தமிழ்நாட்டில் 35 ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் கட்டிக்கொடுத்த, மேற்கூரை உடைந்து கொட்டும் காலனி வீட்டில் மிக எளிமையாக, எம்.எல்.ஏ.க்களிலேயே முன்னுதாரணமாக வாழ்ந்துவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கந்தர்வக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் மா.சின்னத்துரையை அவரது வீட்டில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்..
ஒடுக்கப்பட்ட, குரலற்ற, உழைக்கும் மக்களின் குரலாக களத்தில் நிற்கும் உங்களின் தொடக்க காலம் பற்றி சொல்லுங்கள்...
1967-ஆம் ஆண்டு அப்போதைய தஞ்சை மாவட்டம் தற்போதைய புதுக் கோட்டை மாவட்டத்திலுள்ள புனல்குளம் கிராமத்தில் குடியானவர் மாரிமுத்து வீட்டில் பிறந்தேன். தொடக்கப்பள்ளிப் படிப்பை புனல்குளத்திலும், 10-ஆம் வகுப்பு வரை கந்தர்வக்கோட்டையிலும் படித்தேன். 1982-ல் என் படிப்பு முடிந்தது. எங்க வீட்டிலேயே படிச்சது நான்தான்.
பள்ளிப் படிப்பு முடிந்ததும் அடுத்து எங்காவது வேலைக்குப் போகவேண்டும் என்ற நிலையில், எங்கள் ஊரிலிருந்த ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். மாதம் ரூ.50 சம்பளம். 10 ரூபாய் சம்பளத்தை உயர்த்திக் கேட்கவேண்டும். முதலாளியிடம் யார் கேட்பது என்ற கேள்வி எழுந்தபோது, அதற்கு ஒரு சங்கம் கட்டவேண்டும் என்று தொழிலாளர்கள் முடிவெடுத்தோம். அதற்கு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம்தான் சரியாக இருக்கும் என்று அந்த சங்கத்தில் இணைய நினைத்தோம். அந்த நேரத்தில் வெளியி லுள்ள தீண்டாமை, கம்பெனிக்குள்ளும் இருப்ப தைப் பார்த்து மனம் வெதும்பினோம். அதாவது தலித் தொழிலாளர்களுக்கு குவளையிலும், மற்றவர்களுக்கு கண்ணாடிக் குவளையிலும் டீ கொடுப்பதை உடைத்து சமமாக அனைவருக்கும் ஒரே மாதிரி டீ கொடுக்கவேண்டும் என்று போராடி வெற்றிபெற்றோம்.
எனது சொந்த ஊரான புனல்குளத்தில் தலித்துகள் செருப்புப் போட்டு நடக்கக்கூடாது, வேட்டியை ஏற்றிக்கட்டி நடக்கக்கூடாது, டீக்கடையில் டவரா செட்டில் டீ கொடுப்பது போன்றவைகளை பார்க்கும்போது மனது வலித்தது. அதை எதிர்த்து கேட்கும்போது பிரச்சனைகள் வந்தது. அப்போது மாரிமுத்து மகன் எதிர்த்துக் கேட்கிறான் என்றார்கள். உதவிக்கு கம்யூனிஸ்ட் கட்சி தேவைப்பட்டது. அப்போது முதல் நான் ஒரு கம்யூனிஸ்ட் தோழரானேன்.
தொடக்கத்தில் உங்கள் வீடு, வசதிகள் எப்படி...?
நாங்கள் ரோட்டுக்கு மேற்கே வரகுக்கூரை மேய்ந்த வீட்லதான் குடியிருந்தோம். வருசத் துக்கு ஒருமுறை கூரை மாற்றணும்... கறையான் ஏறிடும். 36 ஆண்டுகள் அப்படித்தான் இருந் தோம். மண்ணெண்ணெய் விளக்கு. அந்த கால கட்டத்தில் வரகரிசி சோறுதான். நெல்லரிசிச் சோறு எப்போதாவது விசேஷம் என்றால்தான் கிடைக்கும். எங்களுக்கு ரோட்டுக்கு கிழக்கே புதரா இருந்த பகுதியில் அரசாங்கம் 42 காலனி வீடுகள் கட்டிக்கொடுத்தது. வீடுகளை சுற்றி புதர் மண்டிக்கிடக்கும். ஒருமுறை என் மனைவியும் மகளும் தூங்கிக் கொண்டிருந்தாங்க. நான் இரவு 12 மணிக்குப் பிறகு வீட்டுக்கு வருகிறேன். வந்து பார்த்தால் ஒரு பாம்பு என் மனைவி, மகளுக்கு இடையில் எழுந்து படமெடுத்து நின்றது. அப்படியே மகளைத் தூக்கிட்டு சத்தம் போட்டேன். மனைவி எழுந்துட்டாங்க. பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பாம்பை அடிச்சாங்க.
