ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் களமிறங்கும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளரான காங்கிரசின் மூத்த தலைவர் இளங்கோவனை வெற்றி பெற வைப்பதற்காக தீவிர தேர்தல் பணியில் தி.மு.க. அமைச்சர்கள் ஈடுபட்டுவரும் நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் வேட்பாளர்கள் அறிவிப்பதே 26-ந் தேதி வரை இழுபறியாக இருந்தது.
உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்காக எடப்பாடியும், பன்னீரும் அவரவர்கள் பாணியில் காத்திருப்பதாலும், செலவு செய்யக்கூடிய வேட்பாளர்கள்கூட போட்டியிடத் தயங்குவதாலுமே வேட்பாளர் அறிவிப்பில் இந்தளவுக்கு தாமதம் ஏற்பட்டது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் நாம் விசாரித்தபோது,”"இந்த மாதம் 31-ந் தேதிதான் வேட்பு மனு தாக்கலே துவங்குகிறது. மேலும், அ.தி.மு.க.வில் போட்டியிட விரும்புபவர்கள் 26-ந் தேதிவரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என நாங்கள் அறிவித் திருக்கிறோம். அப்படியிருக்கையில் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் என எப்படி சொல்ல முடியும்? இடைத்தேர்தலில் போட்டியிட எங்களிடம் டஜன் கணக்கில் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்துதான் அறிவிக்க முடியும். ஓரிருநாளில் வலிமையான வேட்பாளரை எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார்''’என்று நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அவர்.
இந்த நிலையில், சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த கூட்டத்தில், கே.பி.முனுசாமி, தம்பிதுரை, செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், வளர்மதி, காமராஜ், எம்.சி.சம்பத், இசக்கி சுப்பையா, கே.பி.அன்பழகன், ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட சீனியர்கள் பலரும் கலந்து கொண்டனர். நீண்ட நேரம் நடந்த அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல விசயங்கள் விவாதிக் கப்பட்டிருக்கின்றன.
இதுகுறித்து சீனியர்கள் சிலரிடம் நாம் விசாரித்தபோது, "வேட்பாளராக யாரை நிறுத்துவது? இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? தேர்தல் செலவை யார் ஏற்பது? உச்சநீதிமன்றத்தில் உள்ள கட்சி வழக்கு ஆகிய நான்கு விசயங்கள்தான் முக்கியமாக விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.
கே.வி.ராமலிங்கம், "தேர்தலுக்கான அடிப்படைச் செலவுகளை செய்யக்கூட என்னிடம் பணம் இல்லை. தேர்தல் செலவுகளை கட்சி ஏற்றுக்கொண்டால் நான் நிற்கிறேன். இல்லைன்னா என்னை விட்டுவிடுங்கள். தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை' என ஏற்கனவே அவர் சொல்லி யிருந்ததால், "என்ன செய்யலாம்?' என கேட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
வேட்பாளராக பரிசீலிக்கப்பட்டவர்கள் எல்லோருமே இதே பஞ்சப்பாட்டை பாடியதால் "தேர்தல் செலவை கட்சி ஏற்கும் அல்லது நானே ஏற்கிறேன்' என எடப்பாடி சொல்ல, "கட்சி சார்பிலேயே செலவு செய்யலாம்' என பலரும் சொன்னார்கள். "மொத்தம் எத்தனை பூத்துகள் இருக்கிறது? ஒரு பூத் கமிட்டியில் எத்தனைபேர் இருக்கிறார்கள். அவர்களுக்கான தினசரி செலவுக்கு எவ்வளவு கொடுக்கப்பட வேண்டும்?' என்றெல்லாம் கணக்குப் போடச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி.
இதனையடுத்து இரட்டை இலை சின்னம் குறித்து பேச்சு வந்தது. அப்போது, பா.ஜ.க. போட்டி போடப் போவதில்லை என தகவல் கிடைத்திருப்பதாகச் சொன்ன எடப்பாடி, "உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கும் நம் கட்சி வழக்கில், வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும் நாளுக்கு முன்னதாக தீர்ப்பு வந்தால் எல்லா பிரச்சனைக்கும் உடனடியாக ஒரு தீர்வு கிடைத்து விடும். தீர்ப்பு வருவதற்கான முயற்சியை நாம் எடுத்து வருகிறோம். தீர்ப்பு வந்தால் நிச்சயம் நமக்கு சாதகமாக அமையும். அப்போது சின்னம் குறித்த பிரச்சனையே வராது. அந்த சாதகமான தீர்ப்பை வைத்தே இரட்டை இலையை நாம் மீட்டுவிட முடியும். அதனால் பொறுத்திருப்போம். "பா.ஜ.க.வின் ஆதரவு இருந்தாலும் இல்லா விட்டாலும் இரட்டை இலையை நம்மால் பெற முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது' என மிக உறுதியாக பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.
