1898-ஆம் ஆண்டு லண்டனை தலைமையிடமாக கொண்ட ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்தால் ரோடியர் மில் என்ற 26 ஏக்கரில் தொடங்கப் பட்ட பஞ்சாலையை மூடும் மனநிலைக்கு வந்துவிட்டது மத்திய அரசு. நிர்வாகச் சீர்கேடு காரணமாக 1983-ல் மூடப்பட்ட இந்த மில்லை, தனியாரிடமிருந்து வாங்கி அரசுடைமை ஆக்கினார் ராஜீவ்காந்தி. எனினும் புதுச் சேரி நெசவாலை கழகத்தில் நடைபெற்ற நிர்வாகச் சீர்கேடுகள், குளறுபடிகளால் நஷ்டத்தை சந்தித்துவந்தது.
2011 ஆம் ஆண்டு தானே புயலால் ஏ, பி யூனிட்கள் பெரும் சேதமடைந்து மூடப் பட்டன. அங்கு வேலை செய்த வர்களுக்கு லே ஆப் அடிப் படையில் பாதிச் சம்பளம் வழங்கப்பட்டது. மேலும் அரசு அறிவித்த தன்விருப்ப ஓய்வுத் திட்டத்தில் (வி.ஆர். எஸ்.) 80 சதவீதம் தொழி லாளர்கள் விண்ணப்பித்ததால் அவர்களுக்கான இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் ஏ.எஃப்.டி. மில்லை வருகிற 30.04.2020 முதல் மூட மில்லின் மேலாண் இயக்குனரான பிரியதர்ஷினி அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.
மில்லை மூடுவதற்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடிதான் காரணமென குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் நாராயணசாமி, “""ஏ.எஃப்.டி. மில் தொழிலாளர்களுக்கு 13 மாத சம்பளம் வழங்க மானியம் கேட்டு கவர்னருக்கு கோப்புகள் அனுப்பினோம். ஆனால் மில்லை மூடினால்தான் நிதி ஒதுக்குவதாக தெரிவித்துவிட் டார். மில்லை மூடவேண்டுமென கிரண்பேடி தன்னிச்சையாக முடிவெடுத்து, அதிகாரிகளுக்கு அழுத்தம்கொடுத்து நோட் டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. மில்லை மூடுவதற்கு கவர்னருக்கு அதிகாரமில்லை. அமைச்சரவை யின் முடிவைத்தான் செயல் படுத்துவோம்'' என்கிறார்.
இதுகுறித்து ஏ.ஐ. டி.யு.சி.வின் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் தொழிற்சங்க செயலாளர் அபிஷேகமோ, “""தற்போது ஏ.எஃப்.டி, சுதேசி, பாரதி ஆகிய 3 மில்களிலும் 900 நிரந்தரத் தொழிலாளர்களும், 350 சி.எல். தொழிலாளர்களும் பணி யாற்றுகின்றனர். கடந்த 2013-லிருந்து "லே ஆப்' எனப் படும் பாதிச் சம்பளத்தில் தொழிலாளர்கள் பணியிலிருக் கின்றனர். இதனை மூடுவதற்குப் பதிலாக தொழில் திறனுள்ள அலுவலர்களை கொண்டு புதுப்பொலிவுடன் இயக்க முடியும். ஏ.எஃப்.டி. மில்லின் "பி' யூனிட்டில் லட்சுமி ஸ்ரீரூட்டி எனும் இயந்திரத்தில் 250 தறிகள் பாகுநூல் ஏற்றியபடியே 7 ஆண்டுகளாக இருக்கிறது. அதை அப்படியே ஓட்டி உற்பத்தி செய்தால்கூட 2 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். எனவே வி.ஆர்.எஸ். கேட்கும் பழைய தொழிலாளர்களுக்கு மட்டும் வி.ஆர். எஸ். கொடுத்து விட்டு மீதமுள்ள ஆட்களைக் கொண் டும், புதிய ஆட் களை அமர்த்தியும் 3 ஆலைகளையும் மீண்டும் இயக்கலாம்.. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பாக அனைத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்'' என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீமோ, ""புதுச்சேரியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதாகக் கூறும் கவர்னர் கிரண்பேடி, ஏ.எஃப்.டி மில்லை மூடத் துடித்துக்கொண்டிருக்கிறார். எங்கள் கட்சி சார்பில் முதலமைச்சரிடமும், கவர்னரிடமும் ஒரு திட்ட அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறோம். அதன்படி மத்திய அரசு உடனடியாக 300 கோடி நிதியை ஏ.எப்.டி. மில்லை புனரமைக்க ஒதுக்கி, 1000 கோடி ரூபாய்க்கு வங்கி உத்திரவாதம் வழங்கினால் போதும். கால் சதவீத வட்டியில் மில்லுக்கான நவீன தளவாட இயந்திரங்களை தருவதற்கு டென்மார்க் நிறுவனங் கள் தயாராக உள்ளன. அதைப் பயன்படுத்தி தொழில்நுட்பம் தெரிந்த அதிகாரிகள் மேற்பார்வையில் 5 வருடத்தில் மில்லை லாபகரமாக இயக்கமுடியும்'' என்கிறார்.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் சாமிநாதனோ, “""மில்லை மூடி அந்த இடத்தை ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ரியல் எஸ்டேட் செய்வதற்கு திட்டம் தீட்டியுள்ளனர். ஏ.எஃப்.டி மில் காங்கிரஸ் அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் நலிவடைந் துள்ளது. இதை சரிசெய்து இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவது மாநில அரசின் கடமையாகும்'' என்கிறார்.
மத்திய அரசும், மாநில அரசும் பொதுத்துறை அமைப்புகளை மூடுவதிலும் காலிபண்ணுவதிலும் காட்டும் அக்கறையில் கால்பங்கு காட்டினாலே இங்கே எந்த பொதுத்துறை நிறுவனங்களையும் மூட வேண்டியிருக்காது.
-சுந்தரபாண்டியன்