இப்பவும் அதே வீடுதானா?
ஆமா இப்பவரை எங்கள் குடும்பம் அந்த காலனி வீட்லதான் குடியிருக்கிறோம். பல வரு டங்களாக காலனி வீட்டில் மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் உடைந்து கொட்டிக்கொண்டிருக்கிறது. என் மனைவி, மகள் தூங்கும்போது மேற்கூரை உடைந்து கொட்டியதில் இருவரும் உயிர்பிழைப்பதே அரிதாகிவிட்டது. அதன்பிறகு மறுபடி சிமெண்ட் பூசியும் பயனில்லை. என் ஆயிரக்கணக்கான நல்ல புத்தகங்கள் மழையில் நனைந்து நாசமாகிப் போச்சு. இப்பவும் அதே வீட்ல மழைத் தண்ணீர் ஒழுகாமல் கான்க்ரீட் மேலேயே ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை போட்டு மூடிவிட்டு குடியிருக்கிறோம். இப்ப மழைத்தண்ணி உள்ளே வராது. ஆனால் வெயில் நேரத்தில் வெக்கை, வீட்டுக்குள்ள இருக்கமுடியாது. பழைய கூரைக்கு இது தேவலை என்று நினைத்துக்கொள்கிறோம். இப்ப வரை வீட்டின் உள்பக்கம் உடைஞ்சு கொட்டிக்கிட்டுதான் இருக்கு.
நீங்கள் கட்சிப் பணி என்று வெளியே சென்றுவிடும் நிலையில் குடும்பத்தை, குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வது?
என் மனைவி ராசாத்தி ரொம்ப கெட்டிக் காரங்க. நான் கட்சியின் முழுநேர ஊழியரானதும் முதலில் மாதம் ரூ.300 ஊக்கத் தொகை கொடுத்தாங்க. அப்புறம் படிப்படியாக மாதம் ரூ.800, ரூ.1200 என்று அதிகபட்சம் மாதம் ரூ.2400 ஊக்கத் தொகை கிடைக்கும் வரை நானும், என் மனைவியும் கிடைக்கின்ற கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்துவோம். குழந்தைகள் எல்லாம் அரசுப் பள்ளியில் படித்தார்கள். அதனால் படிப்புச் செலவு அதிகமில்லை. இப்ப சட்டமன்ற உறுப்பினரானதும் சம்பளம் ரூ.30,000 மற்றும் இதர படிகள் என ரூ.1,05,000-த்தில் ரூ.500 பிடித்துக்கொண்டு அரசு கொடுக்கும் ரூ.1,04,500ஐ முழுமையா கட்சிக்கு கொடுத்துடுவேன். எனக்கு மாதம் ரூ.12,250 சம்பளமாக கட்சி கொடுக்கிறது. அப்போது முதல் இப்போது வரை என் முழுச் சம்பளத்தையும் என் மனைவியிடம் அப்படியே கொடுத்துவிடுவேன். என் செலவுகளை கட்சி பார்த்துக்கொள்கிறது. நான் கொடுக்கும் சம்பளப்பணத்திற்கு இதுவரை நான் கணக்கு கேட்டதில்லை. இப்ப பசங்களும் படிச்சு வேலைக்குப் போறதால ஒன்றும் பெரிதாகச் செலவில்லை. சட்டமன்ற உறுப்பினர் ஆனபிறகும் கூட அதேதான். ஒன்றும் மாறவில்லை.
இத்தனை கஷ்டத்துக்கிடையில் தேர்தல் செலவுகளை எப்படி சமாளித்தீர்கள்?
