மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செய லாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 12 வியாழனன்று காலமானார். அவருக்கு வயது 72. நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். நுரையீரல் தொற்று பாதிப்பும் ஏற்பட்டதால் ஐ.சி.யு.வில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவரது உயிர்பிரிந்தது. சீத்தாராம் யெச்சூரியின் விருப்பப்படி அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படுகிறது.

தலைசிறந்த மார்க்சிய சிந்தனையாளராகவும், பத்திரிகையாளராகவும், கட்டுரையாளராகவும் திகழ்ந்த யெச்சூரி, 1952ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கத்து. அவரது பள்ளிப்படிப்பை ஐதராபாத்திலுள்ள ஆல் செயிண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியிலும், டெல்லி பிரசிடெண்ட் எஸ்டேட் பள்ளியிலும் முடித்தார். சி.பி.எஸ்.சி. தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த சாதனையாளர். செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டத்தையும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும் முடித்தார். தமிழ், இந்தி, தெலுங்கு, பெங்காலி மற்றும் மலையாள மொழிகளில் சரளமாகப் பேசும் திறமைபெற்றவர் யெச்சூரி.

sitram

கம்யூனிச சித்தாந்தத்தில் பற்றுக்கொண்ட யெச்சூரி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே மாணவர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தீவிரமாகச் செயல்பட்டவர். பின்னர், இந்திய மாணவர் கூட்டமைப்பில் (எஸ்.எஃப்.ஐ.) இணைந்து செயல்பட்டார். அவசர நிலை பிறப்பிக்கப் பட்டபோது அதை எதிர்த்து சிறை சென்றவர்களில் இவரும் ஒருவர். 1984ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரானார். அதன்பின் கடந்த 1992ஆம் ஆண்டு பொலிட்பீரோ உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். 2015ஆம் ஆண்டு விசாகப் பட்டினத்தில் நடந்த 21வது கட்சி மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் 5வது பொதுச் செயலாளராகத் தேர்வானார். தொடர்ச்சியாக 2018ஆம் ஆண்டிலும், 2022ஆம் ஆண்டிலும் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2005 முதல் 2017ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி.யாக சிறந்த முறையில் பாராளுமன்றத்தில் பங்களிப்பை செய்துள்ளார். விவசாயிகள், தொழிலாளர்களின் நலன் சார்ந்தும், ஒன்றிய அரசின் மக்கள்விரோத பொருளாதாரக் கொள்கைகளை, மதவெறி அச்சுறுத்தல்களை எதிர்த்தும், நாடாளுமன்றத் திலும், மக்கள் மன்றத்திலும் அவரது குரல் வலுவாக ஒலித்தது.

1996ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி அரசின் குறைந்தபட்சக் கூட்டுத் திட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்குவகித்தவர் யெச்சூரி. தற்போது எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா கூட் டணியை அமைத்ததிலும் இவரது பங்களிப்பு பெரிது. தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித் துள்ளனர்.

Advertisment