"வடலூரில் சுத்த சன் மார்க்க நெறிகளுக்கு இடையூறு வராமல், தமிழக அரசு நெறிப் படுத்த வேண்டும்' என்ற குரல், பக்தர்கள் தரப்பிலிருந்து பலமாக எழுந்துவருகிறது.
மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் கொடி பிடித்த ஆன்மிகப் புரட்சியாள ராக வடலூர் வள்ளலாரை முற்போக்கு உலகம் போற்றிவருகிறது. சாதி மத பேதங்களுக்கு எதிராக வும் குரல் கொடுத்த வள்ளலார், உருவ வழி பாட்டுக்கு பதில் ஒளி வழிபாட்டைக் கொண்டு வந்து, அதிலும் சமரச நிலையை உருவாக்கினார். அதற்காகவே "சத்திய ஞான சபை'யையும் அவர் வடலூரில் உருவாக்கினார். அவர் காலத்திலேயே அவரது முற்போக்குக் குரலை சகிக்க முடியாத சனாதனக் கூட்டம், அவரைத் தொடர்ந்து எதிர்த்து வந்தது. இதைத் தொடர்ந்து, அவர் மூடிய அறையில் தீ வைத்து எரிக்கப் பட்டதாகவும் செய்திகள் உண்டு.
அண்மைக் காலத்திலும், அவர் பெயரிலேயே அவர் கொள்கைகளுக்கு எதிரானவற்றை அரங்கேற்றும் செயல்கள் ஆரம்பித்தன. குறிப்பாக, வள்ளலார் உரு வாக்கிய சத்திய ஞான சபையை சிவன் கோவி லாக மாற்ற முற்பட் டார் ஒரு பிராமண அர்ச்சகர். அவரது ஆரிய வழிபாட்டு முறைகளை மாற்றி, சத்திய ஞான சபையின் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று வள்ள லாரின் பக்தர்கள் 2006-ல் போராட் டத்தைக் கையில் எடுக்கத் தொடங்கினார்கள்.
இது குறித்து 28-10-2006 தேதியிட்ட நமது நக்கீரன் இதழிலேயே "வள்ளலார் பெயரில் அர்ச்சகர் செய்த போர்ஜரி' என்ற தலைப்பில், மூன்று பக்க அதிரடிக் கட்டுரை வெளியானது. அதோடு நம் நக்கீரன், வள்ளலாரின் கொள்கை யைப் பாதுகாப்பதில் அவரது பக்தர்களுக்குத் துணையாக தொடர்ந்து இருந்துவருகிறது. அந்தக் கட்டுரை அப்போது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியதால், அன்றைய முதல்வர் கலைஞரின் வழிகாட்டுதலின் பேரில், சத்திய ஞான சபையில் சிவபூஜை செய்து வந்த அந்த சபாநாத ஒளியை அறநிலையத்துறை வெளியேற்றியது.
அன்று முதல் இன்றுவரை வள்ளலார் உருவாக்கிய சுத்த சன்மார்க்க சபையில், தனித் தன்மை வாய்ந்த வள்ளலாரின் விருப்பப்படியான வழி பாட்டு முறையே கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 24-3-2010-ல் "வள்ளலார் நிறு விய சத்திய ஞான சபையில் ஜோதி தரிசன வழிபாடு மட்டுமே நடைபெறவேண்டும். லிங்க வழிபாடு உள் ளிட்ட உருவ வழிபாடு கள் நடைபெறக் கூடாது' என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே "அந்த தீர்ப் பின் அடிப்படையில் தமிழக அரசு அதை தனி சட்டமாக இயற்ற வேண்டும்' என் கிறார்கள் வள்ளலார் பக்தர்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய குறிஞ்சிப்பாடி சுப்ரமணியம், "வள்ளலார் உருவாக்கிய அணையா அடுப்பில் சமைத்து ஆதர வற்ற அனைவருக்கும் 100 ஆண்டுகளைக் கடந்து இன்றளவும் அன்னதானம் வழங்கப்படுகிறது. வள்ளலார் நிறுவிய தர்மசாலை, சத்திய ஞானசபை, அவர் நிலைபெற்ற சித்தி வளாக மாளிகை, அவர் வாழ்ந்த கருங்குழி இல்லம், அவர் பிறந்த மருதூர் இல்லம் ஆகிய ஐந்து இடங்களையும் பாதுகாப் பதில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.