மக்கள்நலக் கூட்டணியில் கந்தர்வக் கோட்டை தொகுதி வேட்பாளரான போதும் சரி, அதன் பிறகு தி.மு.க. கூட்டணியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதும் ஒரு பைசாகூட நான் செலவு செய்யவில்லை. செலவு செய்ய என்னிடம் பணமும் இல்லை. நண்பர்கள், தோழர்கள், தொழிற்சங்கம், விவசாய சங்கம் போன்ற அமைப்புகள், கட்சி, மற்றும் பல கட்சிக்காரங்க என தேர்தல் செலவுகளைச் செய்தார்கள். அதேபோல தொழிற்சங்கங்களும் துணைக்குவந்தன. சின்னத்துரை வெற்றிபெற்றால் தீண்டாமை போராட்டங்கள் நடக்கும் என்று பொய்ப் பிரச்சாரங்கள்கூட செய்தார்கள். மக்கள் அதை நம்பவில்லை. கூட்டணிக் கட்சிக்காரங்க, பூத் செலவுக்குக்கூட பணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டது ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது.
செருப்பு போட்டு நடக்கக்கூடாது என்ற சூழலில் வளர்ந்த உங்களை தேர்தல் நேரத்தில் குதிரையில் ஏற்றிச்சென்றதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
வேட்டி கட்டி நடக்கக்கூடாது, செருப்பு போட்டு நடக்கக்கூடாது என்ற காலத்தில், கண்ணாடி கிளாசில் டீ குடிக்கமுடியுமா என்று நினைத்த காலம் உண்டு. சைக்கிள் வாங்கவே சிரமப்பட்ட காலம் உண்டு. அப்படிப் பட்ட நேரத்தில் தேர்தல் காலத்தில் வாண்டான்விடுதி கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் குதிரையில் ஏறச் சொன்னபோது தயக்கத்தோடு மறுத்தேன். சட்டமன்ற உறுப்பினர் ஆகுமுன்பே குதிரையில் ஏறிப்போறார், சட்ட மன்ற உறுப்பினர் ஆனபிறகு என்ன பண்ணுவார் என்று, கூட இருப்பவர்களே சொன்னார்கள். ஆனால் வாண் டான்விடுதி கிராம மக்கள் "நீங்க குதிரையில ஏறித்தான் ஊருக்குள்ள வரணும்' என்று அன்பாகக் கட்டாயப் படுத்தினார்கள். தேர்தல் முடிவுகள் வந்தபோது அந்த கிராமத்தில் அதிக வாக்குகள் கிடைத்திருந்தது. இப்பகூட அந்த கிராமத்திற்கு செல்லும்போதெல்லாம் அந்த மக்கள் அன்பாக இருக்கிறார்கள். அதேபோல சில ஊர்களில் அங்குள்ள கோயில்களுக்குள் என்னை அழைத்துச் செல்வார்கள். அப்போது சிலர் சட்டையை பிடித்து நிறுத்தி... "இப்ப உள்ளே கூப்பிடுவார்கள். கோயிலுக்குள் போனால் அப்பறம் ஓட்டுப் போடமாட்டாங்க' என்று சொன்னார்கள். ஆனால் அதுபோன்ற இடங்களில் எங்கும் வாக்குகள் குறையவில்லை.
இத்தனை நம்பிக்கையோடு உங்களை வெற்றிபெறச் செய்த மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறதா?
நிச்சயமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். கந் தர்வக்கோட்டை அரசு மருத்துவமனை தரம் உயர்வுக்கு ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. செயல்பாடற்றுக் கிடந்த கறம்பக்குடி அரசு மருத்துவமனை செயல்பட நிதி ஒதுக்கீடு, நூலகங்கள், பஸ் நிலையங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராம சாலைகள் போடப்பட்டு வருகிறது. 10 ஆண்டு களாக நிறைவேற்றப்படாத பல திட்டங்கள் நிறைவேற் றப்பட்டுள்ளன. கந்தர்வக்கோட்டையின் நீண்ட கால கோரிக்கை ஆற்றுப்படுகை வேண்டுமென்பது. அதற்காக முதலமைச்சர் முதல் நீர்வளத்துறை அமைச்சர், அதி காரிகள் வரை கோரிக்கையை நிறைவேற்றக் கேட்டிருக் கிறோம். அந்த கோரிக்கை இன்னும் கிடப்பில் உள்ளது. அதேபோல மேலும் சில அலுவலகங்கள் கேட்டிருக் கிறோம். இன்னும் நிறைய கோரிக்கைகள் உள்ளன. நிறைவேற்றுவோம்
சந்திப்பு: -இரா.பகத்சிங்