துவரை 350-க்கும் அதிகமான உயிரற்ற உடல்கள் மீட்கப் பட்டும், 1400-க்கும் அதிக மான உயிர்கள் தேடப்பட்டும் வருகின்றது, கடவுளின் தேச மெனக் கூறப்படும் கேரள வயநாட்டில். மனிதர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் நடுநிசியில் இந்த நிலச்சரிவு அசம்பாவிதங்கள் நடந்தது தான் வேதனையே.! இருப்பினும் மக்கள் பிரார்த்தனை களோடு தங்கள் உறவுகளைத் தேடிவருகின்றனர்.

waya

"செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:40 மணி இருக்கும். சுமார் நான்கு முறை ஹெலிகாப்டர் அருகில் வந்து போனதுபோல் அதிர்வுகளோடு மிகப்பெரிய சப்தம். வயதான சித்தி உட்பட 8 பேர் உறக்கத்திலிருந்தோம். நான் மட்டும் விழித்துப் பார்க்கையில் காட்டாற்று வெள்ளம்போல் மண்ணும், கல்லும் கலந்து நீர் பெருகிவர அனைவரையும் எழுப்பி அப்புறப்படுத்த முயற்சித்தேன். அதற்கு வெள்ளம் இடம்கொடுக்கவில்லை. குடும்பத்தி லுள்ள அத்தனை நபர்களையும் தொலைத்து விட்டேன். தேடிக்கொண்டிருக்கின்றேன்'' என்கிறார் சூரல் மலை கிராமத்தினைச் சேர்ந்த சஞ்சய்.

முன்னதாக, வயநாடு முழுமைக்கும் கொட்டித் தீர்த்திருக்கின்றது கனமழை. அங்குள்ள இருவாணிப் புழை ஆற்றில் மட்டும் 37 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்திருக்கின்றது. அத்துடன் இல்லாமல் நீரிடி ஏற்பட... நள்ளிரவிலேயே 4 முறை நிலஅதிர்வு ஏற்பட்டிருக்கின்றது. முதலில் பாதிக்கப்பட்டது முண்டக்கை கிராமம். அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அதிகாலை 4 மணிக்கு சுமார் 2 கி.மீ. தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் 2-வது நிலச்சரிவு, அதன்பின் மேப்பாடு கிராமத் திலும் நிலச்சரிவு. ஆற்றுநீரின் இரைச்சலைத் தாண்டி எங்கும் மரண ஓலங்கள்.

Advertisment

தன்னுடைய அப்பா, அம்மா, அண்ணா, அக்கா என குடும்பத் தாரையும் அண்டைஅயலார் களையும் காணவில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என தேடிய வண்ணமிருக்கின்றனர் மண், கல், ஆற்று நீருக்குத் தப்பிப்பிழைத்த ஜனங்கள்.

aa

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் ஆர்ப்பரித்து ஆறுபோல் ஓடும் தண்ணீர். திரும்பிய திசையெல்லாம் வீடுகளுடன், நிலச்சரிவில் அடித்துவரப்பட்ட மரங்கள், வீட்டிலிருக்கும் பொருட்கள் அனைத்தும் சேற்றுச் சகதிக்குள் சிக்கி புதையுண் டுள்ளன. இதில் வெள்ளர்மலை பள்ளி முற்றிலும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருக்க, பள்ளி வளாகத்தில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது வேதனை யை அளித்தது. மீட்புப் பணி துரிதப்பட, ஆங்காங்கே மண்ணில் சிக்கியும், மரத்தில் சிக்கியும், மர வேர், இடிபாடுகளுக்கிடையே சிக்கியும் சடலங்கள் கண்டெடுக் கப்பட்டன.

