி என்று விசாரணைத் துறையையும் ஏவியது. பல நெருக்கடிகள் கொடுத்தார்கள். எதிர்க்கட்சிகளின் நெருக்கடிகளையும் தாண்டி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து கேரளாவில் இவ்வளவு பெரிய வெற்றியைக் குடுத்தாங்க.
பி.எஸ்.சி.க்குப் பிறகு எம்.பி.ஏ. முடிச்சி சிவில் சர்வீஸ் எழுதி ஐ.பி.எஸ். ஆகணும்னுதான் ஆசை. அண்ணன் அரவிந்தன் ராணுவ வீரராக ஆசைப்பட்டான். அது அவனுக்கு நிறைவேறாமல் போயிட்டு. வயதில் குறைந்த, அனுபவமில்லாத ஒருவரை மேயராக்கியது சரியானு பலர் கேள்வியெழுப்புகிறார்கள். அனுபவம் என்பது வயதில் இல்லை. நம்முடைய செயல்பாட்டில்தான் இருக்கிறது. படித்துக்கொண்டே மேயர் பதவியையும் பார்க்க முடியுமா என்கிறார்கள்? படித்துக்கொண்டேதான் அரசியலிலும் தேர்தலிலும் ஈடுபட்டேன். படித்துக்கொண்டே மக்கள் பணியையும் என்னால் முமுமையாக செய்யமுடியும்''’என்றார் சவுண்டான குரலில்.
""மேயராக என்னுடைய முதல் பணியே அனைத்து வார்டுகளிலும் ஆரம்ப சுகாதார நிலையத்தை கொண்டுவருவதுதான். ஏனென்றால் குழந்தைகள், வயதானவர்கள் சிட்டியில் இருக்கும் மருத்துவ மனைகளுக்கு உடனடியாக செல்வதற்கு கஷ்டமாக உள்ளது. கோவிட் காலம் முடிஞ்சு பள்ளிகள் திறக்கும்போது அச்சத்தைத் தவிர்க்க மாணவ-மாணவிகளை வரவேற்பதற்கு திட்டம் ஒன்று வைத்திருக்கிறேன். என்னுடைய 47-வது முடவன்முகில் வார்டிலிருந்து என்னை முதலில் வாழ்த்தியவர் நடிகர் மோகன்லால்''’’ என்றார்.
ஆர்யா மட்டுமல்ல, இடதுசாரிகள் சார்பில் பல இளம் பிரதிநிதிகள் இம்முறை கேரளாவெங்கும் கலக்கியுள்ளனர்.
-பரமசிவன், மணிகண்டன்
படங்கள் : ப.இராம்குமார்