இப்போதும்கூட பலர் சத்திய ஞான சபையில் நெய் விளக்கு ஏற்றுவது, சூடம் ஏற்றுவது, விபூதி விற்பது, தங்கள் குழந்தைகளுக்கு முடி இறக்குவது இப்படி இந்துமதக் கோயில்களில் நடத்தப்படும் மத சம்பிரதாயங்களை தெரிந்தோ, தெரியாமலோ செய்துவருகிறார்கள் காலப்போக்கில் சத்திய ஞான சபையை இந்து கோயிலாக மாற்றிவிடும் நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தனி சட்டம் (மார்க்கம்) இயற்றவேண்டும்''’என்கிறார் அழுத்தமாக.
வடலூரைச் சேர்ந்த பெரியவர் கல்விராயரோ, "வள்ளலார் திருச்சபை வருமானத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் பயனுள்ள வகையில் செலவு செய்ய வேண்டும். அங்கு வந்துசெல்லும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாகக் கட்டிடங்களை உருவாக்க வேண்டும். சித்தி வளாகத்தில் நிறைய வயது முதிர்ந்தவர்கள் இறந்துபோகிறார்கள். அவர்களை நல்ல முறையில் அடக்கம் செய்யவேண்டும். நோய்வாய்ப்படும் முதியவர்களைக் கவனித்துக் கொள்வதற்கு செவிலியர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும். சித்தி வளாகத்தில் நிழல் தரும் மரங்களை வளர்க்க வேண்டும். அப்பகுதி யில் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டும். வரும் காலங்களில் வள்ளலாரின் சன்மார்க்க நெறி தனித்துவமாக விளங்க, அரசு சட்டம் இயற்ற வேண் டும். வடலூர் நகர எல்லை பகுதிக்குள் மது, மாமிச கடைகளுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்''’என்று பட்டியலிடுகிறார்.
"அரசு, "வடலூரில் வள்ள லார் பெயரில் ஒரு ‘சர்வதேச மையம்’ அமைக்கப்படும்' என அறிவித்துள்ளது. இது எங்க ளைப் போன்ற சுத்த சன்மார்க் கத்தார் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. வள்ளலார் திருக்குறள் வகுப்பு நடத்தியவர். மனிதர்கள் நோயின்றி வாழ 484 மூலிகைகள் குறித்து ஓர் அட்டவணையை உருவாக்கி வெளி யிட்டுள்ளார். அப்படிப்பட்டவரின் பெயரில் அரசு அறிவித்துள்ள சர்வதேச மையத்தில், வள்ளலார் எழுதி வைத்துள்ள நூல்கள் அனைத்தையும் வைக்கவேண்டும். அவரது பெயரில் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை ஒன்றும் ஏற்படுத்த வேண்டும்''’என்கிறார் ராஜபாளையம் சகாதேவ ராஜா.
"தமிழக அரசு, அறநிலையத்துறை மூலம் சிறப்பான வகையில் செயல்படுத்தி வருகிறது, மகிழ்ச்சியடைகிறோம். "சுத்த சன்மார்க்க கொள்கைப்படிதான் சர்வதேச மையத்தை நிறுவவேண்டும்' என சான்றோர், தலைவர்கள் அனைவரையும் சந்தித்து ஆதரவு திரட்டி, அதற்கான விண்ணப்பத்தினை முதல்வருக்கு அனுப்பியுள்ளோம்'' என்கிறார் மதுரை கருணைசாலை சபையின் நிறுவனர் ராமலட்சுமி.
சாத்திரங்களுக்கு எதிராகவும் சாதி மத பேதங்களுக்கு எதிராகவும் முற்போக்குக் குரலை ஆன்மிகம் கலந்து எழுப்பிய வள்ளலார் இன்று மட்டுமல்ல, என்றென்றும் நமக்குத் தேவைப் படுகிறார்... ஞானச்சுடரொளியாக!
-எஸ்.பி.எஸ்.