Advertisment

"இதற்குமுன் கேரளா பார்த்திராத நிகழ்வாக வயநாட் டில் பெரும் நிலச்சரிவு அரங்கேறியுள்ளது. முண்டக்கை, சூரல்மலை போன்ற மலை கிராமங்களை காணமுடியாத அளவு சேதமடைந்துள்ளன. அடுத்த 24 மணி நேரத்தில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அட்டமலை, சூரல்மலையில் முழுவீச்சில் மீட்புப்பணிகள், நிவாரணப்பணிகள் நடைபெறுகின்றன. உணவுப்பொருட்களை கொண்டுசெல்ல கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் உள்பட 1,257 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

17 லாரிகள் மூலம் தேவையான உதவிப்பொருட்கள் சூரல்மலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் பிரேதப் பரிசோதனை வேகமாக நடைபெறுகிறது. நிலச்சரிவில் சிக்கி 5,500-க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். 191 பேர் காணாமல்போய் உள்ளனர். மீட்கப்பட்ட 144 சடலங்களில் 76 ஆண்கள், 64 பெண்கள் உள்ளனர். அவை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மலைப்பகுதிகளில் மீட்புக் குழுவினர் செல்ல தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மந்திரிகள் முகாமிட்டுள்ளனர். மருத்துவ முகாம்களில் கூடுதல் டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சூரல் மலை பகுதியில் மின் விநியோகத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்துவருகிறது. உறவுகளை இழந்தவர்களை மனரீதியாகத் தேற்றவேண்டியுள்ளது'' என்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

ww

சுமார் 5000-க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்றும், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 12 கி.மீ. தள்ளி ஆம்புலன்ஸ்கள், ராணுவ மருத்துவ வாகனங்கள், கிரேன் உட்பட அனைத்து வாகனங்களுடன் மீட்புப் பணிகளில் ராணுவம், மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை தன்னார்வலர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இரவு பகலாக தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அச்சம் வேண்டாமெனத் தொடர்ந்து அறிவித்தது கேரள அரசு. இது இப்படியென்றால், மறுபக்கம் நிலச்சரிவில் சிக்கிய மக்களை மீட்க ராணுவம் துரிதமாகக் களமிறங்கியது. தங்களைக் காப்பாற்ற எப்படியாவது, யாராவது வந்துவிடுவார்கள் என உயிரைக் கையில் பிடித்திருந்த மக்களுக்கு, கயிறு கட்டி செவிலியரை அனுப்பி முதற்கட்ட சிகிச்சையை தொடங்கியது சுகாதாரத்துறை.

வயநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலிலிருந்து பேரிடர் மீட்புப் பணிக்காக இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மி-17, ஏ.எல்.ஹெச். கோவை சூலூரிலிருந்து புறப்பட்டுச் சென்றன. அதேசமயம், சூரல்மலை - முண்டகை வழித்தடத்தில் பாலம் இடிந்துவிழுந்தது. இதனால் மீட்புப் பணி வெகுவாகப் பாதிக்கப்பட அடுத்து என்னவென திகைத்து நின்றனர் மீட்புப்பணியாளர்கள்.

"அனைத்து மருத்துவப் பொருட்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும், அப்பகுதியி லுள்ள மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்லப்படுவதை உறுதிசெய்யத் தொடங்கி யுள்ளோம். கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மருத்துவக் குழுக்கள் காயமடைந்தவர்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்கும். தற்போது 70 பேர் காயமடைந்து வயநாட்டிலுள்ள சில மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்'' என்றார் மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ். மீட்புப்பணிக்காக அவர் வந்த வாகனம் மஞ்சேரி பகுதியில் விபத்துக்குள்ளானது தனிக்கதை.

ww

முன்னதாக, கேரள தலைமைச் செயலாளர் வேணுவோ, "அதிகாலை 2 மணியளவில், குறைந்தது இரண்டு முதல் மூன்று முறை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட சில பகுதிகள் துண்டிக்கப் பட்டுள்ளன. NDRF குழுக்கள் சிலவற்றிற்குச் செல்வதற்கு வானிலை மோசமாக உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புப் பணியை ஒருங்கிணைத்து நடத்துவோம்'' என நம்பிக்கை அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேப்பாடி சமூக நல மையத்தில் இறந்தவரின் உடல் வரும்போதெல்லாம், "நம்ம சொந்தமாக இருக்குமோ? நமக்குக் தெரிந்தவர்களா இருப்பார்களோ?' என தப்பிப் பிழைத்து அங்கிருந்த உறவினர்கள் பதற்றத்துடன் ஒவ்வொரு உடலையும் எட்டிப் பார்த்து பெருமூச்செறிந்தனர். "அந்த இருட்டில் அழுகை மட்டும்தான் கேட்டது. ஆற்றின் பெரிய இரைச்சலையும் தாண்டி அழுகையின் கூக்குரல் எங்களை அச்சத்தில் ஆழ்த்தியது. என்னுடைய குடும்பத்தில் என்னையும் சேர்த்து நான்கு நபர்கள் இருக்கின்றோம். மீதமுள்ள 7 நபர்களைக் காணவில்லை'' என நீரில்லாமல் வறண்ட கண்ணுடன் காத்திருந்தார் முதியவர் பஷீர்.

