புதுச்சேரியில் கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வியையும், கட்சிக்கு ஏற்பட்டுள்ள கடும் பின்னடைவையும் தொடர்ந்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் செய்யும் நடவடிக்கையில் கட்சித் தலைமை ஈடுபட்டுள்ளது.

ff

இதுகுறித்து புதுச்சேரி அரசியல் பார்வையாளர்களிடம் விசாரித்ததில், “"புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை காங்கிரஸ் கட்சி அதிக ஆண்டுகள் ஆட்சிசெய்துள்ளது. இருந்தும் 2021 ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அதலபாதாளத்திற்கு சென்றது. 30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகளை மட்டுமே காங்கிரசால் கைப்பற்ற முடிந்தது. கூட்டணிக் கட்சியான தி.மு.க.கூட 6 தொகுதிகளைக் கைப்பற்றியது.

ஒரு மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சி நடத்திக்கொண்டிருந்த ஒரு கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்ததும், முதலமைச்சராக இருந்தவரே போட்டியிடாமல் ஒதுங்கியதும், இரண்டு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியதும் காங்கிரஸ் தொண்டர்களை மட்டுமல்ல, மேலிடத்தையும் அதிர்ச்சி அடையச்செய்தது.

இதனையடுத்து வருகின்ற உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் மேலிடம் வியூகம் வகுத்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல காங்கிரஸ் கட்சியினுடைய மாநில தலைவராக உள்ள ஏ.வி.சுப்பிரமணியத்தை மாற்றிவிட்டு வேறு ஒருவரை நியமிக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியிலும், காங்கிரஸ் மேலிடத்திலும் எழுந்துள்ளது.

மாநில தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் கந்தசாமி, கட்சி துணைத் தலைவர் அனந்தராமன், முன்னாள் துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக பேசப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும்விதமாக கந்தசாமி, ஷாஜஹான், அனந்தராமன் ஆகியோர் கட்சித் தலைவர் சோனியாகாந்தியை டெல்லியில் கடந்த ஏப்ரல் 11 அன்று நேரில் சந்தித்துப் பேசி கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளின் கருத்துக்களை அறிந்து புதிய தலைவரை நியமிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர். சோனியாகாந்தியும் "நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிரான அலை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு புதுச்சேரியிலும் பா.ஜ.க. -என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக போராட வேண்டும். பா.ஜ.க.வுக்கு எதிராக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்'' என கூறியுள்ளார்.

"காங்கிரஸ் மாநில தலைவர் பதவி தொடர்பாக ஆலோசிக்க விரைவில் மேலிடப் பொறுப்பாளர்கள் புதுச்சேரிக்கு வர உள்ளனர். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் தலைவர் பதவியை கைப்பற்ற காய் நகர்த்தி வருகின்றனர். வழக்கம் போல நாராயணசாமி விருப்பப்படிதான் கட்சி மேலிடம் நடக்குமா… அல்லது புதிய தலைவரை நியமித்து புது ரத்தம் பாய்ச்சுமா… என பொறுத்திருந்து பார்க்கவேண்டும்'”என்கின்றனர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளிகள்.

Advertisment

dd

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்து, சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். புதுச்சேரியிலிருந்து நாராயணசாமி, வைத்திலிங்கம், தற்போதைய கட்சித் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களும் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நியமனம் தொடர்பாக டெல்லி தலைவர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர்

ஏற்கனவே ரங்கசாமிக்கு மாற்றாக அவரது குடும்பத்திலிருந்தே தலைவராக்கப்பட்ட நமச்சிவாயம் மேலிடத்துடன் நேரடித் தொடர்பு வைத்துக்கொண்டதால்தான் நாரா யணசாமியால் ஓரங்கட்டப்பட்டு, பா.ஜ.க.வுக்கு தாவினார். தற்போது என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜ.க கூட்டணியில் வன்னிய தலைவர்கள் ஆளுமை செலுத்துவதால், மாநிலத்தில் பெரும்பான்மை யாக உள்ள வன்னியர்கள் அக்கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதால், வன்னியர் ஒருவரை தலைவராக்கினால்தான் வன்னியர்களின் ஆதரவை மீண்டும் பெறமுடியும் என தலைமை யோசிக்கும் பட்சத்தில் மருத்துவர் இராமதாஸின் உறவினரும், துணைத்தலைவருமான ஆர்.கே.ஆர். அனந்தராமனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

அதேபோல் தலித் சமுதாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்தால், சீனியர் அமைச்சரான கந்தசாமிக்கு வாய்ப்பு. ஆனால் இந்த இரு சமுதாயம் தவிர்த்து எல்லோருக்கும் பொதுவானவராகவும், எல்லோர் மத்தியிலும் நன்மதிப்பு உள்ளவராகவும் இருக்கவேண்டும் என்றால் முன்னாள் துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலனுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. சோனியா காந்தி மூத்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், ராகுல்காந்தி இளம் தலைமுறையை மனதில் வைத்து கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் கூடுதல் கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது.

ஆனாலும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவ்வளவு லேசில் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கமாட்டார். தனக்கு கிடைப்பதற்கு பகீரத பிரயத்தனங்கள் மேற்கொள் வார். அவ்வாறு இல்லையெனில் வைத்திலிங்கத் திற்கு கிடைக்க வகைசெய்வார் என்கிறது புதுவை வட்டாரம்.

கட்சித் தலைவர் பதவியைப் பெற சீனியர்களுக்கும், ஜூனியர்களுக்குமான போட்டி யில் எந்த அணி வெல்லப்போகிறது என்பதைப் பொறுத்தே புதுவை காங்கிரஸின் எதிர் காலம்!

Advertisment