முதலில் தீர்ப்பு வரணும்; அப்படியே வந்தாலும் அது நமக்கு சாதகமாக இருக்கணும்; சாதகமாக இருந்தாலும் அது எந்த வகையில் சின்னத்தை பெறுவதற்கு உதவும் என்பதையெல்லாம் பார்க்க வேண்டியிருப்பதால் எந்த அளவுக்கு இது சாத்தியம் என்பது கூட்டத்தில் கலந்து கொண்ட பலரின் கேள்வி யாகவே இருந்தது. இருப்பினும் சின்னம் நமக்குத்தான் என நம்பிக்கையாக சொன்னார் எடப்பாடி பழனிச்சாமி. அதனால் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்'' என்று விவரித்தனர்.
இதற்கிடையே, ஓ.பி.எஸ்.ஸும் தீர்ப்பு குறித்து இதே முயற்சியில் தான் குதித்திருக்கிறார். சமீபத்தில் குஜராத் சென்ற ஓ.பி.எஸ்., இடைத்தேர்தல் குறித்து பல்வேறு சாதகமான வழிகளையெல்லாம் சுட்டிக்காட்டி பா.ஜ.க.வை போட்டி யிட வைக்க பகீரத முயற்சிகளை எடுத்திருந்தார். ஆனால், அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
அதேசமயம், குஜராத்தில் இருந்தபடி, உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு சம்பந்தமாக முக்கிய நபர்கள் சிலரிடம் விவாதித்துவிட்டு வந்துள் ளார். அந்த நபர்கள் கொடுத்த நம்பிக்கையில் ஓ.பி.எஸ் தரப்பில் சில உற்சாகம் தெரிந்தாலும், வேட்பாளர்கள் கிடைப்பதில் அவருக்கு சிக்கல் இருக்கிறது. அவரால் வளர்க்கப்பட்ட பணபலம் மிக்கவர்கள் கூட அவருக்காக தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை.
வேட்பாளர்கள் விசயத்தில் ஓ.பி.எஸ். தரப்பில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என விசாரித்தபோது, ”தி.மு.க. கூட்டணி வலிமையாக இருக்கிறது. அவர்களை ஜெயிப்பது கஷ்டம். எடப்பாடி நிறுத்தும் வேட்பாளருடன் மல்லுக்கட்டுவதற்காகவா நாம் செலவு செய்து போட்டியிட வேண்டும்? ஒருவேளை தேர்தல் செலவை நீங்கள் ஏற்பதாக இருந்தால் நாங்கள் நிற்கிறோம். பிரச்சனை இல்லை என வேட்பாளராக நிற்க வலியுறுத்தி ஓ.பி.எஸ். யாரிடமெல்லாம் கேட்டாரோ அவர்களெல்லாம் இப்படி தெரிவித்துவிட்டனர். அதனால் வேட்பாளர் கிடைக்காமல் தவிக்கிறார்.
இதனால் தனது அணி சார்பில் த.மா.கா. யுவராஜாவை நிறுத்த ஜி.கே.வாசனிடம் பேசினார் ஓ.பி.எஸ். அவரின் யோசனையை வாசன் ஏற்கவில்லை. அதேபோல ஏ.சி.சண்முகத்தை தனது அணியில் நிறுத்த அவரிடம் ஓ.பி.எஸ். விவாதித்தபோது, பா.ஜ.க. வேட்பாளராக வேண்டுமானால் நிற்கிறேன்; அ.தி.மு.க.வில் நிற்க முடியாது என மறுத்துவிட்டார் ஏ.சி.சண்முகம்.
ஆக, வேட்பாளர் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் யாரையாவது நிறுத்தியாக வேண்டுமென்கிற நெருக்கடியில் இருக்கிறார் ஓ.பி.எஸ். நிச்சயம் ஒருவர் கிடைத்து விடுவார். அதற்குள் தீர்ப்பு வந்துவிட்டால் எல்லாம் நல்லதாக நடக்கும்''’என்று தெரி விக்கிறார்கள் ஓ.பி.எஸ். அணியிலுள்ள முக்கியஸ்தர்கள்.
__________
இறுதிச் சுற்று !
சென்னை மெரினா கடற்கரை சாலையில் உழைப்பாளர் சிலை அருகே நடந்த 74-வது குடியரசு தினவிழாவை 26-ந் தேதி வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடியது தமிழ்நாடு அரசு. விழாவில் கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்த வந்த ஆளுநர் ரவியை முகமலர்சியுடன் வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின். சட்டசபை சர்ச்சைகளுக்கு பிறகு இந்த நிகழ்வில்தான் முதல்வரும் ஆளுநரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். ஆளுநர் தேசியக்கொடி ஏற்றி வைக்க முதல்வரும் ஆளுநரும் மரியாதை செலுத்தினர். கண்கள் கவரும் கலைநிகழ்ச்சிகள், பார்ப்பவர்களின் மனதை கொள்ளை கொண்டன. தமிழ்நாடு அரசு துறைகளின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடந்தது. முதல் வாகனமாக வந்த செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அலங்கார ஊர்தியில், "தமிழ்நாடு வாழ்க' என்ற வாசகமும், முகப்பில் வரையப்பட்டிருந்த "தமிழ்நாடு' என்ற கோலமும் கம்பீரமாக இருந்தன. சிறந்த காவல் நிலையத்துக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார் முதல்வர் ஸ்டாலின். விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசின் உயரதிகாரிகள், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
-இளையர்
படம்: ஸ்டாலின்