ww

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் உதவிக்கரம் நீட்ட, கோவை பகுதியிலிருந்து மீட்புக்குழு வயநாட்டிற்குச் சென்றது. இதே வேளையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியோ, "கேரளா வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிப்பது முக்கியம். நிலச்சரிவு மீட்புப் பணிகளில் ராணுவம் மிக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வயநாடு பகுதியில் சுற்றுச்சூழல் தொடர்பாக பிரச்னை உள்ளது தெளிவாக தெரியவந்துள்ளது. உயர் ரக தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்'' என்றார். பிரதமர் மோடியோ, "வயநாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் PMNRF-ல் இருந்து 2 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும்''’என்று அறிவித்தார்.

வயநாடு நிலச்சரிவில் முண்டக்கை பகுதியிலிருந்த 500 வீடுகளில், 30 வீடுகள் மட்டுமே எஞ்சியிருப்ப தாக தகவல் வெளியான நிலையில், ஒரே வீட்டிலிருந்த 16 நபர்கள் இறந்துள்ளார்கள் என அறிவிக்கப்பட்டது. அதுபோல் ஒரு வீட்டில் மட்டும் தங்கியிருந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 30 தமிழர்களின் நிலை என்னவானது? என்பது இப்போது வரை விடைதெரியாத கேள்வி.

வயநாடு சூரல் மலையிலுள்ள கோவிலில் பூசாரியாக இருந்துவந்த நீலகிரி மாவட்டம் அய்யங்கொல்லி பகுதியைச் சேர்ந்த கல்யாண்குமார் உயிரற்ற உடலாக மீட்கப்பட்டார். முன்னதாக, வயநாடு சூரல் மலை பகுதியைத் சேர்ந்த விஜிஸ் குட்டனை திருமணம் செய்த குன்னூர் அருகேயுள்ள கரன்சி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன்- சந்திரலேகா தம்பதியின் மகள் கௌசல்யா நிலச்சரிவில் சிக்கி குடும்பத்துடன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ww

பெரிய பாறைகள் மலைகளில் உருண்டு விழுந்து பல இடங்களில் மீட்புப் பணி யாளர்களின் பாதையைத் தடைசெய்ய, சூரல்மலை, வேளரிமலை, முண்டகயில் மற்றும் பொதுகளுகு ஆகிய பகுதிகளுக்கு ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துமாறு முதல்வர் விஜயன் அறிவுறுத்தினார். இதேவேளையில், உயிர்பிழைத்த மக்கள் ஓரிடத்தில் கூடியிருக் காமல் அங்கிருந்து வெளியேறி குரும்பலாக் கோட்டை, லக்கிடி, மணிக்குன்னு மலை, கபிக்களம் உள்ளிட்ட பகுதியிலுள்ள முகாம் களுக்குச் செல்லு மாறு வயநாடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ww

மீட்புப்பணி யில் ராணுவம், போலீஸ், தீயணைப் புப் படையினரோடு தன்னார்வலர்களும் போட்டி போட்டு பணியாற்றிய நிலையில் இரண்டாவது நாளான புதன்கிழமையன்று இரவு வரை 270 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சுகின்றனர் அதிகாரிகள். இதுவரை 89 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் 32 உடல்கள் ஒப்படைக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இதே வேளையில் கேரளா வின் கொச்சி நகரை தலைமையிடமாகக் கொண்டு ஹாரிசன்ஸ் மலையாளம் பிளான்டேசன் லிமிடெட் நிறுவனத்திற்கு 10-க்கும் மேற்பட்ட தேயிலை, காபி தோட்டங்கள் உள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு பகுதியில் அவர்களுக்குச் சொந்தமான தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிய நிலையில் அவர்களின் நிலை என்னவானது..? என்கின்ற கேள்வியும் எழ, உயிரிழந்தோர்களின் எண்ணிக்கையை, தற்போது கணக்கிடமுடியாது என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

