நாடாளுமன்றத் தேர்தலில், நமக்கு அண்டை மாநிலமான ஆந்திரா, இரட்டை எதிர் பார்ப்புடன் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. அதென்ன இரட்டை எதிர்பார்ப்பு? ஆந்திராவிலுள்ள 25 நாடாளுமன்றத் தொகுதி களுக்கும் வரும் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதே நாளில், 175 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஆந்திர சட்டமன்றத் துக்கும் தேர்தல் நடைபெறுகிறது. எனவே ஒரே நாளில், எம்.பி., எம்.எல்.ஏ.க்களைத் தேர்ந்தெடுப் பதற்காக இரண்டு முறை பொத்தான்களை அழுத்துவதற்கு ஆந்திர மக்கள் தயாராகி வருகிறார்கள்.

ff

ஆந்திராவில் 2019ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 23 தொகுதிகளில் வெற்றிபெற்றது. காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை. அதேபோல், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி, மொத்தமுள்ள 25 இடங் களில் 22 இடங்களைக் கைப்பற்றியது. தெலுங்கு தேசம் கட்சி 3 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றதன்மூலம், ஆந்திர அரசியலில் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, அசைக்கமுடியாத வலுவான கட்சியாக உருவெடுத்தது.

இந்நிலையில், நடப்பு தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணியைப் பொறுத்த வரை, அக்கட்சி 17 பாராளு மன்றத் தொகுதிகளிலும், 144 சட்டமன்றத் தொகுதி களிலும் போட்டியிடு கிறது. பா.ஜ.க. 6 பாராளுமன்றத் தொகுதிகளிலும், 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, 2 பாராளுமன்றத் தொகுதிகளிலும் 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது. காங்கிரஸின் கூட்டணியில், சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ. கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து களம்காண்கிறது. இந்த மும்முனைப் போட்டி தான் ஆந்திரத் தேர்தலில் சூட்டைக் கிளப்பியுள்ளது!

Advertisment

jj

தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்குமான அரசியல் தொடர்பு, நீண்ட வரலாறு கொண்டது. ஆந்திர அரசியலை சற்றே பின்னோக்கிப் பார்ப் போம். தமிழ் மொழி அடிப்படையிலான மொழி வாரி மாநிலமான நம்மைப்போலவே, ஆந்திராவும் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கான மாநிலமாக உள்ளது. எனவே இங்கும் தேசிய அரசியலுக் கெதிரான மாநில அரசியலும் முக்கியமானதாக இருக்கிறது. ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சி இங்கே வலுவான தேசியக் கட்சியாக இருந்தது. அதற்கெதிராக, மாநில உரிமைகளை வலியுறுத்தி, 1982ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியை என்.டி.ராமாராவ் தொடங்கினார். தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்கு இருந்தது போன்ற திரையுலக பிரபலத்தன்மை, என்.டி.ராமாராவின் அரசியல் வளர்ச்சிக்கு கைகொடுத்தது. 1983ஆம் ஆண்டி லேயே ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்குமளவுக்கு தெலுங்கு தேசம் கட்சி அதிரடி வளர்ச்சி கண்டது. ஆந்திர அரசியல், காங்கிரஸ் யள் தெலுங்கு தேசம் என்பதாக மாற்றமடைந்தது. 1989ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. சென்னா ரெட்டி முதல்வராகப் பொறுப்பேற்றார்.

இச்சூழலில்தான், 1989ஆம் ஆண்டில் தேசிய அரசியலில் மிகப்பெரிய மாற்று சக்தியாக தேசிய முன்னணி உருவாக்கப்பட்டது. ஆந்திராவின் என்.டி.ராமாராவை தலைவராகவும், வி.பி.சிங்கை ஒருங்கிணைப்பாளராகவும் கொண்ட தேசிய முன்னணியை உருவாக்கிய கலைஞரின் பங்களிப்பு பெரிது. 1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிபெற, காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு, வி.பி.சிங் பிரதமரானார்.

ss

இந்நிலையில் ஆந்திர காங்கிரஸில் உட்கட்சி மோதல்கள் வலுத்தன. அடுத்தடுத்த ஆண்டுகளில், ஜனார்த்தன ரெட்டி, விஜயபாஸ்கர ரெட்டி ஆகியோர் காங்கிரஸ் முதல்வர்களாக நியமிக்கப் பட்டனர். அதற்கடுத்து 1994 தேர்தலில் என்.டி.ராமா ராவ் மீண்டும் முதல்வரானார். இதற்கிடையே என்.டி.ராமாராவின் தனிப்பட்ட வாழ்க்கையில், லட்சுமி பார்வதி என்ற பெண்மணியின் வருகை பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை என்.டி.ராமா ராவ் இரண்டாவது திருமணம் செய்தது அவரது சொந்த வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் புயலாக வீசியது. என்.டி.ராமாராவின் மறைவுக்குப் பின் அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு 1995ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றார். லட்சுமி பார்வதி, என்.டி.ஆர். தெலுங்கு தேசம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியல் செய்தார். ஆனால் அவரது அரசியல், சந்திரபாபு நாயுடுவின் அதிரடிக்குமுன் எடுபடவில்லை. இந்நிலையில், சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கெதிரான குற்றச் சாட்டுகளைவைத்து காங்கிரஸின் ஒய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டி நடைபயணம் சென்று மக்களின் ஆதரவைத் திரட்டினார். அதன் பலனாக, மீண்டும் 2004ஆம் ஆண்டில் காங்கிரஸ் வெற்றிபெற, ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர ரெட்டி முதல்வரானார். இந்நிலையில், 2009ஆம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர ரெட்டி அகால மரணமடைய, அதுவே ஆந்திர அரசிய லில் காங்கிரஸின் சரிவுக்கும் வித்திட்டது.

