அண்ணா அறிவாலயம்- கோபாலபுரம் கலைஞர் வீடு- சித்தரஞ்சன் சாலை மு.க.ஸ்டாலின் வீடு- இளைஞரணி அலுவலகமான அன்பகம் என முக்கிய இடங்களை உள்ளடக்கியதுதான் தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்டம். கலைஞர் தனது உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்க வேண்டுமென்றாலும், மு.க.ஸ்டாலின் புதுப்பிக்க வேண்டுமென்றாலும் மாவட்டச் செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன்தான் நேரில் சென்று பதிவு செய்வார். வேறெந்த மா.செ.வுக்கும் இல்லாத சிறப்பான கவுரவம் இது.
கொரோனா நோய்த் தொற்று நேரத்திலும் மக்கள் பணியாற்றி மரணமடைந்த ஜெ.அன்பழகனால், அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி காலியானதைவிட, அவர் மா.செ.வாக இருந்த சென்னை மேற்கு மாவட்ட பதவிக்குத்தான் தி.மு.க.வில் தீவிரப் போட்டி நடைபெறுகிறது. ஆயிரம்விளக்கு, திருவல்லிக்கேணி- சேப்பாக்கம், மயிலாப்பூர், தியாக ராயநகர், அண்ணாநகர், மதுரவாயல் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இந்த மாவட்டத்திற்குள் அடக்கம்.
ஆயிரம்விளக்கு கு.க. செல்வமும், அண்ணாநகர் மோகனும் தி.மு.க. எம்.எல்.ஏக்கள். இருவருமே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை எளிதாக நெருங்கக் கூடியவர்கள். அதனால், மா.செ. பதவிக்கான விருப்பம் இருவருக்குமே உள்ளது. அ.தி.மு.க. விலிருந்து வந்தவரான கு.க.செல்வம் நம்புவது, ஸ்டாலின் குடும்பத்தினரின் ஆதரவை! மோகனுக்கு ஸ்டாலினிடம் உள்ள செல்வாக்கும் பணபலமும் ப்ளஸ் பாயிண்ட். ஆனால், இருவருமே வயதில் மூத்தவர்கள் என்பதாலும் அடிமட்டத் தொண்டர்களிடம் நெருக்கமாக இல்லை என்பதும் மைனஸாக இருக்கிறது.
மயிலாப்பூர் பகுதிச் செயலாளரான வேலு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, பிராமணர்கள் வசிக்கும் பகுதியிலும் தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு அதிக வாக்குகள் கிடைக்கச் செய்ததை முன் வைத்து, மா.செ. பதவிக்கு குறிவைக்கிறார். கட்சித் தொண்டர்கள் நம்மிடம், ""சீனிவாசன் எங்மேன் அஷோசியேஷன்’ என்ற அமைப்பு தனியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மருத்துவமனை சேவை செய்து வருகின்றது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஜெ.அன்பழகனை சந்தித்து வைத்த கோரிக்கையினால், மயிலாப்பூரிலும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் சுற்றியுள்ள பகுதி களிலும் தேங்கும் மழைநீரினை தொட்டியில் சேர்க்கும் திட்டத்தை 75 லட்சம் செலவில் அவரே தொடங்கிவைத்து முடித்து தந்தார். அதுதான் வாக்குகளாக மாறியது. இதில் மயிலை வேலுவும் முன்னின்று பங்கெடுத்தார்’’என்கின்றனர். அன்பகம் வாயிலாக அறிவாலயக் கதவைத் தட்டுகிறார் வேலு. அதே நேரத்தில், இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசுக்கு உதயநிதியின் ஆதரவு உள்ளது. அதே மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட சி.ஐ.டி. காலனி வீட்டிலும் மா.செ. பதவிக்கான ஒரு சில காய்நகர்த்தல்கள் நடைபெறுகின்றன. அதனால், மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பியின் நம்பிக்கைக்குரிய துரையும் போட்டியில் இருக்கிறார்.