இரவு, பகல் உறங்காது மக்களை மீட்க கேரள அரசு போராடிவரும் நிலையில், "கேரளாவில் கடும் மழைப்பொழிவு இருக்கும் என 6 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்தும் கேரள அரசு என்ன செய்து கொண்டிருந்தது? பேரிடர் ஏற்படும் எனத்தெரிந்து 9 தேசிய பேரிடர் மீட்புக்குழுவை கேரளாவுக்கு அனுப்பிவைத்தோம். எங்கள் பேச்சைக் கேளுங்கள் என தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தோம். மழை, வெள்ளம், புயல், வெப்ப அலை என அனைத்துக்கும் மத்திய அரசு எச்சரிக்கை கொடுத்துள்ளது. குஜராத் மாநிலத்திற்கு புயல் எச்சரிக்கை கொடுத்தோம். அங்கு சிறு உயிரிழப்புகூட ஏற்படவில்லை'' என மக்களவையில் அரசியல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதனை "மத்திய அரசின் எந்த அமைப்புகளும் அத்தகைய எச்சரிக்கையைக் கொடுக்கவில்லை. ஆரஞ்சு அலர்ட் மட்டுமே விடப்பட்டது'' என அவசரமாக மறுத்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

மீட்கப்பட்டவர்களும், உயிர்தப்பியவர்களுமாக சுமார் 3100 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலோர் குடும்பத்தில் சிலரையாவது இழந்துள்ளனர். இந்நிகழ்வின் வடு ஆற மாதக்கணக்கில் ஆகுமெனத் தெரிகிறது.

வயநாடு நிலச்சரிவு குறித்துப் பேசிய உதகையைச் சேர்ந்த சகாயராஜாவோ, "இந்த பேரழிவு, மலையில் உருவான நீரிடி. இது அனைத்து மலைப்பிரேதசங் களுக்கும் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். நீர் நிலைகள் மற்றும் நீரோட்டங்களை மறைத்துக் கட்டப்படும் கட்டடங்கள், விடுதிகளால் தான் இதுபோன்ற ஒரு பேரழிவு ஏற்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெரும்பாலும் மண்ணின் தன்மை மேற்பகுதியில் செம்புறை மண்ணும், சுமார் 50 செ.மீ.க்கு கீழ் களிமண்ணும் காணப்படுகிறது. இவ்வகையான மண் அமைப்பு மழை நீரை உள்வாங்குவதாக இருப்பதால் மழை நீர் உட்புகுந்து களிமண் படிமத்தை தொட்டவுடன் களிமண் தனக்கே உரித்தான இளகு தன்மையை அடைகிறது. இதனால் மேற்பரப்பில் கனமான பொருட்கள் குறிப்பாக டன் கணக்கிலுள்ள கட்டிடங்கள் மற்றும் மரங்கள் சரிந்து நிலச்சரிவு ஏற்படுகிறது என மண்வள ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எல்லா வருடங்களிலும் முத லாவது பருவ மழை கேரளாவில் துவங்கி படிப்படியாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்கிறது. இதன்மூலம் நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப் பிரதேசங்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை மணி. கட்டடங்கள் முறைப்படுத்தப்படாத வரையில் ஆபத்து அதிகம். குறிப்பாக சரிவான பகுதிகளில் கட்டடங்கள் கட்டும் பட்சத்தில் அவர்களுக்கு ஆபத்து இருக்கிறது'' என எச்சரிக்கை விடுத்தார் அவர்.

இதுபோன்ற நிலச்சரிவு, நீலகிரி மாவட்ட அவலாஞ்சியில் முன்னர் நடந்தது குறிப்பிடத்தக்க ஒன்று. எனினும் அன்றைய பொழுதில் நான்கு குடும்பங்கள் மட்டும் வசித்தது. ஆனால் இன்றைய நீலகிரி உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் மாதவ் காட்கில் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த வேண்டுமென்பதே அனைவரின் கோரிக்கை. கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான ஒன்றிய அரசு இதனை பரிசீலிக்குமா..?

படங்கள்: விவேக்