பெயர்தான் மினி. ஆனால், இதுவரை இல்லாத பிரம்மாண்ட மருத்துவக் கட்டமைப்பு என தமிழகம் தழுவிய 200 அம்மா மினி கிளினிக்கு களை தனது சாதனையாக முன்னிறுத்து கிறது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசு. தேர்தல் பரப்புரையில் இது கை கொடுக்கும் எனவும் நம்புகிறது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம், மேல் புவனகிரி ஒன்றியம் பி.உடையூர் ஊராட்சியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை அ.தி.மு.க. ஒன்றிய சேர்மன் சிவப்பிரகாசம் தலைமையில் மேற்கு மாவட்ட செயலாளர் அருண் மொழிதேவன் திறந்து வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதேசமயம், புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ.வான தி.மு.க. சரவணனை வைத்து திறக்க அவர்கள் தரப்பில் ஏற்பாடானது. கிளினிக்கின் இடதுபுறம் தி.மு.க. பேனரும், வலது பக்கம் அ.தி.மு.க. பேனரும் அசத்தியது.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அருண் மொழிதேவன் பங்கேற்கவில்லை. சரவணன் எம்.எல்.ஏ. வந்தபோது திமுகவினர் மேளதாளத்துடன் வரவேற்றனர். ஊராட்சி அலு வலகத்திலுள்ள அண்ணா சிலைக்கு அவர் மாலை அணி வித்துகொண்டிருந்தபோது அ.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய சேர்மன் சிவப்பிரகாசம் ரிப்பன் வெட்டி கிளினிக்கை திறந்து வைத்தார். தி.மு.க தரப்பு கடுப்பாகி, எம்.எல்.ஏ. சரவணனை வைத்து மறுபடியும் ரிப்பனை கட்டி, வெட்டி திறக்கச் செய்தனர். இருதரப்பும் மாறி மாறி முழக்கங்களை எழுப்பினர். பதட்டத்தை உணர்ந்த போலீசார், இருதரப்பையும் சமரசம் செய்து அனுப்பி, நிலைமையை சமாளித்தனர்.
"அ.தி.மு.க அரசின் திட்டத்தில் தி.மு.க. லாபம் பார்க்க நினைக்கிறதா' என அக்கட்சி எம்.எல்.ஏ.வும் அதன் மருத்துவ அணிக்கு பொறுப்பு வகிப்பவருமான டாக்டர் பூங்கோதை எம்.எல்.ஏ.விடம் கேட்டோம்.
""கலைஞர் முதல்வராக இருந்த காலத்திலேயே கிராமப்புறங்களிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இணையாக துணை சுகாதார நிலையங்களையும் கிராமங்கள் தோறும் ஆரம்பித்தார். ஒரு செவிலியர் மருந்தாளுனர் நிரந்தரப் பணியில் அமர்த்தப்பட்டனர். இந்த சப்-சென்டர் எனப்படும் துணை சுகாதார நிலையத்திற்கு முலாம் பூசி தற்போது "மினி கிளினிக்' என்ற பெயரைக் கொடுத்திருக்கிறது அ.தி.மு.க அரசு.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள் தொடங்கி அரசு மருத்துவமனைகள் வரை தற்போதைய ஆட்சியில் போதிய டாக்டர்கள், செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
மெடிக்கல் ரெக்ரூட்மெண்ட் போர்டு மூலம் தேர்வு எழுதிய டாக்டர்கள் எட்டு வருடமாகியும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இந்த லட்சணத்தில், மினி கிளினிக்குகளுக்குத் தேவையான டாக்டர்கள் செவிலியர்கள் மருந்தாளுனர்கள் எந்த வகையில் நிரப்பப்படுவர் என்பதும், எப்படி செயல்படும் என்பதும் கேள்விக் குறி. இந்த மோசடியைத்தான் அம்பலப்படுத்துகிறோம்'' என்றார் அதிரடியாக.
-பரமசிவன், காளிதாஸ்