ரித்திரம், திராவிடம் மற்றும் ஆன்மிகம் என ஒன்றுடன் ஒன்றாகப் பின்னிபிணைந்த தொகுதியே சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி. பல ஆண்டுகளாக வி.ஐ.பி. அந்தஸ்து பெற்ற இத்தொகுதியில் இந்தமுறை தொகுதியின் வி.ஐ.பி. அந்தஸ்து தனக்கே என சீட் கேட்டு போட்டி போட்டு மல்லுக்கட்டி வருகின்றனர் அரசியல் கட்சி பிரமுகர்கள். தொகுதியைப் பற்றியும், சீட் கேட்கும் பிரமுகர்கள் பற்றிய சிறிய தொகுப்பு இதோ.!

ss

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை (தனி), திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி ஆகிய 4 சட்டமன்றத் தொகுதி களுடன், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, திருமயம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுமாக சேர்த்து 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது இத்தொகுதி. பாகநேரி, தேவக்கோட்டை ஆகிய பகுதிகளில் கள்ளர் சமுதாயமும், இளையான்குடி, காரைக்குடி, திருமயம் மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் தேவர் சமுதாயமும், மானாமதுரை, புதுக்குளம் மற்றும் சிவகங்கையில் அகமுடையார் சமுதாயம் என முக்குலத்து மக்கள் தொகுதி முழுவதுமாக விரவிக்கிடக்கின்றனர்.

இதுபோக, ஆலங்குடி, திருமயம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மிகுதியாகவும் மற்றைய இடங்களில் பரவலாக முத்தரையர் சமூகத்தினரும், திருப்பத்தூர் ஒன்றியம், சிங்கம்புணரி ஒன்றியம் மற்றும் வெற்றியூர் பகுதிகளில் மட்டுமல்லாது, தொகுதி முழுமைக்கும் ஆங்காங்கே யாதவ சமூகத்தினரும், காரைக்குடியை சுற்றியுள்ள கோட்டையூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான், புதுவயல் உள்ளிட்ட பகுதிகளில் வல்லம்பர் சமூகமும், காரைக்குடி, கண்டனூர், செட்டி நாடு, ஒ.சிறுவயல், கல்லல், நாட்டரசன் கோட்டையில் செட்டியார் சமூகமும், ஆலம்பச்சேரி பகுதிகளில் நாடார்களும், புளியடி தம்பம், சருகணி, காளையார் கோவில் பகுதிகளில் உடையார் சமூகத்தினரோடு நாடாளுமன்றத் தொகுதி முழுவதும் இஸ்லாமியர், கிறிஸ்தவர்களும் வெற்றி வேட்பாளரை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர்.

Advertisment

மானாமதுரையில் மண் பானை தயாரித்தல், சிவகங்கையில் கிராபைட் தொழிற்சாலை, காரைக்குடியில் நெசவுத்தொழில், திருப்பத்தூரில் தென்னைக் கயிறு உற்பத்தி, ஆலங்குடியில் மலர் சாகுபடி மற்றும் திருமயம் - பகுதியில் பெல் தொழிற்சாலை இருப்பினும் நாடாளுமன்றத் தொகுதியின் பிரதான தொழிலே விவசாயம் தான். இங்குள்ள பெரும்பாலான மக்கள் தொழில்வளம் இன்மையால் கடந்த 30 ஆண்டுகளாக வெளி நாடுகளில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் தனியார் முதலீடுகள் மூலம் வேலை வாய்ப்பு உருவாக் கப்படும் என பொத்தாம் பொதுவாகப் பேசி கடந்த முறை காங்கிரஸ் சார்பாக வெற்றி வாகை சூடியவர் கார்த்தி சிதம்பரம். கிராபைட் தொழிற்சாலை விரிவாக்கம், சிவகங்கை முத்துப்பட்டி யில் ஸ்பைசஸ் பார்க் (தொழில் பூங்கா) விரி வாக்கம், கிடப்பில் போடப்பட்ட இரயில்வே திட்டங்கள், ஆலங்குடியில் மலர்களைப் பயன்படுத்தி நறுமணத் திரவம்(சென்ட்) தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்டவைகள் பொதுமக்களின் கோரிக்கையாக இருப்பினும் என்றாவது நம்முடைய கோரிக்கை ஈடேறும் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு தடவையும் வாக்களித்து தோல்வியுறுவதே இத்தொகுதி மக்களின் வாடிக்கையான ஒன்று.

