அரசியல் துறவறம் செய்திருந்த சசிகலா அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டில் தீவிர அரசியலில் களமிறங்குவற்காக, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் வணங்கிவிட்டு கழகத்தின் பொதுச்செயலாளர் என்ற கல்வெட்டு களேபரத்தை துவக்கியதன் மூலம் அ.தி.மு.க.வில் அதிர்வுகளை ஏற்படுத்தி யிருக்கிறார்.
"காலத்திற்காக காத் திருப்பவன் ஏமாளி; காலத்தைக் கைப்பற்றுபவன் புத்திசாலி' என தொண்டர்களுக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்திய சசிகலா, அ.தி.மு.க. கொடி கட்டிய காரையே தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகிறார். சசிகலாவின் நடவடிக்கை களால் எடப்பாடி தரப்பு செம கடுப்பில் இருக்கிறது.
ஆளுநரை சந்தித்துவிட்டு வந்த எடப்பாடி பழனிச்சாமி, "சசிகலாவுக்கு எதிராகச் சீறினார். அப்போது, அ.தி. மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அ.தி.மு.க.வில் இனி அவ ருக்கு இடம் கிடையாது. தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் எங்கள் தலைமையில் இருப் பதுதான் உண்மை யான அ.தி.மு.க. என அங்கீகரித்துள்ளது' என்று ஏகத்துக்கும் வெடித் தார்.
தனது இல்லம் திரும்பிய எடப்பாடி கட்சியின் மூத்த தலைவர் களோடு விவாதித்தார். அந்த விவாதத்தில், சசிகலாவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுப்பது என தீர் மானித்தனர். மேலும், அ.தி.மு.க.வின் சட்ட விதிகள் குறித்து மீண்டும் ஒருமுறை அந்த விவா தத்தில் அலசப்பட்டிருக் கிறது. அந்த ஆலோசனை களும் விவாதங்களும் முடிந்ததையடுத்து, சசி கலாவுக்கு எதிராக மாம்பலம் காவல்நிலையத் தில் புகார் கொடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
அந்த புகாரில், "பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை யும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அனைத்து உரிமை களையும் அவர் இழந்துவிட்டதால் சட்டத்தை தன் கையிலெடுத்திருக் கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் என அவர் கூறுவது பொதுஅமைதி யை மீறுவதாகும். தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கட்சியின் செயல்பாட்டை சீர்குலைக்க முயற்சிக்கிறார். எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் பொதுச்செயலாளர் என ஒரு நினைவுப் பலகையை திறந்து வைத்திருப்பதன் மூலம் கட்சியின் உறுப்பினர் களிடையே சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப் பிருக்கிறது. இதன்மூலம் ஐ.பி.சி. பிரிவு 419-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை செய்திருக்கிறார் சசிகலா. அவர்மீது சட்ட நடவடிக்கை வேண்டும்''‘ என்று தெரிவித்திருக்கிறார் ஜெயக்குமார்.
இந்த புகார் அ.தி. மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க.வை கைப்பற்ற சட்டரீதியாக சசிகலாவால் முடியுமா? கட்சியை உரிமைகோர தகுதி இருக்கிறதா? என்ற விவாதங்கள் அ.தி.மு.க.வில் சூடுபிடித்து வருகின்றன.
அ.தி.மு.க.வில் தற்போது நடந்து வரும் அக்கப்போர்கள் குறித்து எடப் பாடிக்கு நெருக்கமான அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் ஒருவரிடம் நாம் பேசியபோது, ’"அ.தி.மு.க.வை புறவழியில் யாரும் கைப்பற்றிவிடக்கூடாது என கட்சியின் சட்ட விதிகளை வலிமையாக உருவாக்கியிருக் கிறார் எம்.ஜி.ஆர். கட்சியின் சட்டவிதிகளை கவனித்தால் சசிகலாவால் எப்போதும் அ.தி.மு.க.வை கைப்பற்ற முடியாது' என்பது தெளிவாகும்.
அதாவது, "நீதிமன்றத்துக்கு போகமாட்டேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டால் மட்டுமே 18 வயது பூர்த்தியடைந்த ஆண்-பெண் இருபாலரும் கட்சியின் உறுப்பினராக தகுதிபெற முடியும்' என்பது அ.தி.மு.க.வின் அடிப்படை விதி எண் 5 (பிரிவு 1)-ல் கூறப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் கட்சியின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு சென்றுள்ள சசிகலா, கட்சியில் உறுப்பினராக இல்லை. நீதிமன்றத்துக்கு சென்றதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியையே அவர் இழந்துவிடுகிறார்.