ராஜசேகர ரெட்டி மறைந்ததையடுத்து அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக விரும்பினார். ஆனால் காங்கிரஸ் தலைமை அதை விரும்பவில்லை. ரோசய்யாவை முதல்வராக நியமித்தது. இதனைத்தான் ஆந்திர அரசியலில் காங்கிரஸ் செய்த மிகப்பெரிய தவறாக இன்றுவரை விமர்சிக்கிறார்கள். இதனால் ஏற்பட்ட கருத்துவேறு பாட்டால் காங்கிரஸிலிருந்து விலகிய ஜெகன், தந்தையின் பெயரில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கி, தந்தையைப் போலவே நடைபயணம் சென்று மக்களிடையே எழுச்சியை உருவாக்கினார். இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியை சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்ய, அவரது கட்சியை அவரது அம்மா ஒய்.எஸ். விஜயம்மாவும், தங்கை ஒய்.எஸ். ஷர்மிளாவும் வழிநடத்தினார்கள். இதனால் ஏற்பட்ட அனுதாப அலை, ஜெகன் மோகன் ரெட்டிக்கு சாதகமாக அமைந்தது.

சிறைவாழ்க்கையிலிருந்து மீண்ட ஜெகன், 2014ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிட்டு 67 தொகுதிகளைக் கைப்பற்றினார். இத் தேர்தலில் 102 தொகுதிகளைக் கைப்பற்றிய சந்திரபாபு நாயுடு ஆட்சியைக் கைப்பற்றினார். தொடர்ச்சியாக அதிரடி அரசியல் செய்த ஜெகன்மோகன் ரெட்டி, 2019ஆம் ஆண்டு தேர்தலில், பெருத்த வெற்றியைப் பெற்று ஆட்சியமைத்தார். இதற்கிடையே ஜெகன்மோகன் ரெட்டியின் தாயாரும், தங்கையும் அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகினர். 2021ஆம் ஆண்டில் தங்கை ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியைத் தொடங்கினார். இந்நிலை யில் கடந்த ஜனவரி மாதத்தில் காங்கிரஸில் இணைந்த ஷர்மிளா, ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். ராஜசேகர ரெட்டியின் மகள் என்ற அடையாளத்துடன் இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலுப்பெறவைக்கப் போராடிவருகிறார் ஷர்மிளா.

இந்நிலையில், ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ் சீவியின் பல்டி+துரோக அரசியலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. தனக்கு வந்த அரசியல் ஆசையால் 2008ஆம் ஆண்டில் பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியைத் தொடங்கிய சிரஞ்சீவி, 2009 சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டு 17 இடங்களில் மட்டும் வெற்றிபெற்றார். தொடர்ச்சியாகக் கட்சியை நடத்தமுடியாமல் திணறியவர், 2011ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைத்துவிட்டார். அதற்கு கைமாறாக, காங்கிரஸ் கட்சியில் மாநிலங் களவை எம்.பி. பதவியோடு, மன்மோகன்சிங்கின் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். மத்தியில் காங்கிரஸ் தோல்வியடைந்து பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்ததும் சைலண்ட் மோடுக்கு சென்ற சிரஞ்சீவி, இன்றுவரை காங்கிரஸில் உறுப்பினராக இருந்து கொண்டே, தற்போது தனது தம்பி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு ஆதரவாக பிரச்சார வீடியோ வெளியிட்டி ருப்பது பரபரப்பைக் கிளப்பி யுள்ளது. தற்போது ஜனசேனா, பா.ஜ.க., தெலுங்கு தேசம் கூட்டணியில் போட்டியிடு கிறது. எனவே சிரஞ்சீவியின் அரசியல், துரோக அரசியலாகப் பார்க்கப்படுகிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாக, ஜெகனின் அரசில் சுற்றுலாத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் பிரபல நடிகை ரோஜா, மூன்றாவது முறையாக நகரி தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.

மும்முனைப் போட்டியில், ஜெகன்மோகன் ரெட்டிக்கு இம்முறை அவரது சகோதரி தலைமையிலான காங்கிரஸும், சந்திரபாபு நாயுடு + பா.ஜ.க. + பவன் கல்யாண் கூட்டணியும் கடும் சவாலாக இருக்குமெனத் தெரிகிறது. எனவே, "ஆந்திராவுக்கு ஜெகன் ஏன் தேவை!' என்ற கோஷத்துடன் ஜெகனும், "ஏன் ஆந்திரா ஜெகனை வெறுக்கிறது!' என்ற கோஷத்துடன் சந்திரபாபு நாயுடுவும் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

ஜெகன் மீண்டும் வெல்வாரா என்பது வரும் ஜூன் 4ஆம் தேதி தெரியவரும்!

Advertisment