ss

"காங்கிரஸ் தரப்பில் பூத்வாரியாக பணி செய்திருந்தாலும் இதுவரை பலமுறை இத் தொகுதியை கூட்டணிக்கு தாரை வார்த்தாகி விட்டது. இந்தமுறை கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு எக்காரணம் கொண்டும் இத்தொகுதி யை ஒதுக்கக்கூடாது என அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் தலைமையிடம் கோரிக்கை வைத்தது ஞாபகம் இருக்கலாம். இந்த நாடாளு மன்றத் தொகுதியைப் பொறுத்தவரை கே.ஆர். பெரியகருப்பன், ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்து வருவதால் தொகுதியில் தி.மு.க.வே போட்டியிட வேண்டும் என்பது அனைத்துத் தொண்டர்களின் விருப்பம்'' என் கிறார்கள் மதகுப்பட்டி ராஜேந்திரனும் சிவகங்கை கவுன்சிலர் ராஜபாண்டிய னும்.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. இங்கு நேரடியாகப் போட்டியிட்டால் பெண்களையே களமிறக்க நினைக்கின்றது தி.மு.க. தலைமை. வேட்பாளருக்கான போட்டியில் சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளரும், முன்னாள் காவல்துறை ஆணைய உறுப்பினருமான ஜோன்ஸ் ரூஸோ, அமைச்சர் பெரியகருப்பனின் மருமகளும், மருத்துவருமான சாருலதா கோகுலகிருஷ்ணன் மற்றும் மாநில மாணவரணி துணை அமைப் பாளரான பூர்ணசங்கீதா ஆகியோர் போட்டியில் உள்ளனர். இது தவிர ஆண்கள் எனில் கட்சியின் சிவகங்கை மாவட்ட துணைச்செயலாளர் சேங்கை மாறன் களத்தில் உள்ளார். இதில் அமைச்சர் பெரியகருப்பன் மருமகள் சாருலதா கோகுல கிருஷ்ணன் வேட்பாளராகக் களத்தில் இறங்கி னால் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் அவருக்கு எதிராக சொந்தக் கட்சியினரே ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தானும், தன்னுடைய தந்தையும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சி.யும் பா.ஜ.க.விற்கு எதிரிகள் என்பதாலேயே இந்த தொகுதியை ஒன்றிய அரசு புறக்கணித்தது என தற்போதைய எம்.பி. கார்த்தி சிதம்பரமே மீண்டும் போட்டி யிடலாம். அப்படி அவர் போட்டியிட்டால் கூட்டணி தயவால் மட்டுமே வெற்றிபெற முடியும். தவிர, தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் எம்.பி.யும் அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் மற்றொரு அணியும் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக கச்சை கட்டி நிற்கின்றனர். இதில் எதிரிகள் இருவருமாக ஒன்றுசேர்ந்து சுதர்சன் நாச்சியப்பனுக்கும், மாணிக்தாக்கூருக்குமாக தலைமையிடம் சீட் கேட்டு நெருக்கடி செய்வதும் கார்த்திக்கு பாதகமே!

ஓ.பி.எஸ். சார்ந்த சமூகத்தின் வாக்குகள் அதிகமாக இருப்பதால், ஓ.பி.எஸ்.ஸின் மூக்குடைக்க அ.தி.மு.க. இங்கு போட்டி யிடுவதில் மிகுந்த அக்கறை காட்டிவரு கின்றது. அ.தி.மு.க. வேட்பாளர்களாக சிவகங்கை ஒன்றிய செயலாளரும், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மகனுமாகிய கருணாகரன், கல்லல் தெற்கு ஒன்றிய செயலாளரான சேவியர் மற்றும் மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவும் தனக்கே இங்கு சீட் என காத்திருக்கின்றனர். இதில் பண பலமும், சாதிய பலமும் உள்ள சேவியரே வேட்பாளராக களமிறங்கலாம் என்கின்றது அ.தி.மு.க. வட்டாரம். எனினும் கடந்த பத்து வருடங்களாக தனக்கு போட்டியாக யாரையும் கட்சியில் முன்னிறுத்தியது இல்லை மா.செ. செந்தில்நாதன். ஆகையால் சேவியரின் வெற்றிக்கு மா.செ. பாடுபடுவாரா? என்பது சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. தொண்டரின் கேள்விகள்.

ஒருவேளை பா.ஜ.க. இங்கு நேரடியாக போட்டியிட்டால் மாவட்டத் தலைவராக உள்ள மேப்பல் சக்திவேலும், இளைஞரணியின் மாநில துணைத்தலைவராக உள்ள பாண்டித்துரையும் வேட்பாளருக்கான போட்டியில் இருக்கின்றனர். இது தவிர இவர்களுடன் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுனமூர்த்தியும் போட்டியில் உள்ளார். இதேவேளையில், அனைவரும் கவனிக்கும் வி.ஐ.பி. தொகுதி என்பதால் பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தில் அ.ம.மு.க. டி.டி.வி. தினகரன் இங்கு வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்கின்ற பேச்சும் உள்ளது.

தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி இத்தொகுதியில் இதுவரை தோற்றதில்லை. யார் வேட்பாளர் என்பதைப் பொறுத்தே இந்த கணக்கு நீடிக்கும் என்பதே நிதர்சனம்.

-நா. ஆதித்யா

படங்கள்: விவேக்