மயிலை வேலுவைப் போலவே மேற்கு மாவட்டத்தில் பகுதி செயலாளர்களாக உள்ள 11 பேரும் மா.செ. பதவி எதிர்பார்ப்பில் உள்ளனர். ஜெ.அன்பழகனின் அப்பா பழக்கடை ஜெயராமன் மிசா கால தீவிர தி.மு.க செயல்வீரர். குடும்ப பாரம்பரியம் இருப்பதால் அன்பழகனின் தம்பி ஜெ.கருணாநிதி அல்லது அன்பழகன் மகன் ராஜா அன்பழகன் பெயர்களும் முன் வைக்கப்படுகின்றன. மா.செ. பதவி இல்லை யென்றாலும் சட்டமன்றத் தேர்தலில் சீட் தந்து கவுரவப்படுத்தலாம் என்ற சிபாரிசும் செய்யப் பட்டுள்ளதாம்.
தியாகராயநகர் தொகுதியில் அன்பழகன் போட்டியிட்ட போது, அவரை எதிர்த்து நின்று வெற்றி பெற்றவர் அ.தி.மு.க. கலைராஜன். ஜெ.மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவிலிருந்து அ.ம.மு.க.வாகி இப்போது தி.மு.க.வுக்கு வந்திருக்கும் கலைராஜன் தரப்பிலும் மா.செ. பதவிக்கான மூவ் நடக்கிறது. சேப்பாக்கம் பகுதிச் செயலாளர் மதன், முன்னாள் ப.செ. சுரேஷ் குமார் போன்றவர்களும் தங்களுக்கான லாபி மூலம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, சென்னை தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட பகுதிச் செயலாளரான கே.கே.தனசேகரனை மேற்கு மா.செ.வாக்கலாம் என்கிற பரிந்துரைகளும் அறிவாயலத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இருமுறை தேர்தலில் தோல்வியடைந்தாலும் கட்சி வேலைகளில் சுறுசுறுப்பாக இருந்து, கோஷ்டிப்பூசல் இல்லாமல் நிர்வாகம் செய்வதில் ஜெ.அன்பழகன் போலவே தனசேகரனும் சரியாக இருப்பார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
தி.மு.கவை பொறுத்தவரை, எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் பதவிகளைவிட வலிமையானது மா.செ.பதவி. மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட மத்திய சென்னை எம்.பி.யாக உள்ள தயாநிதி மாறனுக்கு கட்சிப் பதவி இல்லாத காரணத்தால் அவரும் குடும்ப உறுப்பினர்கள் மூலம் மா.செ.பதவிக்கு முயற்சிக்கிறார். குடும்பப் பின்னணியும் பண பலமும் இவரது பலம் என்றாலும், தேர்தல் நேரத்தில் மட்டுமே தொண்டர்களை நோக்கி வருபவர் என்பது லோக்கல் நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.
தி.மு.கவைப் பொறுத்தவரை உள்கட்சித் தேர்தல் மூலம்தான் மாவட்டச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதுவரை, மாவட்டப் பொறுப்பாளர் என்ற பெயரில்தான் நிர்வாகியை தலைமை நியமிக்கும். சட்டமன்றத் தேர்தல் நெருங்குகிற நிலையில், தி.மு.க வாழ்வா-சாவா என்ற நெருக்கடியை எதிர்கொள்கிறது. மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட 6 தொகுதிகளையும் வெல்லக்கூடிய வலிமையான பொறுப்பாளரை நியமிக்கவேண்டும். ஜெ.அன்பழகனே அத்தகைய வலிமையைப் பெற்றிருக்கவில்லை. வலிமை உள்ள யாரையும் அவரும் உருவாக்கவில்லை. தி.மு.க மா.செ.க்களின் இந்த நிரந்தர பல வீனத்தை எப்படி பலமாக மாற்றப்போகிறது தலைமை?
- கீரன், அ.அருண்பாண்டியன்