"பொதுச்செயலாளராக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டேன்' என அடிக்கடி சொல்லி வருகிறார் சசிகலா. ஆனால், "பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் அதிகாரம் பொதுக் குழுவுக்கு இல்லை' என கட்சியின் விதிகளில் சொல்லப்பட்டி ருக்கிறது. மாறாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்துதான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும். அப்படியிருக்கையில், பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டதாக சசிகலா சொல்வது எப்படி செல்லும்?
அடுத்து, மறை முகமாகவோ நேரடி யாகவோ வேறு அரசியல் கட்சிகளிலேயோ, சாதி சமூக அமைப்புகளிலோ தொடர்பு வைத்திருப்பவர்கள் கழகத்தின் உறுப்பினராக இருக்கும் உரிமையை இழந்துவிடுகிறார் என சட்ட விதி 5 (பிரிவு 2)-ல் சொல்லப்பட்டுள்ளது.
அந்த வகையில் பார்த்தால், அ.ம.மு.க. என்ற கட்சியை டி.டி.வி.தினகரன் துவங்கியபோது, அதன் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளராக தன்னையும் நிய மித்துதான் தேர்தல் ஆணையத் தில் பதிவு செய்தார் தினகரன். அதனை தேர்தல் ஆணையம் ஏற்கவும் செய்தது. அந்தச் சமயத்தில் இதனை சசிகலா மறுக்கவும் இல்லை.
ஆக, மாற்றுக் கட்சியில் தொடர்பு வைத்திருந்தாலே அ.தி.மு.க.வின் உறுப்பினர் தகுதியை இழக்க நேரிடும் என்ற நிலையில், அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த கட்டத்திலேயே அ.தி.மு.க.வின் உறுப்பினராக இருக்கும் தகுதியை சசிகலா இழந்துவிட்டார். அப்படியிருக்கையில் அ.தி. மு.க.வை எந்த வகையில் அவர் உரிமை கோரமுடி யும்? அதனால் சசிகலாவால் எந்த நெருக்கடியையும் அ.தி.மு.க.வுக்கு கொடுக்க முடியாது. சட்டரீதியாகவும் அ.தி.மு.க.வை கைப்பற்ற எந்தச் சூழலும் இல்லை. இதெல்லாமே சசிகலாவுக்கும் அவரது வழக்கறிஞர்களுக்கும் நன்றாகவே தெரியும். அதனால்தான், கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்கி ஆதாயம் தேட முயற்சிக்கிறார் சசிகலா. சசிகலாவின் இந்த மறைமுக திட்டங்களை அறிந்து தான், அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது'' என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார்.
இதைச் சுட்டிக்காட்டி சசிகலா தரப்பில் நாம் விசாரித்தபோது, "அ.தி. மு.க.வின் விதிகளில் இருப்பது பற்றி நீங்கள் சொல்வதை மறுப் பதற்கில்லை. அதே சமயம், கட்சியின் விதி எண் 43-ல் திருத்தம் என்ற ஒரு விதி இருக்கிறது. அதில், ’கழகத்தின் சட்ட விதிகளை இயற்றவும் திருத்தவும் நீக்கவும் பொதுக் குழு அதிகாரம் படைத்த தாகும்.
ஆனால், இந்த கட்சி யின் சட்டத்திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள கழகப் பொதுச்செயலாளரை கழக உறுப்பினர்களால் தேர்ந் தெடுக்க வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கோ திருத்து வதற்கோ உரியதல்ல’ என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லாத பொதுச்செயலாளர் பதவி யைப் பொதுக்குழுவால் ரத்து செய்ய வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இது அப்பட்டமான சட்டவிரோதம். அதனால் எடப்பாடி செய்த திருத் தத்தை எப்படி ஏற்கமுடியும்? அ.தி.மு.க.வின் சட்டவிதி கள் இதனை அனுமதிக்க வில்லை. அந்த வகையில் பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்திருக்கும் எடப் பாடி உள்ளிட்ட பொதுக் குழுவுக்கு எதிராக கிரிமினல் வழக்கு போடமுடியும். அதைச் செய்ய சசிகலா விரும்ப வில்லை.
அதேசமயம், துரோகிகளிடமிருந்து அ.தி.மு.க.வை மீட்கும் தார்மீக போராட்டத்திலிருந்து விலகமாட்டார் சசிகலா. இனிதான் அவரது ஆட்டத்தை தமிழகம் பார்க்கப் போகிறது'' என்கிறார்கள் ஆவேசமாக.